திங்கள், 17 பிப்ரவரி, 2025

தமிழகப் பள்ளிக் கல்வியில் மும்மொழிக்கொள்கையைத் திணிக்கும் நடுவண் அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையை எதிர்ப்போம் !

 தமிழகப் பள்ளிக் கல்வியில் மும்மொழிக்கொள்கையைத் திணிக்கும் நடுவண் அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையை எதிர்ப்போம் !

-------------------------------------------------------------------------
தமிழ்நாடு அரசு தமிழகத்துப் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் . . . கல்வி முன்னேற்றத்திற்கான நிதி நல்குவோம் என்ற நடுவண் அரசின் மிரட்டலும் முடிவும் . . .
முழுக்க முழுக்க ஒரு ஜனநாயகவிரோத முடிவு!
தேசிய இனங்களின் உரிமைகளை மதிக்காத ஒரு முடிவு!
வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டிய ஒரு முடிவு!
பல்வேறு தேசிய இனங்களைக்கொண்ட ஒரு குடியரசு நாட்டில் , ஐனநாயக மொழிக்கொள்கையை நடைமுறைப்படுத்தாமல் இந்திமொழியைத் திணிக்கிற இந்த முடிவைக் கடுமையாக எதிர்க்கவேண்டும்!
அதேவேளையில் தேசிய இனங்கள் தங்கள் தாய்மொழியையே முழுமையாக . . . கல்வி உட்பட - அனைத்துத்துறைகளிலும் தக்கவைக்கவேண்டும் !
தமிழகத்தில் ஆங்கிலம் உட்பட எந்தவொரு அந்நியமொழியும் தாய்மொழியான தமிழ்மொழியை ஆதிக்கம் செலுத்தக்கூடாது! ஆங்கில மோகம் கூடாது! இது ஒரு பொதுக்கோரிக்கை. பயிற்றுமொழி உட்பட அனைத்திலும் தமிழ்மொழியே நீடித்தல் வேண்டும்! தமிழ்நாட்டு அரசியல்கட்சிகளும் அரசும் இதில் தெளிவான முடிவு எடுத்துச் செயல்படவேண்டும்!
ஆனால் இன்றைக்கு நடுவண் அரசின் மிரட்டலே முதன்மையான முரண்பாடு!
அந்த வகையில் தமிழக அரசும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு நின்று . . . நடுவண் அரசின் மொழிப் பாசிசத்தை எதிர்த்து உறுதியாகப் போராடவேண்டும்!
மும்மொழித்திட்டத்தை எதிர்த்து நிற்கவேண்டும்!
பல்வேறு தேசிய இனங்களைக்கொண்ட ஒரு குடியரசு நாட்டில் . . . ஒரு ஜனநாயக மொழிக்கொள்கை எவ்வாறு இருக்கவேண்டும் என்பதுபற்றிய சில பதிவுகளை ஏற்கனவே நான் முகநூலில் இட்டுள்ளேன். அவற்றைத் தொகுத்து இன்று எனது கீழ்க்கண்ட வலைப்பக்கத்தில் இட்டுள்ளேன். ஆர்வமுள்ளவர்கள் படிக்கலாம்!

நடுவண் பல்கலைக்கழகங்களில் ஆங்கிலமும் இந்தியும்! (2)

 நடுவண் பல்கலைக்கழகங்களில் ஆங்கிலமும் இந்தியும்! பிற மொழிகளுக்கு இடம் கிடையாது ! என்பதுபற்றிய உரையாடலில் நண்பர் மாலனுக்கும் எனக்கும் இடையிலான உரையாடல்! (பகுதி 2)

நண்பர் திரு மாலன் அவர்கள் ''பயணத்தில் இருந்ததால் உடனடியாக பதிலளிக்க முடியவில்லை. விமானத்திலிருந்து இறங்கியதும் இதை எழுதுகிறேன். தாமதத்திற்கு மன்னிக்க. ' என்று கூறி, எனது ஐயங்களுக்கு நேரம் ஒதுக்கிப் பதில் அளித்துள்ளார். அவருக்கு மிக்க நன்றி!
-------------------------------------------------------------------------
நண்பர் திரு மாலன் அவர்கள்
---------------------------------------------------
1.) ஓர் அரசு அதன் அலுவல் மொழியில் தன் அலுவல்களை நடத்துவது பிழையாகுமா?தமிழக அரசின் அலுவல் மொழி தமிழும் ஆங்கிலமும். தமிழநாட்டில் வசிக்கும் அயல் மொழிக்காரர்கள் அவர்கள் தாய் மொழியில் அரசின் அறிக்கைகளை வாசிக்க முடியுமா?
ந. தெய்வ சுந்தரம்
-----------------------------------------------------------------
மொழிவாரி அடிப்படையில் அமைக்கப்பட்ட . . . தமிழும் தமிழரும் பெரும்பான்மையாக இருக்கிற பகுதியே தமிழ்நாடு. அந்த அடிப்படையில் தமிழ் தமிழ்நாட்டின் ஆட்சிமொழி. எனவே தமிழ் தமிழ்நாட்டில் அரசுமொழியாக இருக்கிறது. அப்படித்தானே, ஆந்திர, கர்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்களும். எனவேதான், அவரவர் மொழிகள் அலுவல்மொழியாக இருக்கிறது. வட இந்திய மாநிலங்களில் இதுதானே நீடிக்கிறது!
ஆனால் இந்திய நடுவண் அரசு மொழிவாரி அடிப்படையில் உருவாக்கப்பட்ட அரசு இல்லை. 22 -க்கும் மேற்பட்ட மொழிகளை உள்ளடக்கிய ஒரு நடுவண் அரசு. அனைத்து மொழியினர்க்கும் பொதுவான அரசு. குறிப்பிட்ட ஒரு மொழியினருக்கான அரசு இல்லை. எனவே, தமிழ்நாட்டில் தமிழ்மொழி அலுவலகமொழியாக இருப்பதற்கும் இந்திய நடுவண் அரசின் அலுவலக மொழியாக இந்திமொழி மட்டும் இருப்பதற்கும் வேறுபாடு இல்லையா? இந்திய நடுவண் அரசு ஒரு மாநில அரசு இல்லை!
இந்த வேறுபாடு தங்களைப்போன்ற பிரபலமான பத்திரிகையாளருக்கு . . . எழுத்தாளருக்குத் தெரியாதா ஒன்றா நண்பரே? எனக்குப் புரியவில்லை!
நண்பர் திரு மாலன் அவர்கள்
---------------------------------------------------------------
2.) இந்தி அரசின் மொழியாக இருப்பது சரியல்ல, எல்லா மொழிகளும் இருக்க வேண்டுமல்லவா என்ற கேள்வியை நீங்கள் கேட்க வேண்டியது அரசமைப்புச் சட்டத்தை யாத்தவர்களிடம். அவர்கள் பிழை செய்துவிட்டார்கள் என்றால் அதைத் திருத்தியிருக்க வேண்டியது இந்தி வேண்டாம் எனப் போராடியதாகச் சொல்லும் தமிழகக் கட்சிகள் செய்தீர்களா என நீங்கள் கேட்க வேண்டிய்து அவர்களை.அதை விட்டு விட்டு இங்கு வந்து கர்ஜிப்பதில் எந்தப் பயனும் இல்லை.
ந. தெய்வ சுந்தரம்
-------------------------------------------------------------------
அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டு, நடைமுறைக்குக் கொண்டுவரும்போது நான் பிறக்கவில்லை. எனவேதான் இப்போது கேட்கிறேன். இன்று புதிதாக அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டால், உறுதியாக இந்திமட்டுமே ஆட்சிமொழி என்றால் உறுதியாக நான் கேட்பேன்.
அடுத்து, தமிழ்நாட்டில் இந்தி ஆதிக்க எதிர்ப்புப்போராட்டத்திற்கு எந்தவொரு குறிப்பிட்ட கட்சியும் உரிமை கொண்டாடமுடியாது. அது ஒரு மாபெரும் மாணவர் எழுச்சி. அரசியல் கட்சியினர் அதற்கு ஆதரவுகொடுத்தார்கள். போராட்டத்திலும் பங்கேற்று இருக்கலாம். எனவே, தமிழ்நாட்டு அரசியல்கட்சிகளை நான் குற்றம் சாட்டவேண்டுமென்பது தேவை இல்லை! ஆனாலும், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் இதற்காகப் போராடவேண்டுமென்பதே எனது நிலைப்பாடு! ஆனால் அவர்கள் போராடவில்லையென்பதால் , ஒரு இந்தியக் குடிமகன் என்ற தகுதி எனக்கு அரசியல் சட்டத்தால் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நான் இதுபற்றிக் கேட்பதற்கு முழு உரிமை இல்லையா?
ந. தெய்வ சுந்தரம்
--------------------------------------------------------------
3 )இந்தியைத் தாய் மொழியாகக் கொள்ள்தவர்களும் அதை நாட்டின் பொது மொழியாக ஏற்றிருக்கிறார்கள் உதாரணம் காந்தி, அம்பேத்கர், போஸ், பாரதி
ந. தெய்வ சுந்தரம்
-------------------------------------------------------
காந்தி, அம்பேத்கார், போஸ், பாரதி ஆகியோர் இந்தியைப் பொதுமொழியாக ஏற்றுக் கொண்டிருப்பதால் நானும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற தேவை இல்லை!
நண்பர் திரு மாலன் அவர்கள்
---------------------------------------------
4) இப்போது யார் எந்த மொழியில் எழுதினாலும் அதை வேண்டும் மொழிக்கு மாற்றிக் கொள்ளும் தொழில்நுடபம் வந்துவிடது அதை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அது விரிவடையும் போது மொழியை வைத்து பிரிவினை அரசியல் பேசுவது முடிவுக்கு வரும்
ந. தெய்வ சுந்தரம்
-------------------------------------------------------------------
இந்த 'லாலிபப்பு' மிட்டாய் ஏமாற்றுவேலை வேண்டாம் என்பதுதான் எனது வாதம். சரி, தங்கள் நிலைபாட்டை அடிப்படையாகக்கொண்டே கேட்கிறேன். அது இந்திமொழிக்கும் பொருந்தும் அல்லவா? அப்போது என்ன பிரச்சினை? அனைத்துமொழிகளையும் ஆட்சிமொழிகளாக ஆக்குங்கள். இந்திமொழியினர் தமிழ் அறிக்கைகளைப் படிக்கவேண்டுமென்றால் , செயற்கைச் செய்யறிவுத்திறன் மென்பொருளைப் பயன்படுத்தட்டும்! அதுபோன்று மற்ற மொழியினர்களும் அதைப் பயன்படுத்திக் கொள்ளட்டும்!
ஒரு இந்தியக் குடிமகன் , நடுவண் அரசு இந்திக்குக் கொடுத்துள்ளதுபோல, தன் தாய்மொழிக்கும் உரிமை வேண்டும் என்று கேட்பது எப்படிப் பிரிவினை அரசியல் ஆகும்? எனக்குப் புரியவில்லை. பல தேசிய இனங்களைக்கொண்ட ஒரு அரசியல் அமைப்பில் எந்தவொரு இனமும் தன் தாய்மொழி உட்பட அனைத்து இன உரிமைகளையும் கேட்பது பிரிவினை ஆகாது. தங்களுக்கு அரசியல் சட்டமும் தெரியும். அப்படி ஏதாவது ஒரு சட்டப்பிரிவு இந்திய அரசியல் சட்டத்திலோ அல்லது பிற குற்றவியல் சட்டங்களிலோ இருந்தால் கூறுங்கள். நானும் தெரிந்துகொள்கிறேன்.
எனக்கு ஒரு ஐயம்! இந்திமொழிதான் இந்திய நடுவண் அரசின் ஆட்சிமொழியாக இருக்கவேண்டும் என்பதற்கு ஏன் இவ்வளவு முயற்சி செய்து எழுதுகிறீர்கள்? தாங்களும் தமிழர்தானே? தங்கள் தாய்மொழியும் தமிழ்தானே? இவ்வாறு நான் கேட்பது தவறு என்றால் மன்னிக்கவும்!
எல்லா உணர்ச்சிகளும்:
Thirumeni Gt, Govindaswamy Rajagopal மற்றும் 7 பேர்

நடுவண் பல்கலைக்கழகங்களில் ஆங்கிலமும் இந்தியும்! பிற மொழிகளுக்கு இடம் கிடையாது ! (2)

 நடுவண் பல்கலைக்கழகங்களில் ஆங்கிலமும் இந்தியும்! பிற மொழிகளுக்கு இடம் கிடையாது ! என்பதுபற்றிய உரையாடலில் நண்பர் மாலனுக்கும் எனக்கும் இடையிலான உரையாடல்! (பகுதி 1)

-------------------------------------------------------------------
ந. தெய்வ சுந்தரம்
------------------------------
நண்பர் மாலன் அவர்களே. பயிற்றுமொழிபற்றிய விவாதம் வேறு. அதுபற்றி நிறையவே நான் எழுதியுள்ளேன். நான் இந்தப் பதிவில் கேட்டுள்ளது . . நடுவண் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் விண்ணப்பப் படிவத்தில் , வகுப்பு நடத்துவதில் ஒருவருக்கு ஆங்கிலம் வசதியாக இருக்குமா, அல்லது இந்தி வசதியாக இருக்குமா? என்று கேட்டுள்ளது பற்றியே!
இந்தியைமட்டும் ஏன் சிறப்பித்துக் கூறவேண்டும்? ஆங்கிலம் அல்லது ஆசிரியரின் தாய்மொழி, எது வசதியாக இருக்கவேண்டும் என்றல்லவா கேட்டிருக்கவேண்டும்? அவ்வாறு இல்லாமல், ஆங்கிலத்தோடு இந்தியைமட்டும் சேர்த்துள்ளார்களே? எதனால்? அதற்கு ஆட்சிமொழித் தகுதி இருப்பதனால்தானே! பிற மொழிகளுக்கு 'அத்தகுதி' வழங்கப்படவில்லை. எனவே அவை சேர்க்கப்படவில்லை. நடுவண் அரசின் பல்கலைக்கழகம். எனவே அப்படிச் சேர்க்கப்பட்டுள்ளது. இதை ஏன் சுற்றிவளைத்துப் பேசவேண்டும்? கேள்வியும் நேரடியாக இருக்கவேண்டும். பதிலும் நேரடியாக இருக்கவேண்டும்! Point to Point Travel!
அடுத்து, மொழித்துறைகள் அந்தந்த மொழிகளில்தான் பாடம் நடத்துவார்கள். அதில் சிக்கல் இல்லை. பிற பாடங்கள் ?
நண்பர் மாலன் அவர்கள்
---------------------------------------------
நேரடி பதில் இதுதான் 1. மத்தியப் பல்கலைகளில் இந்தியாவின் எந்த மாநிலத்தவரும் பணியில் சேரத் தகுதிபுள்ளவர்கள் (அவர்களது கல்வித் தகுதியைப் பொறுத்து) அவர்கக் எந்த மாநிலத்திலும் பணியாற்றும் வாய்ப்புப் பெற்றவர்கள்.திருவாரூரில் பணியாற்றக்கூடிய வாய்ப்பு தமிழர்களுக்கு மட்டுமல்ல பஞ்சாபியருக்கும் உண்டு. அசாமில்ப்பணியாற்றக் கூடிய வாய்ப்பு தமிழருக்கும் உண்டு. உயர்கல்வியில் பயிற்று மொழி மாநில மொழியாக இல்லாத போது அதன் ஆசிரியர்களுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டியதில்லை. அதே நேரம் மத்திய அரசின் அலுவல் மொழிகள் அறிந்திருந்தால் அதன் சுற்றறிக்கைகளை வாசித்து அறிந்து கொள்ள அவை உதவும். 2. மானவர்கள் எந்த மொழி வழியில் கற்க இணைந்திருக்கிறார்களோ அந்த வழியில்தான் கற்பிக்கப்படும் ஏனெனில் தேர்வுகள் அந்த மொழியில்தான் இருக்கும்.
ந. தெய்வ சுந்தரம்
-----------------------------
//மத்திய அரசின் அலுவல் மொழிகள் அறிந்திருந்தால் அதன் சுற்றறிக்கைகளை வாசித்து அறிந்து கொள்ள அவை உதவும்.// நண்பர் மாலன் அவர்கள்.
நண்பர் மாலன் அவர்களே. நடுவண் பல்கலைக்கழகங்களில் எந்த மாநிலத்தவரும் படிக்கலாம் என்பது தெரிந்ததே! பன்மொழி மாணவர்கள் இருப்பதால் ஆங்கிலம்தான் பயிற்றுமொழி என்பதும் தெரிந்ததே! அதுபற்றி நான் பேசவில்லை! மேலே அடைப்புக்குள் உள்ளதுபற்றியே
எனது கேள்வி. ஏன் நடுவண் அரசின் சுற்றறிக்கைகளை இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவன் ஆங்கிலம் அல்லது இந்தியில் படிக்கவேண்டும்? தன் தாய்மொழியில் ஏன் படிக்கமுடியவில்லை? இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் இந்தியிலேயே படிக்கலாம். ஆனால் மற்ற மாணவர்கள் ஆங்கிலத்தில்தான் படிக்கவேண்டும். அல்லது இந்தி படித்திருக்கவேண்டும். இந்திமொழி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைக்கு என்ன காரணம்? இந்திதான் நடுவண் அரசின் ஆட்சிமொழி. அப்படித்தானே!
அதைத்தான் நான் கேள்விக்கு உட்படுத்துகிறேன்! பிற மொழிகளும் ஆட்சிமொழிகளாக இருந்தால், அந்த மொழிகளிலும் அறிக்கை வரும் அல்லவா? ஏன் அது நீடிக்கவில்லை? தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் ஒன்று ஆங்கிலத்தில் அறிக்கைகளைப் படிக்கவேண்டும். அல்லது இந்திமொழியைப் படித்துவிட்டு இந்தியில் படிக்கலாம். ஆனால் தங்கள் தாய்மொழிகளில் சுற்றறிக்கைகளைப் படிக்கமுடியாது. இதுதானே இன்றைய நிலை! இது ஒரு மொழி ஆதிக்கம் இல்லையா?
ஆங்கிலம், இந்தி இரண்டுமே பிறமொழி மாணவர்களுக்கு அந்நியமொழிகள்தான்! எனவே பிறமொழி மாணவர்கள் இரண்டு அந்நியமொழிகளில் ஏதாவது ஒன்றைப் படித்திருக்கவேண்டும்? ஆனால் இந்திமொழி மாணவர்களுக்கு அது தேவை இல்லை! இது நியாயமா? என்பதுதான் எனது கேள்வி!

செயற்கைச் செய்யறிவுத்திறன் வளர்ச்சியும் சமுதாயப் பிரச்சினைகளும் . .

 செயற்கைச் செய்யறிவுத்திறன் வளர்ச்சியும் சமுதாயப் பிரச்சினைகளும் . . .

--------------------------------------------------------------------------
அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு எதிராக நிற்கக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். சமுதாயத்தின் வளர்ச்சிக்கு உற்பத்திசக்திகள் வளரவேண்டும்; வளரத்தான் செய்யும். அதை யாராலும் தடுத்துநிறுத்தமுடியாது. தடுத்துநிறுத்தவும்கூடாது. செயற்கைச் செய்யறிவுத்திறன் வளர்ச்சி வரவேற்கப்படவேண்டியதே! அதில் ஐயமே வேண்டாம்!
தற்போதைய சிக்கல் என்னவென்றால் . . . ஏகாதிபத்திய நாடுகளின் ஏகபோகப் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் இலாப விகிதத்தை அதிகரிப்பதற்காக இந்த அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்த முனைவதில்தான் சிக்கல்!
சமுதாயத்தில் ஒரு அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியால் குறிப்பிட்ட துறைகளில் தேவையான தொழிலாளிகள் எண்ணிக்கை குறையலாம். ஆனால் அதேவேளையில் அவ்வாறு உபரியான தொழிலாளிகளை ஏற்றுக்கொள்கிற புதிய தொழில் துறைகள் உருவாகும்போது, சிக்கல் இல்லை!
மேலைநாடுகளில் 17,18 ஆம் நூற்றாண்டுகளில் விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகமாகும்போது, உபரி விவசாயிகளை ஏற்றுக்கொள்ள நகர்ப்புறங்களில் தொழிற்சாலைகள் பெருகின. எனவே சிக்கல் இல்லை.
ஆனால் . . . 17,18 ஆம் நூற்றாண்டுகளில் நிலவிய நிலைமை தற்போதைய ஏகாதிபத்திய நாடுகளில் இல்லை. தொழில்நுட்ப வளர்ச்சியால் ஒருபுறம் பெரும் நிறுவனங்களுக்கு லாபம். ஆனால் அதற்கு அடுத்த நிலையில் உள்ள நிறுவனங்களுக்கு நஷ்டமும் கஷ்டமும். கடுமையான பொருளாதார நெருக்கடி.
எனவே, பாதிக்கப்படுகிற தொழிலாளிகளை உட்கிரகித்துக்கொள்ளும் அடுத்த நிலை வளர்ச்சி இல்லையென்றால், வேலையில்லாத் திண்டாட்டம் பெருகத்தான் செய்யும். மேலும் வேலையில்லாதவர்களின் கைகளில் காசு இல்லையென்றால், நுகர்பொருள் வாங்க முடியாது.
அதன் விளைவு . . . நுகர்பொருள் உற்பத்தியும் பாதிக்கப்படும். நுகர்பொருள் பாதிக்கப்படும்போது, அதன் தொடர்ச்சியாக அவற்றிற்குத் தேவையான பெரும் எந்திரங்களை உற்பத்திசெய்யும் பெருந்தொழிற்சாலைகளிலும் பாதிப்பு ஏற்படும். இது ஒரு மிகப் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு இட்டுசெல்வது உறுதி.
ஏகாதிபத்திய நாடுகள் தங்களது பொருளாதார நெருக்கடியை வளர்ச்சியடையாத நாடுகளின் தலையில் கட்டுவார்கள்! மேலும் இந்த நாடுகளிலும் ஏகாதிபத்திய நிறுவனங்கள் புதிய தொழில்நுட்ப வளர்ச்சியை அமுல்நடத்தும்போது, வேலையில்லாத்திண்டாட்டம் பெருகும். ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி ( இன்ஃபோசிஸ்ஸில் இப்போது நடந்ததுபோல்) பணியாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். இப்போதே மென்பொருள் நிறுவனங்கள் இங்குக் கடுமையான நெருக்கடிகளுக்குத் தள்ளப்பட்டு, பணியாளர்கள் வேலை இழந்துவருகிறார்கள்!
இந்தியா போன்ற நாடுகளில் பணவீக்கம் அதிகமாகும். அதன் விளைவு, நுகர்பொருள்களின் விலையும் கூடும்! ஒருபுறம் வேலையில்லாத் திண்டாட்டம் . . . மறுபுறம் விலைவாசி ஏற்றம்! வரும் ஆண்டுகளில் கடுமையான பொருளாதாரப் பாதிப்புகளுக்கு இந்தியா உட்படும்!
ஆனால் இதுபற்றியெல்லாம் இங்குள்ள அரசியல் கட்சிகளுக்குக் கவலை இல்லை! இதைப்பற்றிப் பேசக்கூடமாட்டார்கள்! 'தேர்தல் கூட்டணி' . . . 'தேர்தல் வியூகம் . . . இலவசங்கள் அறிவிப்பு! மக்களைத் திசைதிருப்ப '' பெரியார்'' பிரச்சினைகள்! 'திராவிடம் - தமிழம்'' விவாதங்கள்! 'முருகர் கோயிலா, முஸ்லீம் தர்காவா?'' சம்பாதித்து முடித்த நடிகர்களின் அரசியல் பிரவேசம் வேறு!
உறுதியாக, இந்த அவல நிலைக்கு எதிராக மக்கள் விரைவில் திரளுவார்கள் . திரளுவதற்குத் தள்ளப்படுவார்கள்! இது சமுதாயப் புறநிலை விதி!

நடுவண் பல்கலைக்கழகங்களில் இந்திமொழி ஆதிக்கம் . . .

 நடுவண் பல்கலைக்கழகங்களில் இந்திமொழி ஆதிக்கம் . . .

----------------------------------------------------------------------
நடுவண் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர்கள் நியமனத்திற்கான விண்ணப்பப் படிவம் ஒன்றைப் பார்த்தேன்.
'மாணவர்களுக்கு எந்த மொழியில் உங்களால் பாடத்தைக் கற்றுக்கொடுக்க வசதியாக இருக்கும்? (in which language you are comfortable to teach students?)
மேற்கண்ட வினாவுக்குக் கீழே - 'ஆங்கிலம், இந்தி' - இந்த இரண்டில் ஒன்று! இந்த இரண்டில் ஒன்றைத்தான் ஒருவர் தேர்ந்தெடுக்கமுடியும். அப்படியென்றால் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இந்தியில் வகுப்பு எடுக்கலாம். ஆங்கிலம் தேவை இல்லை! ஆனால் பிறமொழிகளில் வகுப்பு எடுக்கமுடியாது!
ஒரு கட்டத்தில் தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்களைக்கூட இந்தியில்தான் கற்றுக்கொடுக்கவேண்டும் என்றுகூடக் கூறுவார்கள்!
பிறமொழிக்காரர்கள் ஆங்கிலம் நன்கு தெரிந்திருக்கவேண்டும். அல்லது இந்தியைக் கற்றுக்கொள்ளவேண்டும்! இது என்ன நியாயம்?
இந்தி ஆட்சிமொழி என்பதால்தானே இந்திமொழிக்காரர்களுக்கு இந்த வசதி!
தமிழும் பிற இந்தியமொழிகளும் நடுவண் அரசின் ஆட்சிமொழிகளாக இருந்தால்? அதனால்தான் தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளுக்கும் ஆட்சிமொழித் தகுதி வேண்டும் என்று கூறுகிறோம்!

வேலை இழப்பு (3)

 நேற்று இன்ஃபோசிஸ் 400 பேரை வெளியேற்றியதையொட்டி நானும் நண்பர் மாலன் அவர்களும் எழுதிய உரையாடலின் தொடர்ச்சி இது . . . (பகுதி 3)

-----------------------------------------------------------------------
நண்பர் திரு மாலன் அவர்கள்
------------------------------------------------
அம்பானி அதானியைப் பற்றிப் பேசவில்லை உங்கள் குடும்பப் பின்னணி எனக்குத் தெரியாது. ஆனால் எத்தனையோ பேர் தங்கள் தந்தையர் வாழ்ந்ததை விடப் பொருளாதாரத்தில் மேம்பட்ட வாழவை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் தந்தை கிராமப்புற ப்ள்ளி ஆசிரியராக சில நூற் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்திருப்பார். அவர் மகன் பல்கலைக்கழகப் பேராசிரியரக, வங்கி அதிகாரியாக, ஏதோ ஒரு நிறுவன நிர்வாகியாக, மருத்துவராக, பொறியாளராக, கணக்கராக அவர் தந்தையை விட பல மடங்கு வருமானம் ஈட்டுபவராக இருப்பார். இவர்கள் யாரைச் சுரண்டி வளர்ந்தார்கள்? இந்தியா சோஷலிசக் கனவுகளில் மிதந்து கொண்டிருந்த காலத்தில் போன், வாகனம், சமையல் உருளை, ம்எல்லாவற்றிற்கும் வரிசை. கிடைக்க ஆண்டுக் கணக்காகும் இன்று இளைஞர்கள்35-40 வயதுக்குள் வீடு வாங்குகிறார்கள் வீட்டின் விலை பல லட்சம் ஒவ்வொரும் வாகனம் வைத்திருக்கிறார்கள் இரண்டு போன் வைத்திருக்கிறார்கள் பெற்றோர்கள் அயலகப் பயணம் போகிறார்கள் 90 களுக்குப்பின் இந்தியாவின் மத்தியதர வர்க்கம் வளர்ந்திருக்கிறது எண்ணிக்கையில் பெருகியிருக்கிறது அந்த வர்க்கம் கல்வியால், உழைப்பால், திறனால் முன்னேறிய வர்க்கம் எவரையும் சுரண்டி வளர்ந்த வர்க்கமல்ல.
ந. தெய்வ சுந்தரம்
-----------------------------------------------------------------------
நண்பர் மாலன் அவர்களே. தங்களுடைய கல்விப் பின்னணி எனக்குத் தெரியும், தங்களுடைய அறிவுத்திறனும் எனக்குத் தெரியும். தங்களுடைய நீண்ட அனுபவமும் எனக்குத் தெரியும். உண்மையில் இதில் தங்களுக்கு அருகில்கூட என்னால் வரமுடியாது.
இவ்வளவு திறமை, அறிவு உள்ள தங்களுக்கு வறுமைக்கு, வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு , இன்றைய மோசமான பொருளாதாரச் சூழலுக்கு . . . காரணங்கள் தெரியாமலா இருக்கும்? தங்களுக்குத் தெரியும் என்பது எனக்குத் தெரியும். எனவே நான் சொல்லித் தங்களுக்குத் தெரியவேண்டியது எதுவும் இல்லை.
ஒன்றே ஒன்றில்தான் நாம் வேறுபடுகிறோம். உலகக் கண்ணோட்டம், தத்துவார்த்த நோக்கு, வர்க்க நலன்கள் இவற்றில்தான் வேறுபாடு. இந்த வேறுபாடுதான் ஒரு பிரச்சினையை வேறுபட்ட நோக்கில் பார்க்கவைக்கிறது. சரிதானே!
இதைத் தாங்கள் மறுக்கலாம். ஆனால் வெளிப்படையாகக் கூறுகிறேன் . . .
என்னுடைய உலகக்கண்ணோட்டம், தத்துவப் பின்னணி மார்க்சியம்தான் என்று! இதில் ஒளிவுமறைவு எனக்குத் தேவை இல்லை!

வேலை இழப்பு (2)

 நேற்று இன்ஃபோசிஸ் 400 பேரை வெளியேற்றியதையொட்டி நானும் நண்பர் மாலன் அவர்களும் எழுதிய உரையாடலின் தொடர்ச்சி இது . . . (பகுதி 2)

------------------------------------------------------------------------
நண்பர் மாலன் அவர்கள்
----------------------------------------------------------
முடிவுக்கு வரச் சொல்லி வற்புறுத்தவில்லை. ஆனச்ல் மறு தரப்பு என்ன என்பதையும் அறிந்து கருத்துச் சொன்னால் அது ஏற்புடையதாக இருக்கும். நீங்கள் குறிப்பிட்ட நிறுவனம் 400 பேரை மட்டுதான் பயிற்சிக்கு எடுக்கிறதா? இல்லை அது பல்லச்யிரக்கணக்கானோரை எடுக்கிற்து. பயிற்சிக்கு எடுக்கப்பட்ட எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பி விட்டதா? இல்லை. அனுதாபங்களால் வறுமையை ஒழித்து விட முடியாது கல்வி, திறன்கள் இவற்றின் மூலமே முடியும் கல்வியின் மூலம் திறன்கள் மூலம் வறுமையிலிருந்து வெளியேறிய ஒரு தலைமுறை இங்கே இருக்கிறதல்லவா? பசிக்குக் காரணம் என்ன என்பதைக் கண்டுபிடியுங்கள். கஞ்சி குடிப்பதற்கு இல்லாதர் அதன் காரணங்களை அறியமுடியாதிருப்பதுதான் கொடுமை
ந. தெய்வ சுந்தரம்
---------------------------------------------------------------
நண்பர் மாலன் அவர்களே ''கஞ்சி குடிப்பதற்கு இல்லாதார் , அதன் காரணங்களை அறியமுடியாதிருப்பதுதான் கொடுமை'' என்று தாங்கள் கூறியுள்ளீர்கள். 'பசிக்குக் காரணம் என்ன என்பதைக் கண்டுபிடியுங்கள்' என்றும் கூறியுள்ளீர்கள்.
உள்ளங்கை நெல்லிக்கனியாக அனைவருக்கும் தெரியுமே, இச்சமூகப் பொருளாதார அரசியல் அமைப்புத்தான் காரணம் என்று!
தங்களைப்பொறுத்தவரை . . . தனிநபரின் அறிவுத்திறனும் உழைப்பும்தான் 'அம்பானியும் அதானியுமாக' ஆவதற்குக் காரணம் என்று! என்னைப்பொறுத்தவரையில் மற்றவர்களின் உழைப்பை . . . அரசு ஆதரவுடன் . . அவர்கள் சுரண்டியதுதான் காரணம் என்று!
அம்பானியின் மகன் கோடியேகோடி செலவழித்துப் திருமணத்தை நடத்துகிறார்! மறுபுறம் தாலி வாங்கக்கூட காசு இல்லாமல் . . புதுத்துணி வாங்கக்கூட காசு இல்லாமல் . . . அரசியல்வாதிகள் ஏமாற்றுவதற்காக நடத்துகின்ற 'இலவசத் திருமண நிகழ்சிகளில்' திருமணம் செய்துகொள்கிறார்கள்!
அம்பானியின் மகன் அவ்வாறு திருமணம் நடத்திக்கொண்டதற்கான பணத்தை அவர் உழைத்துச் சம்பாதிக்கவில்லை! அவர் தந்தை, தாத்தா என்று இணைந்து தொழிலாளிகளின் உழைப்பைச் சுரண்டிச் சேர்த்த பணம்தான் அது!
சுகமாக நாடு சுற்றுவதற்காக அவர்களுக்குத் தனி விமானம் ! இங்குப் பெரும்பான்மை மக்களுக்கோ சைக்கிளைக்கூட தவணையில் வாங்குகிறார்கள்! இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்!
இதெல்லாம் தங்களுக்குத் தெரியாமல் இருந்தால்! ஆனால் தங்களுக்குத் தெரியும் என்பது எனக்குத் தெரியும்!
கோடிக்கணக்கான மக்களை அடக்குமுறையாலும் சிந்தனைரீதியாகவும் 'அடக்கி ஒடுக்கிவைத்திருக்கிற அம்பானிகள், அதானிகளுக்கும்' அவர்களுடைய 'கருத்துவிற்பன்னர்களுக்கும்' இதுபற்றித் தெளிவாகத் தெரியும்! எனவே, இதுபற்றி விரிவாக முகநூலில் விவாதிக்கவேண்டியது இல்லை!
ஒன்றுமட்டும் உறுதியாகக் கூறலாம் . . . தன் நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பு தர இயலாமல் . . மூன்று நேரம் சோறு கொடுக்க இயலாமல் . . . இருக்கின்ற ஒரு நாடும் அதன் அரசும் 'தோல்வியடைந்த ஒன்றே'! சாம்ஸ்கி கூறுவதுபோல, " Failed States"!

வேலை இழப்பு ... இன்ஃபோசிஸ்

 இருவேறு கண்ணோட்டங்கள் . . . நண்பர் மாலன் அவர்களும் நானும்! (பகுதி 1)

---------------------------------------------------------
இன்ஃபோசிஸ் கணினி நிறுவனத்தில் ஒரே நேரத்தில் 400 இளம் பொறியாளர்கள் வேலை இழப்பு . . . பயிற்சியில் தேறவில்லை என்று ஒரேநாளில் இடத்தைக் காலிசெய்யுங்கள் என்று ஈவிரக்கமில்லாமல் இன்ஃபோசிஸ் நிறுவனம் கூறியுள்ளதாக ஒரு நாளிதழில் வெளிவந்த செய்தியை முகநூலில் பதிவிட்டேன். அது தொடர்பாக நண்பர் மாலன் அவர்கள் கருத்தும் அவரது கருத்தின்மீதான எனது கருத்தும் . . .
நண்பர் மாலன் அவர்கள்
---------------------------------------------------
பயிற்சியில் தேறாத டிரெய்னீஸை என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?
ந. தெய்வ சுந்தரம்
----------------------------------------------------------
ஒருவர் வறுமையின் விளைவாகப் பசியால் துடிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஒருவர் அதைப்பார்த்துவிட்டு' இது அவர் செய்த பாவம். அதன் விளைவை அனுபவிக்கிறார்' என்று சொல்லிவிட்டுப்போவார். மாறாக, மனித அபிமானமும் சமூக உணர்வும் உள்ள ஒருவர் 'அய்யோ, பாவம், எதற்கு இவருக்கு இந்தக் கொடுமை? ' என்று எண்ணுவார்.
ஆகவே எந்தவொரு பிரச்சினையையும் அதைப் பார்க்கிறவரின் உலகக் கண்ணோட்டதைப் பொறுத்து உள்ளது.
இதுவே நண்பர் மாலன் அவர்களுக்கு எனது பதில்!
அவர் கண்ணோட்டம் அப்படி! என் கண்ணோட்டம் இப்படி. ஒவ்வொருவரின் தத்துவப் பின்னணியும் எந்தவொரு பிரச்சினையையும் பார்க்கும் கோணத்தைத் தீர்மானிக்கும்.
எனக்கு 'வேலையைவிட்டு நீக்கப்பட்ட 400 பேர்களும் என்ன செய்வார்கள்?' என்ற சிந்தனை. நான் பாதிக்கப்பட்டவர்களின் 'நியாயத்தை' முன்வைக்கிறேன்.
நண்பருக்கு' அவர்கள் பயிற்சியில் தேறவில்லை. அதற்கு என்ன செய்யமுடியும்? தகுதியில்லாதவர்களைவைத்து ஏன் இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது தொழிலை நடத்தவேண்டும்?' என்று அவர் 'நியாயத்தை' ;இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நியாயத்தை' முன்வைக்கிறார்.
''பொது நியாயங்கள்'' என்று ஒன்று இருக்கமுடியாது! ஒரு வர்க்கத்தின் 'நியாயம்' , எதிர் வர்க்கத்திற்கு 'அநியாயம்தான்'!
எந்தவொரு சமுதாயப் பிரச்சினையிலும் இந்த இருவேறு கண்ணோட்டம் உள்ளவர்கள் ஒரே முடிவுக்கு வரமுடியாது! இதில் எனக்குத் தெளிவு உண்டு!

வேலையில்லாத் திண்டாட்டம் . ...

 வினா ஒன்று (1)

------------------------------------------------
வேலையில்லாத் திண்டாட்டம் . ...
பள்ளிக் கல்வி முடித்தவர்கள் . . . கலைக்கல்லூரி பட்டதாரிகளாக ஆனவர்கள் . . . பலவகைப் பொறியியல் படிப்புகளில் பட்டம் பெற்றவர்கள் . . . மருத்துவப் படிப்பு முடித்தவர்கள் . . . உடல் உழைப்பை மட்டுமே நம்பியிருக்கிற தொழிலாளிகள் . . . விவசாய உற்பத்தியில் பல்வேறு காரணங்களினால் வேலை இல்லாமல் இருக்கும் விவசாயிகள் . . . அல்லது வேறுவழியின்றிக் குறைந்த கூலியில் வேலைசெய்பவர்கள் . . . இதில் விட்டுப்போன பல இருக்கின்றன!
இவர்களுக்கு வேலைவாய்ப்பு எவ்வாறு உருவாகும்?
இவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உள்ள உத்தரவாதம் என்ன?
ஒவ்வொரு துறையாகப் பார்க்கலாம்!
குறைந்தது ஒரு லட்சம் மாணவர்கள் ஆண்டுதோறும் படிப்பு முடித்து வெளிவருகிறார்கள் ! இவர்களுக்கு வேலைவாய்ப்பு உண்டா? இல்லை என்றால் அதற்கு என்ன காரணம்?
அதனடிப்படையில் ஆய்வுசெய்து . . . இன்ன இன்ன காரணங்களே இவற்றிற்கு . . . ஆகவே , அதற்கான திட்டங்களை நாங்கள் முன்வைக்கிறோம் என்று கூறி, இன்றைய அரசியல் கட்சிகள் குறிப்பான திட்டங்களை முன்வைத்துள்ளார்களா?
வேலையே கிடைக்காதவர்கள் (unemployment)
வேலை பெற்றவர்களில் அவர்களது படிப்புக்கோ உழைப்புக்கோ தகுந்த ஊதியம் கிடைக்காதவர்கள் (under employment)
இதற்கான திட்டங்களை - இப்பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய திட்டங்களை - எந்தக் கட்சியாவது முன்வைத்துள்ளதா? அவ்வாறு வைத்திருந்தால், தயவுசெய்து இந்த முகநூல் இழையில் எழுதவும்!
'மாதம் 1000 ரூபாய்' 'இலவசப் பேருந்துப் பயணம்' 'பொங்கலுக்கு இலவச அரிசி, வேட்டி, சேலை' - இவற்றைத் தாண்டி, மேற்குறிப்பிட்டவற்றிற்கு அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ள தெளிவான திட்டங்கள் என்ன? அதுபற்றித் தெரிவித்தால் நல்லது!

எந்த அரசியல் கட்சி கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடை அளித்துள்ளது?

 எந்த அரசியல் கட்சி கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடை அளித்துள்ளது? அல்லது 'தேர்தல் வியூகத் திறமைசாலிகளான'' பிரசாந்த் கிஷோர் போன்றவர்கள் விடை தருவார்களா?

-------------------------------------------------------------------------
1) 'சுதந்திரம்' பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் இந்தியாவால் ஏன் தன்னிறைவுப் பொருளாதார வளர்ச்சியைப் பெறமுடியவில்லை?
2) கிராமப்புறங்களில் விவசாய நிலங்கள் ஏராளமாக இருந்தும், இன்னும் ஏன் விவசாய உற்பத்திமுறை நவீனமாக்கப்பட்டு, விவசாய உற்பத்தி வளரவில்லை?
3) உள்நாட்டு மக்களுக்குத் தேவையான நுகர்பொருள் உற்பத்தியோ , அந்த உற்பத்திக்குத் தேவையான கனரகத் தொழிற்சாலைகளோ உள்நாட்டுப் மூலதனத்தைக்கொண்டு ஏன் வளரவில்லை?
4) கோடிக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு ஏன் வாய்ப்பு அளிக்கமுடியவில்லை?
5) '100 நாள் வேலைத்திட்டம்' எதற்கு? 365 நாள் வேலைத்திட்டம் அல்லவா நீடிக்கவேண்டும்?
6) பீடித்தொழிலைத் தவிர மக்களுக்குத் தேவையான பொருள் உற்பத்திக்கு அந்நியத் தொழில்நுட்பமும் அந்நிய முதலீடும் இல்லாமல் ஏன் தொழிற்சாலைகளை நிறுவமுடியவில்லை? பற்பசை, சோப்பிலிருந்து அனைத்து நுகர்பொருள்களின் உற்பத்தியும் ஏன் இந்தியாவில் அந்நியர்களின் தொழிற்சாலைகளின் கட்டுப்பாட்டில் உள்ளன? தலையில் தேய்க்கிற எண்ணெய், சீயக்காயிலிருந்து காலில் போடுகிற செருப்பு உற்பத்திவரைக்கும் அந்நியக் கம்பெனிகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. ஏன்?
7) மேற்குறிப்பிட்ட உற்பத்தி மட்டுமல்லை, வணிகத்திலும் ஏன் அமேசான் போன்ற பன்னாட்டுநிறுவனங்கள் ஏன் ஆதிக்கம் செலுத்துகின்றன? இந்தியச் சிறு வணிகர்கள் ஏன் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்?
8 ) பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழிற்சலைகளை நிறுவுவதற்கு என்ன காரணம்? குறைந்த கூலியில் நிரம்ப உழைப்புச்சக்தியைச் சுரண்டுவதற்கு இங்கு வாய்ப்பு உள்ளதுதானே காரணம்? இதை ஏன் தடுக்கமுடியவில்லை?
9) இந்தியாவின் இயற்கை வளங்களை அந்நியத்தொழிற்சாலைகள்தானே சுரண்டுகின்றன? இது ஏன் அனுமதிக்கப்படுகிறது?
மக்களை எவ்வாறு தேர்தலில் ஏமாற்றுவது? வாக்குச் சாவடிப் போட்டியில் எப்படி வெற்றிபெறவது? யாருடன் கூட்டணி அமைத்தால் 'ஆட்சியைக் கைப்பற்றமுடியும்? இதுதானே 'தேர்தல் வியூகம்?'
எல்லா உணர்ச்சிகளும்:
தோழர் ஞானம், Sivakumar Padmanabhan மற்றும் 13 பேர்

அந்நிய முதலீடு

 இந்தியாவின் வளர்ச்சிக்குத் தேவையான உள்நாட்டு மூலதன வளர்ச்சிக்கு வழிவகுக்காத - அயல்நாட்டு மூலதனங்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கிற இந்தியாவில் உள்ள ஆளும், எதிர்க்கட்சிகள் பற்றிய எனது கருத்துக்கு நண்பர் திரு மாலன் அவர்கள் அளித்த பதிலும் அதற்கு எனது மறுபதிலும்! ''நீ ஏன் தவறு செய்கிறாய்' என்று கேட்டால், அதற்குரிய பதில் இல்லாமல் 'அவன்மட்டும் தவறு செய்யவில்லையா?' என்ற அடிப்படையில் அவரது பதில் அமைந்துள்ளது!

நண்பர் திரு மாலன் அவர்கள்
-------------------------------------
சீனத்தில் அன்னிய முதலீடு இல்லையா? //Since 2021, China has attracted annually overseas investment of over 1 trillion yuan ($136.9 billion) for three consecutive years//https://www.morningstar.com/.../global-times-delving-the...
ந. தெய்வ சுந்தரம்
--------------------------------
1948-இல் சீனம் மாவோ தலைமையில் பாட்டாளிவர்க்கச் சர்வாதிகார அரசு அமைக்கும்போது, மிக மிக வறுமையான நாடு சீனம். இந்தியாபோன்றே ஜப்பான் உட்பட பல்வேறு ஏகாதிபத்தியங்களின் பொருளாதாரப் பிடிப்பில் இருந்தது. உள்நாட்டு மூலதன வளர்ச்சி கிடையாது. விவசாய உற்பத்தி மிகவும் பின்னடைந்திருந்தது. மக்கள்தொகையில் முதலிடம் சீனா அப்போது.
அப்படிப்பட்ட ஒரு சூழலில் சீனாவின் பொருள் உற்பத்தியை - தொழிற்சாலை, விவசாயம் இரண்டிலும் - மாவோ தலைமையிலான அரசு வளர்த்தெடுக்க மிகக் கடுமையான முயற்சியை எடுத்தது. விவசாய உற்பத்தியே உள்நாட்டு மூலதனத்தை உருவாக்கும் என்பதால் கம்யூன் முறைவரை புரட்சிகர நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பயனாக ஏற்பட்ட மக்களின் வாங்கும் சக்தியை முழுமையாகப் பயன்படுத்த, மக்களுக்குத் தேவையான நுகர்பொருள் உற்பத்தி உள்நாட்டு மூலதனத்தைக் கொண்டு வளர்க்கப்பட்டது. அதனால் கிடைத்த உபரியால் பெருந்தொழிற்சாலைகள் வளர்ச்சியடைந்தன. அந்நிய மூலதனம் இல்லாமல், தன் சொந்த மூலதனத்தில் சீனம் வளர்ச்சிபெற்றது.
மாவோ 1976-ஆம் மறையும்போதே பொதுவுடைக்கட்சிக்குள் திருத்தல்வாதிகள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். மக்களைச் சார்ந்துநின்ற மாவோ 'பண்பாட்டுப் புரட்சியைத்' தீவிரப்படுத்தினார். அதையொட்டிப் பொதுவுடைக் கட்சிக்குள்ளும் வலது சந்தர்ப்பவாதம், இடது சந்தர்ப்பவாதம் இரண்டுமே தலைதூக்கின.
அதன் விளைவு . . . டெங் ஷியோபிங்க் (Deng Xiaoping) வலது திருத்தல்வாதப் பிரிவினர் துணையுடன் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்தத்தொடங்கினார். சோசலிசப் பொருளாதாரமுறை பின்தள்ளப்பட்டது. அதுவரை பெற்ற சீனத்தின் வளர்ச்சியை இவர்கள் பயன்படுத்தத் தொடங்கினர். தனியார் மூலதன வளர்ச்சி தீவிரமடைந்தது. கடந்த 45 ஆண்டுகளில் அவர்களின் 'வளர்ச்சி' ஏகாதிபத்தியப் பண்பைநோக்கிச் சீனம் தள்ளப்பட்டது.
இது சோசலிசத்திற்கு ஏற்பட்ட ஒரு பெரும் தற்காலிகப் பின்னடைவு. ரஷியாவில் தோழர் ஸ்டாலின் இறப்புக்குப்பின்னர் நடைபெற்ற அதே பின்னடைவு சீனத்திலும் ஏற்பட்டதின் விளைவே இன்றைய சீனத்தின் ஏகாதிபத்திய வளர்ச்சி. தற்போது சீனம் ஒரு சோசலிச நாடு இல்லை. எனவே சீன ஏகாதிபத்தியவாதிகள் பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகின்றனர். எனவேதான் ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களும் சீன ஏகாதிபத்தியவாதிகளும் கூட்டுக்கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.
என்னுடைய கருத்து . . . மாவோ தலைமையிலான சோசலிச அரசு, தனது சோசலிசக் கட்டுமானத்தில் பெற்ற பயன்களை - தொழில், விவசாய வளர்ச்சியை - இன்றைய சீன ஏகாதிபத்தியவாதிகள் 'அறுவடை செய்துவருகின்றனர்'. அதன் ஒருபகுதியே சீனப் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இடையே நடைபெறுகிற போட்டிகள்! இந்தியாவிலும் சீன முதலாளிகளின் மூலதனம் நேரடியாகவும் மறைமுகமாகவும் மிக வேகமாக நுழைந்துகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிலும் அவர்களுக்கு ஆதரவான 'அறிவுஜீவிகள்' உருவாக்கப்பட்டு, மறைமுகமாகச் சீன ஆதரவு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். நாம் எதிர்பார்க்காத 'அறிவுஜீவிகள்' இதில் கவனம் செலுத்திவருகின்றனர்.
மாவோவின் சீனம் எவ்வாறு உள்நாட்டு மூலதனத்தை வளர்த்தது என்பதைப்பற்றி மேலும் தெளிவுபெற, கீழ்க்கண்ட தோழர் மாவோவின் கட்டுரையைப் ("On the Ten Major Relationships", Mao 1956) படிக்கலாம்.
எல்லா உணர்ச்சிகளும்:
தோழர் ஞானம், Sivakumar Padmanabhan மற்றும் 15 பேர்
5 கருத்துகள்
5 பகிர்தல்கள்
விருப்பம்
கருத்திடுக
அனுப்புக
பகிர்க

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India