தேசிய இனங்களின் உரிமையும் மொழி ஜனநாயகமும். (2) ..
-------------------------------------------------------------------------
மொழித்திணிப்பு... மொழி ஆதிக்கம் ... என்பவற்றைத் தற்போதைய சூழலில் இரண்டாக வேறுபடுத்திப் பார்க்கவேண்டியுள்ளது. நடுவண் அரசு நம்மீது இந்தியைத் திணிப்பது வேறு ! நாமே நம்மீது ஆங்கிலத்தைத் ''திணித்துக்கொள்வது '' வேறு!
தாய்மொழி உணர்வுடைய- மொழி ஜனநாயக உணர்வுடைய - ஒருவருக்கு இந்த இரண்டுமே தவறுதான். தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் தாய்மொழியாகிய தமிழில் கையொப்பம் இடுவதற்குக்கூட அரசு ஆணையும், தண்டனையும் தேவைப்படுகிற ஒரு சூழல்.
பள்ளிகளில் ஆங்கிலப்பயிற்றுமொழியை நாமே விரும்பி ஏற்றுக்கொள்கிறோம். தமிழ்வழிக் கல்வி நீடிக்கிற பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவதால், பள்ளிகளை மூட வேண்டியுள்ளது அல்லது ''ஆங்கிலப் பயிற்றுமொழிப் பள்ளியாக '' மாற்றவேண்டியுள்ளது. நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் தங்கள் குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசுவதைப் பெற்றோர்களே ''விரும்புகிறார்கள்''. தமிழில் பேசுவதையே ''படிக்காத குடும்பங்களின் செயலாகப் '' பார்க்கிறோம். ஏதேதோ காரணங்கள் சொல்லி, நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம்.
இதற்குக் காரணம்.... மொழிகள்பற்றிய அறிவியல் பார்வை குறைவாக இருப்பதும், அரசியல்-பொருளாதாரக் காரணங்களுமே ஆகும். வழக்கிழந்த ஹீப்ரோ மொழியையே இன்று அனைத்துச் செயல்பாடுகளுக்கும் பயன்படுகிற ஒரு மொழியாக மாற்றியுள்ள இன்றைய சூழலில்.... தாய்மொழித் தமிழை இன்னும் எத்தனை ஆண்டுகள் .... அரசு அலுவலகங்களில்.... பள்ளிகளில்.. கல்லூரிகளில்.... கோயில்களில்... வீடுகளில்கூட ''படி ஏறமுடியாத'' ஒரு மொழியாக வைத்திருக்கப் போகிறோம்? அதேநேரத்தில் 'வடமொழித் திணிப்பு .. இந்தித்திணிப்பு'' என்று கூறிக்கொண்டு... எவ்வளவு காலத்திற்கு ஆங்கிலத்தை நாமே நமது தலையில் சுமந்துகொண்டிருக்கப் போகிறோம்?
எந்த ஒரு மொழியும் நமக்கு பகை இல்லை. அவற்றின் ''மேலிருந்து திணிப்பையும்'' ''நம்மீது நாமே திணித்துக்கொள்கின்ற திணிப்பையும்'' எதிர்க்கவேண்டும். இரண்டு ''திணிப்புகளுமே '' கூடாது! எந்த மொழியையும், எத்தனை மொழிகளையும் ஒருவர் கற்றுக்கொள்ளட்டும் அவரவர் தேவைகளுக்கேற்ப. அது நல்லதே .ஆனால் தாய்மொழித் தமிழை... தமிழகத்தில் அனைத்துத்துறைகளிலும் உயர்த்திப்பிடிப்போம் என்பதே நமது குரலாக ஒலிக்கவேண்டும்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக