செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

பேராசிரியர் என். குமாரசாமி ராஜா

பேராசிரியர் என். குமாரசாமி ராஜா (1933 - ) ….. தமிழ் மொழியியல் உலகத்தில் யாராலும் மறக்கமுடியாத ஒரு பெரும் பேராசிரியர். திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணத்தில் அவர் பெயரிலேயே ஒரு மொழி விதி ( Post Nasal Voiceless Plosive) வழங்கிவருகிறது. 1969 ஆம் ஆண்டு வெளிவந்த அவரது இந்த ஆய்வுநூலுக்குத் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தின் தலைசிறந்த பேரறிஞர் எம் பி எமனோ அவர்கள் முன்னுரை அளித்துள்ளார். ராஜபாளையத்தில் பிறந்து வளர்ந்த பேராசிரியர் ராஜா அவர்கள், தமிழில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்று, பின்னர் பூனா டெக்கான் கல்லூரியில் மொழியியலிலும் முதுகலைப் பட்டம் பெற்றார். உலகறிந்த பேச்சொலியியல் பேராசிரியர் Peter Ladefoged அவர்களின் மாணவர். சில ஆண்டுகள் மதுரையில் தமிழ்நாடு இதழிலும் பணியாற்றியுள்ளார். டேராடூன், பூனா, விசாகப்பட்டிணம், கல்கத்தா ஆகிய இடங்களில் பணியாற்றியுள்ள இவர், பின்னர் தனது ஆசிரியப் பணியை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் மேற்கொண்டார். இடையில் இரண்டு வருடங்கள் அமெரிக்காவில் சிறப்பு விரிவுரையாளராகப் பணியாற்றச் சென்றுள்ளார். 1981-83 ஆம் ஆண்டுகளில் அல்ஜீரியாவிலும் மொழியியல் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். 1970 ஆம் ஆண்டு அமெரிக்கா பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது, உரையாடல் தமிழ் ( Conversational Tamil) என்ற ஒரு நூலை உருவாக்கும் திட்டத்தைத் தொடங்கி, பின்னர் அதை முழுமையாக முடித்து வெளியிட்டார். இந்திய உச்சநீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்சு இவரிடம் தமிழ் பயின்றுள்ளார். கிரியாவின் தமிழ் – தமிழ் – ஆங்கில அகராதியின் உருவாக்கத்தில் பெரும் பங்கு ஆற்றியுள்ளார். 1968 ஆம் ஆண்டு திருமணம் ஆகிய இவருக்கு மோகன் குமாரசாமி என்ற ஒரு மகன் உள்ளார். தற்போது திரு. மோகன் அவர்களும் அவரது துணைவியரான லலிதா ராஜா ( மொழியியல் பேராசிரியை) அவர்களும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவருகின்றனர். நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மொழியியல் படித்தபோது, எனக்கும் பேரா. குமாரசாமி ராஜா அவர்கள் பேராசிரியராக இருந்தார் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறேன். திராவிட மொழிகள்பற்றிய ஆராய்ச்சியில் தலைசிறந்த பேராசிரியர் அவர்கள் சில ஆண்டுகளுக்குமுன்னர் மாலை நடைப்பயிற்சிக்குச் சென்றிருந்தபோது, காணாமல்போய்விட்டார் என்ற செய்தியை மிக்க வேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இன்றுவரை அவரைப்பற்றி தகவல் ஏதும் தெரியவில்லை.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India