திங்கள், 3 ஆகஸ்ட், 2020

தமிழ்மொழி ஆய்வில் ஒரு முக்கியமான ஆய்வியல் கோட்பாடு...

தமிழ்மொழியின் வரலாற்று வளர்ச்சி ஆய்வில் மனதில் கொள்ளவேண்டிய ஒரு முக்கியமான ஆய்வியல் கோட்பாடு......
-------------------------------------------------------------------------------------------------------------
ஆங்கிலத்தில் கணிதத்தில் நிலவுகிற Variable என்ற சொல்லுக்கு ( constant என்பதற்கு எதிரான ஒரு சொல்) நிகரான சொல்லாக ''மாறி '' என்பதற்குப் பதிலாக ''வேறி'' என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கலாம் என்ற இராமகி ஐயா அவர்களின் கருத்தையொட்டிய ஒரு கருத்தாடல்....
// இதுபோல் வேறு-தல், வேற்று-தல் என்ற வினைச்சொற்கள் ஏன் இருக்கக் கூடாது? நமக்குக் கிடைத்த ஆவணங்களையும், பேச்சுவழக்கையும் வைத்து அகரமுதலிகள் ஏற்பட்டன. ”அவற்றில் எல்லாமே இருக்கும், அவற்றில் இல்லாதன தமிழில் இல்லை” என்பது சரியான வாதமா? தமிழின் சொற்சேகரம் இந்த அகரமுதலிகளா? ஏன் அவை ஒவ்வொரு எடுவிப்பிற்கும் (edition) பெரிதாகின்றன? விட்டுப்போனவற்றையும், புதிதானவற்றையும் சேர்க்கிறாரே? வேறு-தல், வேற்று-தல் என்பது விட்டுபோனது ஆகக்கூடாதா? சங்க இலக்கியம் எல்லாவற்றையும் பதிவு செய்து விட்டது என்று எண்ணுகிறோமா? நம்முர் அகரமுதலிகளில் தமிழின் எல்லாச் சொல்லும் இருக்கிறதா? எங்கூரில் புழங்கும் பல சொற்கள் பதிவாகவில்லை. அதுபோல் உங்க்ளூர்ச் சொல்லும் பதிவாகாமல் இருக்கலாமே?//
இராமகி ஐயா அவர்கள் தனது 'வளவு' வலைப்பூவில் இட்டுள்ள ஒரு கருத்து . ஐயா அவர்களின் கருத்து 100 விழுக்காடு உண்மை. ஒரு சொல் நமக்குக் கிடைத்துள்ள இலக்கியங்களில் இடம்பெற்றிருந்தால்தான், அல்லது அகராதிகளில் பதிவுசெய்யப்பட்டிருந்தால்தான், அது தமிழ் வரலாற்றில் நீடித்ததற்குச் சாட்சி என்று கூறுவது அறிவியல் ஆய்வுநெறிக்கு அப்பாற்பட்டது.
பண்டை இலக்கியங்கள், இலக்கணங்கள், இன்றைய தமிழ் ஆகியவற்றில் இடம்பெறாத பல சொற்கள் தமிழ் வரலாற்றில் நீடித்திருக்கலாம். அதுபற்றிய உண்மை... நாம் தமிழ்மொழி வரலாற்றை முறையான மொழி ஆய்வுக் கோட்பாடுகளைக் கொண்டு ஆய்வு செய்யும்போது , தெரியவரும். சில இடைவெளிகள் தெரியவரும். இதுபற்றி நண்பர்கள் மேலும் விரிவாகத் தெரிந்துகொள்ள ... பேராசிரியர் இரா. கோதண்டராமன் (பாண்டிச்சேரி) அவர்களின் '' தமிழெனப்படுவது '' என்ற ஆய்வு நூலைநிச்சயமாகப் படிக்கவேண்டும். தொல்காப்பியர் உட்பட இலக்கண ஆசிரியர்கள் எவ்வாறு ''அமைதி'' கண்டார்கள், அது சரிதானா என்ற விவாதத்தை அந்நூலில் காணலாம்.
எனக்கும் கணினிக்கான தமிழ்மொழி விதிகளை உருவாக்கி அளிக்கும்போது இதுபோன்ற பல சிக்கல்கள் தோன்றின. பொதுவாக, தன்வினைகள் பிறவினைகளாக மாறி, பின்னர் அம் என்ற விகுதி எடுத்து பெயர்ச்சொற்களாக மாறுவது ஒரு பொது உண்மை. கலங்கு-கலக்கு-கலக்கம், இயங்கு-இயங்கு-இயக்கம்., மயங்கு-மயக்கு-மயக்கம், விளங்கு-விளக்கு-விளக்கம் என்று பார்க்கிறோம். ஆனால் தயங்கு என்பதற்குத் ''தயக்கு'' என்பதோ வணங்கு என்பதற்கு ''வணக்கு'' என்பதோ தற்போது தமிழ் நூல்களில் பிறவினைகளாகக் காணப்படவில்லை. ஆனால் தயக்கம், வணக்கம் என்ற பெயர்ச்சொற்கள் இருக்கின்றன. எனவே தயக்கு , வணக்கு என்பவற்றைக் கணக்கில்கொண்டால்தான், தமிழ் சொல்லாக்க விதிகள் முறையாக இருக்கும். இந்த இரண்டு சொற்களும் தற்போது இல்லை என்பதற்காக , இவை போன்ற சொற்கள் தமிழ் வரலாற்றிலேயே இல்லை என்று கூறமுடியாது. சொல் ஆய்வில் ஈடுபடும்போது, இதுபோன்ற எத்தனையோ உண்மைகள் தெரியவருகின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India