''உயர்ந்த மனிதன்'' ''பழுத்த பழம்'' ''சிறந்த மனிதர் '' ஆகியவற்றில் '' உயர்ந்த, பழுத்த, சிறந்த '' என்பவை இறந்தகாலப் பெயரெச்சங்களா அல்லது பெயரடைகளா?'' - பேரா. ச. அகத்தியலிங்கம், பேரா. பொற்கோ ஆகியோரின் விளக்கம்! தமிழ் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் கவனத்திற்கு!
-----------------------------------------------------------------------------------------------------
'' கெட்ட, உயர்ந்த, சிறந்த முதலான கிளவிகள் இறந்தகாலப் பெயரெச்ச வடிவத்தைப் பெற்றுத் திகழுகின்றன. ஆனால் இவை உள்ளபடியே இறந்தகாலப்பெயரெச்சங்களாகச் செயல்படவில்லை. உயர்ந்த குணம் என்பதிலுள்ள உயர்ந்த என்பது இறந்தகாலப் பெயரெச்சமாக இருந்தால், அதற்குரிய எதிர்மறை உயராத குணம் என்று அமையவேண்டும். ஆனால் அப்படியில்லாமல் உயர்ந்த குணம் என்பதற்கு எதிர்மறையாக நாம் தாழ்ந்த குணம் அல்லது இழிந்த குணம் என்ற தொடரையே காண்கிறோம். இங்கே உயர்ந்த என்பதற்குரிய எதிர்மறை தாழ்ந்த அல்லது இழிந்த என்பதே . ஆகவே உயர்ந்த என்பதை நாம் இறந்தகாலப் பெயரெச்சமாகக் கொள்ளாமல் பெயரடையாகக் கொண்டிருக்கிறோம். இதே முறையில் சிறந்த, இழிந்த, தாழ்ந்த, கெட்ட முதலானவற்றையும் விளங்கிக்கொள்ளவேண்டும். இங்கே குறிப்பிட்ட இந்தப் பெயரடைகளெல்லாம் வினைப்பண்பு உடையனவாக விளங்குகின்றன. '' அவன் என்னைவிட உயர்ந்த குணம் உள்ளவன்; அவன் உங்களைப்போல உயர்ந்த குணம் உள்ளவன்'' முதலான தொடர்களில் 'என்னைவிட' 'உங்களைப்போல' முதலான கிளவிகள் வினைகொண்டு முடிவன. இங்கே ''என்னைவிட'' ''உங்களைப்போல'' முதாலன கிளவிகள் உயர்ந்த என்ற சொல்லோடு சென்று சேர்வது கவனிக்கத்தக்கது''. ( பேராசிரியர் பொற்கோ;இக்காலத் தமிழ் இலக்கணம்; பக்கம் 101-102).
'' வினைப்பெயரடைகள் - பெயரடைகள் பண்புப் பெயர்களிலிருந்தும் பெயரடைகளிலிருந்தும் உருவாவது போன்று வினையடிகளிலிருந்தும் உருவாக்கம் பெறுகின்றன. படித்த பையன், இருண்ட வீடு , வெளுத்த பையன் போன்றவை வினைகளிலிருந்து உருவாக்கம் பெறுகின்றன. இவை ''வினையடி + கால இடைநிலை + பெயரடை விகுதி'' என்ற அமைப்பைக் கொண்டு வரும். இங்குக் கால இடைநிலை காலம் காட்டுவதில்லை. பழுத்த பழம், நீண்ட கயிறு, உயர்ந்த உள்ளம், விரிந்த மார்பு, சிறந்த வாழ்க்கை ஆகியவை இதற்கு உதாரணங்கள். இவை பழுத்திருக்கின்ற பழம், நீண்டிருக்கின்ற கயிறு, உயர்ந்துள்ள உள்ளம், விரிந்திருக்கின்ற மார்பு, சிறப்பான வாழ்க்கை என்று பொருள்படும் நிலையில் அவை கொண்டுமுடியும் பெயர்களின் பண்பைக் காட்டுவது காணத்தக்கது. இவற்றை நீளமான கயிறு, உயர்வான உள்ளம், விரிவான மார்பு என்றெல்லாம் மாற்றிக்கூறமுடியும். இந்நிலையில் இவை பெயரடைகளாகவே உள்ளன. ஒரு பழுத்த பழம், ஒரு நீண்ட கயிறு போன்று ஒரு பெயர்த்தொடராகவே இவை உள்ளன. வினைத்தன்மையை இழந்து வினைப்பண்பைக்கொண்ட பெயரடைகளாக உள்ளன.இவை. எனவேதான் இதில் வரும் - அ என்ற விகுதி பெயரடை விகுதியாகக் கருதப்படுகின்றது. ''( பேரா. அகத்தியலிங்கம்; தமிழ்மொழி அமைப்பியல் ; பக்கம் 158-159) . நீண்ட விளக்கத்திற்கு மன்னிக்கவும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக