முதுபெரும் பேராசிரியர் செ.வை. சண்முகம் அவர்களின் தமிழ் மொழி ஆய்வாளர்களுக்கான ஐந்து முக்கிய நூல்கள் ...
---------------------------------------------------------------------------------------------------------------
பேராசிரியர் செ.வை. சண்முகம் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையிலும் மொழியியல் துறையிலும் 37 ஆண்டுகள் பணியாற்றியவர். அங்கேயே மூன்று ஆண்டுகள் மாணவராகவும் இருந்தவர். எங்களுடைய மொழியியல் பேராசிரியர். மறைந்த பேராசிரியர் ச. அகத்தியலிங்கம் அவர்களின் உற்ற நண்பர்.
பேராசிரியர் தமிழ் இலக்கணங்களில் ஆழ்ந்த புலமை பெற்றவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. 80 வயதைக் கடந்தும் இன்றும் தன்னுடைய ஒவ்வொரு நொடியையும் மொழி ஆய்வுக்காகவே செலவழித்துவருபவர். ஒரு புதிய செய்தியை அவர் பெற்றவுடனேயே என்னை அலைபேசியில் அழைத்து, அதைப்பற்றி விளக்குவார். என்னுடைய பல ஐயங்களுக்கும் அவரைத்தான் தொந்தரவு செய்துவருகிறேன் இந்த நிமிடம்வரை.
தனது ஆய்வில் எந்தவொரு சமரசத்தையும் ஏற்றுக்கொள்ளமாட்டார். சரி என்றால் சரி... தவறு என்றால் தவறுதான்!
அவர் தொல்காப்பியம்பற்றியும் அதற்கான உரையாசிரியர்களான நச்சினாக்கினியர், இளம்பூரணர், சேனாவரையர், தெய்வச்சிலையார், கல்லாடர் ஆகியோரின் உரைகள்பற்றியும் மிக ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டு .. அதனடிப்படையில் தொல்காப்பியரின் இலக்கணக் கோட்பாடுகள்பற்றி ஐந்து ஆய்வுநூல்களை அளித்துள்ளார். எழுத்திலக்கணக் கோட்பாடு, சொல்லிலக்கணக்கோட்பாடு - மூன்று தொகுதிகள், தொல்காப்பியத் தொடரியல் என்ற நூல்களே அவை.
தொல்காப்பியரின் சிறப்பு என்ன... அவர் நூலில் உள்ள இடைவெளிகள் எவை... உரையாசிரியர்கள் எவ்வாறு தொல்காப்பியத்திற்கு விளக்கம் அளித்துள்ளனர்... எங்கெங்கெல்லாம் தேவையற்ற ''வழுவமைதி'' காண முற்படுகின்றனர்.... இன்றைய மொழியியல் நோக்கில் தொல்காப்பியிரின் கருத்துகள் எவ்வாறு சிறந்து நிற்கின்றன .. தொல்காப்பியர் காலத்துச் சமூக அமைப்பு (உயர்வு -தாழ்வு) எவ்வாறு அவர் இலக்கணத்தில் வெளிப்படுகின்றது - இவைபற்றியெல்லாம் மிக ஆழமான, தெளிவான கருத்துகளை இந்நூல்களில் முன்வைக்கிறார்.
மேற்குறிப்பிட்ட ஐந்து நூல்களையும் ஒருவர் படித்தாலே தொல்காப்பியரின் சிறப்பையும் உரையாசிரியர்களின் சிறப்புகளையும் நன்றாகவே தெரிந்துகொள்ளமுடியும்.
தமிழகத்தில் மொழியியல் பேராசிரியர்கள் தமிழ் இலக்கண ஆய்வுக்கு ஆற்றியுள்ள மிகச் சிறப்பான பணிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாகப் பேராசிரியரின் இந்த நூல்கள் அமைந்துள்ளன.
''மொழியின் அமைப்பு முழுமையும் பழைய இலக்கண ஆசிரியர்கள் சொல்லி முடித்துவிட்டார்கள், அப்படிச் சொல்லாதது ஏதாவது நமக்குத் தோன்றினால், அது சிறப்பில்லாததாகவோ, சிறுபான்மை வழக்காகவோ இருக்கவேண்டும் என்பது இடைக்கால உரையாசிரியர்களின் மனப்பான்மையாக இருந்தது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு, ஒரு ஆசிரியரே மொழி அமைப்பில் எல்லாக் கூறுகளையும் கண்டு சொல்வது என்பது இயலாத காரியம். எனவே நமக்குத் தோன்றுகின்ற அமைப்புபற்றிய உண்மை, மூல ஆசிரியர் கூறிய அமைப்புபற்றிய உண்மையைப்போல ஒத்த சிறப்புடையதுதான்; ஏனெனில் இலக்கண ஆராய்ச்சி ஆனாலும் பிற துறை ஆராய்ச்சியானாலும் ஒவ்வொரு காலத்து அறிஞர்களும் புதிய புதிய உண்மைகளைக் கண்டுபிடித்துக்கொண்டே இருப்பது உலக இயல்பு. நாம் ஒரு புது அமைப்போ, உண்மையோ கண்டுபிடிப்பதால் முன்னோர்க்கு இழுக்கு வந்துவிடாது . எனவே இடைக்கால உரைகளைப் படிக்கும்போது உரையாசிரியர்கள் கொடுக்கும் குறிப்புகளின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு, அவர்கள் கூறும் சிறப்பில்லாதது, சிறுபான்மை போன்றவற்றை உண்மையாகக் கொள்ளவேண்டியதில்லை; உண்மையாகவும் கொள்ளக்கூடாது. ''
0 கருத்துகள்:
கருத்துரையிடுக