தமிழ் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்களுக்கு .... (3)
மொழி வளர்ச்சியில் இரண்டு எதிர்மறையான நிகழ்வுகள்...
----------------------------------------------------------------------------------------------------------------------------
முந்தைய பதிவில் ''சொல்மயமாக்கம்'' பற்றிய சில கருத்துகளை முன்வைத்திருந்தேன். அதற்கு எதிர்மாறான ஒரு நிகழ்வு மொழிகளில் நடைபெறுகிறது. அது ''இலக்கணமயமாக்கம்'' என்று அழைக்கப்படுகிறது. தமிழ்மொழியில் இந்த நிகழ்வு வரலாற்றில் தொடர்ந்து நடைபெற்றுள்ளது.
மொழி வளர்ச்சியில் சொற்களஞ்சியத்தின் பெருக்கம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அந்த அளவுக்கு இலக்கணப் பொருண்மையின்... இலக்கணச்சொற்கள் அல்லது விகுதிகளின் ... வளர்ச்சியும் முக்கியத்துவம் உடையது ஆகும்.
''நான் அவரைக் கடையில் பார்த்தேன்'' என்ற தொடரில், நான்கு அகராதிச்சொற்கள் ( நான், அவர், கடை, பார் ) இடம்பெற்றிருக்கின்றன. இந்த நான்கு சொற்களும் தங்களுக்கே உரிய அகராதிப் பொருண்மைகளைக் கொண்டிருக்கின்றன. அகராதியில் இதற்கான பொருண்மையைக் காணலாம்.
மேற்கண்ட மூன்று பெயர்ச்சொற்களில் ஒவ்வொன்றும் ''பார்'' என்ற வினைச்சொல்லோடு வேறுபட்ட உறவுகளைக் கொண்டுள்ளன. இதைத்தான் ''வேற்றுமை'' என்று அழைக்கிறோம்.
(1) 'நான்' - பார்த்தவன்; முதல் வேற்றுமை; ஆனால் வெளிப்படையான வேற்றுமை உருபு கிடையாது.
(2) 'அவர்' - என்னால் பார்க்கப்பட்டவர்; இந்த உறவைக் காட்ட ''ஐ'' என்ற வேற்றுமை உருபு பயன்படுகிறது.
(3) 'கடை' - பார்க்கப்பட்ட இடம். இதை வெளிக்காட்ட ''இல்'' என்ற வேற்றுமை உருபு பயன்படுகிறது.
(4) ''பார்'' என்ற வினைச்சொல்லானது 'பார்த்தல்' என்ற செயல் நடைபெற்ற காலத்தை வெளிப்படுத்த ''த்த்'' என்ற கால இடைநிலையைக் கொண்டுள்ளது; ''ஏன்'' என்பது எழுவாயான 'நான்' என்பது உயர்திணை- தன்மை- ஒருமை என்பதைக் காட்டுவதோடு மட்டுமல்லாமல், ''பார்த்தான் '' என்பது ஒரு வினைமுற்று என்பதையும் காட்டிநிற்கிறது.
ஆகவே, 'நான்' 'அவர்' 'கடை' 'பார்' என்ற நான்கும் அகராதிச்சொற்கள்;
'ஐ' 'இல்' 'த்த்' 'ஏன்' என்ற நான்கும் இலக்கணச்சொற்கள். எழுவாய்க்கான வெளிப்படையான வேற்றுமை உருபு கிடையாது. இலக்கணச் சொற்கள் தாங்கள் இணைகின்ற அகராதிச்சொற்களின் அடிப்படை அகராதிப் பொருண்மையை மாற்றாது. மாறாக, அகராதிச்சொற்களுக்குத் திணை, எண், பால், இடம், வேற்றுமை, காலம் போன்ற பல்வேறு இலக்கணப் பண்புகளைக் கூட்டும். இந்த இலக்கண உருபுகள்தான் ஒரு தொடரில் அமைகிற அகராதிச் சொற்களுக்கு இடையே பலவகைப்பட்ட உறவுகளை ஏற்படுத்துகின்றன. எனவே ஒரு தொடரில் அகராதிச்சொற்கள் இடம்பெறும்போது, ஒவ்வொரு அகராதிச்சொல்லும் தங்களுக்குரிய இலக்கணக்கூறுகளை அல்லது பண்புகளைப் பெற்றுக்கொண்டுதான் , தொடரை முழுமையடையச் செய்கின்றன. அதாவது ஒரு தொடரில் உள்ள அகராதிச்சொற்களை முறையாகப் பிணைத்து, ஒரு முழுமையான தொடர்ப்பொருளை வெளிப்படுத்த உதவும் சொற்களே இலக்கணச் சொற்கள் ஆகும். இவை குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கும். அகராதிச்சொற்கள் பல ஆயிரங்கள் இருக்கலாம். ஆனால் இலக்கணச் சொற்கள் குறைவாகவே இருக்கும்.
சமுதாயம் மாற மாற... சிந்தனை வளர்ச்சி ஏற்பட ஏற்பட .. நடைமுறையில் மொழிச் செயல்பாடுகள் வளர வளர... அகராதிச்சொற்கள் புதிது புதிதாகத் தோன்றுவதுபோல, இலக்கணச்சொற்களும் மாறுகின்றன; விரிவு அடைகின்றன. சில இலக்கணச் செயல்பாடுகள் மறையலாம். அப்போது அவற்றிற்குரிய இலக்கண உருபுகள் மறையலாம். அதுபோலப் புதிய இலக்கண உருபுகள் தோன்றலாம். தோன்றும். அகராதிச்சொற்கள், இலக்கணச்சொற்கள் இரண்டுமே தொடர்ந்து மாறிக்கொண்டும் வளர்ந்துகொண்டும் இருக்கும்.
புதிய இலக்கணக்கூறுகள் அல்லது உறவுகள் தோன்றும்போது, அவற்றிற்குரிய இலக்கண உருபுகள் புதிய வடிவங்களில் தோன்றலாம். மேலும் ஏற்கனவே நீடிக்கிற அகராதிச்சொற்களும் தங்களுக்குரிய அகராதிப்பொருண்மையைத் தக்கவைப்பதோடு, புதிய இலக்கணக் கூறுகளுக்கான இலக்கணச் சொற்களாகவும் பயன்படலாம். சில வேளைகளில் சில அகராதிச்சொற்கள் தங்கள் அகராதிப் பொருண்மையையே முழுமையாக விட்டுவிட்டு, முழுக்க முழுக்க இலக்கணச் சொற்களாகவே பயன்படத் தொடங்கலாம்.
எடுத்துக்காட்டாக, ' நான் அவரைப் பார்த்தேன்'(' I saw him") - ' நான் அவரைப்பற்றிப் பேசினேன்' ("I talked about him") என்ற இரண்டு தொடர்களிலும் இடம்பெறுகிற 'அவரை' என்பதற்கும் 'அவரைப்பற்றி' என்பதற்கும் இடையில் பொருண்மை வேறுபாடு இருக்கிறது. முதல் சொல்லில் 'ஐ' என்ற வேற்றுமை உருபு இடம்பெற்றுள்ளது; இரண்டாவதில் 'ஐப்பற்றி' என்ற இலக்கண உருபு இடம்பெற்றுள்ளது.
இரண்டாவது தொடரில் ''ஐ'' என்பதோடு இணைந்து வருகிற ''பற்றி'' என்பது தமிழுக்குப் புதியது இல்லை; ஏற்கனவே நீடிக்கிற 'பற்று' ("hold") என்ற வினைச்சொல்லின் செய்துவாய்பாட்டு வினையெச்ச வடிவம்தான் இது. ஆனால் இந்தத் தொடரில் அது தனது முந்தைய வினைச்சொல் பொருண்மையைக் காட்டவில்லை; மாறாக, ''ஐ'' -யோடு இணைந்து வேறொரு வேற்றுமை உறவை - "about" - என்ற இலக்கணப் பொருண்மையை வெளிப்படுத்துகிறது. அதாவது ''பற்று'' என்ற வினைச்சொல்லின் அகராதிப் பொருண்மையை இத்தொடரில் வெளிப்படுத்தாமல், வேறொரு இலக்கணப் பொருண்மையை வெளிப்படுத்தும் இலக்கண உருபாகப் பயன்படுகிறது. இதையே மொழியியலார் '' இலக்கணமயமாக்கம் '' (grammaticalization") என்று அழைக்கிறார்கள். இதுபோன்று இன்றைய தமிழில் 50-க்கும் மேற்பட்ட அகராதிச்சொற்கள் வேற்றுமை உறவுகளை வெளிக்காட்டக்கூடிய இலக்கணச்சொற்களாகவும் மாறி அமைந்து பயன்படுகின்றன. 'ஐவிட' 'ஐப்போல' 'ஐநோக்கி' 'ஐக்குறித்து' ஐமுன்னிட்டு' 'க்காக' 'க்கென்று' 'க்குவெளியே' 'அன்பொருட்டு' 'உடன்' என்று பல இலக்கண உருபுகள் அகராதிச்சொற்களிலிருந்து இலக்கணச் சொற்களாகவும் மாறிப் பயன்படுகின்றன.
பெயர்ச்சொற்களுடன் இணைந்து வேற்றுமை உறவுகளைக் காட்டப் புதிய இலக்கணச் சொற்கள் உருவாகியிருப்பதுபோல, வினைச்சொற்களோடு இணைந்து புதிய இலக்கணப் பண்புகளைக்காட்டவும் புதிய இலக்கண உருபுகள் உருவாகியுள்ளன.
'அவர் இங்கு இருக்கிறார்'
'அவர் இங்கு வந்திருக்கிறார்'
மேற்கண்ட இரண்டு தொடர்களிலும் இடம்பெறுகிற ''இரு'' என்ற சொல், இரண்டிலும் வேறுபட்ட பொருண்மையை வெளிப்படுத்துகிறது. முதல் தொடரில் 'இரு' என்பது 'இருத்தல்' என்ற செயலைக் குறித்து நிற்கிறது. இரண்டாவது தொடரில் 'இரு' என்பது தனது அகராதிப் பொருண்மையை இழந்து, 'வருதல்' என்ற செயல் அண்மையில் முடிவுற்று, அதன் தாக்கம் நீடித்துவருகிறது என்ற ஒரு இலக்கணப் பொருண்மையைக் காட்டிநிற்கிறது. ஆங்கிலத்தில் இதை "perfect aspectual" என்று அழைக்கிறார்கள். அதாவது இந்தச்சொல் தனது முதன்மைப் பொருண்மையை இங்குக் கைவிட்டுவிட்டு, 'வருதல்' என்ற வினையின் அகராதிப் பொருண்மையை மாற்றாமல், அதற்கு மேலும் சற்று இலக்கணப் பொருண்மையைக் கூட்டுகிறது. இதை வினைக்கூறு என்று அழைக்கிறார்கள். இன்றைய தமிழில் இதுபோன்று 20-க்கும் மேற்பட்ட வினைக்கூறுகளை வெளிப்படுத்தும் இலக்கண உருபுகள் ஏற்கனவே நீடிக்கிற வினைச்சொற்களிலிருந்து உருவாகி நீடிக்கின்றன. ( கொண்டிரு, விடு, பார், காட்டு, தொலை, வை ...) . இவையெல்லாம் முதன்மை வினைகளுக்குத் துணையாக வருகிற துணைவினைகளாக அமைந்துள்ளன.
மேற்கண்டதுபோல, சில முதன்மை வினைச்சொற்கள் வினைகளை மேற்கொள்பவரின் நோக்கை வெளிப்படுத்தும் துணைவினைகளாகப் பயன்படுகின்றன. 'வரவேண்டும்' 'வரமுடியும்' 'வரக்கூடாது' 'வரலாம்' 'வரக்கூடும்' 'வரமாட்டேன்' ஆகியவற்றில் வருகிற 'வேண்டும், முடியும், கூடாது, லாம், கூடும் , மாட்டேன்' ஆகியவை எல்லாம் வினைநோக்கு என்று அழைக்கப்படுகிற துணைவினைகளாக இன்று பயன்படுகின்றன.
இவ்வாறு, தமிழில் புதிய புதிய இலக்கணக் கூறுகள் தோன்றி வளர வளர, அவற்றை வெளிப்படுத்துவதற்கான இலக்கணச் சொற்களாக ஏற்கனவே நீடிக்கிற அகராதிச்சொற்கள் மாறி அமைகின்றன. இங்கு நாம் பார்க்கவேண்டியது, இவ்வாறு மாறி அமைகிற அகராதிச்சொற்கள், பிற இடங்களில் அகராதிச்சொற்களாகவும் தொடர்ந்து பயன்படுகின்றன. 'எனக்குப் புத்தகம் வேண்டும்' என்பதில் முதன்மை வினையாக வருகிற 'வேண்டும்' என்பது 'நான் வரவேண்டும்' என்ற தொடரில் துணைவினையாகப் பயன்படுகிறது.
ஆகவே, தமிழ்மொழி வளர்ச்சியில் புதிய புதிய அகராதிச்சொற்கள் முந்தைய பதிவில் பார்த்த ''சொல்மயமாக்கம்'' என்ற செயல்பாட்டின்வழியே தோன்றி நீடிப்பதுபோல .... புதிய புதிய இலக்கண உறவுகளை வெளிப்படுத்த ஏற்கனவே நீடிக்கிற அகராதிச்சொற்கள் இலக்கணச்சொற்களாகவும் மாறி அமைகின்றன. இதையே இங்கு நாம் 'இலக்கணமயமாக்கம் ' என்று அழைக்கிறோம்.
உயிருள்ள ஒரு மொழியில் தொடர்ந்து இந்த இரண்டு செயல்பாடுகளும் - சொல்மயமாக்கம், இலக்கணமயமாக்கம் என்ற இரண்டும் - நீடிக்கும். இந்தச் செயல்பாடுகள் அம்மொழியைச் சமுதாயத்தின் மொழிச்செயல்பாட்டுத் தேவைகளை நிறைவேற்றுகிற மொழியாக வாழவைப்பதில் முக்கியப் பங்கு ஆற்றுகின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக