தேசிய இனங்களின் உரிமையும் மொழி ஜனநாயகமும் .(1)
---------------------------------------------------------------------- ------------------------------------
தொன்மை, தொடர்ச்சி, வளர்ச்சி உள்ள நமது தாய்மொழி தமிழ்மொழியின் சிறப்புபற்றி மகிழ்வடைவோம். அதனை இன்றைய தேவைக்கேற்பவும் அறிவியல் உலகிற்கு ஏற்பவும் அடுத்த உயர்கட்ட நிலைக்குக் கொண்டுசெல்வோம். அதுவே நமது இலக்காக இருக்கவேண்டும். அதற்கான பணிகளை மேற்கொள்வோம்.
உலகில் உள்ள மொழிகள் அனைத்தும் மனித மூளையின் படைப்புகளே. ஒவ்வொரு மொழியும் அது பேசப்படுகிற மக்களுக்குச் சிறப்பானதே. ஆனால் அரசியல், பொருளாதாரக் காரணங்களின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட மொழி பிறமொழிகளின்மீது ஆதிக்கம் செலுத்தலாம். பிற இனங்களின்மீது ஆதிக்கம் செலுத்தலாம். ஆனால் அதற்குக் காரணம் அந்த மொழி இல்லை. அதைப் பிறமொழியினரின்மீது திணிக்க... ஆதிக்கம் செலுத்த முயலும் அரசியல் சக்திகளே . அந்த மொழியோ அந்த மொழி பேசும் மக்களோ இல்லை.
நமது நோக்கம்... அந்த மொழி ஆதிக்கத்தை எதிர்ப்பதாக அமையவேண்டும்... அதற்குப் பின்னணியாக உள்ள அரசியல் சக்திகளை எதிர்த்துப் போராடுவதாக இருக்கவேண்டும். அதற்கு மாறாக, அந்த மொழிக்கு எதிராகவோ, அந்த மொழி பேசும் மக்களுக்கு எதிராகவோ செயல்படுவதாக அமையக்கூடாது. எந்த ஒரு பிறமொழியும் அதைப் பேசுகிற மக்களும் நமக்குப் பகைவர்கள் இல்லை. அதைத் திணிக்கும் முயலும் சக்திகளே நமக்குப் பகை. இதுதான் மொழி ஜனநாயகம்.
ஆங்கிலமோ, இந்தியோ, வடமொழியோ நமக்கு பகை இல்லை. அந்த மொழிகளைப் பேசும் மக்களும் பகை இல்லை. அவற்றைப் பிறமொழியினரின் மீது திணிக்கும் சக்திகளே நமக்குப் பகை! நமது மொழியின் சிறப்பை உலக அளவிற்கு எடுத்துச்செல்வோம். பிற மொழிகளின் சிறப்புகளை அந்தந்த மொழி பேசும் மக்கள் எடுத்துச் செல்லட்டும். நமது மொழி ஜனநாயக உரிமைகளை உயர்த்திப்பிடிப்போம். அதே வேளையில் பிறமொழியினரின் மொழி ஜனநாயகத்தையும் மதிப்போம்.
நமது இனத்தின்மீதோ, தாய்மொழிமீதோ பிற எந்தவொரு இனமும் அல்லது மொழியும் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கமுடியாது. அதுபோன்று பிற இனங்களின்... மொழிகளின் ஜனநாயக உரிமைகளையும் மதிப்போம். இந்தவகையான ஒற்றுமையே... பாதிக்கப்படுகிற இனங்கள் ஒன்றுபட்டு... ஆதிக்கம் செலுத்துகிற இனங்களுக்கும் ஆதிக்கம் செலுத்துகிற மொழிகளின் திணிப்புக்கும் ... எதிராகப் போராடுவதை வலியுறுத்துவதே இன உணர்வுடன் இன உரிமைக்காகப் போராடுகிற ... ஜனநாயக உணர்வுடைய ... ஒவ்வொருவரின் தலையாயக் கடமையாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக