வியாழன், 13 ஆகஸ்ட், 2020

தமிழ் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்களுக்கு .... (2) மொழி வளர்ச்சியில் இரண்டு எதிர்மறையான நிகழ்வுகள்...

 தமிழ் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்களுக்கு .... (2)

மொழி வளர்ச்சியில் இரண்டு எதிர்மறையான நிகழ்வுகள்...
-------------------------------------------------------------------------
உலகில் நிலவும் அனைத்தும் மாற்றங்களுக்கும் வளர்ச்சிகளுக்கும் உட்பட்டவையே. இயற்கை, சமுதாயம், மனித மனம் அல்லது அறிவு ஆகிய அனைத்தும் மாற்றங்களுக்கும் வளர்ச்சிகளுக்கும் உட்பட்டவையே. சமுதாய விளைபொருளான மொழியும் இதற்கு விதிவிலக்கு இல்லை. ஒரு குறிப்பிட்ட மொழி, தான் பயன்படுத்தப்படும் சமுதாயத்தின் வளர்ச்சிக்கேற்ப... தேவைகளுக்கேற்ப.... தொடர்ந்து மாறிக்கொண்டும் வளர்ந்துகொண்டும் இருக்கும்.
தமிழ்மொழியும் மேற்குறிப்பிட்ட மாற்றங்களுக்கும் வளர்ச்சிகளுக்கும் உட்பட்டதே. இதில் குறிப்பிடத்தக்க இரண்டு நிகழ்வுகளைப்பற்றி இங்குக் குறிப்பிடுகிறேன். அவை 'சொல்மயமாக்கம் (Lexicalization) ' ' இலக்கணமயமாக்கம் (Grammaticalization) ' என்பதாகும்.
தமிழ்ச் சமுதாயத்தின் வளர்ச்சிக்கேற்ப தமிழ் தனது சொல்வளத்தைப் பெருக்கிக்கொண்டே வந்துள்ளது. சொல்வளத்தைப் பெருக்குவதில் மூன்று முக்கியப் போக்குகளைப் பார்க்கலாம். (1) ஒன்று, புதிய கருத்துகளுக்கும் பொருள்களுக்கும் புதிய சொல்களை உருவாக்குவது ('கல்லூரி'), ... (2) இரண்டாவது, நீடிக்கிற சொல்களின் பொருண்மையைச் சற்று மாற்றிப் பயன்படுத்திக்கொள்வது ('பனுவல்' 'அணு'). ஏற்கனவே இச்சொல்களுக்கு இருக்கிற பொருண்மைகள் மாற்றப்பட்டு, புதிய பொருண்மை அளிக்கப்படுகிறது. (3) மூன்றாவது, ஏற்கனவே நீடிக்கிற இரண்டு சொல்களைத் தொகையாக மாற்றிப் பயன்படுத்திக்கொள்வது ('பல்கலைக்கழகம்', 'பள்ளிக்கூடம்') ஆகும்.
மேற்குறிப்பிட்டதில் மூன்றாவதாக அமைகிற தொகைகளின் வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க பண்பைக் காணலாம். தொகை என்றாலே ஒன்றுக்குமேற்பட்ட சொல்கள் இணைந்து ஒரு குறிப்பிட்ட பொருண்மையை வெளிப்படுத்தப் பயன்படுவது ஆகும். 'கற்சிலை' என்பது 'கல்' 'சிலை' என்ற இரண்டு சொல்களைக்கொண்டு அமைந்துள்ளது. இந்தத் தொகையின் பொருண்மையைத் தெரிந்து கொள்ள, இந்த இரண்டு சொல்களின் பொருண்மையைக் கூட்டினாலே போதும். இதுவே தொகை என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை compound என்று அழைக்கிறார்கள். தமிழில் ஏராளமான தொகைச்சொல்களைக் காணலாம். அவற்றைப் பெயர்த்தொகை, வினைத்தொகை, உம்மைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, அன்மொழித்தொகை என்று தமிழில் வேறுபடுத்துகிறோம்.
அவ்வப்போது தேவைக்கேற்ப புதிய புதிய தொகைச்சொல்களை உருவாக்கிக் கொள்கிறோம். இதன் பொருண்மையைப் புரிந்துகொள்வது அனைவருக்கும் எளிது. ஏனென்றால், தொகைகளில் இடம்பெறுகிற சொல்களின் பொருண்மை மாறாமல் இருக்கிறது. அந்தப் பொருண்மைகளைக் கூட்டினால், அந்தத் தொகைச்சொல்லின் பொருண்மை கிடைத்துவிடும் (அன்மொழித்தொகை இதற்குச் சற்று விதிவிலக்கு.)
ஆனால் ஒரு புதிய பொருண்மையை வெளிப்படுத்தும் தேவை ஏற்படும்போது, இரண்டு சொல்களை இணைத்துத் தொகையை உருவாக்கும்போது, ஒரு புதியவகை மாற்றத்தைப் பார்க்கலாம். ''வானொலி'' என்ற சொல்லானது, இரண்டு சொல்களை - 'வான்' , 'ஒலி' என்று இரண்டு சொல்களை- கொண்டது. ஆனால் இதன் பொருண்மை 'radio' என்பதாகும். இங்குத் தொகையில் இடம்பெற்றுள்ள 'வான்' ' ஒலி' என்ற இரண்டு சொல்களின் பொருண்மையைக் கூட்டினால் , நாம் எதிர்பார்க்கிற பொருண்மை கிடைக்காது. மாறாக, ஒரு புதிய பொருண்மை அளிக்கப்படுகிறது. 'வானொலி' என்பது ஒருசொல் நீர்மையாக அமைகிறது. 'பச்சிலை' 'செங்கல்' போன்ற பல சொல்கள் இதுபோன்று உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வகையான மாற்றங்களை '' சொல்மயமாக்கம்'' ( Lexicalization ) என்று மொழியியலாளர்கள் அழைக்கின்றனர்.
'பச்சை' 'இலை' என்ற இரண்டு சொல்களை இணைத்து, சித்தவைத்தியத்தில் பயன்படுத்தும் மருந்துவகையைக் குறிக்கப் பயன்படுத்துகிறோம். இந்தப் 'பச்சிலை' மருந்தில் இடம்பெறுகிற இலைகள் பச்சை நிறத்தில் இருக்கவேண்டும் என்று தேவையில்லை. அதாவது இங்கு 'பச்சை' என்பது நிறத்தைக் குறிக்கவில்லை. அதுபோல, 'செங்கல்' என்பதிலும் 'சிவப்புக்கல்' என்ற பொருண்மை இல்லை. வேறு நிறங்களிலும் 'செங்கல்கள்' இருக்கலாம். பள்ளிகளில் பயன்படுகிற 'கரும்பலகை' என்ற சொல்லும் இன்று வெள்ளைநிறத்தில் இருக்கிற பலகைகளையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
எனவே தொகைகளைப் பற்றி ஆராயும்போது , மேற்கூறிய வகையிலான மாற்றங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டும். தொகையில் இடம்பெறுகிற
சொல்களின் தனிப்பொருண்மையைக் கூட்டி வரும் பொருண்மையே அத்தொகைகளின் பொருண்மை என்றால், அத்தொகை 'தொகையாகவே' நீடிக்கிறது.
ஆனால் அவ்வாறு இல்லாமல், இரண்டு சொல்களும் இணைந்து அமையும்போது, புதிய பொருண்மை ஒன்று அத்தொகைக்கு அளிக்கப்பட்டால், அது தொகை என்ற நிலையிலிருந்து, ஒருசொல்நீர்மைத் தன்மை உள்ள ஒரு புதிய அகராதிச்சொல்லாக ( Lexicon) அமைகிறது.
ஒன்றுக்கு மேற்பட்ட சொல்கள் இணைந்து, தங்களுக்குரிய பொருண்மையிலிருந்து மாறி, வேறு ஒரு புதிய பொருண்மையை வெளிப்படுத்தும் இந்த மொழிச்செயல்பாடே 'சொல்மயமாக்கம்'!. இதற்கு மாறுபட்டு, அகராதிச்சொல்லாக நீடிக்கிற ஒன்று, தன் அகராதிப்பொருண்மையை இழந்து, இலக்கணப் பொருண்மையைக் காட்டும் இலக்கணச் சொல்லாக மாற்றமடைவதை 'இலக்கணமயமாக்கம்' (Grammaticalization) என்று அழைக்கிறார்கள். அதை அடுத்த பதிவில் விளக்குகிறேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India