பேராசிரியர் சிங்கப்பூர் சித்தார்த்தன் அவர்கள்.... எனக்கு நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்காத ஒரு தமிழ் அறிஞர். ஆனால் அவரது '' இலகு தமிழில் இனிக்கும் தமிழ் இலக்கணம்'' என்ற நூலைப் புரட்டிப்பார்க்காத நாளே கிடையாது. இன்றைய தமிழின் தரவுகளின் அடிப்படையில் மிகத் தெளிவாக தமிழ்மொழியின் இலக்கணத்தைக் கூறும் அவரது நூல் இது. எப்போதும் அவரது அந்த நூல் எனது மேசையில் இருக்கும். எந்த ஒரு ஐயத்திற்கும் இந்த நூலில் விடை இருக்கும். மிக்க மகிழ்ச்சியுடன் அவரைப்பற்றிய 5 ஆண்டுகளுக்குமுன் நான் முகநூலில் இட்ட பதிவை இன்று மீள்பதிவு செய்கிறேன்.
தமிழறிஞர் சிங்கப்பூர் சித்தார்த்தன் (1936) … இயற்பெயர் பா. கேசவன். எனக்கு மிகவும் பயன்படுகிற ‘ இலகு தமிழில் இனிக்கும் தமிழ் இலக்கணம்’ என்ற தமிழிலக்கண நூலின் ஆசிரியர். தினந்தோறும் ஏதாவது ஒரு ஐயத்தைப் போக்க இவர் நூலை நான் வாசிப்பேன். குறிப்பாக, தமிழ்ப் புணர்ச்சி இலக்கணத்தில் ஏதும் ஐயம் ஏற்பட்டால், இவருடைய இந்த நூலைப் பார்ப்பேன். மிக அருமையான எடுத்துக்காட்டுகளுடன் தமிழ்ப் புணர்ச்சிவிதிகளை இவர் விளக்குவார். சிங்கப்பூரில் தமிழாசிரியாகப் பணியாற்றியவர். முதலில் தமிழ்ப்பள்ளி ஆசிரியராகவும், பின்னர் ஆங்கில உயர்நிலைப்பள்ளி , தொடக்கக் கல்லூரி, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையும், தேசியக் கல்விக் கழகம் ஆகியவற்றிலும் ஆசிரியப் பணியை மேற்கொண்டார். சிங்கப்பூர் கல்வி அமைச்சகத்தின் தமிழ்மொழிப் பிரிவில் பாடநூல் எழுத்தாளராகவும் பணி மேற்கொண்டுள்ளார். கல்வி மேம்பாட்டு அதிகாரியாகவும், பாடத்திட்ட மேம்பாட்டுக் கழகத்தின் உறுப்பினராகவும், கல்வித் தொழில்நுட்பப் பிரிவிலும் பணியாற்றியுள்ளார். இளமைதொட்டே பல்வேறு இதழ்களில் கட்டுரைகள் எழுதிவரும் இவர், ஒரு நாடக ஆசிரியருமாவார். இவருக்குச் சிங்கப்பூர் ‘கடற்கரைச்சாலை கவிமாலை அமைப்பு’ என்ற இலக்கிய அமைப்பு ‘ கவிமாலை இலக்கியக் கணையாழி விருது 2006’ என்ற ஒரு சிறப்பான விருதை அளித்துச் சிறப்பு செய்துள்ளது. 1981 ஆம் ஆண்டுமுதல் 1996 ஆம் ஆண்டுவரை தமிழிலக்கணத்தை அனைவருக்கும் புரியும்படி மிக எளிமையாகவும் சுவையாகவும் சிங்கை வானொலியில் ‘எளிய இலக்கணம் ‘ என்ற தலைப்பில் அளித்த உரைகளே, பின்னர் ‘ இலகு தமிழில் இனிக்கும் தமிழ் இலக்கணம்’ என்ற பெயரில் நூலாக (2003) வெளிவந்துள்ளது. இந்நூலுக்குத் தமிழக அரசின் சிறந்த இலக்கண நூலுக்கான பரிசும் அளிக்கப்பட்டுள்ளது. ‘ எந்த மொழியிலும் காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. தமிழ்மொழியும் இதற்கு விலக்கன்று. எனினும் , தமிழ்மொழியில் நேர்ந்துள்ள அத்தகைய மாற்றங்கள் மொழியின் அடிப்படைக் கூறுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் அல்ல. மேலும் அவை சிறுபான்மையே. ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்பு தொல்காப்பியர் வகுத்த தமிழ் இலக்கணம் இன்றைய வழக்கிலுள்ள தமிழ் மொழிக்கும் பயன்படும் தன்மையதாய் இருப்பதே இதற்குத் தக்க சான்றாகும் …. இத்தகைய சிறு மாற்றங்களுக்கு ஏற்பத் தேவையாயின் புது விதிகளை வகுத்துக்கொள்ளவும் நாம் தயங்கவேண்டியதில்லை. பழையன கழிதலும் , புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்னும் முதுமொழியைக் கருத்தில் இருத்தித் தமிழ்ப் பேரறிஞர்கள் இத்துறையில் கவனம் செலுத்துவார்களாயின் பெரும்பலன் கிட்டும்’ என்று இவர் மொழியின் இயல்பைத் தெளிவாகக் கூறுவது ஒரு மொழியியல் ஆய்வாளருக்கே உரிய ஒரு சிறப்புப் பண்பாகும். மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி கூறுவதுபோல, இவரும் ‘ இலக்கணம் என்பது ஓர் ஒழுங்குமுறை. அது நம்முள் இருக்கிறது. நமக்குத் தெரியாமலேயே அது நமக்கு உதவிக் கொண்டிருக்கிறது’ என்ற கருத்தை முன்வைப்பது மிகச் சிறப்பானது. 1965 – ஆம் ஆண்டு தேசியத் தொழிற்சங்க காங்கிரசின் ‘ போராட்டம்’ என்ற இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். தேசியக் கலைக்கழகத்தின் உறுப்பினராகவும், தமிழர் பேரவையின் தலைவராகவும் (1997-2000) பணியாற்றியுள்ளார். மேற்குறிப்பிட்ட இலக்கணநூல்தவிர, ‘தமிழ் வாழும்’, ‘நமது இலக்கு என்ன? அதை அடைவது எப்படி’, ‘தமிழ்நலம் தமிழர்க்கு ஆக்கம்’, ‘மெய்ப்பொருள் காண்போம், மேன்மை அடைவோம்’ என்ற தலைப்புகளில் நூல்கள் வெளியிட்டுள்ளார். மேலதிக விவரங்களுக்கு - http://muelangovan.blogspot.in/2015/06/blog-post_12.html.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக