முனைவர் ஆ. மணவழகன் …. இளந்தலைமுறை தமிழாய்வாளர். சமூக உணர்வாளர். தமிழர் வாழ்வு, தமிழ் இலக்கியம், கணினித்தமிழ் ஆகிய துறைகளில் சிறந்த ஆய்வுகளோடு, படைப்பிலக்கியத்திலும் திறன் படைத்தவர். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரியில் தமிழில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் திருச்சி தேசியக் கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டமும் ஆய்வியல் நிறைஞர் ( எம் ஃபில் ) பட்டமும் பெற்றார் . உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றார். சென்னையில் எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் மானுடவியல் புலத்தின் தலைவராகப் பணியாற்றியுள்ளார். கணினித்தமிழிலும் ஆர்வம் உள்ள இவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினித்தமிழ் ஆய்வாளராகவும் பணியாற்றினார். தற்போது சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் சமூகவியல், கலை மற்றும் பண்பாட்டு மையத்தில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். அங்குள்ள கலை, பண்பாட்டுக்காட்சிக்கூடத்தின் பொறுப்பாளராகவும் இருந்துவருகிறார். ‘பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை (2005)’, ‘சங்க இலக்கியத்தில் மேலாண்மை (2007)’ , ‘தொலைநோக்கு (2008)’, ‘பழந்தமிழர் தொழில்நுட்பம் (2010)’, போன்ற தமிழ்ச் சமுதாயம்பற்றி ஆய்வுநூல்களை வெளியிட்டுள்ளார். ‘கூடாகும் சுள்ளிகள் (2010)’ என்ற ஒரு மிகச் சிறந்த கவிதைத்தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். தேசிய, உலக அளவிலான கருத்தரங்குகள் பலவற்றில் ஆய்வுக்கட்டுரைகள் வழங்கியுள்ளார். ‘உயிரோவியம் (சங்க இலக்கியக் காட்சிகள்)’, ‘காந்தள் (தமிழ் மொழிக் கையேடு)’, ‘ சொல்லோவியம் (படவிளக்க அகராதி)’ போன்ற கணினித்தமிழ்த் தொகுப்புகளையும் உருவாக்கியுள்ளார். சங்க கால இலக்கியங்கள்பற்றி ஆய்வுகளில் இவரது சிறப்பான பங்களிப்பிற்காக 2007-2008 ஆம் ஆண்டிற்கான இந்தியக் குடியரசுத் தலைவரின் ‘ இளம் அறிஞர் விருது ‘ ( செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன விருது ) இவருக்கு வழங்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் ‘ இளம் படைப்பாளி’ விருது வழங்கப்பட்டது. மேலதிக விவரங்களுக்கு - https://ta.wikipedia.org/s/13a2 , http://manavazhahankavithaikal.blogspot.com/ இவரது மின்னஞ்சல் முகவரி - tamilmano77@yahoo.com
0 கருத்துகள்:
கருத்துரையிடுக