சனி, 25 ஜூலை, 2020

மார்க்சியம் பொய்த்துவிட்டதா? பொதுவுடமை தோற்றுவிட்டதா?

மார்க்சியம் பொய்த்துவிட்டதா? பொதுவுடமை தோற்றுவிட்டதா?
--------------------------------------------------------------------------..................................................................
'' ரசியாவில் கம்யூனிசம் தோல்வி'' , ''சீனாவில் கம்யூனிசம் தோல்வி'' ''இன்று உலகில் எங்குமே கம்யூனிச நாடுகள் கிடையாது'' ..... காரல் மார்க்சும் பிரடரிக் எங்கல்சும் முன்வைத்த சோசலிச, கம்யூனிச சமுதாயம் என்பது நடைமுறை சாத்தியம் இல்லாத ஒன்று '' என்ற குரல் பல முனைகளில் ''ஒலிக்கப்பட்டு வருகிறது''! இந்தக் குரலை எழுப்புவர்கள் யார்? அதற்கான பின்னணி என்ன?
இலட்சக்கணக்கான உயிர்த்தியாகங்களால் உருவாக்கப்பட்ட சோசலிச சமுதாயங்கள் பாதிப்புக்கு உட்பட்டு இருக்கிறதே என்று வருத்தப்படுபவர்களா? அல்லது ''அப்பாடி , இனி நமக்கு ஆபத்து இல்லை என்று பெருமூச்சு விடும் '' சக்திகளா?
ஒரு நாடு தன்னுடைய விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு பின்னடைவைச் சந்தித்தால் ... அது ஏவிய ஒரு விண்கலம் செயல்படாவிட்டால் ... யார் மகிழ்வடைவார்கள்? அந்த நாட்டு மக்களா அல்லது அந்த நாட்டின் எதிரி நாடுகளா? நிச்சயமாக எதிரி நாடுகள்தான்! பின்னடைவுக்கு உட்பட்ட நாட்டின் மக்கள் என்ன சொல்வார்கள் ? '' இது ஒரு தற்காலிகப் பின்னடைவுதான். ஏதோ சில தொழில்நுட்பப் பிரச்சனைகளால் ஏற்பட்ட ஒரு பின்னடைவு. தோல்வி இல்லை. மீண்டும் தவறுகளைக் களைந்து வெற்றிபெறுவோம். அறிவியல் , தொழில்நுட்பம் பொய் ஆகாது'' ! ஆனால் எதிரி நாடுகளோ, '' பின்னடைவு இல்லை. தோல்வி'' என்று கூறும்!
இலட்சக்கணக்கான மக்களின் உயிர்த்தியாகங்களால் கட்டப்பட்ட சோவியத் ரஷியா .. இரண்டாம் உலகப் போரிலே இட்லர், முசோலினி பாசிசக் கூட்டணியை முறியடித்து... தன்னைமட்டும் மட்டுமல்ல , அமெரிக்க, இங்கிலாந்து நாடுகளையும் காப்பாற்றிய சோவியத் ரஷியா ... ஸ்டாலின் மறைவுக்குப்பின்னர் ... 1956-இல் குருசேவ் தொடங்கிவைத்த ''சோசலிசத்திற்கு எதிரான எதிர்ப்புரட்சி தொடர்ந்து , '' 1990 வாக்கில் கோர்பச்சோவால் ''சோசலிசத்திற்கு எதிரான எதிர்ப்புரட்சியின் வெற்றிக்கொடி நாட்டப்பட்டது''. இதை நாம் மறுக்கவில்லை. 100 விழுக்காடு உண்மைதான். சோசலிசத் தளம் பின்னடைவுக்கு உட்பட்டுவிட்டது !
1917 -இல் தோற்றுவிக்கப்பட்ட ரஷிய சோவியத் தற்காலிகமாக உடைக்கப்பட்டுவிட்டது. சரி. இது சோசலிசத்திற்கு நிரந்தரத் தோல்வியா? அல்லது ஒரு தற்காலிகப் பின்னடைவா? பின்னடைவு என்றால் அதற்குக் காரணங்கள் என்ன? நிச்சயமாக இதற்கு விடை காண்பது முற்போக்குச் சக்திகளின் பாட்டாளிவர்க்கக் கடமை!
உலக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால்.... நிலப்பிரபுத்துவ வர்க்கங்களுக்கு எதிரான முதலாளித்துவப் புரட்சி .... ஒரு சில ஆண்டுகளில் வெற்றிபெற்றுவிடவில்லை. முதலாளித்துவ சமுதாயம் தனது ஆதிக்கத்தைத் தக்கவைக்க ஒரு சில நூற்றாண்டுகள் ஆகியது. பழைய சமுதாயத்தின் அனைத்து வேர்களையும் அறுத்தெறிந்து .. முதலாளித்துவ சமுதாயம் முன்னேற ... சில நூற்றாண்டுகள் ஆகியது. இது சமூக வரலாற்று வளர்ச்சியில் தெளிவாகத் தெரிகின்ற ஒரு உண்மை. அடிமைச் சமுதாயத்தை எதிர்த்து வெற்றிபெற்ற நிலப்புரபுத்துவ சமுதாயத்திற்கும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள பல நூற்றாண்டுகள் ஆகியது வரலாற்று உண்மை. இடைப்பட்ட காலங்களில் பின்னடைவுகள் !
சோவியத் ரஷியாவில் பாட்டாளிவர்க்கமானது லெனின் தலைமையில் 1917-இன் இறுதியில்தான் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியது. அந்தக் காலகட்டத்தில் ரசியாவின் வளர்ச்சியானது சோசலிசத்திற்கு இட்டுச் செல்லக்கூடிய அளவுக்கு வளர்ச்சியடைந்து இருக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட உற்பத்தி வளர்ச்சி நிலையில்தான் சோசலிசக் கட்டுமானத்தை நிர்மாணிக்கமுடியும். அப்போது ஜெர்மனியின் தொழில் வளர்ச்சி அத்தகைய ஒரு வளர்ச்சியைப் பெற்றிருந்தது. ஆனால் அதைப் பயன்படுத்தி, சோசலிசக் கட்டுமானத்தை நிர்மாணிக்கும் பணிக்குத் தேவையான அளவுக்கு .... பாட்டாளிவர்க்க இயக்கம் வளர்ச்சியடைவில்லை. ஆனால் ரசியாவிலோ... பாட்டாளிவர்க்கம் தயாராக இருந்தது. ஆனால் தொழில் வளர்ச்சி அதற்குத் தயார் இல்லாத ஒரு நிலை.
இந்த ஒரு இக்கட்டான சூழலில் ... லெனின் தலைமையிலான பாட்டாளிவர்க்கக் கட்சி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்ததால்... லெனின் தளராமல் ஒரு தெளிவான பொருளாதாரத் திட்டத்தை வகுத்தார். உடனடியாகச் சோசலிசப் பொருளாதாரத்தை முன்வைக்கமுடியாததால்... ஒரு புதிய பொருளாதாரத் திட்டத்தை (New Economic Policy - NEP) வகுத்தார். அங்கு நீடித்த ... வளர்ந்திருந்த முதலாளித்துவ சக்திகளுக்குப் பல சலுகைகளை அறிவித்தார். அதுவே ரசியாவின் தொழில் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் என்ற முடிவுக்கு வந்தார். பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் அரசியல் அதிகாரம் இருந்ததால், முதலாளித்துவச் சக்திகளின் ''எதிர்ப்புரட்சியை'' முறியடிக்கமுடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.
அன்றைய நிலையில், ரசியாவின் பாட்டாளிவர்க்க அரசியல் அதிகாரத்தை உள்ளிருந்தே உடைக்க முயற்சிக்கும் முதலாளித்துவ சக்திகள் ஒருபுறம்... மறுபுறம் உலகிலேயே முதன்முதலாக நிறுவப்பட்ட பாட்டாளிவர்க்க அரசைச் சீர்குலைக்கப் பகீரத முயற்சிகள் எடுத்துவந்த ஏகாதிபத்திய நாடுகள்.... அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ! ஏகாதிபத்திய பெருங்கடலின் நடுவே ஒரு சிறு தீவுபோல்தான் சோவியத் ரசியா... ஆனால் உலக அளவிலான சோசலிசப் புரட்சிக்கான ஒரு போர்த்தளமாக அது நீடித்தது. உலகப் பாட்டாளிவர்க்கத்திற்கு வழிகாட்டும் கலங்கரைவிளக்கமாக நீடித்தது.
இங்கு மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய ஒரு உண்மை.. பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான தொடர்ந்த வர்க்கப் போராட்டத்தின்மூலம் 1917 - அக்டோபர் புரட்சியை வெற்றி அடையச்செய்தவுடன் ... பாட்டாளிவர்க்கமானது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன்.... ரசியாவில் வர்க்கப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது என்ற முடிவுக்கு வரமுடியாது என்பதில் லெனின் மிகத் தெளிவாக இருந்தார். அக்டோபர் புரட்சிக்குப் பிறகும் வர்க்கப்போராட்டம் .... பாட்டாளி வர்க்கத்திற்கும் முதலாளித்துவ சக்திகளுக்கும் இடையிலான வர்க்கப் போராட்டம் நீடிக்கும்... நீடித்துத்தான் தீரும் . ஏனென்றால், புரட்சிக்கு முன்பு ஆளும் வர்க்கமாக நீடித்த பிற்போக்கு வர்க்கங்கள் ,அழிந்துவிடவில்லை. புரட்சிக்குப் பின்பு ஆளப்படும் வர்க்கமாக மாறியுள்ளது. அவ்வளவுதான். அது தொடர்ந்து நீடிக்கிறது அதனுடைய அத்தனை வேர்களும் அழிக்கப்படும்வரை வர்க்கப் போராட்டம் நீடிக்கும். நீடிக்கவேண்டும் .
அக்டோபர் புரட்சிக்கு முந்தைய வர்க்கப் போராட்டத்திற்கும் அக்டோபர் புரட்சிக்குப் பிந்தைய வர்க்கப் போராட்டத்திற்கும் ஒரு அடிப்படை வேறுபாடு... முன்னர் அரசியல் அதிகாரம் பிற்போக்குச் சக்திகளின் கைகளில் இருந்தது.. இப்போது பாட்டாளிவர்க்கத்தின் கைகளில் இருக்கிறது. அவ்வளவுதான். இந்த அரசியல் அதிகாரத்தைக் கைகளில் வைத்துக்கொண்டு.... பாட்டாளிவர்க்கத்தின் தலைமையிலான அரசு, தொடர்ந்து வர்க்கப் போராட்டதைக் கொண்டுசெல்லவேண்டும் என்ற தெளிவு லெனினுக்கு இருந்தது. அவருக்குத் துணையாக ஸ்டாலினும் செயல்பட்டார். ஆனால் ஒரு சில வருடங்களிலேயே - 1924 ஜனவரியிலேயே - லெனின் மறைந்துவிட்டார். அவருடைய திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் ஸ்டாலின் தலைமையிலான பாட்டாளிவர்க்கத் தலைமை ... கம்யூனிஸ்ட் கட்சி .... மிக உறுதியாக இருந்தது. அப்போதைய மத்தியக் குழுவின் முழுமையான ஒப்புதடலுடன்தான் ஸ்டாலின் ஒவ்வொரு அடியையும் எடுத்துவைத்தார். ஆனால் லெனின் முன்வைத்த புதிய பொருளாதாத் திட்டத்தால் பயனடைந்த முதலாளித்துவ வர்க்கம், ஸ்டாலினுக்கும் பாட்டாளிவர்க்க அரசுக்கும் பல நெருக்கடிகளை ..... வெளியில் இருந்த அமெரிக்கா உட்பட பல ஏகாதிபத்திய நாடுகளின் மறைமுக உதவிகளுடன்... கொடுத்தது.
பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான வர்க்கப் போராட்டம் தொடர்ந்தது. தோல்வியடைந்த பிற்போக்கு வர்க்கச் சக்திகள் , நேரடியாகவும், மறைமுகமாகக் பொதுவுடமைக் கட்சிக்கு உள்ளும் , அரசுக்கு உள்ளும் இருந்துகொண்டு, பாட்டாளிவர்க்க அரசைச் சீர்குலைக்கப் பலவழிகளில் போராடின. இதற்கிடையில் இரண்டாவது உலகப் போர். உலக வரலாற்றிலேயே பாசிச சக்திகளை ஒழித்துக்கட்டுவதில் லட்சக்கணக்கான மக்களைத் தியாகம் செய்த ரசியப் பாட்டாளிவர்க்கத்திற்குத் தலைமைதாங்கிய ஸ்டாலின் 1953 ஆண்டு மறைந்தார். அதுவரை மறைந்திருந்த பிற்போக்குச் சக்திகள் குருசேவ் தலைமையில் ஒன்று திரண்டு, பாட்டாளிவர்க்க அரசைப் பலவீனப்படுத்தின. இது வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியே. பாட்டாளி வர்க்கக் கட்சியானது திருத்தல்வாதிகளின் கைகளில் சிக்கியது. அதன் விளைவு.... பாட்டாளி வர்க்க அரசு பலவீனம் அடைந்தது. அதன் உச்சக் கட்டம்... 1990 வாக்கில் கார்போச்சோவின் பெரஸ்ட்ரோக்கியா ( Perestrokia) ''தத்துவம்'' ரசியாவில் பாட்டாளி வர்க்க அரசுக்கு முடிவு கட்டியது. ''அதற்காக '' அவருக்கு 1990-இல் நோபல் பரிசே கொடுக்கப்பட்டது. அக்டோபர் புரட்சிக்குப் பிந்தைய வர்க்கப் போராட்டம் ... அடுத்த நிலைக்கு ..வேதனைக்குரிய நிலைக்கு ... வந்தது. அது நீடிக்கிறது. தற்காலிகமான ஒரு பின்னடைவு பாட்டாளி வர்க்கத்திற்கு. ஆனால் வரலாற்றுச் சக்கரத்தை ... முன்நோக்கிச் செல்லும் சோசலிசத்திற்கான வர்க்கப் போராட்டத்தை.... பிற்போக்கு சக்திகளால் தொடர்ந்து தடுத்து நிறுத்தமுடியாது. நிச்சயமாக மீண்டும் பாட்டாளி வர்க்க அரசு அமையும். சோசலிச நிர்மாணப் பணி நிறைவேறும்.
இந்தத் தற்காலிகப் பின்னடைவைக் கண்டு மகிழ்வடைகிற '' சக்திகள்'' தான் ... இப்போது '' கம்யூனிசம் தோற்றுவிட்டது, மார்க்சியம் பொய்த்துவிட்டது'' என்று ''ஆனந்தக் குரல் '' எழுப்புகிறது. அவர்களது ''ஆனந்தம் '' நீடிக்காது. ஏனென்றால் மார்க்சின் சோசலிசம் ஒரு கற்பனாவாத சோசலிசம் இல்லை. அறிவியல்பூர்வமான சோசலிசம். புறவயமான ஒரு உண்மை. இந்த உண்மைபற்றி அடுத்த தொடரில் மேலும் விளக்குகிறேன்.
----------------------------------------------------------------------------------------------------------------------------
ரசியாவில் ஏற்பட்ட பின்னடைவுக்குக் காரணம் .... அங்கு நிலவிய பொருளாதாரக் கட்டமைப்பு.... வர்க்கப் போராட்டத்தின் தொடர்ச்சி ஆகியவையே என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். தனிநபர்களின் செயல்களே அடிப்படை என்று நான் கூறவரவில்லை. வெற்றிக்கோ பின்னடைவுக்கோ.... ரசியாவில் அக்டோபர் புரட்சிக்குப்பின்னர் தொடர்ந்த வர்க்கப் போராட்டமே காரணம் என்பதில் ஐயம் இல்லை.
-------------------------------------------------------------------------------------------------------
நான் முகநூலில் எழுதுவது.... பொதுவான மக்களிடையே கம்யூனிச எதிர்ப்பாளர்கள் உருவாக்குகிற பொய்ப் பிரச்சாரங்களை முறியடிப்பதற்காகவே. மார்க்சியத் தத்துவத்தில் குறிப்பான, தெளிவான ஆய்வுகளை மேற்கொள்கிற தோழர்களுக்கு இல்லை. மிக நுண்ணியமான கருத்துகளையெல்லாம் வேறு தளங்களில் பகிர்ந்துகொள்ளலாம். இங்கு நான் வலியறுத்த விரும்புவது (1) சோவியத் அக்கோடபர் புரட்சி வெற்றிபெற்ற சூழலில் ரசியாவில் உடனடியாகச் சோசலிசக் கட்டுமானத்தைக் கொண்டுசெல்லமுடியாத பொருளாதாரக் கட்டமைப்பு நிலவியது.. ( 2) அக்டோபர் புரட்சியின் வெற்றியுடன் வர்க்கப்போராட்டம் நின்றுவிடவில்லை. அது தொடர்ந்தது. கட்சிக்குள்ளும அரசுக்குள்ளும் அது பலவகைகளில் தொடர்ந்தது. அதன் தொடர்ச்சியே இறுதியில் பாட்டாளிவர்க்க அரசு பலவீனமடைந்து, இறுதியில் எதிர் வர்க்கங்களின் அரசாக அது மாறியது. (3) மேலும் உலகில் முதன்முதலாக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய ரசிய பாட்டாளிவர்க்க அரசை வீழ்த்த ரசியாவுக்கு வெளியேயும் ஏகாதிபத்திய அரசுகள் பகீரத முயற்சிகளை மேற்கொண்டன. (4) ரசியாவில் நிகழ்ந்துள்ளது பாட்டாளிவர்க்கத்திற்கு ஒரு பின்னடைவே. தோல்வி அல்ல. ஒரு புதிய சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பு தனது வழியில் தொடர்ந்து, நிலைப்படுத்தப்பட நீண்ட காலம் ஆகும். அதற்கிடையில் இதுபோன்ற பல பின்னடைவுகள் ஏற்படும். ஆனால் இறுதி வெற்றி பாட்டாளிவர்க்கத்திற்கே ( 5) மேலும் சோசலிசக் கட்டுமானம் என்பது... அதன் வெற்றி என்பது நிச்சயம் நிறைவேறும். அதற்குக் காரணம்... சோசலிசம் என்பது நமது விருப்பம் என்பதைக் காட்டிலும் மனித குல வரலாற்றில் ஒரு புறவயமான சமூகப் பொருளாதார இயக்கத்தின் ஒரு தவிர்க்கமுடியாத கட்டமைப்பு. இதற்குமேல் மிகத் துல்லியமான ஆய்வுகளையும் கருத்துகளையும் வேறு தளங்களில் வைத்துக்கொள்ளலாம் என்பதே எனது கருத்து. அதுபோன்ற விவாதங்களில் நாம் ஈடுபட்டால்.... பொது மக்களிடையே நாம் வலியுறுத்த விரும்புகிற கருத்துகள் போய்ச் சேராது. இதுபற்றிய விரிவான கருத்துகளை முன்வைக்க விரும்பும் தோழர்கள் அதை வேறு தளங்களில் தொடரலாம் என்பதே எனது கருத்து. அதற்காகக் கருத்துகள் கூறவேண்டாம் என்று நான் சொல்லவரவில்லை. எந்தத் தளத்தில்... எதைப்பற்றி... எவ்வளவு விளக்கமாக எழுதலாம் என்பதுபற்றி நாம் தெளிவாக இருக்கவேண்டும். 
------------------------------------------------------------------------------------------------------
போராட்டமே நிரந்தரமானது!
--------------------------------------------------------------------------
எதை எடுத்துக்கொண்டாலும் அதற்குள் ஒன்றுக்கு ஒன்று எதிரான இரண்டு கூறுகள் இருக்கும். அணுவில் நேர்மின் துகள்- எதிர்மின்துகள்; உயிர் இயக்கத்தில் திசுக்களின் புதுப்பித்தல்- திசுக்களின் அழிவு; வாழ்க்கையில் வரவு-செலவு. சமூக வர்க்கப் போராட்டத்தில் ஒடுக்கப்படும் வர்க்கம்- ஒடுக்குகின்ற வர்க்கம்.
ஒன்றுக்குள் இருக்கிற இரண்டு எதிர்மறைகளுக்கு இடையே எப்போதும் போராட்டம் நீடிக்கும். ஒன்றை ஒன்று ஆதிக்கம் செலுத்த அவை போராடும். ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒன்றுக்குள் எந்த எதிர்மறை சக்தி ஆதிக்கம் செலுத்துகிறதோ, அதுவே அப்பொருளின் தன்மையை எடுத்துக்காட்டும். திசுக்களின் அழிவைவிட, அவற்றின் புதுப்பித்தல் ஆதிக்கம் செலுத்தினால், நாம் உயிருடன் இருக்கிறோம் என்று சொல்கிறோம். அழிவு ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினால் இறப்பை எதிர் நோக்குகிறோம். வரவு அதிகமாக இருந்தால், ஒருவர் பணக்காரர். செலவு அதிகமாக இருந்தால், அவர் கடன்காரர். கடன்காரர் செலவைக் கட்டுப்படுத்த ... வரவின் ஆதிக்கத்தைக் கொண்டுவர போராடுகிறார். ஒரு எதிர்மறை இல்லாமல், மற்றொரு எதிர்மறை கிடையாது எதிலும்! இதுவே தத்துவத்தில் '' முரண்பாடு '' என்று அழைக்கப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ஒன்றுக்குள் நடைபெறுகிற எதிர்மறைப் போராட்டங்களைச் சரியாகக் கணித்து.... போராட்டத்தை வழிநடத்துவதிலேயே ஒருவரின் திறமை இருக்கிறது. இது தனிநபருக்கும் பொருந்தும். ஒரு அரசியல் கட்சிக்கும் பொருந்தும். ஒரு அரசுக்கும் பொருந்தும். ஆனால் தில் முதலில் கவனிக்கவேண்டியது... தொடக்கத்தில் வளரும் இளம் பண்பு... போராட்டத்தின் ஒரு கட்டத்தில் ஆதிக்கம் செலுத்தப்படுகின்ற ஒன்றாக இருக்கும்.
ஆனால் போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்தின் முடிவிலும் வளரும் சக்தியாக இருக்கும் எதிர்மறையே வெற்றி பெறும். இது இயற்கையின் இயற்கை விதி.
-----------------------------------------------------------------------------------------------------
முகநூலில் ஒன்றைப்பற்றி எழுதுவதுகூட போராட்டத்தின் ஊடேதான். மனதிற்குள் ஒரு போராட்டம் நிகழும். எதை எப்போது எழுதுவது, யாருக்கு எழுதுவது, எப்படி எழுதுவது, எந்த அளவு எழுதுவது, .... அனைத்திலும் போராட்டங்கள் மனதில் நிகழ்ந்துகொண்டே இருக்கும். இந்தப் போராட்டத்தின் இறுதியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கலாம். சிலவேளைகளில் எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்காது. அப்போது எங்கே நாம் போராட்டத்தில் தவறினோம் என்பதைச் சுயவிமர்சனம் செய்துகொண்டு, அடுத்த பதிவில் வெற்றி அடையவேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India