மார்க்சியப் புரிதலின் முக்கியக் கூறுகள் ......
-------------------------------------------------------------------------
1) இயற்கையும் சமுதாயமும், இவற்றைப்பற்றிய நமது கருத்துகளும் தொடர்ந்து மாறிக்கொண்டே... வளர்ச்சி அடைந்துகொண்டே இருக்கும். இந்த மாற்றமானது வெறும் மாற்றமாக இல்லாமல்.... அடுத்த கட்ட வளர்ச்சியாக ... பண்புரீதியான மாற்றமாக .... வெறும் வட்டமாகச் சுற்றாமல் (cyclic) , பல்வேறு உயர்நிலை வட்டங்களைக்கொண்ட சுருள் வட்டமாக (spiral) அமையும்.
2) ஒரு காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் வளர்ச்சிக்கு (குறிப்பாகப் பொருளாதார வளர்ச்சிக்கு) அடிப்படையாக இருந்த அதே சமுதாயப் பொருளாதார உறவுகள் அல்லது கட்டமைப்புகள் , பின்னர் ஒரு கட்டத்தில் அச்சமுதாயத்தின் வளர்ச்சிக்குத் தடையாக மாறும். அந்நேரத்தில் அதற்கு அடுத்த கட்ட மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் தடைகளாக அமைகிற அந்தச் சமுதாய உறவுகள் மாறவேண்டும். மாற்றப்படவேண்டும். அப்போது அந்த மாற்றங்களைத் தடுக்க முயலும் வர்க்கங்களுக்கும் மாற்றங்களுக்காகப் போராடும் வர்க்கங்களுக்கும் இடையிலே முரண்பாடு முற்றி, தீவிர வர்க்கப் போராட்டமாக மாறும். இந்த வர்க்கப் போராட்டத்தின் இயக்கமும் வெற்றியுமே தேவையான அடுத்த கட்ட சமுதாய உறவுகளைக் கொண்டுவரும். இந்த வர்க்கப் போராட்டமே சமுதாய மாற்றத்திற்குத் தீர்மானமான சக்தி.
2) ஒரு காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் வளர்ச்சிக்கு (குறிப்பாகப் பொருளாதார வளர்ச்சிக்கு) அடிப்படையாக இருந்த அதே சமுதாயப் பொருளாதார உறவுகள் அல்லது கட்டமைப்புகள் , பின்னர் ஒரு கட்டத்தில் அச்சமுதாயத்தின் வளர்ச்சிக்குத் தடையாக மாறும். அந்நேரத்தில் அதற்கு அடுத்த கட்ட மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் தடைகளாக அமைகிற அந்தச் சமுதாய உறவுகள் மாறவேண்டும். மாற்றப்படவேண்டும். அப்போது அந்த மாற்றங்களைத் தடுக்க முயலும் வர்க்கங்களுக்கும் மாற்றங்களுக்காகப் போராடும் வர்க்கங்களுக்கும் இடையிலே முரண்பாடு முற்றி, தீவிர வர்க்கப் போராட்டமாக மாறும். இந்த வர்க்கப் போராட்டத்தின் இயக்கமும் வெற்றியுமே தேவையான அடுத்த கட்ட சமுதாய உறவுகளைக் கொண்டுவரும். இந்த வர்க்கப் போராட்டமே சமுதாய மாற்றத்திற்குத் தீர்மானமான சக்தி.
3) மேற்கூறிய வர்க்கப் போராட்டங்களின் அடிப்படைப் பிரச்சினை : எந்த வர்க்கத்தின் கைகளில் அரசியல் அதிகாரம் இருக்கவேண்டும் என்பதே ஆகும். எனவே அரசியல் அதிகாரம் என்பது ஆளும் வர்க்கம் ஆளப்படுகின்ற வர்க்கத்தை அடக்கியாளப் பயன்படுத்தும் ஒரு பலாத்கார கருவியே ஆகும். பழைய சமுதாயக் கட்டமைப்பினால் பயன் பெறும் வர்க்கங்கள் ... தங்கள் கைகளில் இருக்கிற அரசியல் அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடும். புதிய மாற்றத்திற்காப் போராடும் வர்க்கங்கள் அதைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளப் போராடும். எனவே வர்க்கப் பிரிவினைகள் சமுதாயத்தில் இருக்கும்வரை , வர்க்கப் போராட்டங்களின் இறுதி நோக்கமாக... அரசியல் அதிகாரப் பிரச்சினையே நீடிக்கும்.
4) சமுதாயத்தின் தொடக்கக் கட்டத்தில் வர்க்கமற்ற ஒரு புராதானச் சமுதாயமாக இருந்த மனித சமுதாயம், வர்க்கங்கள் உடைய ஒரு சமுதாயமாக மாறியதும் தனிமனிதர்களின் விருப்பு வெறுப்புகளால் இல்லை. மேற்கூறிய சமுதாய வளர்ச்சி விதிகளே அடிப்படை அதற்கு . அதுபோன்று ஒரு கட்டத்தில் வர்க்கம் அற்ற பொதுவுடமைச் சமுதாயமாக வளர்ச்சியடைவதும் சமுதாய வளர்ச்சி விதியின் அடிப்படையே. இது தனிமனித விருப்பு வெறுப்புகளைச் சார்ந்த ஒன்று இல்லை. இவ்வாறு, மனித சமுதாயமானது வர்க்கமற்ற சமுதாயம், பின்னர் வர்க்கங்களுடைய சமுதாயம், இறுதியில் வர்க்கம் அற்ற சமுதாயம் என்று வளர்ச்சி அடைவதற்குப் புறவயமான சமுதாய வளர்ச்சி விதிகளே அடிப்படை. இந்தப் புறவயமான வளர்ச்சி விதிகளே வர்க்கங்களின் போராட்டங்களுக்கு அடிப்படை. எனவேதான் பொதுவுடமை அல்லது சோசலிசம், கம்யூனிசம் என்ற சமுதாயம் மனிதகுல வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒன்றாகும். இதைத் தனிமனிதர்களின் விருப்பு வெறுப்பு தடுக்கமுடியாது.
5) எனவே ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் புதிய சமுதாய அமைப்புக்காகப் போராடும் வர்க்கங்கள் புரட்சிகர... முற்போக்கு வர்க்கங்களாக நீடிக்கும். ஆனால் அதே வர்க்கங்கள் அடுத்த கட்டத்தில் .... தோன்றிய சமுதாய அமைப்பு அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கிச் செல்வதை எதிர்த்துப் போராடும்போது, பிற்போக்கு வர்க்கங்களாக மாறிவிடுகின்றன.
6) இவ்வாறு , (அ) சமுதாய அமைப்பு தொடர்ந்து மாற்றங்களுக்கும் வளர்ச்சிகளுக்கும் உட்பட்டவை என்பதையும் (ஆ) அது சமுதாயத்தின் புறவய விதிகளை அடிப்படையாகக்கொண்டது, தனிமனிதர்களின் விருப்புவெறுப்புகளை அடிப்படையாகக் கொண்டது இல்லை என்பதையும் (இ) வர்க்கப் போரட்டமே சமுதாய வளர்ச்சியைத் இயக்குகிறது அல்லது தீர்மானிக்கிறது என்பதையும் (ஈ) வர்க்கப் போராட்டங்களின் உச்சகட்ட நோக்கம் அல்லது வளர்ச்சி என்பது அரசியல் அதிகாரம் தொடர்புடையதே; எந்த வர்க்கத்தின் கைகளில் அரசியல் அதிகாரம் இருப்பது என்பதே ஆகும்.
7) சோசலிச சமுதாயத்திற்கான போராட்டத்தில் வெற்றிபெறுகிற பாட்டாளிவர்க்கம்... அரசியல் அதிகாரத்தைத் தங்கள் கைகளில் எடுக்கிற பாட்டாளிவர்க்கம் ... அதன்பின்னரும் தொடர்ந்து வர்க்கப் போராட்டத்தை மேற்கொள்ளவேண்டும். ஏனென்றால் அரசியல் அதிகாரத்தை இழந்த பழைய பிற்போக்கு வர்க்கங்கள் நீடிக்கின்றன. அவற்றின் நீடிப்புக்குக் காரணம்... நீடிக்கிற பழைய சமுதாய அமைப்பின் கூறுகே ஆகும். அவை அனைத்தும் அழிந்தபின்னர்தான், வர்க்கப் போராட்டம் ஒரு முடிவுக்கு வரும்.
எனவே,
(1) சமுதாய மாற்றங்களுக்கும் வளர்ச்சிகளுக்கும் அடிப்படை உந்துசக்தி வர்க்கப் போராட்டங்களே என்பதையும்
(2) அவை இறுதியில் அரசியல் அதிகாரப் பிரச்சினையே என்பதையும்
(3) வர்க்கங்கள் சமுதாயத்தில் நீடிக்கும்வரை வர்க்கப் போராட்டங்களும் நீடிக்கும் என்பதையும் ,
(4) வர்க்கமற்ற பொதுவுடமைச் சமுதாயத்தை நிறுவ, பாட்டாளிவர்க்கத் தலைமையில் அரசியல் அதிகாரம் ... அரசு இருக்கவேண்டும் என்பதும்
(5) ஒரு கட்டத்தில் இந்த அரசியல் அதிகாரத்தின் பலாத்காரக் கூறுகள் மறைந்துவிடும் என்பதையும் புரிந்துகொளவதே மார்க்சியப் புரிதலின் முக்கியக் கூறுகள் ஆகும் என்பது என்னுடைய அறிவுக்கு எட்டிய புரிதல்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக