மொழியுணர்வு, மொழிக்காப்பு, மொழியாய்வு, மொழிவளர்ச்சிபற்றி:
தமிழறிஞர்கள்பற்றிய எனது முகநூல் தொடர்களைப்பற்றி என்னிடம் சில நண்பர்கள் கேட்ட வினாக்களுக்கு எனது சுருக்கமான விடைகள் :
1) வினா : மொழியியல் பேராசிரியர்கள் தெ.பொ.மீ., வ.அய். சுப்பிரமணியம், அகத்தியலிங்கம் போன்றவர்களைப்பற்றியும் எழுதுகிறீர்கள். தனித்தமிழ் இயக்கத்தை முன்வைத்த மொழி ஆய்வாளர்களான பேராசிரியர்கள் தேவநேயப்பாவாணர், பெருஞ்சித்திரனார், அரசேந்திரன் போன்றவர்களைப்பற்றியும் எழுதுகிறீர்கள். இது முரண்பாடு இல்லையா?
விடை: முரண்பாடு இல்லை. மொழி என்பது வெறும் கருத்துப்புலப்படுத்தக் கருவி இல்லை. ஒரு இனத்தின் பண்புகளில் மிக முக்கியமான ஒன்று. இனத்தை அடையாளம் காட்டும் ஒரு பண்பு. இன ஒடுக்குமுறையில் ஒரு இனம் மற்றொரு இனத்தை ஒடுக்க முற்படும்போது, ஒடுக்கப்படுகிற இனத்தின் மொழியைத்தான் ஆதிக்க இனம் முதலில் தாக்குகிறது. தன் மொழியைத் திணிக்கிறது. ஒரு இனத்தின் மொழியை அழித்தால், அந்த இனத்தையே அழிக்கமுடியும் என்பதே அதற்குக் காரணம். தமிழக வரலாற்றில் தமிழினம் தனது மொழியைக் காக்கப் பல்வேறு வரலாற்றுக் கட்டங்களில் போராடியுள்ளது.
சோழர் காலத்திற்கு முந்தைய அரசுகள் பாலி, பிராகிருதம் ஆகியவற்றை உயர்த்திப் பிடிக்க முயற்சித்தபோது, தமிழ்மொழியை முன்னிறுத்தியே அரசியல் போராட்டம் நிகழ்ந்தது (இதைப் பேரா. க. கைலாசபதியும் ‘பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்’ என்ற நூலில் கூறியுள்ளார்). அடுத்து, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அரசியல் அதிகாரத்தை அடிப்படையாகக்கொண்டு ஆங்கிலத்தையும், வைதீகச் சமயத்தை அடிப்படையாகக்கொண்டு வடமொழியையும் முன்னிறுத்தி, தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டபோது, மறைமலையடிகளார் போன்றவர்கள் தமிழ்மொழியை முன்னிறுத்திப் போராடியது இரண்டாவது மொழிப்போராகத் தமிழக வரலாற்றில் பதிவாகியுள்ளது. அதையொட்டி, தமிழ்மொழியின் தொன்மையையும் சிறப்பையும் முன்னிறுத்தி மறைமலையடிகளாரின் வழித்தடத்தில் மொழி ஆய்வாளர்கள் பலர் தமிழ்மொழிக்காப்பிற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றார்கள். பேரா. பாவாணர், பெருஞ்சித்திரனார் , இலக்குவனார் போன்றோர் அதில் அடங்குவார்கள்.
அடுத்து, இந்திய நடுவண் அரசு இந்திமொழியை அரசியல்சட்டத்தில் அலுவலகமொழியாக ஆக்கி, பிறமொழிகளைப் பின்னுக்குத் தள்ளியபோது, தமிழகத்தில் தாய்மொழி ஜனநாயக உரிமையைத் தக்கவைக்க மூன்றாவது மொழிப்போர் – குறிப்பாக மாணவர்கள் போராட்டம் - நிகழ்ந்தது. அதையொட்டி, தற்காலிகமாக இந்திமொழி ஆதிக்கம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இவைபோன்ற தமிழ் உணர்வாளர்கள் தமிழ்மொழி காக்கச் செயல்பட்ட காரணத்தினால்தான் இன்று தமிழ்மொழி வளர்ச்சிக்கான ஆய்வுகளையும் திட்டங்களையும் மேற்கொள்ளமுடிகிறது. ஆதிக்க அரசியலானது, ஆங்கிலம், வடமொழியின் ‘சிறப்புகளை’ அவர்களது மொழியுணர்வின் அடிப்படையில் முன்வைத்தபோது, தமிழ்மொழிக்காப்பாளர்களும் தமிழ்மொழியின் சிறப்புகளைத் தங்களது ஆய்வுகளின் அடிப்படையில் முன்வைத்தார்கள். அந்தக் கருத்துகளில் சிலவற்றுடன் சிலர் முரண்படலாம். ஆனால் அதற்காக அக்கருத்துகளை முன்வைத்தவர்களைக் கொச்சைப்படுத்தக்கூடாது.
தாய்மொழி உணர்வும், அம்மொழியைப் பயன்படுத்த அம்மொழி பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகளும் காக்கப்படவில்லை என்றால், மொழி ஆய்வு எங்கே? மொழி வளர்ச்சி எங்கே? பேரா. பாவாணரும் அவரது வழித்தடத்தில் செயல்படுகிறவர்களும் தமிழ்மொழியின் சிறப்புகளை எடுத்துக்காட்ட முயலாமல் இருந்திருந்தால் …. ? அவர்களது ஆய்வுகளின் முடிவுகளை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளவேண்டுமென்ற கட்டாயம் இல்லை. இது எல்லா அறிவியலுக்கும் பொருந்தும். எனவே தாய்மொழி உணர்வும், மொழிக்காப்பும் இல்லையென்றால் மொழி ஆய்வு இல்லை … மொழியியல் இல்லை … மொழி வளர்ச்சி இல்லை!. என்னைப் பொறுத்தவரையில் பாவாணர், பெருஞ்சித்திரனார், தெ.பொ.மீ., வ.அய். சுப்பிரமணியம், அகத்தியலிங்கம் , பொற்கோ அனைவரும் தமிழ்மொழிக் காப்பாளர்களே. தமிழ்மொழி ஆய்வாளர்களே. இதில் எரிந்த கட்சி, எரியாத கட்சி என்ற பிரிவுகள் … பிளவுகள் தேவையில்லை. அவ்வாறு பிளவுபடுவது மொழி ஜனநாயகத்தைக் காலில் போட்டு மிதிக்கத் துடிக்கும் ஆதிக்க அரசியலாருக்கும் அவர்களுடைய மொழிகளுக்குமே நலம் பயக்கும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக