புதிய தமிழ் இலக்கணம்பற்றிப் பேராசிரியர் பொற்கோ அவர்களின் கருத்து
-------------------------------------------------------------------------------------------------------
// இக்காலத் தமிழுக்கு ஒரு நல்ல இலக்கணம் வேண்டும். இந்தக் கருத்து இப்போது பரவலாகச் சரியாக உணரப்பட்டிருக்கிறது. நாடு விடுதலை பெற்றபிறகு நம்மிடம் வளர்ந்த மொழி உணர்ச்சியும் கல்வி உலகில் ஏற்பட்ட ஆராய்ச்சி வளர்ச்சியும் புதிய சிந்தனைகளைத் தூண்டி மொழியின் பயன்பாட்டு எல்லையை விரிவாக்கிப் புதிய இலக்கணத்தின் தோற்றத்திற்கு வழி வகுத்திருக்கிறது. இத்தகைய சூழலில் புதிய இலக்கணங்கள் தோன்றவேண்டும். அப்போதுதான் மொழியில் தோன்றயுள்ள புதிய இலக்கணக் கூறுகளுக்கு நிலைபேறு ஏற்படும். மொழியியலும் அப்போதுதான் புதிய வளர்ச்சி தோன்றும்.//
//இன்றைய உலகச் சூழலில் ஏராளமான புதுமைகளை நாம் வேகமாகச் சந்தித்துக்கொண்டிருக்கிறோம். நம்முடைய செயல்பாட்டிலும் வேகம் தேவைப்படுகிறது. பணிகளில் ஏற்படுகிற புதிய வேகம் பணிகளின் தரத்தைக் குறைத்துவிடக்கூடாது. வேகமும் குறையாமல் தரமும் குறையாமல் பணிகள் தொடரவேண்டுமானால் பணிகளில் நாம் பயன்படுத்தும் கருவிகள் மேம்படுத்தப்படவேண்டும். மனித சமுதாயம் ஒட்டுமொத்தமாக முதன்முதலில் பயன்படுத்துத் தொடங்கிய மாபெரும் கருவி என்று ஒன்றைக் குறிப்பிட வேண்டுமானால் அது மொழிதான்.
தமிழ்ச் சமுதாயம் முழுமைக்கும் ஒட்டுமொத்தமாக இதுவரை பயன்பட்ட கருவி தமிழ் - இன்று பயன்படுகிற கருவி தமிழ் - இனியும் பயன்படவேண்டிய கருவி தமிழ். இது மற்ற கருவிகளைப்போல வெறும் கருவி மட்டும் அல்ல. உயிரோடிருக்கும் தமிழர்களின் உணர்வோடு கலந்த ஒன்று. மொழி என்பது அறிவைமட்டும் வெளிப்படுத்துகிற ஒன்று அல்ல, உணர்ச்சியையும் வெளிப்படுத்துவதும் அதுதான். இந்த மொழி இன்றைய தேவைக்கேற்ப மேம்படுத்தப்பட்டால்தான் நம்முடைய வாழ்வு சிறக்கும். செயல் சிறக்கும். மொழியை மேம்படுத்த நாம் மேற்கொள்ளவேண்டிய முயற்சிகளில் இத்தகைய இலக்கணங்களுக்கு மிக இன்றியமையாத இடம் உண்டு. //
0 கருத்துகள்:
கருத்துரையிடுக