பேரா. இரா. முரளிதரண் அவர்களைப்பற்றி நான் ஐந்து ஆண்டுகளுக்குமுன்பு முகநூலில் இட்ட பதிவு இது. தற்போது தமிழ்ப் பல்கலைக்கழகத்திலிருந்து பணி ஓய்வுபெற்றாலும் மொழியியலின் முக்கியத்துவத்தை ஆய்வாளர்களிடம் கொண்டு செல்வதில் முனைப்புடன் செயல்பட்டுவருகிறார். இனிய நண்பர். பழகுவதற்கு எளிமையானவர். அவரைப்பற்றிய இப்பதிவை இன்று மீள்பதிவு செய்வதில் மகிழ்வடைகிறேன். அவருக்கு எனது வாழ்த்துகள்.
பேரா. இரா. முரளிதரன் (1959) … மொழியியல் தளத்தில் கடந்த 30 ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் ஒரு ஆய்வாளர். தற்போது தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இந்தியமொழிகள் மற்றும் ஒப்பிலக்கியத் துறையில் பணியாற்றிவருகிறார். தாவரவியலில் இளங்கலைப் பட்டமும் (1979), மொழியியலில் முதுகலைப் பட்டமும் (1983), முனைவர் பட்டமும் (1989) பெற்றுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையின் உருவாக்கம் இவர். இவரது முனைவர் பட்ட ஆய்வுக்காகச் சோலநாயக்கன் என்ற பழங்குடி மக்கள் மொழியைப்பற்றி ஆய்வு மேற்கொண்டார். பழங்குடி மக்களின் குரும்பா மொழிபற்றியும் ஆய்வு செய்துள்ளார். பழங்குடி மக்களின் மொழிகள்பற்றியும் பண்பாடுபற்றியும் மிகச் சிறப்பான ஆய்வுகளை அளித்துள்ளார். ஜெர்மனியைச் சேர்ந்த வால்ஸ்வேகன் அமைப்புடன் ( German-India-French Project, Volkswagen Foundation Fund, Germany) இணைந்து, குரும்பா, சோலநாயக்கன் போன்ற அபாயத்திற்கு உட்பட்டுள்ள அல்லது அழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிற ( Endangerd languages) பழங்குடி மக்களின் மொழிகள்பற்றிப் பல ஆய்வுத் திட்டங்களை மேற்கொண்டுவருகிறார். இதற்காக அவர் பாரிஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்று (2009) சிறப்புப் பயிற்சி பெற்றுள்ளார். மீண்டும் 2013 –இல் இதுதொடர்பாக ஜெர்மனியில் நடைபெற்ற ஒரு சிறப்புக் கருத்தரங்கில் கலந்துகொண்டு, ஆய்வுக் கட்டுரை அளித்துள்ளார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பழங்குடி மக்கள் ஆய்வுமையத்தில் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பின்னர், அங்கேயே இந்தியமொழிகள் துறையின் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். தமிழ், ஆங்கில மொழிகளோடு தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் தேர்ச்சிபெற்றுள்ளார். தற்போது கணினிமொழியியல் துறையிலும் கவனம் செலுத்திவருகிறார். கடந்த பல ஆண்டுகளாக இந்திய நடுவண் அரசின் ஆட்சித்துறை, காவல்துறை பணி தகுதிகாண் பருவ அதிகாரிகளுக்கு ( IAS, IPS Probationers) தமிழ்மொழிப் பயிற்சி அளித்துவருகிறார். தென்னாப்பிரிக்கா, செக்கோஸ்லேவிகியா, போலந்து, மொரிஷியஸ், சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி கற்றுக்கொடுத்துள்ளார். தமிழ்நாடு அரசு நிருவாகச் சீர்திருத்தத்துறை சிறுபான்மையின அலுவலர்களுக்குத் தமிழ்ப் பயிற்சியைப் பல ஆண்டுகளாக அளித்துவருகிறார். 20 நூல்களுக்குமேல் தனியாகவும் பிற பேராசிரியர்களுடனும் இணைந்து வெளியிட்டுள்ளார். தமிழ் இணையக் கல்விக்கழகத்திற்குத் தமிழ்ப்பாடங்கள் தயாரிப்பதில் தொடர்ந்து உதவியளித்துள்ளார். தமிழகத்தில் பழங்குடி மக்களின் மொழிகள், பண்பாடுகள் பற்றிய ஆய்விலும், தமிழ்மொழியை அயல்நாட்டு மாணவர்களுக்கும், தமிழ் தெரியாத அரசு அதிகாரிகளுக்கும் தமிழ்மொழியைக் கற்றுக்கொடுப்பதிலும், கணினிமொழியியல் துறையிலும் மிகச் சிறப்பாகப் பணியாற்றிவருகிற பேரா. இரா. முரளிதரன் அவர்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக