தமிழில் இருநிலை வினை (Ergative verbs) - அல் இருநிலை வினை (non-Ergative verbs) . . . (தமிழ் மாணவர்கள் - ஆய்வாளர்களுக்கு)
-------------------------------------------------------------------------------------------------------------
தமிழ் வினைச்சொற்களைப் பல வகைகளில் வகைப்படுத்தலாம். இவ்வாறு வேறுபட்ட வகைப்பாடுகளுக்கு வேறுபட்ட அடிப்படைகள் உண்டு. ஒலியனியல், உருபனியல், தொடரியல், பொருண்மையியல் என்று பல நிலைகளில் வினைகள் வகைப்படுத்தப்படுகின்றன.
வினைகளின் காலங்காட்டும் விகுதிகளில் ஒரு (ஓர்?) ஒற்று வருகிறதா அல்லது இரண்டு ஒற்று வருகின்றனவா என்ற அடிப்படையிலும் வகைப்படுத்துவார்கள். 'வருகிறான்' - இதில் நிகழ்கால விகுதியான -கிறு- என்பதில் 'க்' என்னும் ஒரு ஒற்று வருகிறது. 'பார்க்கிறான்' என்பதில் 'க்க்' என்று இரண்டு ஒற்றுகள் வருகின்றன. ஒரு ஒற்று வரும் வினைகளை மெல்வினை என்றும் இரண்டு ஒற்றுகள் வரும் வினைகளை வல்வினை என்றும் வகைப்படுத்துவார்கள். இது உருபனியலை (Morphology) அடிப்படையாகக்கொண்டது.
செயப்படுபொருள்களை (Transitive verbs) ஏற்கும் வினைகள், செயப்படுபொருளை ஏற்காத வினைகள் (Intransitive verbs) என்றும் வகைப்படுத்தலாம். 'வா' செயப்படுபொருளை ஏற்காத வினைச்சொல்; 'படி' செயப்படுபொருளை ஏற்கும் வினைச்சொல். 'அவன் வந்தான் ' தொடரில் 'எதை வந்தான்' என்று கேட்கமுடியாது. எனவே இது, செயப்படுபொருள் குன்றியவினை. 'அவன் புத்தகம் படித்தான்' என்னும் தொடரில் 'எதைப் படித்தான்' என்று கேட்கமுடியும். எனவே செயப்படுபொருள் குன்றாவினை என்று இதை அழைக்கிறார்கள். இந்த வகைப்பாடு தொடரியலை (Syntax) அடிப்படையாகக்கொண்டது.
'அவன் மயங்கினான்' - இதில் 'மயக்கம்' என்னும் நிலை எழுவாயாக அமைகிற 'அவன்' என்பது சுட்டுகிற நபருக்குச் செல்கிறது. 'அவன் என்னை மயக்கினான்' - இதில் 'மயக்கம்' என்னும் நிலை இரண்டாம் வேற்றுமை எடுக்கிற நபருக்குப் போய்ச்சேர்கிறது. இந்த அடிப்படையில் 'மயங்கு' என்பதைத் தன்வினை என்றும் 'மயக்கு' என்பதைப் பிறவினை என்றும் அழைப்பார்கள். இது பொருண்மையியலை (Semantics) அடிப்படையாகக் கொண்டது.
இப்பதிவில் நான் கூறவரும் வினை வகைப்பாடு - இருநிலை வினை - அல் இருநிலை வினை.
(1.1. ) 'நான் செடி வளர்க்கிறேன்'
(1.2) 'செடி வளர்ந்தது'
இரண்டிலும் அமைகிற வினைச்சொல் - 'வளர்'.
முதல் தொடரில் இந்த வினைச்சொல் 'செயப்படுபொருளை' ஏற்றுவருகிறது. 'நான் எதை வளர்க்கிறேன்? என்று கேட்கலாம். அதற்கு விடை 'செடி'. இங்குச் 'செடி'யின் இரண்டாம் வேற்றுமை உருபு 'ஐ' மறைந்து நிற்கிறது. அவ்வளவுதான்!
இரண்டாவது தொடரில் இதே வினைச்சொல் செயப்படுபொருள் ஏற்காமல் வருகிறது. அதாவது செயப்படுபொருள் குன்றிய வினையாக வருகிறது. 'செடி எதை வளர்ந்தது?' என்று கேட்கமுடியாது.
ஆனால் இரண்டாவது தொடரும் - 'செடி வளர்ந்தது' என்னும் தொடரும்- நாம் ஏற்றுக்கொள்கிற ஒரு தொடரே. தவறு இல்லாத தொடர்தான்.
அப்படியென்றால் 'வளர்' என்பதைச் செயப்படுபொருள் குன்றா வினை என்று கூறுவதா அல்லது செயப்படுபொருள் குன்றிய வினை என்று கூறுவதா?
விடை - இரண்டும்தான்! அதாவது இருநிலைப் பகுப்புக்கு இந்த வினைச்சொல் உட்படுகிறது. முதல் தொடரில் (1.1.) செயப்படுபொருளாக அமைகிற 'செடி' இரண்டாவது தொடரில் (1. 2) எழுவாயாக அமைகிறது. இதுபோன்ற வேறு சில வினைகளையும் நாம் பார்க்கலாம்.
(2.1) நான் கதவைத் திறந்தேன்.
(2.2.) கதவு திறந்தது
(3.1) அவள் நீண்ட கூந்தலை வளர்க்கிறாள்.
(3.2.) நீண்ட கூந்தல் வளர்கிறது.
சிலர் 'கதவு திறந்தது', 'கூந்தல் வளர்கிறது' என்று கூறக்கூடாது; மாறாக, 'கதவு திறக்கப்பட்டது' 'கூந்தல் வளர்க்கப்பட்டது' என்றுதான் கூறவேண்டும் என்று கருதலாம். ஆனால் வழக்கில் ஏற்றுக்கொண்ட தொடர் அமைப்புகளே நாம் மேலே பார்க்கிற எடுத்துக்காட்டுகள்.
ஆனால், (4.1.) 'நான் கட்டுரை எழுதுகிறேன்' என்பதை
(4.2) 'கட்டுரை எழுதுகிறது' என்று கூறமுடியாது. இங்கு 'எழுது' என்பது 'செயப்படுபொருள் குன்றா வினை' மட்டும்தான்!
செயப்படுபொருள் குன்றா வினையாகவும் செயப்படுபொருள் குன்றிய வினையாகவும் அமைகிற இந்த வகை வினைகளை 'இருநிலை வினை' என்று அழைக்கலாம் என்று பேராசிரியர் நுஃமான் கூறுகிறார். இதுபற்றிப் பேரா. தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், பேரா. கு. பரமசிவம், பேரா. ச. அகத்தியலிங்கம் போன்றோர் விவாதித்துள்ளனர்.
'எழுது' 'படி' 'வா' 'இரு' போன்ற வினைகளை 'அல் இருநிலை வினைகள்' என்று அழைக்கலாம். இவை ஏதாவது ஒரு வகைப்பாட்டில்மட்டுமே ஆமையும்.
ஆங்கிலத்தில்,
"I opened the door" - "The door opened"
" I rang the bell" - "The bell rang"
" The heat melted the snow" - "The snow melted"
போன்று பல எடுத்துக்காட்டுகளை இதற்குக் கூறலாம். ஆங்கிலத்தில் இதை "Ergative Verb" என்று அழைக்கிறார்கள்.
உலகில் பல மொழிகளில் இதுபோன்ற 'இருநிலை வினைகள்' நீடிக்கின்றன.
தமிழ், மொழியியல் மாணவர்கள் இதுபற்றி மேலும் பல கட்டுரைகளைப் படித்து, தெளிவடையலாம்.


6:46 AM
ந.தெய்வ சுந்தரம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக