தமிழும் ஆங்கிலமும் . . .
------------------------------------------------
நான் ஒரு மொழியியல் மாணவன்; ஒரு தமிழ் ஆசிரியரும்கூட.
ஐம்பது ஆண்டுகளுக்குமேலாக மொழியியல் துறையில் ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறேன்! மொழியியல் ஆய்வுகளில் பல்வேறு கோட்பாடுகளை விளக்குவதற்கு மொழியியல் அறிஞர்கள் எந்தவொரு குறிப்பிட்ட மொழியையும் அடிப்படையாகக்கொண்டு தங்கள் ஆய்வுகளை முன்வைக்கமாட்டார்கள். எந்தவொரு மொழியையும் மற்ற மொழிகளைவிடச் சிறப்பான மொழி, உயர்வான மொழி என்று கொள்ளமாட்டார்கள். அதற்கு எந்தவித அறிவியல்
அடிப்படையும் கிடையாது என்பது அவர்களுக்குத் தெரியும்!
மொழியியல் ஆய்வுகளில் பல்வேறு மொழிகளைப்பற்றிய குறிப்புகள் கிடைக்கும். ஒரு கோட்பாட்டை விளக்குவதற்குப் பல மொழிகளை முன்வைத்துக் கருத்து தெரிவிப்பார்கள். எடுத்துக்காட்டாக, முதுபெரும் மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கியின் மாற்றிலக்கணக் கோட்பாடானது நூற்றுக்கணக்கான மொழிகளுக்குப் பொருத்திப் பார்க்கப்பட்டுள்ளது. தமிழ்மொழிக்கு முதன்முதலாகப் பேராசிரியர் ச. அகத்தியலிங்கம் அவர்கள் அமெரிக்காவில் இந்தியானா பல்கலைக்கழகத்தில் பேரா. ஹவுஸ்கோல்டர் வழிகாட்டுதலில் முதன்முதலாக மாற்றிலக்கணத்தைத் தமிழ்மொழிக்குச் செயல்படுத்தி, தமிழின் நுட்பங்களை அந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் விளக்கி, (இரண்டாவது) முனைவர் பட்டம் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையைத் தோற்றுவித்து, மொழியியல் ஆய்வுக்கு வழிகாட்டியவர் பேரா. தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் அவர்கள். அவர்தான் முதன்முதலாகத் தமிழ்மொழியின் வரலாற்றுச் சிறப்புப்பற்றி அமெரிக்காவின் இந்தியானப் பல்கலைக்கழகத்தில் 1965-இல் உரை நிகழ்த்தினார். பேரா. இ. அண்ணாமலை அவர்கள், பேரா. கு. பரமசிவம் அவர்கள் அமெரிக்காவில் மொழியியல் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருபதுக்குமேற்பட்ட மாணவர்கள் (வெவ்வேறு மொழிகளைச் சேர்ந்தவர்கள்) அங்குள்ள பேராசிரியர்கள் வழிகாட்டுதலில் மாற்றிலக்கணக் கோட்பாட்டில் ஆய்வு மேற்கொண்டார்கள். அவர்களில் சிலர் - பேரா. பொற்கோ, பேரா. இரா. கோதண்டராமன், பேரா. செம்மொழி ராமசாமி. டெல்லிப் பல்கலைக்கழகத்தில் பேரா. அரங்கன் அவர்கள். பூனாப் பல்கலைக்கழகத்தில் பேரா. சண்முகம் அவர்கள், திராவிட மொழி ஒப்பாய்வில் இந்தியாவின் தலைசிறந்த மொழியியல் பேராசிரியர் பி.எஸ். சுப்பிரமணியம் அவர்கள் (தெலுங்கு) பேரா, குசலப்ப கவுடா (கன்னடம்) , வழிகாட்டுதலில் பலர் திராவிட மொழி ஒப்பாய்வுகளை மேற்கொண்டார்கள். பேரா. குமாராசாமி ராஜா அவர்கள், பேரா. செ.வை. சண்முகம், பேராசிரியர் பிரபாகர வாரியார் (மலையாளம்), பேரா. க. முருகையன், பேரா. க. பாலசுப்பிரமணியன், பேரா. காமாட்சிநாதன், பேராசிரியர் எம்.எஸ். திருமலை, பேரா. சு. இராசாராம், பேரா, கருணாகரன், பேரா. சீனிவாச வர்மா, பேரா. வ. ஞானசுந்தரம், போன்றோர் வழிகாட்டுதலில் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. பேராசிரியர் வ.ஐ. சுப்பிரமணியன் அவர்களின் வழிகாட்டுதலில் (கேரளப் பல்கலைக்கழகத்தில்) பேரா , அகத்தியலிங்கம், பேரா. இராம. சுந்தரம், பேரா. தாமோதரன், பேரா. பா.ரா. சுப்பிரமணியன் போன்றோர் மொழியியல் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். மதுரையில் பேரா. முத்துச்சண்முகம், பேரா. இஸ்ரேல், பேரா. விஜயவேணுகோபால், பேரா. நீதிவாணன் போன்றோர் மொழியியல் ஆய்வுகளை மேற்கொண்டனர். மாணவர்களுக்கு வழிகாட்டினர். இப்பட்டியலில் சிலர் விடுபட்டிருக்கலாம்.
இவ்வளவு பேராசிரியர்களையும் நான் மேலே குறிப்பிட்டதின் காரணம் . . . உலகின் பல்வேறு மொழிகளைப்பற்றிய உலக அளவிலான மொழியியல் ஆய்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர்களும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர் என்பதைக் குறிப்பிடவே.
மேலும் இவர்கள் எல்லோரும் தமிழ்மொழி தாண்டி, உலகின் பிறமொழிகளின் மொழியியல் கூறுகளையும் தெரிந்தவர்கள்.
மேற்குறிப்பிட்டவர்களோடு அயல்நாட்டு மொழியியல் பேராசிரியர்கள் எமனோ, பரோவ், ஆஷர், ஆன்ட்ரனோவ், ஜார்ஜ் ஹார்ட், ஜப்பானியப் பேராசிரியர் ஓனோ, ஹெரால்ட் ஷிப்மேன் . . . பட்டியல் நீளும். இவர்கள் எல்லோரும் தமிழ்மொழியின் சிறப்பை உலகுக்கு எடுத்துக்கூறியுள்ளார்கள். பேராசிரியர்கள் இரா.பி, சேது, பேரா. வையாபுரி, மு. வ., பேரா. வ. சுப. மாணிக்கம் , பேரா. இலக்குவனார், பேரா. சோ.ந. கந்தசாமி போன்றவர்கள் - தமிழைத்தாண்டி பிறமொழிகளிலும் அறிவுத்திறன் மிக்கவர்கள்; இவர்களும் தமிழின் சிறப்பை உலக அளவில் எடுத்துச் சென்றுள்ளார்கள்.
உலக அளவில் எந்தவொரு மொழியியல் ஆய்வாளரும் எந்தவொரு ஆய்விலும் ஒரு மொழியைவிட இன்னொரு மொழி அமைப்பில் - இலக்கணத்தில் - சிறப்புடையது என்று கூறவில்லை. ஏனெனில் அது உண்மையும் இல்லை! எல்லா மொழிகளும் மனித மூளையில் தோன்றி நிலவுகிற மொழிகளே. மனிதமொழியின் அமைப்பும் செயல்பாடும் அனைவருக்கும் ஒன்றே.
இலத்தீன், கிரேக்கம், தமிழ் போன்ற மொழிகள் நீண்ட வரலாறு உடையவை. அவ்வளவுதான். அதனாலேயே இவை மற்ற மொழிகளைவிட உயர்ந்தது என்பது கிடையாது. அந்தந்த மொழிச்சமுதாயத்தின் தேவைகளை அந்தந்த மொழிகள் நிறைவேற்றுகின்றன.
ஆங்கிலமும் ஆயிரக்கணக்கான மொழிகளில் ஒன்றுதான். அதன் அமைப்பானது - இலக்கணமானது - பிறமொழிகளைவிடச் சிறந்தது என்று கூறுவதற்கு எவ்வித மொழியியல் சான்றும் கிடையாது. மேலும் கூறப்போனால், ஒரு இளைய மொழி. இன்றைய ஆங்கிலம் 15, 16 ஆவது நூற்றாண்டில் வளர்ந்த ஒரு மொழிதான்.
இவ்வாறு மொழியியல் உண்மைகள் இருக்கும்போது, தமிழ்நாட்டில் கல்விக்குப் பயிற்றுமொழியாக ஏன் ஆங்கிலம் நீடிக்கிறது? தமிழ் ஏன் நீடிக்கவில்லை? மொழி அமைப்பில் - இலக்கணத்தில் - குறைபாடுகள் உண்டா? கிடையாது. கிடையவே கிடையாது.
கல்வியில் மட்டுமல்ல, தமிழகத்தில் பொருள் உற்பத்தி, வணிகம், வழிபாடு, நிர்வாகம் என்று பல துறைகளிலும் ஆங்கிலம் ஆதிக்கம் நீடிப்பதற்கு என்ன காரணம்? ஆறு நூற்றாண்டுகளாக இந்தியாவை ஆக்கிரமித்து ஆட்சிசெய்த ஆங்கிலேய ஏகாதிபத்தியமே காரணம்! அதன் விளைவாக, இன்றும்கூட ... நாடு அவர்களின் நேரடி ஆட்சியிலிருந்து விடுபட்டபிறகும்கூட . . ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துகிறது! இந்த அரசியல், பொருளாதார ஆதிக்கமே ஆங்கிலத்தைத் தமிழ்நாட்டில் அரியாசனத்தில் உட்கார வைத்துள்ளது.
ஆங்கிலத்தால் மேற்கொள்கிற எந்தவொரு மொழிச்செயல்பாட்டையும் தமிழால் மேற்கொள்ளமுடியும். ஆனால் தமிழை இங்கு ஆங்கிலத்திற்கு அடிமையான ஒரு மொழியாக வைத்திருக்கிறோம். இதுதான் உண்மை. ஆங்கிலமொழியின் திறமை காரணம் இல்லை அதற்கு! அதனது நேரடியான, மறைமுகமான அரசியல், பொருளாதார ஆதிக்கமே காரணம்!
எனவே, தமிழால் இன்றே பயிற்றுமொழியாக ஆகமுடியுமா என்று ஐயப்படுவதற்கு எவ்விதக் காரணமும் இல்லை! நான் ஆங்கிலத்திற்கோ, இந்திக்கோ, அல்லது எந்தவொரு அயல்மொழிக்கோ எதிரானவன் கிடையாது! அந்தந்த தேசிய இனங்கள் அவரவர் தாய்மொழிகளைப் பயன்படுத்தவேண்டும் என்ற ஒரு ஜனநாயக , தேசிய இன உரிமையின் அடிப்படையில்தான் கூறுகிறேன்.
தமிழ்த்தேசிய இனத்தின் உரிமை என்ற அடிப்படையிலும் மொழியியல் மாணவன் என்ற முறையிலும் . . . தமிழ்நாட்டில் தமிழே பயிற்றுமொழி உட்பட அனைத்துத் துறைகளிலும் நீடிக்கவேண்டும் என்று கூறுகிறேன். அறிவியல் அடிப்படையில்லாத உணர்ச்சியால் சொல்லவில்லை! ஆதாரங்களுடன்தான் - மொழியியல் ஆதாரங்களுடன்தான் - சொல்கிறேன்.