நடுவண் பல்கலைக்கழகங்களில் ஆங்கிலமும் இந்தியும்! பிற மொழிகளுக்கு இடம் கிடையாது ! என்பதுபற்றிய உரையாடலில் நண்பர் மாலனுக்கும் எனக்கும் இடையிலான உரையாடல்! (பகுதி 2)
நண்பர் திரு மாலன் அவர்கள் ''பயணத்தில் இருந்ததால் உடனடியாக பதிலளிக்க முடியவில்லை. விமானத்திலிருந்து இறங்கியதும் இதை எழுதுகிறேன். தாமதத்திற்கு மன்னிக்க. ' என்று கூறி, எனது ஐயங்களுக்கு நேரம் ஒதுக்கிப் பதில் அளித்துள்ளார். அவருக்கு மிக்க நன்றி!
-------------------------------------------------------------------------
நண்பர் திரு மாலன் அவர்கள்
---------------------------------------------------
1.) ஓர் அரசு அதன் அலுவல் மொழியில் தன் அலுவல்களை நடத்துவது பிழையாகுமா?தமிழக அரசின் அலுவல் மொழி தமிழும் ஆங்கிலமும். தமிழநாட்டில் வசிக்கும் அயல் மொழிக்காரர்கள் அவர்கள் தாய் மொழியில் அரசின் அறிக்கைகளை வாசிக்க முடியுமா?
ந. தெய்வ சுந்தரம்
-----------------------------------------------------------------
மொழிவாரி அடிப்படையில் அமைக்கப்பட்ட . . . தமிழும் தமிழரும் பெரும்பான்மையாக இருக்கிற பகுதியே தமிழ்நாடு. அந்த அடிப்படையில் தமிழ் தமிழ்நாட்டின் ஆட்சிமொழி. எனவே தமிழ் தமிழ்நாட்டில் அரசுமொழியாக இருக்கிறது. அப்படித்தானே, ஆந்திர, கர்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்களும். எனவேதான், அவரவர் மொழிகள் அலுவல்மொழியாக இருக்கிறது. வட இந்திய மாநிலங்களில் இதுதானே நீடிக்கிறது!
ஆனால் இந்திய நடுவண் அரசு மொழிவாரி அடிப்படையில் உருவாக்கப்பட்ட அரசு இல்லை. 22 -க்கும் மேற்பட்ட மொழிகளை உள்ளடக்கிய ஒரு நடுவண் அரசு. அனைத்து மொழியினர்க்கும் பொதுவான அரசு. குறிப்பிட்ட ஒரு மொழியினருக்கான அரசு இல்லை. எனவே, தமிழ்நாட்டில் தமிழ்மொழி அலுவலகமொழியாக இருப்பதற்கும் இந்திய நடுவண் அரசின் அலுவலக மொழியாக இந்திமொழி மட்டும் இருப்பதற்கும் வேறுபாடு இல்லையா? இந்திய நடுவண் அரசு ஒரு மாநில அரசு இல்லை!
இந்த வேறுபாடு தங்களைப்போன்ற பிரபலமான பத்திரிகையாளருக்கு . . . எழுத்தாளருக்குத் தெரியாதா ஒன்றா நண்பரே? எனக்குப் புரியவில்லை!
நண்பர் திரு மாலன் அவர்கள்
---------------------------------------------------------------
2.) இந்தி அரசின் மொழியாக இருப்பது சரியல்ல, எல்லா மொழிகளும் இருக்க வேண்டுமல்லவா என்ற கேள்வியை நீங்கள் கேட்க வேண்டியது அரசமைப்புச் சட்டத்தை யாத்தவர்களிடம். அவர்கள் பிழை செய்துவிட்டார்கள் என்றால் அதைத் திருத்தியிருக்க வேண்டியது இந்தி வேண்டாம் எனப் போராடியதாகச் சொல்லும் தமிழகக் கட்சிகள் செய்தீர்களா என நீங்கள் கேட்க வேண்டிய்து அவர்களை.அதை விட்டு விட்டு இங்கு வந்து கர்ஜிப்பதில் எந்தப் பயனும் இல்லை.
ந. தெய்வ சுந்தரம்
-------------------------------------------------------------------
அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டு, நடைமுறைக்குக் கொண்டுவரும்போது நான் பிறக்கவில்லை. எனவேதான் இப்போது கேட்கிறேன். இன்று புதிதாக அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டால், உறுதியாக இந்திமட்டுமே ஆட்சிமொழி என்றால் உறுதியாக நான் கேட்பேன்.
அடுத்து, தமிழ்நாட்டில் இந்தி ஆதிக்க எதிர்ப்புப்போராட்டத்திற்கு எந்தவொரு குறிப்பிட்ட கட்சியும் உரிமை கொண்டாடமுடியாது. அது ஒரு மாபெரும் மாணவர் எழுச்சி. அரசியல் கட்சியினர் அதற்கு ஆதரவுகொடுத்தார்கள். போராட்டத்திலும் பங்கேற்று இருக்கலாம். எனவே, தமிழ்நாட்டு அரசியல்கட்சிகளை நான் குற்றம் சாட்டவேண்டுமென்பது தேவை இல்லை! ஆனாலும், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் இதற்காகப் போராடவேண்டுமென்பதே எனது நிலைப்பாடு! ஆனால் அவர்கள் போராடவில்லையென்பதால் , ஒரு இந்தியக் குடிமகன் என்ற தகுதி எனக்கு அரசியல் சட்டத்தால் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நான் இதுபற்றிக் கேட்பதற்கு முழு உரிமை இல்லையா?
ந. தெய்வ சுந்தரம்
--------------------------------------------------------------
3 )இந்தியைத் தாய் மொழியாகக் கொள்ள்தவர்களும் அதை நாட்டின் பொது மொழியாக ஏற்றிருக்கிறார்கள் உதாரணம் காந்தி, அம்பேத்கர், போஸ், பாரதி
ந. தெய்வ சுந்தரம்
-------------------------------------------------------
காந்தி, அம்பேத்கார், போஸ், பாரதி ஆகியோர் இந்தியைப் பொதுமொழியாக ஏற்றுக் கொண்டிருப்பதால் நானும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற தேவை இல்லை!
நண்பர் திரு மாலன் அவர்கள்
---------------------------------------------
4) இப்போது யார் எந்த மொழியில் எழுதினாலும் அதை வேண்டும் மொழிக்கு மாற்றிக் கொள்ளும் தொழில்நுடபம் வந்துவிடது அதை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அது விரிவடையும் போது மொழியை வைத்து பிரிவினை அரசியல் பேசுவது முடிவுக்கு வரும்
ந. தெய்வ சுந்தரம்
-------------------------------------------------------------------
இந்த 'லாலிபப்பு' மிட்டாய் ஏமாற்றுவேலை வேண்டாம் என்பதுதான் எனது வாதம். சரி, தங்கள் நிலைபாட்டை அடிப்படையாகக்கொண்டே கேட்கிறேன். அது இந்திமொழிக்கும் பொருந்தும் அல்லவா? அப்போது என்ன பிரச்சினை? அனைத்துமொழிகளையும் ஆட்சிமொழிகளாக ஆக்குங்கள். இந்திமொழியினர் தமிழ் அறிக்கைகளைப் படிக்கவேண்டுமென்றால் , செயற்கைச் செய்யறிவுத்திறன் மென்பொருளைப் பயன்படுத்தட்டும்! அதுபோன்று மற்ற மொழியினர்களும் அதைப் பயன்படுத்திக் கொள்ளட்டும்!
ஒரு இந்தியக் குடிமகன் , நடுவண் அரசு இந்திக்குக் கொடுத்துள்ளதுபோல, தன் தாய்மொழிக்கும் உரிமை வேண்டும் என்று கேட்பது எப்படிப் பிரிவினை அரசியல் ஆகும்? எனக்குப் புரியவில்லை. பல தேசிய இனங்களைக்கொண்ட ஒரு அரசியல் அமைப்பில் எந்தவொரு இனமும் தன் தாய்மொழி உட்பட அனைத்து இன உரிமைகளையும் கேட்பது பிரிவினை ஆகாது. தங்களுக்கு அரசியல் சட்டமும் தெரியும். அப்படி ஏதாவது ஒரு சட்டப்பிரிவு இந்திய அரசியல் சட்டத்திலோ அல்லது பிற குற்றவியல் சட்டங்களிலோ இருந்தால் கூறுங்கள். நானும் தெரிந்துகொள்கிறேன்.
எனக்கு ஒரு ஐயம்! இந்திமொழிதான் இந்திய நடுவண் அரசின் ஆட்சிமொழியாக இருக்கவேண்டும் என்பதற்கு ஏன் இவ்வளவு முயற்சி செய்து எழுதுகிறீர்கள்? தாங்களும் தமிழர்தானே? தங்கள் தாய்மொழியும் தமிழ்தானே? இவ்வாறு நான் கேட்பது தவறு என்றால் மன்னிக்கவும்!