வெள்ளி, 5 ஜூன், 2020

பேராசிரியர் மருதூர் அரங்கராசன்

தமிழ் இலக்கியம், இலக்கணம் இரண்டிலும் தேர்ச்சிபெற்ற ... சமூக உணர்வுடைய .. எனது இனிய நண்பர் பேரா, மருதூர் அரங்கராசன் அவர்களைப்பற்றி நான் 5 ஆண்டுகளுக்குமுன் இட்ட முகநூல் பதிவை மீள்பதிவு செய்வதில் பெருமகிழ்வடைகிறேன்.
பேராசிரியர் மருதூர் அரங்கராசன் ( 1952) … மிக அமைதியாக , ஆனால் மிக ஆழமாகத் தனது தமிழ் ஆய்வுகளை மேற்கொண்டுவரும் முனைவர் இவர். பேராசிரியர் பொற்கோ அவர்களின் மாணவர். இவருடைய எம்.ஃபில் பட்ட ஆய்வேட்டின் தலைப்பு ‘பொருள்கோள்’. முனைவர் பட்ட ஆய்வேட்டின் தலைப்பு ‘தமிழில் வேற்றுமை மயக்கம்’. இந்த ஆய்வேடு நூலாக வெளிவந்தபோது, அதற்கு அணிந்துரை அளித்த பேரா. தமிழண்ணல் கூறுகிறார் : “மரபு தவறாத, மொழியியல் அறிவோடு ஆய்வை அணுகுதல் மிகுந்த சிறப்புக்குரியது; பிறர்க்கு வழிகாட்டத்தக்கது… பொற்கோவின் மாணவர் என்பதை இவர் நிலைநிறுத்துகிறார்”. இவருடைய மற்றோர் நூலான ‘ தமிழில் வேற்றுமைகள்’ என்ற நூலுக்கு ஆய்வுரை வழங்கிய பெரும்பேராசிரியர் ச. அகத்தியலிங்கம் கூறுகிறார் : “ வேற்றுமைபற்றி மரபு இலக்கண முறையிலும் மொழியியல் பார்வையிலும் மருதூரார் உற்று நோக்குகிறார்”. இவ்வாறு மரபிலக்கணத்தையும் மொழியியலையும் இணைத்து, தமிழ்மொழியை ஆய்கிற சிறந்த ஆய்வாளர்களில் மருதூரார் ஒருவர் என்பதில் ஐயமில்லை. தமிழ் வேற்றுமைகளைப்பற்றி ஒரு முழுமையான ஆய்வாக மேற்கூறிய இரண்டு நூல்களும் அமைந்துள்ளன. தொல்காப்பியரில் தொடங்கி, இன்றைய மொழியியலில் வேற்றுமை இலக்கணத்தைத் தெளிவுபடுத்திய சார்லஸ் ஃபில்மோர் வரை இவர் ஆய்வு விரிந்தமைந்துள்ளது. இவரது மற்றொரு சிறப்பான ஆய்வு நூல் ‘ யாப்பறிந்து பாப்புனைய …’. இந்நூல் யாப்பு அறிந்து மரபுக்கவிதை இயற்ற விரும்புவர்க்கும், யாப்பு அறிந்தபின் புதுக்கவிதை புனைய விரும்புவர்க்கும் உதவும். இந்நூலுக்குப் பேராசிரியர் தி.வே. கோபாலையரும் பேரா. இரா. சாரங்கபாணியும் அணிந்துரைகள் வழங்கியுள்ளதே இந்நூலின் சிறப்பை எடுத்துக்காட்டி நிற்கிறது. இந்நூலுக்குத் தமிழ்நாடு அரசின் சிறந்த நூலுக்கான பரிசு 2005-இல் வழங்கப்பட்டது. அடுத்து, இலக்கண வரலாறு என்ற வரிசையில் வெளிவந்த ‘பாட்டியல் நூல்கள்’ , ‘‘தமிழில் மரபுத் தொடர்கள்’ என்ற நூல்களெல்லாம் மருதூராரின் தமிழாய்வுத் திறனை வெளிக்காட்டி நிற்கிறது. மாணவர்களுக்குச் சந்தி இலக்கணத்தைக் கற்பிக்கும்போது, ‘சுமை’யாக ஏற்றாமல், ‘சுவை’யாகக் கற்றுக்கொடுக்கும்வகையில் இவர் ‘ தவறின்றித் தமிழ் எழுத’ என்ற நூலை எழுதியுள்ளதாகப் பேரா. ம.ரா.போ.குருசாமி அவர்களும் பேரா. தா.ம. வெள்ளைவாரணனார் அவர்களும் தங்களது அணிந்துரைகளில் கூறியுள்ளனர். ‘ஓர் அழுகை ஆதரவு தேடுகிறது’ என்ற ஒரு கவிதை நூலையும் இவர் எழுதியுள்ளார். பள்ளியில் தமிழாசிரியாகப் பணியாற்றி, பின்னர் நெய்வேலி ஜவஹர் கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றி, தற்போது பணி ஓய்வு பெற்றுள்ளார். இவரது இலக்கணப் புலமையை உணர்ந்த சிங்கை சிம் பல்கலைக்கழகம் ( SIM University) கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து இவரைச் சிங்கைத் தமிழ் இளங்கலை மாணவர்களுக்குத் தமிழிலக்கணத்தைக் கற்றுக்கொடுக்க அழைத்துக்கொண்டிருக்கிறது. 1978 – 80 –களில் சென்னை உ.வே. சா. நூலகத்தில் தமிழறிஞர் கி.வா.ஜகந்நாதன், பேரா. சா.வே.சுப்பிரமணியன், திரு. இராமன் போன்றோர்களுடன் இணைந்து, ஓலைச்சுவடிகளிலிருந்து பழந்தமிழ் இலக்கணங்களைப் பதிப்பித்து வெளியிடும் பணியையும் மேற்கொண்டவர் இவர். ( தமிழிலக்கியம், மரபிலக்கணம், மொழியியல் ஆகியவற்றில் புலமைவாய்ந்த ) பேராசிரியர் பொற்கோவின் ஒரு சிறந்த மாணவர் என்பதை நிலைநாட்டியுள்ள முனைவர் மருதூர் அரங்கராசனை இங்கு அறிமுகப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India