பேராசிரியர் அ.கி. பரந்தாமனார் (1902-1986) … ‘பயன்பாட்டுத் தமிழ் வளர்த்த பாவலர்’, ‘பல்துறை வித்தகர்’, ‘பைந்தமிழ்ப் பாவலர்’ என்று தமிழுலகம் பாராட்டும் பேராசிரியர். சென்னையில் பள்ளிப் படிப்பை முடித்த பேராசிரியர், பின்னர் தான் கற்ற பள்ளியிலேயே 23 ½ ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றினார். மேற்படிப்பில் ஆர்வம் கொண்டு, பணி விடுப்பு எடுத்து, சென்னைப் பச்சையப்பான் கல்லூரியில் இடைக்கலை ( F.A) , இளங்கலை படிப்புகளை மேற்கொண்டார். 1949 ஆம் ஆண்டில் தனது 47 –ஆம் வயதில் தமிழ் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். 1950 ஆம் ஆண்டுமுதல் மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியில் இணைந்தார். 1962 – இல் மதுரை திருவள்ளுவர் கழகத்தினர் பேராசிரியருக்கு மணிவிழா கொண்டாடினர். அப்போது மதுரை எழுத்தாளர் மன்றம் அவருக்குப் ‘ பைந்தமிழ்ப் பாவலர் ‘ என்னும் சிறப்புப் பட்டத்தை அளித்துச் சிறப்பித்தது. அங்கேயே 17 ஆண்டுகள் பணியாற்றினார். ஓய்வு பெற்ற பின்னர் சென்னையில் வாழ்ந்தார். தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், தமிழகப் புலவர் குழு முதலான பல்வேறு உயர் அமைப்புகளில் வல்லுநராகப் பணியாற்றியுள்ளார். 1981- இல் தமிழக அரசு தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கியபோது, பேராசிரியருக்கு ‘திரு.வி.க. விருது’ அளித்துச் சிறப்பித்தது. 1985-இல் தமிழக அரசின் திருக்குறள் நெறி மையம் பேராசிரியருக்கு ‘திருக்குறள் நெறித்தோன்றல்’ என்னும் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது. பேராசிரியர் இலக்கணம், வரலாறு, வாழ்வியல், மொழிபெயர்ப்பு, கவிதைகள், இலக்கிய விமர்சனம் என்று பல பிரிவுகளில் தனது படைப்புகளை அளித்துள்ளார். மதுரை கருமுத்து தியாகராசர் நடத்திவந்த ‘தமிழ்நாடு’ நாளிதழில் எழுத்துத் தமிழைப் பிழையின்றி அனைவரும் எழுதுவதற்குப் பயன்படும் வகையில் ஞாயிறுதோறும் இவர் கட்டுரைகள் எழுதிவந்தார். அவையே பின்னர் விரிவாக்கத்துடன் ‘ நல்ல தமிழ் எழுதவேண்டுமா?’ என்ற நூலாக வெளிவந்து, பல பதிப்புகளைக் கண்டுள்ளது. வரலாற்றில் ‘மதுரை நாயக்கர் வரலாறு’ ‘ திருமலை நாயக்கர் வரலாறு ‘ போன்ற சிறந்த நூல்களைத் தந்துள்ளார். பேராசிரியரின் கவிதைப்பணி பாரதிதாசனுக்கும் முற்பட்ட தொன்மைச் சிறப்புடையது என்றும், தமிழியக்க எழுச்சிப் போர் முழக்கத்தில் இவர் புரட்சிக் கவிஞருக்கு முன்னோடி என்பதை இன்றைய ஆய்வாளர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்றும் பேரா. மறைமலை இலக்குவனார் ( பேராசிரியரின் மாணவரே!) கூறுகிறார். பிரபலக் கவிஞர்களான அப்துல் ரகுமான் , மீரா, நா. காமராசன், மு. மேத்தா, இன்குலாப், பி.மூ. அபிபுல்லா, முதலிய பெருங்கவிஞர்கள் பலர் பேராசிரியருடைய மாணவர்கள் என்று பேரா. மறைமலையார் கூறுகிறார். பேராசிரியரை அவரது மாணவர்கள் ‘முண்டாசுக் கவிஞர்’ என்று அழைப்பார்கள் என்று பேரா. மேத்தா கூறுகிறார். சென்னையில் 1925 வாக்கில் தென்னிந்தியத் தமிழ்க் கல்வி கழகம் அமைப்பைத் தோற்றுவித்துத் தமிழ் வகுப்புகளை நடத்தியுள்ளார். பேராசிரியரின் நூற்றாண்டினையொட்டி, அவரது மகனார் அ.ப. சோமசுந்தரன் அவர்கள் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் அ.கி.ப. அறக்கட்டளை ஒன்றை நிறுவியுள்ளார். மேலதிக விவரங்களுக்குப் பின்கண்ட இணையதளத்தைப் பார்க்கலாம். http://ta.wikipedia.org/s/2qch
0 கருத்துகள்:
கருத்துரையிடுக