பேராசிரியர் ‘மொழிஞாயிறு’ தேவநேயப் பாவாணர் ( 1902 – 81) … தமிழ் , தமிழர் பற்றிய ஆய்வுகளில் தனது முடிவுகளில் தெளிவாகவும் உறுதியாகவும் நின்ற ஒரு மிகப் பெரிய ஆய்வாளர். தமிழ் ஒரு இயற்கைமொழி … உலகில் உள்ள மொழிகளுக்கெல்லாம் தாய் … தமிழே திராவிட மொழிகளுக்குத் தாய் … ஆரியத்திற்கும் மூலம் … மேலும் மூழ்கிவிட்ட குமரிக்கண்டத்திலிருந்துதான் முதல் மாந்தரினம் தன் தாய்மொழியான - உலக முதல் மொழியான – தமிழுடன் தோன்றியது. இதுவே பாவாணரின் அடிப்படைக் கோட்பாடுகளாகும். திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோயில் என்ற ஊரில் பிறந்த ‘தேவநேசன்’ பின்னர் ‘தேவநேயன்’ என்று அழைக்கப்பட்டார். தமிழாசிரியர் மாசிலாமணி என்பவர் இவருக்குச் சூட்டிய ‘கவிவாணர்’ என்ற அடைமொழியும் பின்னர் ‘பாவாணர்’ என்று மாற்றமடைந்து, ‘தேவநேயப் பாவாணர்’ என்று அழைக்கப்பட்டார். ‘திராவிட மொழி நூல் ஞாயிறு ‘ என்ற சிறப்புப்பட்டத்தைப் பெரியார் ஈ.வே. இரா. அவர்கள் தலைமையில் 1955 – இல் சேலம் தமிழ்ப் பேரவை அளித்தது. மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர் படிப்பிலும் திருநெல்வேலித் தென்னிந்தியத் தமிழ்ச் சங்கம் நடத்திய தனித்தமிழ்ப்புலவர் படிப்பிலும் தேறிய பாவாணர் 1934 – இல் பி ஓ எல் பட்டமும் பெற்றார். 22 ஆண்டுகள் பள்ளி ஆசிரியப் பணி … 12 ஆண்டுகள் கல்லூரிப் பணி … 5 ஆண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி … 6 ஆண்டுகள் தமிழ்நாடு அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகராதித்திட்டத்தில் பணி. ‘செந்தமிழ்ச் செல்வி’ இதழில் ‘ மொழியாராய்ச்சி ‘ என்ற இவரது கட்டுரை முதன்முதலாக 1931- இல் வெளிவந்தது. 1940 இல் ‘ ஒப்பியன் மொழிநூல்’ என்ற இவரது மிகச் சிறப்பான ஆய்வுநூல் வெளிவந்தது. அதையொட்டி, ‘இயற்றமிழ் இலக்கணம்’ என்ற இவரது நூலைச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டது. ‘திராவிடத் தாய்’, ‘சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்’ ‘உயர்தரக் கட்டுரை இலக்கணம்’, ‘பழந்தமிழாட்சி’, ; முதல் தாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம், ‘ A critical survey of Madras University Lexicon ‘ ‘ The Primary classical Language of the World’, ‘ The Language Problem of Tamilnad and its logical Solution ‘ ‘ வேர்ச்சொல் கட்டுரைகள்’, ‘தமிழிலக்கிய வரலாறு’ ‘ இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும் ‘, ‘ வண்ணனை மொழிநூலார் வழுவியல்’ ஆகியவை இவர் எழுதியுள்ள நூல்களில் சில. 1956 –ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ‘திராவிட மொழியாராய்ச்சித் துறையில்’ இணைப்பேராசிரியராக நியமிக்கப்பட்டார். பின்னர் அவருக்கும் வங்காளமொழிப் பேராசிரியர் சுநீதி குமார் சட்டர்ஜிக்கும் ஏற்பட்ட கருத்துமோதல், இவர் தான் கொண்டிருந்த மொழிக் கோட்பாட்டு அடிப்படையில் மேற்கொள்கிற ஆராய்ச்சிக்குத் தடையாக அமைந்தது. இதன் விளைவாக, 1961 ஆம் ஆண்டு இவர் அப்பல்கலைக்கழகத்தைவிட்டு வெளியேறினார். 1959 –இல் இவரது மாணவரும் பல வகைகளில் அவருக்குத் துணை நின்றவருமான பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் தொடங்கிய ‘தென்மொழி’ இதழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார். 1960 –இல் இவரது ஆட்சித்துறைக் கலைச்சொல்லாக்கங்களைப் பாராட்டி, தமிழ்நாட்டரசு செப்புப்பட்டயம் வழங்கி இவரைச் சிறப்பித்தது. 1974 – இல் தமிழ்நாட்டரசு வகுத்த ‘செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்கத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டு, அப்பணியைத் தொடங்கினார். 1979 – இல் அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் இவருக்குப் பொன்னாடை போர்த்தி, நினைவுத்தட்டமும் விருதும் வழங்கினார். அப்போது ‘செந்தமிழ்ச்செல்வர் ‘ என்ற பட்டமும் தமிழ்நாட்டரசால் வழங்கப்பட்டது. இவருக்குப் பலவகைகளில் திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் நிறுவனர் தாமரைச் செல்வர் வ. சுப்பையா அவர்கள் உதவியுள்ளார். முக்கூடலைச் சேர்ந்த இராமகிருஷ்ணா பீடி நிறுவனத்தின் உரிமையாளரும் உதவியுள்ளார். 1981 – ஆம் ஆண்டு (5.1.81) மதுரையில் நடைபெற்ற 5 ஆம் உலகத் தமிழ் மாநாட்டில் ‘ மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்’ என்னும் தலைப்பில் ஒன்றேகால் மணிநேரம் சொற்பொழிவாற்றினார். அன்று இரவே உடல்நலம் கெட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அடுத்த பத்தாவது நாள் (15.1.81) இயற்கை எய்தினார். மறைமலையடிகளாரின் தனித்தமிழ் இயக்கத்தையொட்டி, பாவாணர் வாழ்க்கையும் ஒரு இயக்கமாகவே தோன்றி, வளர்ந்து, இன்றும் நீடிக்கிறது. உலகெங்கும் அவரது கோட்பாட்டை ஆதரிப்பவர்களும் அதனடிப்படையில் தமிழாய்வை மேற்கொள்வோர்களும் இருக்கின்றனர். மறைந்த பேராசிரியர் வ.சுப. மாணிக்கனார், முனைவர் வளனரசு போன்றோரெல்லாம் இவரது கோட்பாடுகளை ஏற்றவர்களில் சிலர். இன்றும் முனைவர் அரணமுறுவல், முனைவர் கு. அரசேந்திரன், திரு. பூங்குன்றன், திரு. அருளி போன்றோர் தொடர்ந்து பாவாணர் வழியில் தமிழ்த்தொண்டு ஆற்றிவருகின்றனர். இவரது நினைவாகத் தபால்தலையும் வெளியிடப்பட்டுள்ளது.மேலதிக விவரங்களுக்கு: http://ta.wikipedia.org/s/3f1
0 கருத்துகள்:
கருத்துரையிடுக