பேராசிரியர் க.ப. அறவாணன் (1941) … தமிழுலகம் நன்கு அறிந்த ஆய்வாளர். இலக்கியம், மொழி, மானுடவியல், வரலாறு என்று பல துறை அறிவுகளைக் கொண்ட தனிச் சிறப்பு வாய்ந்த ஒரு பேராசிரியர். நெல்லை மாவட்டத்தில் கடலங்குடி என்ற ஊரில் பிறந்தவர். தமிழில் பி ஓ எல், எம்.ஏ., எம்.லிட்., முனைவர் ஆகிய பட்டங்களையும் மானுடவியல் போன்ற பிற துறைகளில் பட்டயங்களையும் பெற்றவர். கேரளப் பல்கலைக் கழகத்தில் முதுகலைத் தமிழ் படிக்கும்போது, பெரும் பேராசிரியர் வி.அய். சுப்பிரமணியம் அவர்களுக்கு மிகவும் பிடித்த மாணவரானார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.லிட். பட்டத்திற்காக இவர் நன்னூல்பற்றி ஆய்வு மேற்கொண்டார். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் பகுதிநேர ஆய்வாக, தொல்காப்பிய உரையாசிரியர் பற்றிய ஆய்வை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். முதலில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் செந்தமிழ்க் கல்லூரியில் பணியில் இணைந்தார். பின்னர் பாளை தூயசவேரியர் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, சென்னை லயோலா கல்லூரி, புதுவை நடுவண் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றினார். 198-2001 ஆம் ஆண்டுகளில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார். சில ஆண்டுகள் மேற்காப்பிரிக்கச் செனகல் நாட்டுத் தக்கார் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் ஆய்வாளராகப் பணியாற்றியுள்ளார். திராவிடர்களுக்கும் ஆப்பிரிக்கர்களுக்கும் இடையில் ஒற்றுமைகளைக் கண்டறியும் ஆய்வை அங்கு மேற்கொண்டார். 60-க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளார். ‘அற இலக்கியக் களஞ்சியம் – ஆறு தொகுதிகள்’ , ‘தொல் தமிழர் காலம் முதல் ஐரோப்பியர் காலம் வரை தமிழ்நாட்டு வரலாற்றை மிகச் சிறப்பாக எழுதியுள்ளார். ‘சைனர்களின் தமிழிலக்கணக்கொடை’, ‘தொல்காப்பியக் களஞ்சியம்’, ‘கவிதை – கிழுக்கும் மேற்கும்’, ‘தமிழரின் தாயகம்’ ‘தமிழ்ச்சமுதாய வரலாறு’, ‘தமிழ் மக்கள் வரலாறு’ போன்ற பல துறைகளிலும் நூல்கள் படைத்துள்ளார். இவருடைய ஆய்வுகள் எல்லாம் சமூகவியல், மானுடவியல் நோக்கில் அமைந்துள்ளன. தொடக்க காலத்தில் ‘ஒளி பரவட்டும் ‘ என்ற ஒரு கவிதை நூலையும் எழுதியுள்ளார். சிறந்த நூல்களுக்கான தமிழக அரசு பரிசுகளை மூன்று தடவைகள் பெற்ற ஒரு சிறந்த ஆய்வாளர். 1986 – இல் சிறந்த பேராசிரியருக்கான விருது பெற்றார். இவரது ‘ தமிழர் அடிமையானது ஏன்’ என்ற ஆய்வு நூலுக்கு ‘சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசு ‘ அளிக்கப்பட்டுள்ளது. 2007-இல் தமிழக அரசு இவருக்கு ‘திருவள்ளுவர் விருது’ அளித்துச் சிறப்பித்தது. 2010 –இல் ‘கு.சின்னப்பபாரதி விருது’ தமிழ் ஆய்வுக்காக இவருக்கு வழங்கப்பட்டது. பல ஆண்டுகள் இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் செயலாளராகப் பணிபுரிந்து, பல மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளார். இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார். ‘அறவாணன் அறக்கட்டளை ‘ என்ற ஒன்றை உருவாக்கி, ஆண்டுதோறும் ‘அனைத்துலகச் சாதனையாளர் விருது’ , ‘அனைத்திந்தியச் சாதனையாளர் விருது ‘ என்ற இரண்டு விருதுகளை வழங்கிவருகிறார். இவரது துணைவியார் முனைவர் தாயம்மாள் அறவாணன் அவர்களும் தமிழ்ப் பேராசிரியை … சிறந்த ஆய்வாளர். மேலதிக விவரங்களுக்கு - https://ta.wikipedia.org/s/vhu
0 கருத்துகள்:
கருத்துரையிடுக