பேராசிரியர் ஆ. சிவலிங்கனார் ( 1922 - 2014) … தமிழுலகத்தில் எதிர்பார்ப்பு இல்லாமல், தமிழ்ப்பணி மேற்கொண்ட ஒரு தமிழ்ப் பேராசிரியர், ஆய்வாளர். தொல்காப்பியத்திலும் அதற்கான அனைத்து உரைகளிலும் ஆழமாக மூழ்கி எழுந்தவர். பள்ளிப் படிப்புக்குப் பின்னர், கடலூர் ஞானியார் மடத்தில் தமிழ் இலக்கியம், இலக்கணங்களில் பயிற்சிபெற்றார். திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ் பயின்றார். சிறிதுகாலம் நெல்லை மாவட்ட வீரவநல்லூரில் (நானும் அங்கு படித்துள்ளேன் என்பதில் மகிழ்ச்சி) பள்ளி ஒன்றில் (1941) பணியாற்றினார். பின்னர் மயிலம் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க் கல்லூரியில் (1942) விரிவுரையாளராக இணைந்தார். அக்கல்லூரியிலேயே தொடர்ந்து பணியாற்றி, முதல்வராகவும் பதவி உயர்வுபெற்று, 1972 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். 1973 –இல் சேலம் மோகனூர் சுப்பிரமணியம் தமிழ்க் கல்லூரியிலும் பணியாற்றினார். அவரது தமிழ்ப் புலமைமீது அளவற்ற மதிப்புகொண்ட சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் பேரா. ச.வே.சுப்பிரமணியம் அவரைத் தொல்காப்பிய உரைகளை மேலும் பல விளக்கங்களுடன் பதிப்பிக்க வேண்டினார். தொல்காப்பியத்தின் ஒவ்வொரு இயலுக்கும் தனித்தனி நூல்களை உருவாக்க வேண்டினார். அதனடிப்படையில் 27 இயல்களுக்கும் 27 நூல்களைப் பேராசிரியர் பதிப்பித்தார். உண்மையிலேயே இந்தப் பணி மிகப்பெரிய கடுமையான, ஒரு அரும்பணி. தமிழாய்வு வரலாற்றில் நிலைத்து நிற்கும் ஒரு பணி. ஆய்வு நூல்கள்(5), திறனாய்வு நூல்கள் (7), கவிதை நூல்கள் (9), உரைநூல்கள் (15), கட்டுரைகள் (200-க்கு மேல்) எனப் பல பங்களிப்புகளைத் தமிழுலகத்திற்கு அளித்துள்ளார். செந்தமிழ், தமிழ்ப்பொழில், செந்தமிழ்ச்செல்வி, வீரசைவமுரசு, மக்கள் சிந்தனை முதலிய திங்கள் இதழ்களில் இலக்கண, இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள் எழுதிவந்தார். 1981-83 –இல் நான் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுமுனைவர் ஆய்வாளராகப் பணியாற்றியபோது, பேராசிரியர் மேற்கூறிய பணியை மேற்கொண்டிருந்ததின் பயனாக அவருடன் மரபிலக்கணங்கள்பற்றி மொழியியல் நோக்கில் உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மிகவும் தன்னடக்கமானவர். மிகப் பொறுமையாகவும் ஆய்வு நோக்கிலும் அவர் உரையாடுவார். மொழியியல் நோக்கில் தொல்காப்பிய நூற்பாக்களை எவ்வாறு அணுகலாம் என்பதுபற்றி அவரும் பல வினாக்களை என்னிடம் எழுப்புவார். சைவ இலக்கியங்களில் பெரும் ஈடுபாடு உடையவர் பேராசிரியர். வீரசைவப் பின்னணி உடையவர் பேராசிரியர். தமிழகத்தின் பல பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைகள் அவரைச் சிறப்புச் சொற்பொழிவுக்கு அழைத்துப் பயன்பெற்றுள்ளன. இராசா.சர். அண்ணாமலைச் செட்டியார் பரிசு அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. ‘தொல்காப்பியச் செம்மல்’, ‘ சிவநெறிப்புலவர்’, ‘முது பேராளார்’ போன்ற பல சிறப்புப் பட்டங்களைப் பல்வேறு தமிழ் நிறுவனங்கள் அவருக்கு அளித்துள்ளன. தமிழகப் புலவர் குழு உறுப்பினராகவும் குன்றக்குடி ஆதீனத் தமிழ்ச் சங்க உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். பேராசிரியர் ஆ. சிவலிங்கனாரின் தொல்காப்பிய உரைவளப் பதிப்புகளை இன்றைய ஆய்வு மாணவர்கள் அனைவரும் படித்துப் பயன்பெறவேண்டும். பேராசிரியர் 2014 ஆம் ஆண்டு நவம்பர் இவ்வுலகைவிட்டு மறைந்தது தமிழுலகிற்கு ஒரு பெரிய இழப்புதான். மேலும் விவரங்களுக்கு : http://muelangovan.blogspot.in/2008/09/30111922.html
0 கருத்துகள்:
கருத்துரையிடுக