உலகத் தாய்மொழி தினம் . . .
--------------------------------------------
21 - 02 - 2025 . . . 'தாய்மொழி தினம்' என்று கொண்டாடப்படுகிறது.
'தாய்மொழி ' என்னும் உணர்வு ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் அடிப்படையான தேவை ஆகும்!
ஒரு இனத்தை அழிக்க முயலும் மற்றொரு இனம், முதலில் செய்வது எதிரி இனத்தின் மொழியைச் சிதைப்பதும் அழிப்பதுமே ஆகும்.
இது உலக வரலாறு நமக்கு உணர்த்துகிற ஒன்று!
அந்த வகையில் பல தேசிய இனங்களைக்கொண்ட இந்தியாவில் இந்தி என்னும் ஒரு குறிப்பிட்ட மொழியை அதைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிற இனங்களின்மீது திணிப்பது ஒரு ஜனநாயக விரோதச் செயலே ஆகும்! மும்மொழிக் கல்விக்கொள்கை என்பது மறைமுகமாக இந்தியைத் திணிக்கும் ஒரு முயற்சியே. இதைக் கடுமையாக எதிர்த்து நிற்பது தேசிய இனங்களின் ஒரு முக்கியக் கடமை என்பதில் யாருக்கும் வேறுபாடு இருக்கமுடியாது. இருக்கவும் கூடாது.
அதேவேளையில் இந்திய வரலாற்றில் ஆங்கிலேய அரசு 17 ஆம் நூற்றாண்டிலிருந்தே தனது மொழியை - ஆங்கிலத்தை - பலவகைகளில் கல்வியில் புகுத்தியது. ஆட்சி நிர்வாகத்தில் புகுத்தியது. இந்த ஆங்கில ஆதிக்கம் நான்கு நூற்றாண்டு வரலாறு உடையது.
நான்கு நூற்றாண்டு வரலாறு உடைய ஆங்கில ஆதிக்கமும், 75 ஆண்டுகால வரலாறு உடைய இந்தி ஆதிக்கமும் இரண்டுமே இங்குள்ள தேசிய இனங்களின் உரிமைகளை மதிக்காத ஒரு ஜனநாயகவிரோத செயலே ஆகும்.
ஆங்கிலம் இல்லையென்றால் தங்கள் குழந்தைகளுக்கு வாழ்க்கையே இல்லை என்னும் ஒரு தவறான மனப்போக்கு இன்று திட்டமிட்டு வளர்க்கப்பட்டுள்ளது.
அதுபோன்று, இந்திய நடுவண் அரசின் நிர்வாகச் செயல்பாடுகளுக்கு இந்தி ஆட்சிமொழி என்னும் ஒன்று இல்லையென்றால், நிர்வாகம் செயல்படமுடியாது என்னும் தவறான கருத்தையும் திணிக்க நடுவண் அரசு முயல்கிறது.
50, 60 ஆண்டுகளுக்குமுன்பு தமிழ் நாட்டில் பள்ளிகளில் தமிழே பயிற்றுமொழி என்று நீடித்த ஒரு நிலை இன்று தலைகீழாக மாறியுள்ளது. ஆங்கிலப் பயிற்றுமொழியே ஆதிக்கம் செலுத்துகிறது. பள்ளிகளில் தமிழ் பெற்றிருந்த இடத்தை இன்று ஆங்கிலம் கைப்பற்றிக்கொண்டுள்ளது என்பது உண்மையே. அதற்குப் பல காரணங்கள் உண்டு. அதுபற்றிக் கடந்த சில தினங்களாகவே நாம் விவாதித்துவருகிறோம்.
தாய்மொழி தினத்தன்று . . .
நாம் ஒன்றில் தெளிவாக இருக்கவேண்டும்!
ஆங்கிலமும் நமக்கு அந்நிய மொழியே! இந்தியும் நமக்கு அந்நிய மொழியே! அதனால் அவற்றின் மீது நமக்குக் காழ்ப்புணர்ச்சி கொள்ளவேண்டியது இல்லை! . அவை அவற்றின் இனங்களின் மொழிகள்! அதை நாம் மதிக்கவேண்டும்! ஆனால் அந்த மொழிகள் நம் தாய்மொழியை 'மிதிக்க' அனுமதிக்கக்கூடாது! எந்தவொரு மொழியையும் படிக்க விரும்புவர்கள் படிப்பதை நாம் எதிர்க்கவில்லை! கட்டாயப்படுத்தக்கூடாது என்பதே நமது நிலைபாடாக இருக்கவேண்டும்!
தமிழ்மொழியே நம் மொழி! நம் இனத்தின் மொழி! பள்ளிகள், கல்லூரிகள், அரசுத் துறைகள், வணிகம், பொருள் உற்பத்தி, வழிபாடு என்று அனைத்து நிலைகளிலும் . . .
தாய்மொழியாகிய தமிழே நீடிக்கவேண்டும்!
எந்த நிலையிலும் . . எந்தவொரு சூழ்நிலையிலும் . . எந்தவொரு வடிவத்திலும் பிற மொழிகளின் திணிப்பு தமிழ் இனத்தின்மீது கூடாது என்பதே 'தாய்மொழி தினத்தின்' முழக்கமாக இருக்கவேண்டும்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக