நடுவண் பல்கலைக்கழகங்களில் ஆங்கிலமும் இந்தியும்! பிற மொழிகளுக்கு இடம் கிடையாது ! என்பதுபற்றிய உரையாடலில் நண்பர் மாலனுக்கும் எனக்கும் இடையிலான உரையாடல்! (பகுதி 1)
-------------------------------------------------------------------
ந. தெய்வ சுந்தரம்
------------------------------
நண்பர் மாலன் அவர்களே. பயிற்றுமொழிபற்றிய விவாதம் வேறு. அதுபற்றி நிறையவே நான் எழுதியுள்ளேன். நான் இந்தப் பதிவில் கேட்டுள்ளது . . நடுவண் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் விண்ணப்பப் படிவத்தில் , வகுப்பு நடத்துவதில் ஒருவருக்கு ஆங்கிலம் வசதியாக இருக்குமா, அல்லது இந்தி வசதியாக இருக்குமா? என்று கேட்டுள்ளது பற்றியே!
இந்தியைமட்டும் ஏன் சிறப்பித்துக் கூறவேண்டும்? ஆங்கிலம் அல்லது ஆசிரியரின் தாய்மொழி, எது வசதியாக இருக்கவேண்டும் என்றல்லவா கேட்டிருக்கவேண்டும்? அவ்வாறு இல்லாமல், ஆங்கிலத்தோடு இந்தியைமட்டும் சேர்த்துள்ளார்களே? எதனால்? அதற்கு ஆட்சிமொழித் தகுதி இருப்பதனால்தானே! பிற மொழிகளுக்கு 'அத்தகுதி' வழங்கப்படவில்லை. எனவே அவை சேர்க்கப்படவில்லை. நடுவண் அரசின் பல்கலைக்கழகம். எனவே அப்படிச் சேர்க்கப்பட்டுள்ளது. இதை ஏன் சுற்றிவளைத்துப் பேசவேண்டும்? கேள்வியும் நேரடியாக இருக்கவேண்டும். பதிலும் நேரடியாக இருக்கவேண்டும்! Point to Point Travel!
அடுத்து, மொழித்துறைகள் அந்தந்த மொழிகளில்தான் பாடம் நடத்துவார்கள். அதில் சிக்கல் இல்லை. பிற பாடங்கள் ?
நண்பர் மாலன் அவர்கள்
---------------------------------------------
நேரடி பதில் இதுதான் 1. மத்தியப் பல்கலைகளில் இந்தியாவின் எந்த மாநிலத்தவரும் பணியில் சேரத் தகுதிபுள்ளவர்கள் (அவர்களது கல்வித் தகுதியைப் பொறுத்து) அவர்கக் எந்த மாநிலத்திலும் பணியாற்றும் வாய்ப்புப் பெற்றவர்கள்.திருவாரூரில் பணியாற்றக்கூடிய வாய்ப்பு தமிழர்களுக்கு மட்டுமல்ல பஞ்சாபியருக்கும் உண்டு. அசாமில்ப்பணியாற்றக் கூடிய வாய்ப்பு தமிழருக்கும் உண்டு. உயர்கல்வியில் பயிற்று மொழி மாநில மொழியாக இல்லாத போது அதன் ஆசிரியர்களுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டியதில்லை. அதே நேரம் மத்திய அரசின் அலுவல் மொழிகள் அறிந்திருந்தால் அதன் சுற்றறிக்கைகளை வாசித்து அறிந்து கொள்ள அவை உதவும். 2. மானவர்கள் எந்த மொழி வழியில் கற்க இணைந்திருக்கிறார்களோ அந்த வழியில்தான் கற்பிக்கப்படும் ஏனெனில் தேர்வுகள் அந்த மொழியில்தான் இருக்கும்.
ந. தெய்வ சுந்தரம்
-----------------------------
//மத்திய அரசின் அலுவல் மொழிகள் அறிந்திருந்தால் அதன் சுற்றறிக்கைகளை வாசித்து அறிந்து கொள்ள அவை உதவும்.// நண்பர் மாலன் அவர்கள்.
நண்பர் மாலன் அவர்களே. நடுவண் பல்கலைக்கழகங்களில் எந்த மாநிலத்தவரும் படிக்கலாம் என்பது தெரிந்ததே! பன்மொழி மாணவர்கள் இருப்பதால் ஆங்கிலம்தான் பயிற்றுமொழி என்பதும் தெரிந்ததே! அதுபற்றி நான் பேசவில்லை! மேலே அடைப்புக்குள் உள்ளதுபற்றியே
எனது கேள்வி. ஏன் நடுவண் அரசின் சுற்றறிக்கைகளை இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவன் ஆங்கிலம் அல்லது இந்தியில் படிக்கவேண்டும்? தன் தாய்மொழியில் ஏன் படிக்கமுடியவில்லை? இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் இந்தியிலேயே படிக்கலாம். ஆனால் மற்ற மாணவர்கள் ஆங்கிலத்தில்தான் படிக்கவேண்டும். அல்லது இந்தி படித்திருக்கவேண்டும். இந்திமொழி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைக்கு என்ன காரணம்? இந்திதான் நடுவண் அரசின் ஆட்சிமொழி. அப்படித்தானே!
அதைத்தான் நான் கேள்விக்கு உட்படுத்துகிறேன்! பிற மொழிகளும் ஆட்சிமொழிகளாக இருந்தால், அந்த மொழிகளிலும் அறிக்கை வரும் அல்லவா? ஏன் அது நீடிக்கவில்லை? தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் ஒன்று ஆங்கிலத்தில் அறிக்கைகளைப் படிக்கவேண்டும். அல்லது இந்திமொழியைப் படித்துவிட்டு இந்தியில் படிக்கலாம். ஆனால் தங்கள் தாய்மொழிகளில் சுற்றறிக்கைகளைப் படிக்கமுடியாது. இதுதானே இன்றைய நிலை! இது ஒரு மொழி ஆதிக்கம் இல்லையா?
ஆங்கிலம், இந்தி இரண்டுமே பிறமொழி மாணவர்களுக்கு அந்நியமொழிகள்தான்! எனவே பிறமொழி மாணவர்கள் இரண்டு அந்நியமொழிகளில் ஏதாவது ஒன்றைப் படித்திருக்கவேண்டும்? ஆனால் இந்திமொழி மாணவர்களுக்கு அது தேவை இல்லை! இது நியாயமா? என்பதுதான் எனது கேள்வி!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக