தமிழில் சில துணைவினைகளின்பின் ஒற்று மிகுதல் (2)
-------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------
நேற்று பார்த்த வினைக்கூறு துணைவினைகளிலிருந்து (Aspects) மாறுபட்ட மற்றொரு வகைத் துணைவினைகள் தமிழில் உள்ளன.
'' மழை வரப்போகிறது''
''அவர் கீழே விழப்பார்த்தார்''
''மழை வரக்கூடும்''
''நாளை நான் அவரைப் பார்க்கவேண்டும்''
''அவர் நாளை வரமாட்டார்''
''அவர் இன்று வரவில்லை''
மேற்கூறிய தொடர்களில் வினைமுற்றுகளின் அமைப்பானது முதன்மைவினை + துணைவினை என்று உள்ளது.
முதன்மைவினையானது ''செய / செய்ய'' வினையெச்ச வாய்பாட்டு அமைப்பைக் கொண்டுள்ளது. அதையடுத்து ''போ'', ''பார்'' ''கூடு'' ''வேண்டும்'' ''மாட்டு'' ''இல்லை'' என்பவை வருகின்றன. இவை துணைவினைகள் ஆகும். அதாவது இவற்றிற்கு அகராதிப் பொருள் கிடையாது. மாறாக, இலக்கணப்பொருளே உண்டு.
இவை துணைவினைதான் என்பதைச் சோதித்துப் பார்ப்பதற்கு நாம் செய்யவேண்டியது.... முதன்மைவினைக்கும் இவற்றிற்கும் இடையில் வேறு ஏதாவது அகராதிச்சொல்லைச் சேர்க்கமுடியுமா என்று பார்க்கவேண்டும்.
''மழை வர இன்று போகிறது'' என்றோ, ''நான் அவரைப் பார்க்க இன்று வேண்டும்'' என்றோ, '' அவர் வர நாளை கூடும்'' என்றோ சொல்லமுடியாது!
ஆனால் '' பார்க்கவாவேண்டும்?'' ''பார்க்கத்தான்வேண்டும்'' ''பார்க்கவேவேண்டும்'' என்று இலக்கணப்பொருள்களைத் தரும் இடைச்சொற்களைச் சேர்க்கலாம்!
ஆனால் இந்தத் துணைவினைகள் எல்லாம் தமிழில் முதன்மை வினைகளாகவும் வருகின்றன என்பதும் கவனிக்கத்தக்கது. அவ்வாறு வரும்போது அவற்றிற்கு அகராதிப்பொருள் உண்டு.
'' மாடு போகிறது''
'' அவர் என்னைப் பார்த்தார்''
'' கூட்டம் நன்கு கூடியது''
''எனக்கு இலக்கணப்புத்தகம் வேண்டும்''
''சட்டையை அங்கே மாட்டு''
''அது அங்கு இல்லை''
மேற்கூறிய துணைவினைகள் நாம் ஏற்கனவே பார்த்த வினைக்கூறு ( Aspects) என்ற இலக்கணப்பொருளிலிருந்து மாறுபட்ட ஒரு இலக்கணப்பொருளைத் தருகின்றன. வினைக்கூறுகள் ஒரு வினைநிகழ்ச்சி எவ்வாறு நடைபெற்றது என்பதைக் காட்டுகின்றன. ஆனால் இந்தத் துணைவினைகள் பேசுவோரின் மனநிலையையும் விருப்பங்களையும் காட்டுகின்றன. எனவே இவற்றை வினைநோக்கு என்று பேரா. பொற்கோ அழைக்கிறார். ஆங்கிலத்தில் இது "" Modal" என்று அழைக்கப்படுகிறது.
இந்த வினைநோக்குத் துணைவினைகள் எல்லாம் முதன்மைவினைகளின் செயவென் வினையெச்ச வாய்பாட்டு வடிவங்களுடன்தான் சேர்ந்து வரும். மேலும் கால இடைநிலைகள், திணை எண் பால் விகுதிகளை ஏற்கும்.
அவற்றில் ''போ'' ''பார்'' ''கூடு'' ஆகியவை வல்லின எழுத்துகளில் தொடங்குவதால், முதன்மைவினைகளுக்கும் இவற்றிற்கும் இடையில் வல்லொற்று மிகும்!
''வரப்பார்த்தான்'' '' வரக்கூடும்'' ''வரப்போகிறது''
ஆங்கிலத்தில் உள்ள " may, might, can, could, should, must , ought, need "" ஆகியவே எல்லாம் வினைநோக்குத் துணைவினைகளே! ஆங்கிலத்தில் இந்தத் துணைவினைகள் வரும்போது, முதன்மைவினைகள் வினையின் முதல் வடிவத்தில்தான் வரும். இறந்தகால வடிவமோ அல்லது பிற வினையெச்ச வடிவங்களோ வராது.
"He may go .... He must go .... He can go .... He should go"
ஆனால் "have" "has" "had" என்ற வினைக்கூறுத் துணைவினைகள் வரும்போது, முதன்மைவினைகள் வினையெச்சவடிவமான " Past Particple / Passive Participle" வடிவங்களில்தான் வரவேண்டும என்பதைக் கவனிக்கவும் (have gone, has gone, had gone, is killed, was eaten). ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. இதுவே கணிதப்பண்பு!
தமிழில் வினைக்கூறுத் துணைவினைகள் வரும்போது முதன்மைவினைகள் ''செய்து'' வாய்பாட்டு வினையெச்ச வடிவங்களில் வரவேண்டும் என்றும் வினைநோக்குத் துணைவினைகள் வரும்போது முதன்மைவினைகள் ''செய, செய்ய'' வாய்பாட்டு வினையெச்ச வடிவங்களில் வரவேண்டும் என்றும் தமிழில் இலக்கணம் அமைந்துள்ளது மிகச் சிறப்பானதாகும் . கணிதப்பண்பு உடையதாகும். தமிழ்க்கணினிமொழியியலுக்கு ஏற்ற ஒன்றாகும்!
7 கருத்துகள்:
"இவை துணைவினைகள் ஆகும்". 'ஆகும்' எதற்கு? "இவை துணை வினைகள்." போதும். பெயர்ப் பயனிலை! பயில்வது (கற்பது) பயில (புழங்குவது) வேண்டும் நண்பரே! தமிழின் சிறப்பு(க்!)களில் ஒன்றை அழித்துவிடுவீர் போற்றோன்றுகிறது
ஓரோவிடத்து, மயக்கம் தவிர்க்க,பெயர்ப்பயனிலை துணைதேடும்.அய்யரவர்கள் நூற்களை ஆழ்ந்து கறகப் புலானகும். "அவன் கந்தன் ஆவான்." என்றால் இப்போது முருகனா?! "இவை துணைவினை" என்பது சாலச்சிறப்பு. சுட்டே எண்காட்டி நிற்கும்.வெற்று இலக்கணம் ஏட்டுச்சுரைக்காய்' கறிக்குதாவது. இலக்கியம் கண்டே இலக்கணம் கண்டனர். என்ன செய்ய? நுண்ணிய நூல் பல ...
"எனது" முழு "சுய" விவரத்தைக் காண்க!! ஸுய எதற்கு? கூறியது கூறல்? வடமொழி வேறு!
"எனது முழு விவரத்தைக் காண்க" என்ன சொல்லப்படவில்லை?
தமிழ்க்கணினிமொழியியலுக்கு ஏற்ற ஒன்"றாகும்"! "இப்போதில்லை இனி ஆகும்" என்கிறீர்களா?
"இப்போது ஏற்றதாக இருக்கிறது" என்றால்
"தமிழ்(க்??!!)கணினிமொழியியலுக்கு ஏற்ற ஒன்று." என்பதே சரி ஆழ்ந்த வருத்தம் என்ன என்றால் நீங்கள் ஆய்வாளர்!
"தமிழ் காதுக்கு இனியது" ஒப்பிடுக "தமிழ்க்காதுக்கு இனியது"
யாழ் பாடலுக்கு இசைந்தொலித்தது. இலக்கணம் இலக்கியம் இரண்டும் கற்றாரே எது பற்றியும் பேசத்தக்கார்;உங்கள் கணினிஇயலின் அறியாமையும் தெற்றனெத் தெரிகிறது.வணக்கம். இனிவாரேன்.வீண் செயல்;வேண்டாமனவருத்தம்(இருவருக்கும்?)
உங்கள் கருத்தை சரிதான். உங்களைப்போல், தமிழில் நாம் பொதுவாக இழைக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டும் அளவுக்கு அனைவரும் (நுனிப்புல் மேயும் நான் உட்பட) தமிழ்மொழியைக் கற்க வேண்டும். அதேவேளையில், ஆய்வாளர் தெய்வ சுதந்திரம் அவர்களையும் குறைகூற இயலாது. "ஆனைக்கும் அடிசறுக்கும்" அல்லவா?! எனவே, ஆய்வாளர் தெய்வ சுந்தரம் அவர்களையும் அவரின் மொழி ஆய்வுக்காக பாராட்டுகிறேன். மற்றும், தங்களுக்கும் ஆய்வாளர் தெய்வசுந்தரம் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கருத்துரையிடுக