தமிழில் பின்னொட்டுகளின்பின் (Postpositions)ஒற்று மிகுதல்
---------------------------------------------------------------------------
தமிழில் சில வேற்றுமை உருபுகளின்பின் சில பின்னொட்டுகள் என்னும் விகுதிகள் இணைந்து, வேற்றுமைப்பொருளை அல்லது வேற்றுமை உறவுகளை ( Casal relations) மாற்றியமைக்கும்.
''அவனைப் பார்த்தேன்'' ... ''அவனைப்பற்றிப் பேசினேன்''
''ஐ'' என்ற வேற்றுமை உருபு வரும்போது, ''அவன்'' என்பதற்கும் ''பார்த்தேன்'' என்பதற்கும் இடையில் உள்ள வேற்றுமை உறவு வேறு! ''ஐப்பற்றி'' என்று வரும்போது, ''அவன்'' என்பதற்கும் '' பேசினேன்'' என்பதற்கும் இடையில் உள்ள வேற்றுமை உறவு. அதாவது தொடரின் பொருள் வேறுபடுகிறது.
பிற்காலத் தமிழில் - குறிப்பாகத் தற்காலத் தமிழில் - ''பற்றி'' போன்ற பல பின்னொட்டுகள் அல்லது விகுதிகள் தோன்றியுள்ளன. இதில் மேலும் நாம் கவனிக்கவேண்டிய ஒன்று... ''பற்றி '' என்பது '' பற்று'' என்ற முதன்மை வினைச்சொல்லின் செய்துவாய்பாட்டு வன்தொடர்க் குற்றியலுகரச் சொல்லின் வடிவம். ஆனால் ''பற்றி'' என்ற முதன்மை வினைச்சொல்லின் செய்துவாய்பாட்டு வினையெச்சமும் , ''பற்றி'' என்ற ''ஐ'' வேற்றுமைக்கு அடுத்து வருகிற பின்னொட்டு அல்லது விகுதியும் வேறு வேறு. வரலாற்று ரீதியில் உறவு - "தொப்புள்கொடி உறவு'' - உள்ளது. அவ்வளவுதான்.
''அவனது கரங்களைப் பற்றிக்கொண்டு பேசினேன்''
''அவனது கரங்களைப்பற்றிப் பேசினேன்''
இரண்டு தொடர்களுக்கும் பொருள் வேறுபாடு உண்டு.
இதுபோன்று பல இலக்கணச் சொற்கள் ( பின்னொட்டுகள், விகுதிகள்) ஏற்கனவே தமிழில் நீடிக்கிற முதன்மை வினைச்சொற்களிருந்து - அகராதிச்சொற்களிலிருந்து - தோன்றியுள்ளன. சொற்பொருளைக் குறிப்பதிலிருந்து மாறி, இலக்கணப் பொருளைக் குறிக்கப் பயன்படுகிறது. இதை ''இலக்கணமயமாக்கும் '' ( Grammaticalization) என்று அழைப்பார்கள்.
ஆனால் இவ்வாறு அகராதிச் சொற்களிலிருந்து இலக்கணச் சொற்கள் மாறியபிறகும் தொடர்ந்து , முந்தைய முதன்மைச் சொற்களின் சில இலக்கணப் பண்புகளைத் தொடர்ந்து பெற்றுவரும். இங்கு நாம் பார்த்துக்கொண்டிருக்கிற ''பற்றி''- அப்படித்தான். ''பற்றி'' என்ற செய்துவாய்பாட்டு வினையெச்ச வன்தொடர்க்குற்றியலுகரச் சொல்லின்பின் வல்லினத்தை முதன்மையாகக்கொண்ட வருமொழி வந்தால் ஒற்று மிகும் என்று முன்பு பார்த்துள்ளோம்.
''அவனது கரங்களைப் பற்றிப் பேசினேன்'' (அதாவது அவனது கரங்களைப் பிடித்துக்கொண்டு பேசினேன்).
அந்த வினையெச்ச விதியானது , ''பற்றி'' என்ற வேற்றுமைக்கான பின்னொட்டு வரும்போதும் செயல்படுகிறது.
''அவனைப்பற்றிப் பேசினேன்'' ( I talked about him).
இவ்வாறு 'இரண்டாம் வேற்றுமையாகிய 'ஐ' - யோடு இணைந்து தற்போது தமிழில் நிலவுகின்ற பின்னொட்டுகளுக்குப்பின் வல்லொற்று மிகும்.
''அவனைக்குறித்துப் பேசினேன்'' (''குறி'')
''அவனைநோக்கிப் போனேன்'' (''நோக்கு'')
''அதைச்சுற்றிக் கூட்டமாக இருந்தது'' (''சுற்று'')
''அவன் வகுப்பைவிட்டுப் போய்விட்டான்''.(''விடு'')
''அதையொற்றிப் பேசினேன்'' (''ஒற்று'')
''அதைப்பொறுத்துப் பேசலாம்'' ('பொறு''
''அவனைப்பொறுத்தவரைத் தரமே முக்கியம்''
இதுபோன்று சில முதன்மைவினைகளின் ''செய'' வாய்பாட்டு வினையெச்சங்களும் பின்னொட்டுகளாக வருகின்றன. எனவே அவற்றிற்குப் பின்னும் வல்லொற்று மிகும். இவற்றில் சில ''ஐ'' வேற்றுமைவிகுதிக்குப்பின்னும் , சில ''க்கு'' என்ற நான்காம் வேற்றுமைக்குப்பின்னும் சில உடைமை வேற்றுமைக்குப்பின்னும் வரும்.
பின்கண்டவற்றில் ''ஆகு'' என்பதன் செய வாய்பாட்டு வினையெச்ச வடிவத்துடன் (''ஆக'') சில சொற்கள் இணைந்து, பின்னொட்டுகளாகப் பயின்றுவருகின்றன. எனவே இங்கும் வல்லொற்று மிகும்.
நான்காம் வேற்றுமைக்குப்பின்னர் (''கு,க்கு'')
--------------------------------------------------------
''அவனுக்காகக் காத்திருக்கிறேன்''
''அவர்மூலமாகப் பணம் வாங்கினேன்''
''பணத்திற்குப்பதிலாகப் பொருளைக் கொடுக்கவும்''
''அவர்வாயிலாகச் செய்தி அனுப்பினேன்''
''அதற்குமாறாகப் பேசாதே''
''வீட்டுக்குநேராகப் போகவும்''
உடைமை வேற்றுமைக்குப்பின்னர் (''இன், அது'')
---------------------------------------------------------
''என்வாயிலாகக் கொடுத்துவிடவும்''
''அதன்மூலமாகக் கொடுத்துவிடவும்''
''அந்தச் சந்தின்வழியாகப் போகவும்''
ஆனால் சில பின்னொட்டுகள், அவற்றின் முந்தைய வினைகளின் பெயரெச்ச வடிவத்தில் வருகின்றன. பெயரெச்சத்திற்குப் பின்னர் வல்லொற்று மிகாது ( சில விதிவிலக்குகள் உண்டு. அதைப் பின்னர் பார்க்கலாம்.)
''உரிய'' ''உள்ள'' ''தகுந்த'' ''உடைய'' ...... இவை பெயரெச்சங்கள். ஆனால் இவை வேற்றுமைகளுக்குப் பின்னர் பின்னொட்டுகளாக அமையும்போது, வல்லொற்று மிகாது.
''அவனுக்குரிய பொருள் இது''
''அவனுக்குள்ள குணம்''
''அவனுக்குத்தகுந்த பண்பு''
''அவனுடைய பணி இது''
ஆகவே வேற்றுமைகளுக்குப் பின்னர் வருகின்ற பின்னொட்டுகள், தமது வடிவங்களில் செய்து வாய்பாட்டு வன்தொடர்க்குற்றியலுகர வடிவம், செய வாய்பாட்டு வினையெச்ச வடிவம் ஆகியவற்றில் அமைந்தால், அவற்றின் பின்னர் வல்லினங்களை முதலாகக்கொண்ட வருமொழிகள் வந்தால் வல்லொற்று மிகும். பின்னொட்டுபற்றிய ஒரு தெளிவான ஆய்வை முன்வைத்தவர் பேராசிரியர் பொற்கோ அவர்களே!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக