தமிழில் மொழியசை விதிகள்
------------------------------------------------------------------
------------------------------------------------------------------
தமிழ்ச் சொற்களில் ஓரசைச் சொற்களும் பல அசைகளைக்கொண்ட சொற்களும் இருக்கின்றன.
ஆ, ஈ, தா, பல், ஆண் - இவை அனைத்திலும் ஒரு உயிர் ஒலிதான் உள்ளது. ஆகவே இவை ஓரசைச் சொற்களே!
''ஆ'', ''ஈ'' இரண்டிலும் அசையின் உச்சியாகிய உயிருக்கு முன்னால் தொடக்கமாகவும், பின்னால் ஒடுக்கமாகவும் எந்தவொரு மெய்யும் வரவில்லை. எனவே இவற்றில் அசையின் உச்சி மட்டுமே அமைந்துள்ளது.
0 - ஆ -0 ; 0 - ஈ - 0;
''தா'' என்ற சொல்லில் த் என்று தொடக்கமாக ஒரு மெய்யும் அதையடுத்து ஆ என்ற உச்சியும் வருகின்றன.
த் - ஆ - 0;
''பல் '' என்ற சொல்லில் ப் என்ற தொடக்கமும் அ என்ற உச்சியும் ல் என்ற ஒடுக்கமும் வருகின்றன.
ப் - அ - ல்;
''பார்த்-தான்'' என்ற சொல்லில் முதல் அசையில் தொடக்கமாக ''ப்' என்ற மெய்யும், அதையடுத்து உச்சியாக ''ஆ'' என்ற உயிரும் , அதையடுத்து ஒடுக்கமாக ''ர்த்'' என்று இரண்டு மெய்களும் வருகின்றன.
ப் -ஆ - ர்த் ;
தமிழில் அசையின் தொடக்கமாக ஒன்றுக்கு மேற்பட்ட மெய்கள் வராது. ஆனால் ஆங்கிலத்தில் இரண்டு, மூன்று மெய்கள் வரலாம் ( plan, screw).
ஆனால் தமிழில் அசையின் ஒடுக்கமாக இரண்டு மெய்கள் வரலாம். அந்த இரண்டு மெய்களில் முதல் மெய்யாக ''ய்'' ''ர்'' ''ழ்'' ஆகியவற்றில் ஏதாவது ஒன்றே வரும்.
வாழ்த்-து ; பார்த்-து; வாய்க்-கால் . இவை இரண்டும் ஈரசைச் சொற்கள்! இடையில் உள்ள கோடு, அசைகளைப் பிரித்துக் காட்டுகிறது!
ஆனால் இறுதிஅசையின் ஒடுக்கமாக இரண்டு மெய்கள் தமிழில் வராது. சொல்லிடையில் மட்டுமே ஒடுக்கத்தில் இரண்டு மெய்கள் வரலாம்.
சொல் முதல் எழுத்துகள்;
------------------------------------------
அடுத்து, தமிழ்ச்சொற்களில் முதல் அசையில் ( இது முக்கியம்) தொடக்கமாக மெய்யொலி வந்தால் எந்தெந்த மெய்கள் எல்லாம் வரும் என்பதை இலக்கண ஆசிரியர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். க்,ச்,த்,ப் .... ஞ்,ந்,ம் ... ய்,வ் . மொத்தம் ஒன்பது மெய்கள்! இவைதான் சொல்முதல் எழுத்துகள் என்று கூறப்படுகின்றன. இன்றைய தமிழில் ர், ல் என்பவையும் அயல்மொழிக் கலப்பினால் வருகின்றன (ரப்பர், ரோடு, லட்டு, லட்சணம்). தமிழ் விதிப்படி இது தவறே!
சொல்லின் முதல் அசையில் தொடக்கமாக மெய் வராமல், உச்சியாகிய உயிர் மட்டும் தமிழில் வரலாம். 12 உயிர்களில் எதுவென்றாலும் வரலாம்.
சொல் இறுதி எழுத்துகள்:
---------------------------------------------
தமிழ்ச் சொற்களில் இறுதி அசையின் ( இது முக்கியம்) ஒடுக்கத்தில் மெய்கள் வந்தால், அவை ண்,ம்,ன் ... ய், ர், ல், ழ், ள் ( மொத்தம் எட்டு மெய்கள்) ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்கும்.. இவைபோக பழந்தமிழில் ஞ், ந், வ் ஆகியவையும் ( உறிஞ், பொருந், தெவ்) வரலாம். இவை இலக்கணத்தில் சொல்லிறுதி எழுத்துகள் என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் இரண்டு மெய்கள் இறுதி அசையின் ஒடுக்கமாக வராது.
அதுபோன்று சொல் இறுதி அசையில் மெய்கள் ஒடுக்கமாக வராமல், உச்சி மட்டுமே வருமேயானால், ''எ'' என்ற உயிரைத்தவிர ஏனைய 11 உயிர்களும் வரலாம். ''எ'' -வில் தமிழில் எந்தச் சொல்லும் முடிவதில்லை!
இவ்வாறு தமிழ் இலக்கண ஆசிரியர்கள் சொல் முதல் அசையில் வருகிற தொடக்கம் (மெய்), உச்சி (உயிர்) பற்றியும் சொல் இறுதியில் வருகிற ஒடுக்கம் (மெய்), உச்சி (உயிர்) ஆகியவைபற்றித் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மெய் மயக்கங்கள்:
------------------------------
அடுத்து, அவர்கள் கூறியுள்ளது மிக முக்கியமானது ஆகும். சொற்களில் ஒன்றுக்கு மேற்பட்ட அசைகள் அமைந்தால், முந்தைய அசையின் ஒடுக்கமாக ஒரு குறிப்பிட்ட மெய் வந்தால், அதற்குப் பிந்தைய அசையின் தொடக்கமாக எந்த மெய் வரலாம் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர். இதை அவர்கள் மெய் மயக்கங்கள் என்று கூறியுள்ளனர்.
எடுத்துக்காட்டாக ஒரு அசையில் ''க்'' என்ற மெய் அசையின் ஒடுக்கமாக அமைந்தால் அதற்கு அடுத்த அசையின் தொடக்கமாக ''க்'' மட்டுமே அமையலாம். ''அக்கா'' என்ற சொல்லில் (அக் - க்ஆ ) முதல் அசை ''க்'' இல் முடிகிறது. அடுத்த அசை ''க்'' -இல் தொடங்குகிறது. வேறு எந்த மெய்யும் அடுத்த அசையின் தொடக்கத்தில் வராது.
உடனிலை மெய் மயக்கம்:
-----------------------------------------
இவ்வாறு ஒரே மெய்கள் வருவதை உடனிலை மெய்ம்மயக்கம் என்ற அழைப்பார்கள். க்,ச்,ட், த், ப் ,ற் (ஆறு வல்லினங்கள்) ..... ஞ்ஞ், ங்ங், ண்ண், ந்ந், ம்ம், ன்ன் (ஆறு மெல்லினங்கள்) ... ய்ய், ல்ல், வ்வ், ள்ள் ( நான்கு இடையினங்கள்) ஆகிய 16 மெய்கள் மட்டுமே இவ்வாறு வரும் ( அக்காள், அச்சம், பட்டம், பத்து, கப்பல் , குற்றம் .... மஞ்சை, இங்ஙனம், வண்ணம், முந்நூறு, அம்மா, அன்னை ... வெய்யில், எல்லாம், கொவ்வை, பள்ளம்) . ர், ழ் இரண்டுமட்டும் இவ்வாறு வராது. அதாவது ர் -ஐ அடுத்து இன்னொரு ''ர் வராது. ''ழ்'' ஐ அடுத்தும் இன்னொரு ''ழ்'' வராது!
வேற்றுநிலை மயக்கம்:
------------------------------------------
அவ்வாறு இல்லாமல், ஒரு அசையின் ஒடுக்கமாக வருகிற ஒரு குறிப்பிட்ட மெய்யுக்கு வேறுபட்ட ஒரு மெய் அடுத்த அசையின் தொடக்கமாக வரலாம். ஆனால் அதற்கும் கட்டுப்பாடு உண்டு. ''ட்'' என்பது முந்தைய அசையின் ஒடுக்கமாக இருந்தால், அடுத்த அசையின் தொடக்கமாக ''க்'' ''ச் '' ''ப்'' வரலாம் ( வேட்கை, கட்சி, தட்பம்) . வேறு எந்த மெய்யும் வராது. 'ட்த்'' , ட்ற்'' போன்றவற்றைத் தமிழில் பார்க்கமுடியாது. அவ்வாறு வந்தால் அது தமிழ்ச்சொல் இல்லை என்ற முடிவுக்கு வரலாம். இதுபோன்றவற்றை இலக்கண ஆசிரியர்கள் வேற்றுநிலை மயக்கங்கள் என்று அழைப்பார்கள். ஒவ்வொரு மெய்யுக்கும் இவ்வாறு அடுத்த எந்த மெய் வரும் என்பதைத் தெளிவாக இலக்கண ஆசிரியர்கள் கூறியுள்ளார்கள்.
இரண்டு மெய்கள் ஒடுக்கமாக வருதல்:
-------------------------------------------------------------
ஒரு அசையின் ஒடுக்கமாக இரண்டு மெய்கள் வந்தால், அதன் முதல் மெய்யாக ''ய்'' ''ர்'' ''ழ்'' ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுதான் வரும். அடுத்த மெய்யாக ''ய்'' க்குப்பின் ம், ந்,ஞ்,ங்,ப்,த்,க்,ச் ஆகியவையும் ''ர்'' க்குப்பின் ந், ஞ், ங், ப், த், க், ச் ஆகியவையும் ''ழ்'' க்குப்பின் ம்,ந்,ஞ்,ங்,ப்,த்,க்,ச் ,ஆகியவையும் மட்டுமே வரும்.
இந்த இரண்டு மெய்கள் ஒடுக்கமாக வருகிற அசைக்கு அடுத்த அசையின் தொடக்கமாக , அந்த இரண்டாவது மெய்யோ அல்லது அதன் இன மெய்யோ வரலாம். வேறு எதுவும் வரமுடியாது. பேரா. பொற்கோ கொடுத்துள்ள எடுத்துக்காட்டுகள்:
மெய்ம்மை, மொய்ம்பு,செய்ந்நன்றி, பாய்ந்தான், ஐஞ்ஞூறு, வேய்ஞ்சினை, வேய்ங்குறை, வாய்ப்பு, மொய்த்தது, வாய்க்கால், பாய்ச்சி, சேர்ந்து, ஈர்ஞ்சுனை, ஈர்ங்கை, தவிர்ப்பு, பார்த்து, சேர்க்கை, வளர்ச்சி, பாழ்ம்புதூர், சூழ்ந்து, பாழ்ஞ்சுனை, பாழ்ங்கிணறு, காழ்ப்பு, வாழ்த்து, வாழ்க்கை, வீழ்ச்சி.
மேற்கூறியவற்றில் பல இன்றைய தமிழில் வருவதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
மேலும் சொல்லின் இறுதி அசையின் ஒடுக்கமாக இரண்டு மெய்கள் வராது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஆகவே, தமிழ்ச் சொற்கள் மேற்கூறிய விதிகளுக்கு - மொழியசை விதிகளுக்கு - உட்பட்டே அமையமுடியும். மாறாக அமைந்தால், அது தமிழ்ச் சொல் இல்லை என்ற முடிவுக்கு வரலாம். தமிழில் புதிய சொற்களை உருவாக்கும்போது, மேற்குறிப்பிட்ட அசைவிதிகளுக்கு - தமிழ் மரபுக்கு - உட்பட்டே உருவாக்கவேண்டும்.
இந்த மொழியசை விதிகளைத் தக்கவைக்கவே உடம்படுமெய் போன்ற சந்திவிதிகள் நிலவுகின்றன. நாளை அதுபற்றிப் பார்க்கலாம்!
இன்றும் கட்டுரை தவிர்க்க இயலாமல் நீண்டுவிட்டது! ஒரு பதிவில் ஒரு கருத்தை முழுமையாகக் கூறிவிட வேண்டும் என்ற அடிப்படையே ( ''பேராசையே'') இதற்குக் காரணம்! மன்னிக்கவும்! தவறு ஏதும் இருந்தால் சுட்டிக் காட்டவும்! தமிழ்க் கணினிமொழியியலுக்கு இது மிகவும் பயன்படும்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக