தமிழில் சில துணைவினைகளின்பின் ஒற்று மிகுதல் (1)
-------------------------------------------------------------------------------------
(1) வினைக்கூறு ( Aspectuals) :
''கண்ணன் பட்டம் விட்டார் ''
''கண்ணன் வந்துவிட்டார்''
முதல்தொடரில் ''விட்டார்'' என்பது ''விடு'' என்ற முதன்மைவினையின் வினைமுற்று ஆகும்.
இரண்டாவது தொடரில் ''வா'' என்பதுதான் வினைநிகழ்ச்சியைக் குறிக்கும் முதன்மைவினை. அதோடு இணைந்துவரும் ''விட்டார்'' என்பது அந்த வினைநிகழ்ச்சி முடிவடைந்துவிட்டது என்பதைக் காட்டுவதற்காகப் பயன்படுகிற ஒரு துணைவினையாகும்.
இந்தத் துணைவினைக்கு அகராதிப்பொருள் கிடையாது. மேலும் ''வந்துவிட்டார் என்பதில் ''வந்து'' என்பதற்கும் ''விட்டார்'' என்பதற்கும் இடையில் அகராதிப்பொருளைக் காட்டும் ஒரு சொல்லைச் சேர்க்கமுடியாது. ஆனால் இலக்கணப்பொருளைக் காட்டும் இடைச்சொற்களைச் சேர்க்கலாம் (வந்தேவிட்டார் என்பதில் இடையில் ஏகாரம் சேர்கிறது. வந்தாவிட்டார் என்பதில் ஆகாரம் சேர்கிறது).
இதுபோன்ற துணைவினைகள், விகுதிகளை ஏற்பதில் முதன்மைவினைகளாகப் பயன்படும்போது எந்த இடைநிலைகள், திணை எண் பால் விகுதிகளை ஏற்குமோ, அவற்றையே ஏற்கும். (''வந்துவிடுகிறார், வந்துவிட்டார், வந்துவிடுவார்). இதுபோன்று வினைக்கூறுகளைக் காட்டும் துணைவினைகள் சில:
''அவர் வந்துகொண்டிருக்கிறார் '' (கொண்டிரு'')
''அவர் வந்திருக்கிறார் '' ( ''இரு'')
''அவர் வந்துவிட்டார் '' (''விடு'')
''அவர் செய்துபார்த்தார்''(''பார்'')
''அவர் செய்துகாட்டினார்'' (''காட்டு'')
''அவர் வாங்கிக்கொண்டார்'' (''கொள்'')
''அவர்கள் அடித்துக்கொண்டார்கள்'' (''கொள்'')
''அது தொலைந்துபோயிற்று '' (''போ'')
''அவர் வந்துதொலைத்தார்'' (''தொலை'')
''நான் வாங்கிவைக்கிறேன்'' (''வை'')
''அவர் கொடுத்தருளினார்'' (''அருள்'')
''அவர் பல ஆண்டுகளாக இந்தியாவை ஆண்டுவந்தார்'' (''வா'')
மேற்கூறியவற்றில் சிலமுக்கியச் செய்திகளை அறிந்துகொள்ளவேண்டும். வினைக்கூறுகளைத் தெரியவைக்கும் இந்தத் துணைவினைகள் முதன்மைவினைகளோடு இணையும்போது, முதன்மைவினைகள் எல்லாம் ''செய்து'' வாய்பாட்டு வினையெச்சங்களாகவே வரும். இது ஒரு கணிதப்பண்பு!
அடுத்து, முதன்மைவினைகளுக்கும் இந்த துணைவினைகளுக்கும் இடையே அகராதிப்பொருள் தரும் வேறு எந்தச் சொல்லும் வரமுடியாது. ஆனால் இலக்கணப் பொருள்களைக் காட்டும் இடைச்சொற்கள் வரலாம்.
''அவர் வந்தேவிட்டார்'' , '' அவர் வாங்கித்தான்வைத்தார்''.
அடுத்து, நாம் கவனிக்கவேண்டியது, முதன்மைவினைகளையும் துணைவினைகளையும் பிரித்து எழுதக்கூடாது. தமிழில் இலக்கணச் சொற்களெல்லாம் பெரும்பாலும் தாம் இணையும் முதன்மைச்சொற்களோடு இணைந்துதான் வரும்.
இப்போது சந்திவிதிகளுக்கு வருவோம். முதன்மைவினைகள் ''செய்து'' வாய்பாட்டு வினையெச்ச வடிவங்களில் வருகின்றன. இவை வன்தொடர்க்குற்றியலுகரச் சொற்களாக இருந்து, அடுத்து வரும் துணைவினைகள் வல்லொற்றுகளில் தொடங்கினால் ( கொண்டிரு, கொள், பார், காட்டு,தொலை), ஒற்று மிகும். இதில் தவறு செய்யக்கூடாது. இது ஒரு கட்டாயச்சந்தி!
''அவர் படித்துக்கொண்டிருக்கிறார்''
''அவர் என்னைக் கேட்டுக்கொண்டார்''
''அவர் படித்துக்காட்டினார்''
''அவர் எனக்குப் படித்துக்காட்டினார்''
''அவர் செத்துப்போனார்''
''அவர் கேட்டுத்தொலைத்தார்''
(2) வினைப்பாங்கு ( Voice):
'' பூனை எலியைக் கொன்றது'' - செய்வினை (Active voice)
''எலி பூனையால் கொல்லப்பட்டது'' - செயப்பாட்டு வினை ( Passive voice)
தமிழில் செயப்பாட்டுவினைமுற்றில் செயப்பாட்டுவினையைக் காட்டும் சொல்லாக ''படு'' என்பது அமைகிறது. இதுவும் ஒரு துணைவினையாகும்.
''படு'' என்பது முதன்மைவினையாகவும் தமிழில் இருக்கிறது.
'' குழந்தை தாயை மிகவும் படுத்துகிறது'' ... இங்கு ''படு'' என்பது முதன்மைவினை.
செயப்பாட்டுவினைச்சொல்லை உருவாக்கப் பயன்படும் ''படு'' என்ற துணைவினையானது இணையும்போது, முதன்மைவினையானது ''செய'' வாய்பாட்டு வினையெச்ச வடிவங்களாகவே இருக்கும்! இதில் மாற்றம் கிடையாது. இது ஒரு கணிதப்பண்பு!
''சொல்லப்பட்டது''
''உடைக்கப்பட்டது''
''எழுதப்பட்டது''
''செய'' வாய்பாட்டு வினையெச்ச வடிவங்களையடுத்து, வல்லினத்தில் தொடங்கும் சொற்கள் வந்தால் வல்லொற்று மிகும் என்று முன்பு பார்த்துள்ளோம். எனவே இங்கு ''படு '' என்பது வல்லினத்தில் தொடங்கும் சொல்லாக இருப்பதாலும், அது இணைகிற முதன்மை வடிவம் ''செய'' வாய்பாட்டு வினையெச்ச வடிவத்தில இருப்பதாலும், இங்கு ஒற்று மிகும். இதில் தவறு செய்யக்கூடாது. இது ஒரு கட்டாயச்சந்தி!
மேற்கூறிய துணைவினைகள் எல்லாம் தமிழ்மொழி வரலாற்றில் ஒரு காலகட்டத்தில் முதன்மைவினைகளாகமட்டுமே இருந்திருக்கலாம். பின்னர், தேவைகளைமுன்னிட்டு, அவை இலக்கணப் பண்புகளைக் காட்டும் துணைவினைகளாகவும் - இலக்கணச் சொற்களாகவும் - மாறியிருக்கின்றன. இதையே முன்னர் ''இலக்கணமயமாக்கம்'' என்று பார்த்துள்ளோம். ஆனால் இவை இலக்கணச் சொற்களாக மாறியபிறகும், விகுதிகள் ஏற்கும் தங்கள் பண்புகளில் முதன்மைவினைகள்போன்றே செயல்படுகின்றன என்பது கவனிக்கத்தக்கது.
ஆகவே, வினைக்கூறுகளைக் காட்டும் துணைவினைகள் வந்தால், முதன்மைவினைகள் தங்களது ''செய்து'' வாய்பாட்டு வினையெச்ச வடிவங்களில்தான் அமையும்!
வினைப்பாங்கைக் காட்டும் ''படு'' என்ற துணைவினை வரும்போது, முதன்மைவினையானது ''செய'' வாய்பாட்டு வடிவத்தில்தான் வரும். ஒரு மிக அருமையான கணிதப்பண்பை - இலக்கண ஒழுங்கமைவை - இங்கு நாம் பார்க்கலாம்.
ஆங்கிலத்தில் "has, have,had " ( Perfect Aspectuals) வரும்போது முதன்மைவினைகள் வினையின் மூன்றாவது வடிவமாகிய "Past Participle" வடிவத்தில்தான் வரும். ( ""He has gone", "I have spoken" " they had written")
Passive Voice வரும்போதும், முதன்மைவினைகள் Past Participle"' வடிவத்தில்தான் வரும். ("It is written" "He was killed"") எனவே ஆங்கிலத்திலும் துணைவினைகள் சேரும்போது, முதன்மைவினைகள் வினையெச்ச வடிவங்களையே எடுக்கின்றன ( வினைமுற்று தனித்து வருவதுபோல வராது ) என்பது கவனிக்கத்தக்கது!
வினைநோக்கு ( Modals) என்ற துணைவினைகள்பற்றி அடுத்து எழுதுகிறேன்.
1 கருத்துகள்:
வந்திருந்தார் என்பதிலுள்ள கூட்டு வினை ஆங்கிலத்திலுள்ள Past perfect காலத்தைக் குறிக்கும். ஆனால் எல்லாக் கூட்டுவினைகளும் Perfect tenseக்கு உரியனவல்ல. வேறு வகைப்பட்ட கூட்டு வினைகளும் உண்டு, இதனைத் தெளிவு படுத்துக.
கருத்துரையிடுக