கணினித்தமிழ் வளர்ச்சிக்குத் தடை என்ன?
தயவுசெய்து சில நிமிடங்கள் செலவழித்துப் படியுங்கள்!
-------------------------------------------------------------------------
கடந்த 15 ஆண்டுகால எனது அனுபவத்தில் இதை எழுதுகிறேன்.
1) தமிழ் மென்பொருள் பயன்படுத்தம் தமிழகத்தில் விரிவடையவில்லை. இதற்கு அடிப்படைக் காரணம், தமிழ்நாட்டில் தமிழ்மொழியைப் பயன்படுத்துவதே குறைவு. பள்ளிக்கூடத்தில், கல்லூரியில், உயர் கல்வி நிறுவனங்கள், வணிகம், உற்பத்தி ஆலைகள், அரசு நிர்வாகம் ஆகியவற்றில் ஆங்கிலமே தொடர்ந்து மேலாண்மை செலுத்துகிறது. இச்சூழலில் கணினி, அலைபேசி ஆகியவற்றில் ஆங்கிலமே மிக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது . . . தமிழர்களால்! தமிழ்நாட்டில்! இச்சூழல் மாறாமல் தமிழ் மென்பொருள் உற்பத்தி வளர்ச்சி அடைவது கடினமே.
2) தமிழ் எழுத்துருக்கள், விசைப் பலகைகள் 40 ஆண்டுகளுக்குமுன் கிடையாது. ஒரு கட்டத்தில் தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் அப்போது ஒருங்குறி கிடையாது. எனவே ஒவ்வொரு நிறுவனமும் தமிழ் எழுத்துருக்களுக்கு வெவ்வேறு அஸ்கி எழுத்துருக்களை உருவாக்கின. தொடக்கக் கட்டத்தில் தமிழ் எழுத்துருக்கள் 4 ஆயிரம், 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகின. தமிழ் இதழ்களே இந்நேரத்தில் தமிழ் எழுத்துருக்களுக்கு சந்தையாக இருந்தன. தனிநபர் வாங்குதல் என்பது மிகக் குறைவு. இலவசமாகத் தமிழ் எழுத்துருக்கள் அளிப்பது மிகக் குறைவு. பின்னர் ஒருங்குறி அறிமுகத்தையொட்டி, எழுத்துருச் சிக்கல் ஒரளவு தீர்ந்தது. கட்டணமின்றியும் எழுத்துருக்கள் கிடைத்தன. அப்போதும் குறிப்பிட்ட அழகியல் வடிவில் தங்கள் இதழ்கள் அமையவேண்டும் என்னும் நிறுவனங்கள் எழுத்துருக்களைப் பணம் கொடுத்து வாங்கினர். அஸ்கி எழுத்துருக்களில் வெளியாகி இருந்த தமிழ் ஆவணங்களை ஒருங்குறியில் மாற்றத் தேவையான மென்பொருள்களும் உருவாக்கப்பட்டு, விலைக்குக் கிடைத்தன. இன்றுவரை இந்நிலை நீடிக்கிறது.
3) 2000- தொடக்கத்தையொட்டி, எழுத்துரு, விசைப்பலகைகள் தாண்டி, சொற்பிழைதிருத்தி, இலக்கணப்பிழை திருத்தி ஆகியவற்றைக்கொண்ட தமிழ்மொழி மென்பொருள்கள் வெளிவரத்தொடங்கின. இவற்றை உருவாக்குவதற்கான செலவு அதிகம். ஆனால் பணம்கொடுத்து வாங்குவது மிகக் குறைவு. ஆங்கில மென்பொருள் தயாரிப்புக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு பணம் தமிழ் மென்பொருள் உருவாக்கத்திற்கும் தேவை. ஆங்கிலத்தில் உள்ள அனைத்து வசதிகளும் தமிழுக்கும் வேண்டும்; ஆனால் கட்டணமின்றிக் கிடைக்கவேண்டும். இதுவே தமிழ்நாட்டில் நிலவும் சூழல். தமிழிலும் ஒளிவருடி (OCR) , எழுத்து- பேச்சு மாற்றி (Text to Speech) போன்ற மென்பொருள்கள் வெளிவரத் தொடங்கின. ஆனால் இவற்றிக்குத் தேவையான சந்தை தமிழ்நாட்டில் கிடையாது. இங்கும் 'இலவசம்' என்ற வழக்கமே நீடித்தது. மேலும் கூகுள் போன்ற நிறுவனங்கள் கட்டணமின்றியே இதுபோன்ற மென்பொருள்களை அளிக்கத் தொடங்கின. எனவே தமிழகத்தில் இவற்றிற்கான ஆராய்ச்சியும் உற்பத்தியும் குறையத் தொடங்கின.
4) தற்போது செய்யறிவுத்திறன் (AI) கணினியில் வளர்ச்சியடைந்து உள்ளதால் கூகுள், மைக்ரோசாஃப்ட், பேஸ்புக் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் பன்மொழிசார்ந்த தங்கள் மென்பொருள்களைச் சந்தைக்குக் கொண்டுவந்துள்ளன. இவற்றின் தொழில்நுட்பங்கள் மிக நேர்த்தியானவை. இவற்றுடன் தமிழ்நாட்டில் உள்ள சிறு நிறுவனங்கள் தொழில்நுட்பத்திலோ வணிகச் சந்தையிலோ போட்டிபோட முடியாது. இந்நிலையில் உள்ளூர் தமிழ் மென்பொருள்களை வாங்குபவர் எண்ணிக்கை மிகவும் குறைந்து போயிற்று. பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டிபோட்டு, உயர் தொழில்நுட்பத்தைத் தமிழுக்குச் செயல்படுத்த இலட்சக்கணக்கில் பணம் தேவை. அந்த வசதி இங்குள்ளவர்களுக்குக் கிடையாது. சிறு சிறு கடைகள் தற்போது அமேசான் போன்ற பன்னாட்டு நிறுவனங்களால் பாதிக்கப்பட்டுள்ளதுபோல, இங்குள்ள தமிழ் மென்பொருள்நிறுவனங்கள் மிகப் பெரிய பாதிப்புக்கு உட்பட்டுள்ளன.
5) கட்டணமின்றி மென்பொருள்களை வாங்கும் எண்ணம் இங்கே அதிகமாக உள்ளதால், இனி உள்நாட்டு தமிழ்மென்பொருள்களுக்கான சந்தை மேலும் மோசமடையும். பன்னாட்டு நிறுவனங்களும் உலகில் ஆங்கிலம், சீனம், அரபி போன்ற மொழிகளுக்குச் செலவழிக்கிற அளவுக்குத் தமிழுக்குச் செலவழிக்காது. அவற்றிற்கு வணிகச்சந்தையே மிக மிக முக்கியம். தமிழ் பயன்படுத்தம் குறைவாக உள்ள நிலையில் தமிழுக்குப் பிறமொழிகளுக்குக் கிடைக்கிற வளர்ச்சிநிலை கிடைக்கவில்லை. அவை - பன்னாட்டு நிறுவனங்கள்- மனது வைத்தால்தான் தமிழுக்கு அந்த வசதிகள் கிடைக்கும். இந்நிலையில் - இச்சூழலில் - இங்குள்ள சிறு சிறு நிறுவனங்கள் இன்றைய மொழித்தொழில்நுட்பத்தைத் தமிழுக்குக் கொண்டுவர முயற்சிக்கும்போது, ஏற்படும் பணச்செலவு அதிகம். அந்த அளவுக்குத் தமிழகத்தில் உள்ள தமிழ் மென்பொருள் நிறுவனங்களுக்கு பணவசதி கிடையாது. ஆகவே தமிழ் மக்கள் கூகுள், மைக்ரோசாஃப்ட் கொடுப்பதை வாங்கிக்கொண்டு இருக்கவேண்டிய சூழல். அவை மனது வைக்கவேண்டும்!
6) அரசுகளின் நிலைபாடு? ஜி எஸ் டி வருவதற்குமுன்னர் தமிழ் மென்பொருள்களுக்கு வரி விலக்கு உண்டு. ஆனால் தற்போது 18 விழுக்காடு வரி. ஏற்கனவே இலவசங்களுக்குப் பழகிப்போன நாம், இந்த வரியைச் சேர்த்து நிறுவனங்கள் தமிழ் மென்பொருள்களைக் கொடுத்தால் யார் வாங்குவார்கள்? இதுபற்றி தமிழ்நாட்டு அரசகள் கவலைப்படவில்லை!
7) மேலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கே அதிகாரிகள் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதற்குக் காரணம் அவற்றின் உயர்நிலைத் தொழில்நுட்பம் என்று கூறிவிடுவார்கள். 5 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்து விண்டோவ்ஸ் மென்பொருள்களை வாங்கும் அரசுகள் - 30 ஆயிரம், 40 ஆயிரம் கொடுத்து மடிக்கணிகளை வாங்கும் அரசுகள் , நூறு, இருநூறு கொடுத்துக்கூட இங்கு உள்ள தமிழ் மென்பொருள்களை வாங்கப் பரிந்துரைக்க மாட்டார்கள். என்னுடைய தனிப்பட்ட அனுபவமே..... ஆண்டுக்கணக்கில் அமைச்சர்கள், அதிகாரிகள் அலுவலகங்களில் ஏதாவது நடக்காதா என்று மணிக்கணக்கில் காத்துக்கிடந்துதான் மிச்சம்! விருதுகள், சால்வைகள் கிடைக்கும்! அவ்வளவுதான்!
8 ) மேலும் தற்போது ஏற்பட்டுள்ள செய்யறிவுத்திறன் சார்ந்த தமிழ்மென்பொருள்களைத் தமிழகத்தில் உள்ள சிறு சிறு நிறுவனங்கள் உருவாக்கப் பல லட்சங்கள் தேவை. இது இயலாத காரியம்! கடன்பெற்று தயாரித்தாலும் , தமிழ்நாட்டில் சந்தை கிடையாது, அரசு நிறுவனங்களில் உட்பட!
9) ஒருபுறம் தமிழகத்தில் 'இலவசமாக' வாங்கும் பழக்கம் அதிகமாக நீடிப்பது . . . மறுபுறம் பன்னாட்டு நிறுவனங்களின் மேலாண்மை, அரசு நிலைகளில்கூட! இவற்றிற்கிடையே நம்மால் தமிழுக்குக் கணினித்துறையில் ஏதாவது சாதிக்கமுடியாதா என்ற எண்ணத்தோடு . . . தமிழ் மென்பொருள் உருவாக்கத்தில் ஈடுபடுபவர்கள், நொந்து நூலாகி நிற்கவேண்டியதுதான்!
10) இந்நிலையில்தான் . . . எடுத்த முயற்சியைக் கைவிடக்கூடாது என்று எங்களைப் போன்றவர்கள் செய்யறிவுத்திறனைத் தமிழுக்கு முழுமையாகக் கொண்டுவரத் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறோம். இதற்கு லட்சக்கணக்கில் பணம் தேவை! பன்னாட்டு நிறுவனங்களின் தொழில்நுட்பங்களைப் (வன்பொருள், மென்பொருள் ) பயன்படுத்தாமல் தற்போது தமிழ் மென்பொருள்களை உருவாக்குவது கடினம்! அவ்வாறு உருவாக்கினாலும் அவற்றோடு போட்டிபோட்டு நிற்கமுடியாது! பல லட்சங்கள் இருந்தால்தான் பன்னாட்டு நிறுவனங்களின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இங்கேயே தமிழுக்குச் செயல்படுத்தமுடியும்!
அதனையொட்டியே நான் தற்போது தமிழ் ஆர்வலர்களுக்கு எங்கள் மென்பொருளை வாங்குவதற்கு ஒரு வேண்டுகோளை விடுத்திருக்கிறேன்! செய்யறிவுத் திறன் கொண்டு தமிழ்மென்பொருளை உருவாக்குவதில் பாதிக் கிணறு தாண்டிவிட்டேன். இன்னும் பாதிக்கிணறு தாண்டமுடியாமல் நிற்கிறேன்!
தமிழ்நாட்டில் தமிழுக்கு மேலும் மேலும் சிறப்பு செய்ய விரும்பும் எங்களைப் போன்றவர்களுக்குத் தமிழ் ஆர்வலர்கள் உதவி செய்வார்கள் என்று நம்புகிறேன்! எனக்குத் தமிழ்மென்பொருள் உருவாக்கம் வணிகம் இல்லை! மாறாக, தமிழ் உணர்வே அடிப்படை! ஆனால் பணமின்றி அடுத்த அடி எடுத்துவைக்கமுடியாத ஒரு நிலை! இதைத் தமிழ் உலகம் புரிந்துகொள்ளும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆங்கிலேய மேலாண்மையை எதிர்த்துநின்று, இறுதியில் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்ட கப்பலோட்டிய தமிழனை நினைவுகூர்கிறேன்! இது புலம்பல் இல்லை! வேதனை!
வங்கியில் கடன் உதவி கேட்டால், என்ன சொத்து இருக்கிறது? எதன் அடிப்படையில் கடன் கொடுப்பது என்று கேட்கிறார்கள்! அவர்களுக்கு அவர்கள் பிரச்சினை! அதைத் தவறு என்று நாம் சொல்லமுடியாது. தமிழைப் பயன்படுத்த விரும்பும் சாதாரண மக்களுக்குப் பணவசதி இல்லை! அவர்களையும் குறை கூறமுடியாது! மேலும் அவர்களால் மென்பொருள் உற்பத்திக்கான செலவை ஈடுகட்டும் அளவுக்குச் சந்தை தர இயலாது! பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள்தான் பெரிய அளவில் தமிழ் மென்பொருளைப் பயன்படுத்தலாம்! பயன்படுத்தவேண்டும்! பன்னாட்டு நிறுவனங்களின் கணினிகளைப் பல ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி, இலவசமாக மாணவர்களுக்குக் கொடுத்தால், அதில் ' அரசியல் பயன் ' உண்டு! ஆனால் தமிழ் மென்பொருள்களை நூறு, இருநூறுக்குக்கூட வாங்கி இலவசமாகக் கொடுப்பதால் எந்தப் 'பயனும் ' கிடையாது! என்ன செய்ய?
0 கருத்துகள்:
கருத்துரையிடுக