இன உணர்வு, வர்க்க உணர்வு இல்லாத அரசியல் கட்சிகள் அனைத்தும் ஏமாற்றுக் கட்சிகளே! 'தேன் தடவிய தோட்டாக்களே'!
--------------------------------------------------------------------------
காலையில் நாளிதழ்களைப் புரட்டியவுடனே தென்படுகிற 'அரசியல் கூத்து ' செய்திகள் உண்மையில் வேதனை தரக்கூடிய செய்திகளாகவே இருக்கின்றன.
சாதி, மதம், குடும்பம் , திரைப்படம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைப் பிடித்துத் தொங்கிக்கொண்டு இருக்கிற 'அரசியல் கட்சிகளைப்பற்றிய' செய்திகளே இருக்கின்றன. இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே என்று நினைத்தால் என்ன? என்று கூறலாம்! இவற்றால் மக்களுக்கும் நாட்டுக்கும் பிரச்சினை இல்லையென்றல் அவ்வாறு விட்டுவிடலாம்!. ஆனால் உண்மை நிலவரம் அப்படி இல்லையே!
ஒரு நாட்டின் பொருளாதார, அரசியல் அமைப்பு என்ன, மக்களுடைய உண்மையான பிரச்சினைகள் என்ன, அவற்றை எவ்வாறு தீர்ப்பது போன்ற வினாக்களுக்கு விடைதேடவேண்டிய இளைஞர்களைத் திசை திருப்புகிற 'அரசியலாக' அல்லவா இவை இருக்கின்றன! நோய்த் தீர்வுக்கு மருந்து கொடுப்பதற்குப் பதிலாக 'உயிரைக் கொல்லும் நஞ்சை' அல்லவா இவை கொடுக்கின்றன. இன உணர்வையும் வர்க்க உணர்வையும் அளித்து, இன்றைய சமூகத்தை அடுத்த கட்ட உண்மையான வளர்ச்சிக்குக் கொண்டுசெல்வதைத் தடுக்கும் 'பணிகளை' அல்லவா இந்த 'அரசியல் கட்சிகள்' செய்கின்றன! 'பாவங்களிலேயே' மிகப் பெரிய 'பாவம்' இது!
சமூகத்தை முன்னோக்கிச் செலுத்தவேண்டிய இளைஞர்களைப் பின்னோக்கி அல்லவா இவை செலுத்துகின்றன! இளைஞர்கள் 'அரசியல்' என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளாமல் இருக்க அல்லவா இந்தக் 'கட்சிகள்' வேலை செய்கின்றன! உண்மையில் இவைதான் 'சமூகத்திற்கு, மக்களுக்கு எதிரான பயங்கரவாதச் செயல்கள்'! இந்தக் கட்சிகள்தான் 'பயங்கரவாதக் கட்சிகள்' ஆகும்! இளைஞர்களின் மூளையை ' மழுங்கடிக்கிற' 'செயலற்றதாக ஆக்குகிற' பயங்கரவாத நடவடிக்கைகள்!
எதிர்கால இந்தியாவைத் தீர்மானிக்கிற இளைஞர்கள் இந்தக் கட்சிகளின் பிடியில் இருந்து வெளிவரவேண்டும்! ஆனால் இது நடக்குமா? எப்படி நடக்கவைப்பது? 60, 70 களில் இருந்த நிலைமைகளைவிட தற்போதைய நிலை மிகவும் மோசமாக இருக்கிறது! மொழி, இனம் காப்பதற்காகப் அப்போதைய இளைஞர்கள் போராடினார்கள்! ஆனால் இப்போது அப்படி வளர் வேண்டிய இளைஞர்களை 'ரூட் தலைகளாக' அல்லவா மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்!
இந்த இளைஞர்களுக்கு எப்படி உண்மையை உணர்த்துவது எப்படி உண்மையான அரசியல் தெளிவை அளிப்பது? எப்படிச் சரியான பாதையில் சமூக மாற்றத்திற்காக இவர்களை வழிநடத்துவது?
ஒவ்வொரு இளைஞனும் இன்றைய சூழலில் தன் இனம், தன் வர்க்கம் என்ன என்பதை உணர்ந்து , அதனடிப்படையில் செயல்படவேண்டும்! தன் இனத்தையும் வர்க்கத்தையும்பற்றி எந்தவொரு தெளிவும் இல்லாமல், இந்த 'அரசியல் கூத்துகளுக்கு' துணைபோகக்கூடாது!
'என் இனம் இது, என் வர்க்கம் இது' என்பதை எப்போதும் மனதில் கொண்டு செயல்படும் நிலை தோன்றி வளரவேண்டும்! இந்த அரசியல் கட்சிகள் நூறு அடி உயரத்திற்கு 'கொடி' எற்றுவது என்பது இளைஞர்களை நூறு அடி ஆழத்திற்கு மண்ணில் புதைப்பதற்குச் சமம் என்பதை இளைஞர்கள் புரியவேண்டும்!
குடும்பம், சாதி, மதம், திரைப்படம் தாண்டி . . . இனம், வர்க்கம் பற்றிய உணர்வும் அவற்றின் அடிப்படையிலான செயல்பாடுகளும் இளைஞர்களிடையே தோன்றி நிலவவேண்டும்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக