வியாழன், 4 செப்டம்பர், 2025

இன உணர்வு, வர்க்க உணர்வு இல்லாத அரசியல் கட்சிகள் அனைத்தும் ஏமாற்றுக் கட்சிகளே! 'தேன் தடவிய தோட்டாக்களே'!

 இன உணர்வு, வர்க்க உணர்வு இல்லாத அரசியல் கட்சிகள் அனைத்தும் ஏமாற்றுக் கட்சிகளே! 'தேன் தடவிய தோட்டாக்களே'!

--------------------------------------------------------------------------
காலையில் நாளிதழ்களைப் புரட்டியவுடனே தென்படுகிற 'அரசியல் கூத்து ' செய்திகள் உண்மையில் வேதனை தரக்கூடிய செய்திகளாகவே இருக்கின்றன.
சாதி, மதம், குடும்பம் , திரைப்படம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைப் பிடித்துத் தொங்கிக்கொண்டு இருக்கிற 'அரசியல் கட்சிகளைப்பற்றிய' செய்திகளே இருக்கின்றன. இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே என்று நினைத்தால் என்ன? என்று கூறலாம்! இவற்றால் மக்களுக்கும் நாட்டுக்கும் பிரச்சினை இல்லையென்றல் அவ்வாறு விட்டுவிடலாம்!. ஆனால் உண்மை நிலவரம் அப்படி இல்லையே!
ஒரு நாட்டின் பொருளாதார, அரசியல் அமைப்பு என்ன, மக்களுடைய உண்மையான பிரச்சினைகள் என்ன, அவற்றை எவ்வாறு தீர்ப்பது போன்ற வினாக்களுக்கு விடைதேடவேண்டிய இளைஞர்களைத் திசை திருப்புகிற 'அரசியலாக' அல்லவா இவை இருக்கின்றன! நோய்த் தீர்வுக்கு மருந்து கொடுப்பதற்குப் பதிலாக 'உயிரைக் கொல்லும் நஞ்சை' அல்லவா இவை கொடுக்கின்றன. இன உணர்வையும் வர்க்க உணர்வையும் அளித்து, இன்றைய சமூகத்தை அடுத்த கட்ட உண்மையான வளர்ச்சிக்குக் கொண்டுசெல்வதைத் தடுக்கும் 'பணிகளை' அல்லவா இந்த 'அரசியல் கட்சிகள்' செய்கின்றன! 'பாவங்களிலேயே' மிகப் பெரிய 'பாவம்' இது!
சமூகத்தை முன்னோக்கிச் செலுத்தவேண்டிய இளைஞர்களைப் பின்னோக்கி அல்லவா இவை செலுத்துகின்றன! இளைஞர்கள் 'அரசியல்' என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளாமல் இருக்க அல்லவா இந்தக் 'கட்சிகள்' வேலை செய்கின்றன! உண்மையில் இவைதான் 'சமூகத்திற்கு, மக்களுக்கு எதிரான பயங்கரவாதச் செயல்கள்'! இந்தக் கட்சிகள்தான் 'பயங்கரவாதக் கட்சிகள்' ஆகும்! இளைஞர்களின் மூளையை ' மழுங்கடிக்கிற' 'செயலற்றதாக ஆக்குகிற' பயங்கரவாத நடவடிக்கைகள்!
எதிர்கால இந்தியாவைத் தீர்மானிக்கிற இளைஞர்கள் இந்தக் கட்சிகளின் பிடியில் இருந்து வெளிவரவேண்டும்! ஆனால் இது நடக்குமா? எப்படி நடக்கவைப்பது? 60, 70 களில் இருந்த நிலைமைகளைவிட தற்போதைய நிலை மிகவும் மோசமாக இருக்கிறது! மொழி, இனம் காப்பதற்காகப் அப்போதைய இளைஞர்கள் போராடினார்கள்! ஆனால் இப்போது அப்படி வளர் வேண்டிய இளைஞர்களை 'ரூட் தலைகளாக' அல்லவா மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்!
இந்த இளைஞர்களுக்கு எப்படி உண்மையை உணர்த்துவது எப்படி உண்மையான அரசியல் தெளிவை அளிப்பது? எப்படிச் சரியான பாதையில் சமூக மாற்றத்திற்காக இவர்களை வழிநடத்துவது?
ஒவ்வொரு இளைஞனும் இன்றைய சூழலில் தன் இனம், தன் வர்க்கம் என்ன என்பதை உணர்ந்து , அதனடிப்படையில் செயல்படவேண்டும்! தன் இனத்தையும் வர்க்கத்தையும்பற்றி எந்தவொரு தெளிவும் இல்லாமல், இந்த 'அரசியல் கூத்துகளுக்கு' துணைபோகக்கூடாது!
'என் இனம் இது, என் வர்க்கம் இது' என்பதை எப்போதும் மனதில் கொண்டு செயல்படும் நிலை தோன்றி வளரவேண்டும்! இந்த அரசியல் கட்சிகள் நூறு அடி உயரத்திற்கு 'கொடி' எற்றுவது என்பது இளைஞர்களை நூறு அடி ஆழத்திற்கு மண்ணில் புதைப்பதற்குச் சமம் என்பதை இளைஞர்கள் புரியவேண்டும்!
குடும்பம், சாதி, மதம், திரைப்படம் தாண்டி . . . இனம், வர்க்கம் பற்றிய உணர்வும் அவற்றின் அடிப்படையிலான செயல்பாடுகளும் இளைஞர்களிடையே தோன்றி நிலவவேண்டும்!

செய்யறிவுத்திறனும் தமிழும் (AI and Tamil) - சிக்கல்கள் என்ன?

 செய்யறிவுத்திறனும் தமிழும் (AI and Tamil) - சிக்கல்கள் என்ன?

------------------------------------------------------------------
இன்று உலகில் செய்யறிவுத்திறன் நுழையாத தளமே இல்லை என்ற ஒரு நிலை! அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியில் இது ஒரு உயர் கட்டம்! முன்னோக்கிய பாய்ச்சல்! இதைப் பின்னோக்கிக் கொண்டுசெல்ல முடியாது! எனவே அறிவியல் வளர்ச்சியை விரும்புகிற யாரும் இதற்கு எதிராகப் பேசமாட்டார்கள்!
இந்த வளர்ச்சியையொட்டி, சில விரும்பத்தகாத செயல்களும் இதனைப் பயன்படுத்தித் தோன்றி நிலவும். ஆனால் அதற்காக இதை எதிர்க்கமுடியாது. மூட்டைப்பூச்சியை ஒழிக்க வீட்டையே எரித்துவிடக்கூடாது.
ஆனால் . . . இந்தத் தொழில்நுட்பம் விரல்விட்டு எண்ணக்கூடிய பன்னாட்டு நிறுவனங்களின் மேலாண்மையின் கீழ்தான் - அவற்றின் கட்டுப்பாட்டில்தான் - இருக்கிறது என்பது 100 விழுக்காடு உண்மை.
நம்மில் ஒருவர் இத்துறையில் மிகச் சிறந்த வல்லுநராக இருக்கலாம். ஆனால் அவரால் ஒரு செய்யறிவுத்திறன் மென்பொருளை - சேட்ஜிபிடி, ஜெமினி போன்ற மென்பொருள்களை உருவாக்கவிடமுடியாது. அதற்குக் கோடானகோடி டாலர்கள் தேவை. மிகப்பெரிய உற்பத்திக் கட்டமைப்பு தேவை. ஆனால் பன்னாட்டு நிறுவனங்களின் இந்த மென்பொருள்களைப் பயன்படுத்தி, நமக்குத் தேவையான செயல்பாட்டுக் கருவிகளை உருவாக்கிக்கொள்ளலாம். நமது பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தலாம். இது வேறு.
இந்த மென்பொருள்களின் முதுகெலும்பே பெரும்மொழிமாதிரிதான் (Large Language Model - LLM). இவற்றை உருவாக்குவதுதான் பெரும்பணி. கோடியே கோடியே தரவு - மிகப் பெரிய வன்பொருள் கட்டமைப்பு (Hardware infrastructure) தேவை. மொழிகளில்தான் நமக்குத் தேவைப்படும் அறிவும் (subject knowledge) சேமித்து வைக்கப்படுகின்றது. சேமித்த அறிவை நாம் பெறுவதற்குத் தேவையான மொழி அறிவும் மொழித்திறனும் (linguistic knoweldge and language capacity) இந்த மொழித்தரவுகளில்தான் அடங்கியுள்ளது. மொழி அகராதிகளும் இலக்கணமும் நேரடியாக அளிக்கப்படுவதில்லை. மொழித்தரவுகளில் இருந்துதான் அவை பெறப்படுகின்றன. இந்த அடிப்படையில் உருவாக்கப்படுகிற மாதிரியைத்தான் Pre-trained model என்று அழைக்கிறார்கள்.
சேட்ஜிபிடி, ஜெமினி போன்றவற்றின் திறனைப் பயன்படுத்தும் மொழிக்கருவிகளை (application tools) நாம் உருவாக்கிக்கொள்ளலாம். ஆனால் அதற்கும் நாம் இந்த பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பணம் அளிக்கவேண்டும். சொல் எண்ணிக்கை அடிப்படையில் இப்பணம் கணக்கிடப்படுகிறது. இலவசமாகப் பயன்படுத்துவதற்குக் குறிப்பிட்ட சொல் எண்ணிக்கை குறிப்பிடப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட மென்பொருள்கள் ஆங்கிலம், சீனம் போன்ற மொழிகளுக்குச் செயல்படுகிற அளவுக்குத் தமிழ் போன்ற மொழிகளுக்குச் செயல்படுவதில்லை. அதற்குக் காரணம் தமிழ் அகராதிச் சொற்களையும் இலக்கணத்தையும் அவை தாமாகவே கற்றுக்கொள்வதற்குத தேவையான தமிழ் மின்னணுத் தரவுகள் முழுமையாக இன்னும் முழுமையாக இவற்றில் இடம்பெறவில்லை. எனவே தமிழ்மொழித்திறன் இவற்றில் இன்னும் முழுமையடையவில்லை. எனவே பல தவறான தமிழ் வாக்கியங்கள் இவற்றில் நீடிக்கின்றன. இதைச் சரிப்படுத்த நீடிக்கிற பெரும்மொழி மாதிரிகளை மேலும் பயிற்றுவிக்கவேண்டும். இதையே Fine-tuning என்று அழைக்கிறார்கள்.
ஆகவே, ஏற்கனவே உருவாக்கப்பட்ட மாதிரிகளைத் தமிழுக்காக மேம்படுத்துவதற்குத் தேவையான தரவுகளைச் சேகரித்தபிறகு, நீடிக்கிற பெரும்மொழி மாதிரிகளைக்கொண்டுதான் நாம் பணியைத் தொடரமுடியும். அதற்கு சில மொழிமாதிரிகள் சொல் எண்ணிக்கை அடிப்படையில் கட்டணம் (payment based on number of tokens - words) கேட்கின்றன. பேஸ்புக்கின் பெரும்மொழிமாதிரி கட்டணமின்றிக் கிடைக்கிறது. ஆனால் அந்த மொழிமாதிரியைத் தரவிறக்கம் செய்து மேம்படுத்த நமக்கு மிகத் திறன் வாய்ந்த கணினிகள் தேவைப்படுகின்றன; இதற்கான பணவசதி என்போன்றவர்களிடம் கிடையாது. இதை (poverty of infrastructure) என்றுகூடக் கூறலாம்! மாற்றுவழி, இதற்கான சேவைகளை அளிக்கும் அமேசான் போன்ற நிறுவனங்களிடம் பணம் செலுத்திப் பெறவேண்டும். இதற்கும் சில லட்சங்கள் தேவைப்படும். அவ்வாறு செலுத்தி மேம்படுத்தியபிறகும் அடிப்படை பெரும்மொழிமாதிரியின் உதவியின்றித் தமிழ்ச் சேவைகளை நம்மால் பெறமுடியாது. அதற்கும் பணம் தேவை. இதை நாம் உருவாக்கும் மென்தபொருள்களுக்குப் பயனர்கள் தருவார்களா? இது ஒரு முக்கியமான வினா!
இதுதான் என் போன்றவர்களுக்கு உள்ள பிரச்சினை! ஆனால் தமிழ் மொழி அறிவை 80, 90 விழுக்காடு தமிழ் இலக்கணவிதிகள்மூலமே அளிக்கமுடியும்; இப்போது அளித்தும் வருகிறோம். இப்போது அளிக்கமுடியாத மொழி அறிவுக்குமட்டும் பெரும்மொழிமாதிரிகளைப் பயன்படுத்தலாம். இது ஒரு வழி. இதற்கு முதலில் தற்போதைய பெரும்மொழிமாதிரிகளில் தமிழ்த் திறன் எந்த நிலையில் , எதற்கு இல்லை என்பதை ஆய்வுசெய்யவேண்டும். பின்னர் அதை அளிப்பதற்கான மொழித்தரவுகளைச் சேகரிக்கவேண்டும். இதற்குத் தமிழ் மொழி அறிவும் (இலக்கணம், அகராதி) , கணினிமொழியியலும் தேவைப்படுகின்றன என்பது எனது கருத்து. இது என் புரிதல். அவ்வளவுதான்!
எனவே, இதுபோன்ற முயற்சிகளை எடுத்து தமிழறிவைப் பெரும்மொழிமாதிரிகளுக்கு அளிப்பது என்பது நமது கடுமையான பணிகள் மட்டுமல்ல, மிகப் பெரிய அளவில் பணமும் தேவை! அப்போதுதான் நம்மால் தற்போதைய செய்யறிவுத்திறனைப் பயன்படுத்தலாம்! இதுதான் அடிப்படையான சிக்கல்!
தொடர்ந்து சிந்திப்போம்! குறைந்த செலவில் மிகுந்த தமிழ் அறிவு! முயல்வோம்!

கணினித்தமிழ் வளர்ச்சிக்குத் தடை என்ன?

 கணினித்தமிழ் வளர்ச்சிக்குத் தடை என்ன?

தயவுசெய்து சில நிமிடங்கள் செலவழித்துப் படியுங்கள்!
-------------------------------------------------------------------------
கடந்த 15 ஆண்டுகால எனது அனுபவத்தில் இதை எழுதுகிறேன்.
1) தமிழ் மென்பொருள் பயன்படுத்தம் தமிழகத்தில் விரிவடையவில்லை. இதற்கு அடிப்படைக் காரணம், தமிழ்நாட்டில் தமிழ்மொழியைப் பயன்படுத்துவதே குறைவு. பள்ளிக்கூடத்தில், கல்லூரியில், உயர் கல்வி நிறுவனங்கள், வணிகம், உற்பத்தி ஆலைகள், அரசு நிர்வாகம் ஆகியவற்றில் ஆங்கிலமே தொடர்ந்து மேலாண்மை செலுத்துகிறது. இச்சூழலில் கணினி, அலைபேசி ஆகியவற்றில் ஆங்கிலமே மிக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது . . . தமிழர்களால்! தமிழ்நாட்டில்! இச்சூழல் மாறாமல் தமிழ் மென்பொருள் உற்பத்தி வளர்ச்சி அடைவது கடினமே.
2) தமிழ் எழுத்துருக்கள், விசைப் பலகைகள் 40 ஆண்டுகளுக்குமுன் கிடையாது. ஒரு கட்டத்தில் தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் அப்போது ஒருங்குறி கிடையாது. எனவே ஒவ்வொரு நிறுவனமும் தமிழ் எழுத்துருக்களுக்கு வெவ்வேறு அஸ்கி எழுத்துருக்களை உருவாக்கின. தொடக்கக் கட்டத்தில் தமிழ் எழுத்துருக்கள் 4 ஆயிரம், 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகின. தமிழ் இதழ்களே இந்நேரத்தில் தமிழ் எழுத்துருக்களுக்கு சந்தையாக இருந்தன. தனிநபர் வாங்குதல் என்பது மிகக் குறைவு. இலவசமாகத் தமிழ் எழுத்துருக்கள் அளிப்பது மிகக் குறைவு. பின்னர் ஒருங்குறி அறிமுகத்தையொட்டி, எழுத்துருச் சிக்கல் ஒரளவு தீர்ந்தது. கட்டணமின்றியும் எழுத்துருக்கள் கிடைத்தன. அப்போதும் குறிப்பிட்ட அழகியல் வடிவில் தங்கள் இதழ்கள் அமையவேண்டும் என்னும் நிறுவனங்கள் எழுத்துருக்களைப் பணம் கொடுத்து வாங்கினர். அஸ்கி எழுத்துருக்களில் வெளியாகி இருந்த தமிழ் ஆவணங்களை ஒருங்குறியில் மாற்றத் தேவையான மென்பொருள்களும் உருவாக்கப்பட்டு, விலைக்குக் கிடைத்தன. இன்றுவரை இந்நிலை நீடிக்கிறது.
3) 2000- தொடக்கத்தையொட்டி, எழுத்துரு, விசைப்பலகைகள் தாண்டி, சொற்பிழைதிருத்தி, இலக்கணப்பிழை திருத்தி ஆகியவற்றைக்கொண்ட தமிழ்மொழி மென்பொருள்கள் வெளிவரத்தொடங்கின. இவற்றை உருவாக்குவதற்கான செலவு அதிகம். ஆனால் பணம்கொடுத்து வாங்குவது மிகக் குறைவு. ஆங்கில மென்பொருள் தயாரிப்புக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு பணம் தமிழ் மென்பொருள் உருவாக்கத்திற்கும் தேவை. ஆங்கிலத்தில் உள்ள அனைத்து வசதிகளும் தமிழுக்கும் வேண்டும்; ஆனால் கட்டணமின்றிக் கிடைக்கவேண்டும். இதுவே தமிழ்நாட்டில் நிலவும் சூழல். தமிழிலும் ஒளிவருடி (OCR) , எழுத்து- பேச்சு மாற்றி (Text to Speech) போன்ற மென்பொருள்கள் வெளிவரத் தொடங்கின. ஆனால் இவற்றிக்குத் தேவையான சந்தை தமிழ்நாட்டில் கிடையாது. இங்கும் 'இலவசம்' என்ற வழக்கமே நீடித்தது. மேலும் கூகுள் போன்ற நிறுவனங்கள் கட்டணமின்றியே இதுபோன்ற மென்பொருள்களை அளிக்கத் தொடங்கின. எனவே தமிழகத்தில் இவற்றிற்கான ஆராய்ச்சியும் உற்பத்தியும் குறையத் தொடங்கின.
4) தற்போது செய்யறிவுத்திறன் (AI) கணினியில் வளர்ச்சியடைந்து உள்ளதால் கூகுள், மைக்ரோசாஃப்ட், பேஸ்புக் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் பன்மொழிசார்ந்த தங்கள் மென்பொருள்களைச் சந்தைக்குக் கொண்டுவந்துள்ளன. இவற்றின் தொழில்நுட்பங்கள் மிக நேர்த்தியானவை. இவற்றுடன் தமிழ்நாட்டில் உள்ள சிறு நிறுவனங்கள் தொழில்நுட்பத்திலோ வணிகச் சந்தையிலோ போட்டிபோட முடியாது. இந்நிலையில் உள்ளூர் தமிழ் மென்பொருள்களை வாங்குபவர் எண்ணிக்கை மிகவும் குறைந்து போயிற்று. பன்னாட்டு நிறுவனங்களுடன் போட்டிபோட்டு, உயர் தொழில்நுட்பத்தைத் தமிழுக்குச் செயல்படுத்த இலட்சக்கணக்கில் பணம் தேவை. அந்த வசதி இங்குள்ளவர்களுக்குக் கிடையாது. சிறு சிறு கடைகள் தற்போது அமேசான் போன்ற பன்னாட்டு நிறுவனங்களால் பாதிக்கப்பட்டுள்ளதுபோல, இங்குள்ள தமிழ் மென்பொருள்நிறுவனங்கள் மிகப் பெரிய பாதிப்புக்கு உட்பட்டுள்ளன.
5) கட்டணமின்றி மென்பொருள்களை வாங்கும் எண்ணம் இங்கே அதிகமாக உள்ளதால், இனி உள்நாட்டு தமிழ்மென்பொருள்களுக்கான சந்தை மேலும் மோசமடையும். பன்னாட்டு நிறுவனங்களும் உலகில் ஆங்கிலம், சீனம், அரபி போன்ற மொழிகளுக்குச் செலவழிக்கிற அளவுக்குத் தமிழுக்குச் செலவழிக்காது. அவற்றிற்கு வணிகச்சந்தையே மிக மிக முக்கியம். தமிழ் பயன்படுத்தம் குறைவாக உள்ள நிலையில் தமிழுக்குப் பிறமொழிகளுக்குக் கிடைக்கிற வளர்ச்சிநிலை கிடைக்கவில்லை. அவை - பன்னாட்டு நிறுவனங்கள்- மனது வைத்தால்தான் தமிழுக்கு அந்த வசதிகள் கிடைக்கும். இந்நிலையில் - இச்சூழலில் - இங்குள்ள சிறு சிறு நிறுவனங்கள் இன்றைய மொழித்தொழில்நுட்பத்தைத் தமிழுக்குக் கொண்டுவர முயற்சிக்கும்போது, ஏற்படும் பணச்செலவு அதிகம். அந்த அளவுக்குத் தமிழகத்தில் உள்ள தமிழ் மென்பொருள் நிறுவனங்களுக்கு பணவசதி கிடையாது. ஆகவே தமிழ் மக்கள் கூகுள், மைக்ரோசாஃப்ட் கொடுப்பதை வாங்கிக்கொண்டு இருக்கவேண்டிய சூழல். அவை மனது வைக்கவேண்டும்!
6) அரசுகளின் நிலைபாடு? ஜி எஸ் டி வருவதற்குமுன்னர் தமிழ் மென்பொருள்களுக்கு வரி விலக்கு உண்டு. ஆனால் தற்போது 18 விழுக்காடு வரி. ஏற்கனவே இலவசங்களுக்குப் பழகிப்போன நாம், இந்த வரியைச் சேர்த்து நிறுவனங்கள் தமிழ் மென்பொருள்களைக் கொடுத்தால் யார் வாங்குவார்கள்? இதுபற்றி தமிழ்நாட்டு அரசகள் கவலைப்படவில்லை!
7) மேலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கே அதிகாரிகள் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதற்குக் காரணம் அவற்றின் உயர்நிலைத் தொழில்நுட்பம் என்று கூறிவிடுவார்கள். 5 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்து விண்டோவ்ஸ் மென்பொருள்களை வாங்கும் அரசுகள் - 30 ஆயிரம், 40 ஆயிரம் கொடுத்து மடிக்கணிகளை வாங்கும் அரசுகள் , நூறு, இருநூறு கொடுத்துக்கூட இங்கு உள்ள தமிழ் மென்பொருள்களை வாங்கப் பரிந்துரைக்க மாட்டார்கள். என்னுடைய தனிப்பட்ட அனுபவமே..... ஆண்டுக்கணக்கில் அமைச்சர்கள், அதிகாரிகள் அலுவலகங்களில் ஏதாவது நடக்காதா என்று மணிக்கணக்கில் காத்துக்கிடந்துதான் மிச்சம்! விருதுகள், சால்வைகள் கிடைக்கும்! அவ்வளவுதான்!
8 ) மேலும் தற்போது ஏற்பட்டுள்ள செய்யறிவுத்திறன் சார்ந்த தமிழ்மென்பொருள்களைத் தமிழகத்தில் உள்ள சிறு சிறு நிறுவனங்கள் உருவாக்கப் பல லட்சங்கள் தேவை. இது இயலாத காரியம்! கடன்பெற்று தயாரித்தாலும் , தமிழ்நாட்டில் சந்தை கிடையாது, அரசு நிறுவனங்களில் உட்பட!
9) ஒருபுறம் தமிழகத்தில் 'இலவசமாக' வாங்கும் பழக்கம் அதிகமாக நீடிப்பது . . . மறுபுறம் பன்னாட்டு நிறுவனங்களின் மேலாண்மை, அரசு நிலைகளில்கூட! இவற்றிற்கிடையே நம்மால் தமிழுக்குக் கணினித்துறையில் ஏதாவது சாதிக்கமுடியாதா என்ற எண்ணத்தோடு . . . தமிழ் மென்பொருள் உருவாக்கத்தில் ஈடுபடுபவர்கள், நொந்து நூலாகி நிற்கவேண்டியதுதான்!
10) இந்நிலையில்தான் . . . எடுத்த முயற்சியைக் கைவிடக்கூடாது என்று எங்களைப் போன்றவர்கள் செய்யறிவுத்திறனைத் தமிழுக்கு முழுமையாகக் கொண்டுவரத் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறோம். இதற்கு லட்சக்கணக்கில் பணம் தேவை! பன்னாட்டு நிறுவனங்களின் தொழில்நுட்பங்களைப் (வன்பொருள், மென்பொருள் ) பயன்படுத்தாமல் தற்போது தமிழ் மென்பொருள்களை உருவாக்குவது கடினம்! அவ்வாறு உருவாக்கினாலும் அவற்றோடு போட்டிபோட்டு நிற்கமுடியாது! பல லட்சங்கள் இருந்தால்தான் பன்னாட்டு நிறுவனங்களின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இங்கேயே தமிழுக்குச் செயல்படுத்தமுடியும்!
அதனையொட்டியே நான் தற்போது தமிழ் ஆர்வலர்களுக்கு எங்கள் மென்பொருளை வாங்குவதற்கு ஒரு வேண்டுகோளை விடுத்திருக்கிறேன்! செய்யறிவுத் திறன் கொண்டு தமிழ்மென்பொருளை உருவாக்குவதில் பாதிக் கிணறு தாண்டிவிட்டேன். இன்னும் பாதிக்கிணறு தாண்டமுடியாமல் நிற்கிறேன்!
தமிழ்நாட்டில் தமிழுக்கு மேலும் மேலும் சிறப்பு செய்ய விரும்பும் எங்களைப் போன்றவர்களுக்குத் தமிழ் ஆர்வலர்கள் உதவி செய்வார்கள் என்று நம்புகிறேன்! எனக்குத் தமிழ்மென்பொருள் உருவாக்கம் வணிகம் இல்லை! மாறாக, தமிழ் உணர்வே அடிப்படை! ஆனால் பணமின்றி அடுத்த அடி எடுத்துவைக்கமுடியாத ஒரு நிலை! இதைத் தமிழ் உலகம் புரிந்துகொள்ளும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆங்கிலேய மேலாண்மையை எதிர்த்துநின்று, இறுதியில் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்ட கப்பலோட்டிய தமிழனை நினைவுகூர்கிறேன்! இது புலம்பல் இல்லை! வேதனை!
வங்கியில் கடன் உதவி கேட்டால், என்ன சொத்து இருக்கிறது? எதன் அடிப்படையில் கடன் கொடுப்பது என்று கேட்கிறார்கள்! அவர்களுக்கு அவர்கள் பிரச்சினை! அதைத் தவறு என்று நாம் சொல்லமுடியாது. தமிழைப் பயன்படுத்த விரும்பும் சாதாரண மக்களுக்குப் பணவசதி இல்லை! அவர்களையும் குறை கூறமுடியாது! மேலும் அவர்களால் மென்பொருள் உற்பத்திக்கான செலவை ஈடுகட்டும் அளவுக்குச் சந்தை தர இயலாது! பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள்தான் பெரிய அளவில் தமிழ் மென்பொருளைப் பயன்படுத்தலாம்! பயன்படுத்தவேண்டும்! பன்னாட்டு நிறுவனங்களின் கணினிகளைப் பல ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி, இலவசமாக மாணவர்களுக்குக் கொடுத்தால், அதில் ' அரசியல் பயன் ' உண்டு! ஆனால் தமிழ் மென்பொருள்களை நூறு, இருநூறுக்குக்கூட வாங்கி இலவசமாகக் கொடுப்பதால் எந்தப் 'பயனும் ' கிடையாது! என்ன செய்ய?

'Mentamizh” – Tamil Word Processor! A Heartfelt Appeal to the Tamil Community!

 'Mentamizh” – Tamil Word Processor!

A Heartfelt Appeal to the Tamil Community!
--------------------------------------------------------------------------
Launched in 2011, Mentamizh Tamil Word Processor has now completed 15 years of excellence and continues to thrive with its 6th version. Awarded the prestigious Tamil Nadu Chief Minister's Tamil Computing Award, this software is widely used across Tamil Nadu government offices, newspapers, weekly journals, the public, students, teachers, and researchers alike.
Not only in Tamil Nadu but also in countries like Singapore, Malaysia, and Sri Lanka, Mentamizh has been adopted widely. Built on the principles of Tamil grammar, computational linguistics, and language technology, this software has been developed with cutting-edge global technological tools. This is a Tamil software equivalent to MS Word. It has been developed as the first comprehensive Tamil software with a wide range of language tools, including Unicode fonts, 18 types of keyboards, spell-checker, sandhi-checker, add-in tools compatible with MS Office software, as well as a simple pad for quick typing and many more utilities.
As technology progresses, we are striving to enhance Mentamizh by integrating AI capabilities, aiming to provide a Tamil Word Processor that can rival the functionality of popular English tools like Grammarly and Quill Bot. Our goal is to eliminate the fear of errors while using Tamil, enabling its seamless usage across various fields. We envision Mentamizh being an integral part of every Tamil speaker’s computer!
To achieve these goals, despite facing numerous challenges, our company continues to forge ahead. To fulfil our mission, we urgently require the support of the Tamil community. The same technological advancements that benefit English and other languages should be equally accessible for Tamil. The cost for creating software for non-Tamil languages is similar for Tamil as well!
With the sole support of the Tamil people, our team has, for the past 15 years, overcome many hardships to create a variety of software for the Tamil language. We humbly seek your continued encouragement and support to carry this mission forward. Our team is well-versed in Tamil grammar, linguistics, computational linguistics, computer science, and AI technologies, and we take pride in having made significant contributions.
Our efforts have extended beyond Tamil Nadu, with Tamil enthusiasts in Singapore and Malaysia assisting us in many ways. We have successfully completed major projects for the Singapore Ministry of Education, such as the Singapore Written Tamil Corpus, Tamil-English Digital Dictionary, and Tamil e-Grammar, as well as contributed to the Tamil Development Department in Tamil Nadu by creating the Digital Administrative Glossary, dictionary of Non-native Word - Tamil Word and Antonym-Synonym Dictionaries. We have also developed a Tamil Sandhi Learning Software for students, which will be released soon.
Considering these achievements, we seek the continued support of the Tamil world. By purchasing the Mentamizh Tamil Word Processor, Tamil speakers worldwide can help fund its next level of development, incorporating AI and other advanced features.
If we receive the financial support needed to continue this mission, within the next six months we will be able to enhance the ‘Mentamizh’ Tamil Word Processor into a software solution equipped with the artificial intelligence capabilities that the Tamil world has long been waiting for. We have already begun the groundwork, and with your kind support, we can make this vision a reality.
Therefore, we kindly request Tamil students, teachers, and enthusiasts to purchase the Mentamizh Tamil Word Processor at a nominal price of ₹1180 (₹1000 + ₹180 GST). To show our gratitude, we are offering an exciting promotion: anyone who purchases the software now, by the third week of January 2026 (during Pongal) will receive the AI-enhanced new version free of charge.
This offer is available for the first 1000 users, starting from September 1, 2025.
We encourage Tamil enthusiasts to spread the word and support us in bringing advanced computing technology to the Tamil language. Together, we can elevate Tamil in the digital world.
We earnestly appeal to every Tamil enthusiast to kindly share this message within their circle of friends and well-wishers, so that our collective effort may reach wider support.
On behalf of NDS Lingsoft Solutions,
Prof. N. Deiva Sundaram
Bank Details for Payment:
• Company: NDS Lingsoft Solutions Private Limited
• Bank: Indian Overseas Bank
• Branch: Indiranagar – Adyar, Chennai 600 020
• Current Account: 087602000005260
• IFSC: IOBA0000876
• SWIFT: IOBANBB876
Once payment is made, kindly send your email address, residential or office address to contact@lingsoftsolutions.com. We will send you the Mentamizh download link and product key to your email.
Our software works in PC Windows only

'மென்தமிழ்’ – தமிழ்ச் சொல்லாளர்! தமிழுலகத்திற்கு அன்பு வேண்டுகோள்!

 'மென்தமிழ்’ – தமிழ்ச் சொல்லாளர்!

தமிழுலகத்திற்கு அன்பு வேண்டுகோள்!
--------------------------------------------------------------------------
2011 – ஆம் வெளிவந்த ‘மென்தமிழ் ‘ தமிழ்ச்சொல்லாளர் தனது 15 ஆண்டுகால வரலாற்றுடன் தற்போது 6-ஆவது பதிப்பாக நீடித்துவருகிறது. தமிழ் நாடு அரசின் ‘தமிழ்நாடு முதலமைச்சர் கணினித்தமிழ் விருது’ பெற்ற இந்த மென்பொருள் தமிழ்நாடு அரசு அலுவலகங்கள், நாளிதழ், வார இதழ்கள், பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் என்று பல தரப்புகளிலும் இன்று பயன்படுத்தப்பட்டுவருகிறது.
தமிழ்நாடு மட்டுமல்லாமல், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளிலும் ‘மென்தமிழ்’ பெருமளவில் பயன்படுத்தப்பட்டுவருகிறது. தமிழ் இலக்கணம், கணினிமொழியியல், மொழித் தொழில்நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த மென்பொருள் கணினித் தொழில்நுட்பத்திலும் உலக அளவிலான புதிய மென்பொருள் கருவிகளைக் கொண்டு சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. எம் எஸ் வோர்டுக்கு இணையான தமிழ் மென்பொருள் இது. ஒருங்குறி எழுத்துரு, 18 வகையான விசைப்பலகைகள், தமிழ்ச் சொற்பிழை, சந்திப்பிழை திருத்தும் மொழிக்கருவிகள், எம் எஸ் ஆபிஸ் மென்பொருள்களிலும் பயன்படும் உட்செருகி ( Add-in) , குறும்பலகை (Simple Pad) போன்ற பல மொழிக்கருவிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள முதல் தமிழ் மென்பொருள் இது.
தற்போது கணினியுலகில் வளர்ச்சியடைந்துள்ள செய்யறிவுத்திறன் தொழில்நுட்பத்தையும் உள்ளடக்கிய ஒரு தமிழ்ச்சொல்லாளராக ‘மென்தமிழ்’ தமிழ்ச் சொல்லாளர் மென்பொருளை வளர்த்தெடுக்கத் தற்போது முயல்கிறோம். ஆங்கிலமொழிக்குத் தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் “Grammarly” “QuillBot” போன்று மேலும் திறன்மிக்க ஒரு தமிழ்ச்சொல்லாளரைத் தமிழுலகத்திற்கு வழங்கவேண்டுமென்பதே எங்கள் நோக்கம்! தமிழைப் பயன்படுத்தும்போது பிழைகள் ஏற்பட்டுவிடுமோ என்று யாரும் பயப்படாமல் தமிழை அனைத்திலும் பயன்படுத்த உதவவேண்டும்!
தமிழர்கள் அனைவரின் கணினியிலும் ‘மென்தமிழ்’ இடம்பெறவேண்டும்! இவையே எங்கள் குறிக்கோள்!
மேற்குறிப்பிட்ட குறிக்கோளை நிறைவேற்றுவதற்காகப் பல தடைகளுக்கிடையே எங்கள் நிறுவனம் தொடர்ந்து முன்னேறிவருகிறது. மேற்குறிப்பிட்ட வகையில் எங்கள் முயற்சியைத் தொடரத் தமிழ்ச் சமுதாயத்தின் ஆதரவு எங்களுக்குத் தேவை. ஆங்கிலம் உட்படப் பிறமொழிகளுக்கான மென்பொருள்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும் அதே கணினித்தொழில்நுட்பமே தமிழுக்கும் பயன்படுத்தப்படவேண்டும். அதற்குப் பிறமொழிகளுக்கு ஏற்படும் பணச்செலவே தமிழுக்கும் ஏற்படுகிறது!
தமிழ் மக்களின் ஆதரவைமட்டுமே சார்ந்து கடந்த 15 ஆண்டுகளாக எங்கள் குழுவினர் பல இடர்களுக்கிடையே தமிழுக்கான பலவகை மென்பொருள்களை உருவாக்கிவருகின்றனர். தமிழ் இலக்கணம், மொழியியல், கணினிமொழியியல், கணினியியல், செய்யறிவுத்திறன் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் முறையான கல்வியும் பயிற்சியும் பெற்றவர்களைக் கொண்டது எங்கள் குழு.
தமிழ்நாட்டில்மட்டுமல்லாமல், சிங்கப்பூர், மலேசியா போன்ற பிற நாடுகளிலும் தமிழன்பர்கள் எங்களுக்குப் பலவகைகளில் உதவிவருகிறார்கள். சிங்கப்பூர் தமிழாசிரியர்களுக்கான சிங்கப்பூர்க் கல்வி அமைச்சகத்தின் மூன்று பெருந் திட்டங்களை – சிங்கப்பூர் எழுத்துத்தமிழ் தரவகம், தமிழ் - ஆங்கில மின்னகராதி, தமிழுக்கான மின்-தமிழ் இலக்கணம் – நிறைவேற்றிக் கொடுத்துள்ளோம். தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறைக்கு மின் - ஆட்சிச்சொல் அகராதி, அயற்சொல்- தமிழ்ச்சொல் அகராதி, இணைச்சொல் – எதிர்ச்சொல் அகராதி ஆகியவற்றை உருவாக்கி அளித்துள்ளோம். தொல்காப்பியத் தரவக ஆய்வுத் திட்டத்தையும் எங்கள் ஆய்வாளர்கள் தமிழ் இணையக் கல்விக்கழகத்திற்கு உருவாக்கி அளித்துள்ளார்கள். விரைவில் தமிழ் மாணவர்களுக்கான கணினிவழி - சந்தி கற்றல் மென்பொருள் வெளிவரவிருக்கிறது.
இந்நிலையில் எங்கள் பணியைத் தடையின்றித் தொடரத் தமிழுலகத்தின் உதவியை நாடுகிறோம். தற்போது விற்பனையில் கிடைக்கும் ‘மென்தமிழ்’ தமிழ்ச்சொல்லாளரைப் பெருமளவில் தமிழன்பர்கள் வாங்குவதுமூலமே இம்மென்பொருளையும் ஏனைய கணினித்தமிழ் ஆய்வையும் அடுத்த கட்ட வளர்ச்சிக்குக் கொண்டுசெல்லமுடியும். செய்யறிவுத்திறன் நுட்பத்தையும் உள்ளடக்கிய – உலகத்தரம் வாய்ந்த மென்பொருளாக ‘மென்தமிழைத்’ தமிழுலகத்திற்கு வழங்கமுடியும்.
இப்பணியைத் தொடரத் தேவையான நிதிவசதி கிடைத்தால், இன்னும் ஆறுமாதங்களில் ‘மென்தமிழ்’ தமிழ்ச்சொல்லாளரைத் தமிழுலகம் எதிர்பார்க்கும் செய்யறிவுத்திறனையும் உள்ளடக்கிய மென்பொருளாக வளர்த்தெடுத்து அளிக்கமுடியும். அதற்கான அடிப்படைப் பணிகளைத் தொடங்கிவிட்டோம்!
இதைக் கருத்தில்கொண்டு, தமிழ் மாணவர்கள், ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் உட்பட தமிழுலகம் ‘மென்தமிழ்’ தமிழ்ச்சொல்லாளரை ரூ, ஆயிரத்து நூற்றெண்பது – ரூ 1180 (ரூ.1000 + ரூ.180 – GST ) மட்டும் கொடுத்து வாங்கிப் பயன்படுத்த அன்புடன் வேண்டுகிறோம்.
இதையொட்டி, ஒரு சலுகையை அன்பர்களுக்கு அளிக்க எங்கள் நிறுவனம் முன்வருகிறது. இப்போது ‘மென்தமிழை’ வாங்கும் நண்பர்களுக்கு 2026 தைப்பொங்கலையொட்டி (ஜனவரி மூன்றாவது வாரம்) செய்யறிவுத்திறனை உள்ளடக்கிய ‘மென்தமிழ்’ தமிழ்ச்சொல்லாளர் எவ்விதக் கட்டணமும் இன்றி அளிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.
இச்சலுகை முதல் ஆயிரம் பயனாளர்களுக்குமட்டுமே! 2025 செப்டம்பர் முதலாம் நாள் இச்சலுகை தொடங்குகிறது.
உலக அளவிலான கணினித் தொழில்நுட்பத்தைத் தமிழுக்குக் கொண்டுவந்து சேர்க்கும் ஒரே நோக்கத்தில் செயல்படும் எங்களுக்கு மேலும் ஊக்கம் தரும் வகையில் தமிழ் ஆர்வலர்கள் உதவ வேண்டுகிறோம். தங்கள் சுற்றத்திலும் இச்செய்தியைக் கொண்டுசேர்த்து உதவவும்.
என் டி எஸ் லிங்க்சாஃப்ட் நிறுவனத்தின் சார்பாக,
பேரா. ந. தெய்வ சுந்தரம்
பணம் அனுப்புவதற்கான விவரங்கள் :
Company : NDS Lingsoft Solutions Private Limited
Bank : Indian Overseas Bank
Branch : Indiranagar – Adyar , Chennai 600 020
Current Account : 087602000005260
IFSC : IOBA0000876
SWIFT : IOBANBB876
பணம் அனுப்பிய விவரங்களுடன் தங்களுடைய மின்னஞ்சல் முகவரி, இல்லம் / அலுவலக முகவரி ஆகியவற்றைக் கீழ்க்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
contact@lingsoftsolutions.com
தங்கள் மின்னஞ்சலுக்கு ‘மென்தமிழ்’ தரவிறக்க இணைப்பும் (Download Link) உரிம எண்ணும் (Product Key) அனுப்பிவைக்கப்படும்.
எங்கள் மென்பொருள். கணினி விண்டோவ்ஸில் மட்டுமே செயல்படும்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India