புதன், 27 மார்ச், 2024

''சொல்'' என்பதற்கான வரையறை . . .

 ''சொல்'' என்பதற்கான வரையறை . . .

-------------------------------------------------------------------------
சொற்களை (1) அகராதிச்சொல் (Lexeme / Dictionary Word) , (2) இலக்கணக்கூறு அல்லது இலக்கணப்பண்பு ஏற்ற சொல் (Inflected Form - Wordform) என்று வகைப்படுத்தலாம்.
அகராதிச்சொல் என்பது பொருண்மையோடு ( lexically- oriented) தொடர்பு உடையது; இலக்கணப்பண்பு ஏற்ற சொல் என்பது தொடரியலோடு (Syntactically- oriented) தொடர்புடையது.
அகராதியில் பார்க்கிற பெயர்ச்சொற்கள் அல்லது வினைச்சொற்கள் , சொற்றொடர்களில் பயின்று வரும்போது குறிப்பிட்ட இலக்கணப் பண்புகளை ஏற்றுவரும்.
அகராதியில் பார்க்கிற 'ஆசிரியர்' என்ற சொல், 'ஆசிரியர் வந்தார்' என்று தொடரில் அமையும்போது 'ஆசிரியர்' என்பது 'எழுவாய்' என்ற இலக்கணப் பண்பைப் பெற்ற சொல்லாகும்.; வெறும் அகராதிச்சொல் இல்லை. தோற்றத்தில் ஒன்றாக இருந்தாலும் இரண்டும் வேறு வேறு.
அதுபோன்று 'படி' என்ற அகராதி வினைச்சொல் 'நீ படி' என்று வரும்போது முன்னிலை ஒருமை இறவாக்காலம் என்ற இலக்கணப் பண்பை ஏற்ற ஒன்று. 'வந்து, வர , வராமல்' போன்றவையெல்லாம் 'வா' என்ற அகராதிச்சொல்லின் பொருண்மையை உள்ளடக்கி இருந்தாலும், தொடரியலில் அடிப்படையில் வேறு வேறு. 'வந்து' என்பதுடன் வரும் சொற்கள் வேறு; 'வர' என்பதுடன் வரும் சொற்கள் வேறு.
இலக்கணப்பண்பு ஏற்ற சொல்லுக்கு(Wordform) மூன்று பண்புகள் இருக்கும்.
ஒன்று, ஒரு தொடரில் அது ஒட்டுமொத்தமாக இடம் மாறலாம். 'நான் நேற்று வீட்டுக்கு வந்தேன்' என்பதில் உள்ள 'வீட்டுக்கு' என்பது 'வீட்டுக்கு நான் நேற்று வந்தேன்' என்பதில் இடம் மாறலாம். (பொதுவாக, தொடரில் பெயர்ச்சொற்கள் தங்களுடைய அடைகளோடும், வினைகள் தங்களது அடைகளோடும் இடம் மாறும்.) இந்தப் பண்பை ஆங்கிலத்தில் "Positional mobility" என்று அழைப்பார்கள்.
அடுத்து, இலக்கணப்பண்பு ஏற்ற சொல்லின் நடுவில் பொதுவாக வேறு எந்த விகுதியும் வராது. 'வந்தான்' என்ற வினைமுற்றுச் சொல்லின் நடுவில் வேறு எந்த விகுதியும் செருகுவது கடினம். இதை ஆங்கிலத்தில் ''Uninterruptability" என்று அழைப்பார்கள்.
அடுத்து, இலக்கணப்பண்புகளை வெளிப்படுத்தும் விகுதிகள் பொதுவாக ஒரு சொல்லுக்குள் ஒரு குறிப்பிட்ட வரிசையில்தான் அமையும். மாறி அமையாது. 'வந்தான்' என்பதில் வினையடி - காலம் - திணை,எண்,பால் விகுதி என்பது ஒரு குறிப்பிட வரிசையில் அமைந்துள்ளது. இது மாறி அமையாது. இதை ஆங்கிலத்தில் "Internal Stability" என்று அழைப்பார்கள்.
மேற்கூறிய மூன்று பண்புகளையும் பெற்ற சொல் வடிவங்களும் அகராதியில் இடம்பெறுகின்ற சொல் வடிவமும் வேறு வேறு. அகராதிச்சொற்கள் இரண்டு அகராதிச் சொற்களை உள்ளடக்கிய தொகையாகவும் இருக்கலாம்.
'சொல்' என்பதை வரையறுக்கப் பலர் முயன்றுள்ளனர். ஆனால் ஒருமித்த முடிவு இன்னும் எட்டப்படவில்லை என்றே கருதுகிறேன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India