ஞாயிறு, 3 மார்ச், 2024

மயிற்றோகை? மயில்தோகை? எது சரி?

'இலக்கணம்' என்ற முகநூற்குழுவில் முன்வைக்கப்பட்ட ஒரு கருத்து. மற்றவர்களுக்கும் பயன்படலாம் எனக் கருதி அதை இங்கே பதிவிடுகிறேன்.

நண்பர் திரு. ஜெகதீசன் முத்துக்கிருஷ்ணன்
----------------------------------------------------------------
அரைக்கிணறு தாண்டாதே .
=========================
கல் + கண்டு = கற்கண்டு
கல் + சிலை = கற்சிலை
பல் + பொடி = பற்பொடி
என்று புணரும் . ஆனால் ,
நல் + திணை = நற்றிணை
நல் + தமிழ் = நற்றமிழ்
கல் + தூண் = கற்றூண்
என்று புணரும் . வருமொழி முதலில் தகர இனவெழுத்துக்கள் வந்தால் , அது றகரமாகவோ , றகர இனவெழுத்துக்களாகவோ மாறும்.
மயில் + தோகை = மயிற்றோகை
என்றே எழுத வேண்டும் . மயிற்தோகை என்று எழுதுவது , அரைக்கிணறு தாண்டுவதற்கு ஒப்பாகும் . அதற்குப் பதிலாக " மயில்தோகை " என்று எழுதுவதே நன்று .
ந. தெய்வ சுந்தரம்
-------------------------------------------------------------------------
மிகச் சரியான எடுத்துக்காட்டுக்கள். இத்துடன் மற்றொரு விளக்கமும் அளிக்கலாம் எனக் கருதுகிறேன். தமிழ்ப் புணர்ச்சியிலக்கணத்தில் திரிதல் செயற்பாடு நடைபெறுவதற்கு ஒரு விளக்கம் அளிக்கலாம். வேற்றுமைத்தொகை அமையும்போது, தொகை என்பதைக் காட்ட, இடையில் ஒற்று மிகும். எனவே கல் + க் + கண்டு = கல்க்கண்டு ; தமிழில் -ல்க்- மெய்ம்மயக்கம் இல்லை. எனவே -ல்க்- என்பது - ற்- என்று 'ல்' -க்கு வல்லின இனமான 'ற்' தோன்றுகிறது. ஆகவே மூன்று மெய்ம்மயக்கங்கள் ஏற்படும்போதுமட்டுமே இந்தத் திரிதல் ஏற்படுகிறது.
கள் + குடம் -> கள்க்குடம் -> கட்குடம் ;
மண் + குடம் -> மண்க்குடம் -> மட்குடம்;
பொன் + குடம் -> பொன்க்குடம் -> பொற்குடம்.
ஆனால் கூழ் + பானை -> கூழ்ப்பானை.
வாய் + பாடல் -> வாய்ப்பாடல்;
தேர் + சக்கரம் -> தேர்ச்சக்கரம்.
தமிழில் ழ், ய், ர் ஆகிய மெய்களைக்கொண்ட மூன்று மெய்ம்மயக்கங்கள் வரலாம். எனவே இங்குத் திரிதல் கிடையாது.
இவ்வாறு புணர்ச்சியில் திரிதலுக்குக் காரணம் கூறலாமா என்று கருதிப்பார்க்கலாம்.
எனவே மயில் + தோகை -> மயில்த்தோகை ; மயிற்றோகை.
இந்த மாற்றமே 'பொற்றாமரை' 'கற்றூண்' என்பவற்றில் ஏற்படுகிறது. ஆனால் இன்றைய தமிழில் இவ்வாறு சொல்வதற்குச் சற்றுக் கடினம் என்று கருதி, சிலர் 'மயிற்தோகை' அல்லது 'மயில்தோகை' என்று எழுதுகிறார்கள்.
ஆனால் 'மயில்தோகை' என்பதைவிட, 'மயில்த்தோகை' என்று எழுதினால், வேற்றுமைத்தொகையில் ஒற்று மிகும் என்ற விதி செயற்படும். (ஆனால்'ல்த்' என்ற மெய்ம்மயக்கம் தமிழில் கிடையாதுதான் !) எனவே 'மயிற்றோகை' அல்லது ஒரு விதிவிலக்காக 'மயில்த்தோகை' என்று எழுதவேண்டும். 'மயில்தோகை' என்று எழுதக்கூடாது என்று நான் கருதுகிறேன். அவ்வாறு எழுதினால் வேற்றுமைத்தொகை என்று அது அமையாது.
இது ஒரு கருதுகோள்தான். கருதிப்பார்க்கவும்.
தற்போதைய " Optimality Theory" என்ற ஒரு மொழியியற்கோட்பாட்டில் ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. ஒரு இடத்தில் இரண்டு விதிகளுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டால் (அதாவது ஒன்றைப் பயன்படுத்தினால் மற்றது அதற்குத் தடையாக அமையும்!) , அந்த இரண்டில் தலையாய விதியைத் தக்கவைத்துக்கொண்டு, அதற்கு அடுத்த விதியைக் கைவிடலாம். எனவே இலக்கணவிதிகளை ranking செய்வது முக்கியம் என்று கூறப்படுகிறது.
நாம் தற்போது விவாதிக்கிற சிக்கலில் - வேற்றுமைத்தொகைக்கு ஒற்று மிகும் என்பது ஒரு விதி; அதேவேளையில் 'ல்த்' என்ற மெய்ம்மயக்கம் கிடையாது என்பது மற்றொரு விதி! ! இந்த இரண்டில் எதைத் தக்கவைப்பது? எதைக் கைவிடுவது? முடிவு எடுக்கவேண்டும்.
என்னைப்பொறுத்தவரையில் வேற்றுமைத்தொகைக்கு ஒற்று மிகும் என்பதைத் தக்கவைக்கவேண்டும்.

இங்கு நான் முன்வைக்கிற சிக்கல் . . . வேற்றுமைத்தொகைக்கான புணர்ச்சி விகுதி, மெய்ம்மயக்க விதி இரண்டில் எதை உயர்தளத்திலும் எதை அடுத்த தளத்திலும் வைக்கலாம் என்ற சிக்கல். இரண்டையும் ஒரே இடத்தில் தக்கவைக்க இயலவில்லை.
(1) மயில் + தோகை -> மயில்த்தொகை என்றால் மெய்ம்மயக்க விதி ( 'ல்' என்பதையடுத்து 'த்' என்பது வரக்கூடாது) புறக்கணிக்கப்படுகிறது!
(2) மாறாக, மயில்தோகை என்றால் வேற்றுமைத்தொகைக்கான புணர்ச்சி விதி (ஒற்று மிகவேண்டும் என்ற விதி) புறக்கணிக்கப்படுகிறது.
(3) மயில்தோகை என்றால் இரண்டுவிதிகளுமே - வேற்றுமைத்தொகைக்கான (ஒற்று மிகும் என்ற) புணர்ச்சி விதி, -ல்த்- என்று வரக்கூடாது என்ற மெய்ம்மயக்கவிதி இரண்டுமே புறக்கணிக்கப்படுகின்றன.
எனவே, குறைந்தது ஒரு விதியையாவது தக்கவைக்கலாம் என்ற முடிவு எடுத்தால் , 'மயில்த்தோகை' என்பதை எடுத்துக்கொள்ளலாம். இங்கு மெய்ம்மயக்கவிதி புறக்கணிக்கப்படுகிறது. ஆனால் வேற்றுமைத்தொகையில் ஒற்று மிகவேண்டும் என்ற புணர்ச்சி விதி கவனத்தில் கொள்ளப்படுகிறது.
இரண்டுவிதிகளையுமே தக்கவைக்கவேண்டும் என்றால், 'மயிற்றோகை' என்பதுதான் சரி.
இந்தச் சிக்கலுக்கு விடை தேவை!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India