ஞாயிறு, 3 மார்ச், 2024

செய்யறிவுத்திறனும் (Artificial Intelligence - AI) ஏகாதிபத்தியப் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களும் . .

 செய்யறிவுத்திறனும் (Artificial Intelligence - AI) ஏகாதிபத்தியப் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களும் . . .

-----------------------------------------------------------------------
நான் 100 விழுக்காடு அறிவியல் வளர்ச்சியை ஏற்றுக்கொள்கிறவன்; மனித சமுதாயத்தின் இன்றைய வியக்கத்தக்க வளர்ச்சிக்கு அறிவியல் வளர்ச்சியே காரணம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இந்த அறிவியல் வளர்ச்சிகள் எல்லாம் மனித மூளையின் உருவாக்கமே; மனிதமூளையின் நுட்பமான அறிவுத்திறனே அனைத்துக்கும் அடிப்படை. ஆனால் சிலவேளைகளில் . . . உருவாக்கியவனை மறந்துவிட்டு, உருவாக்கப்பட்ட பொருளின் சிறப்பையே உயர்த்திப் பிடிக்கும் மனப்பான்மை ஆதிக்கம் செலுத்தும்.
அந்த நிலை இன்று மனித மூளைக்கு . . . மனிதமூளையின் திறன்களுக்கு . . . ஏற்பட்டுள்ளது. வியக்கத்தக்க வளர்ச்சியைக் கணினி உலகிற்கு அளித்த மனிதமூளை . . . இன்று பின்தள்ளப்பட்டு . . . கணினியின் திறனை உயர்த்திப்பிடிக்கும் ஒரு நிலை நிலவுகிறதோ என்ற ஒரு அச்சம் எனக்கு ஏற்படுகிறது.
குறிப்பாக . . . இன்றைய செயற்கை அறிவுத்திறனின் வியக்கத்தக்க வளர்ச்சி . . . அந்த வளர்ச்சியைத் தந்த மனிதமூளையின் நுட்பமான அறிவுத்திறனைப் பின்தள்ளுவதுபோல் தெரிகிறது. இது மேலைநாடுகளின் திட்டமிட்ட ஒரு செயலோ என்று எண்ணத் தூண்டுகிறது.
செயற்கை உடல் உறுப்புக்களின் வளர்ச்சி . . . செயற்கை மூட்டு, செயற்கை வால்வு, செயற்கை கை, கால் என்று மனிதனுக்கு பெருமளவிற்கு உதவிசெய்கிற வளர்ச்சி ஏற்பட்டிருப்பினும் . . . அவையெல்லாம் உடல் உறுப்புக்கள் தங்கள் திறனை முழுமையாக இழந்தநேரத்தில்தான் பயன்படக்கூடிய உறுப்புக்கள்! இதை நாம் மறந்துவிடக்கூடாது. செயற்கை உறுப்புக்கள் தயாரிக்கிற நிறுவனங்களுக்கு அவற்றின் வணிகவெற்றியே அடிப்படை! மருந்துகள் தயாரிக்கிற பன்னாட்டு நிறுவனங்களின் நோக்கமும் அப்படியே! இன்று குக்கிராமங்களில்கூட . . . கொஞ்சம் காய்ச்சல், தலைவலி என்றாலும் . . . டோலோ, மெடாசின் என்று மருந்துக்கடைகளில் வாங்கி உண்ணும் பழக்கம் வளர்ந்துவிட்டது. பாட்டிகளுக்கும் தாத்தாக்களுக்கும் பேரன் பேத்திக் குழந்தைகள்கூட இதில் ''அறிவுரை'' கூறுகின்றனர். இஞ்சி, சுக்கு தேவை இல்லை!
இந்த ஒரு நிலையில் மனிதன் உருவாக்கிய செய்யறிவுத்திறன் மென்பொருள் மனிதனின் அனைத்து வேலைகளையும் செய்துவிடும் . . . கவலையே வேண்டாம் . . . சும்மாவே இருக்கலாம் என்ற ஒரு கருத்து வளர்ந்துவருகிறது!
முதலாளிகள் ''சும்மா'' இருக்கலாம் . . . ''சொகுசு மாளிகைகளில்'' !
தொழிலாளியின் நிலை . . . அவன் ''சும்மா இருப்பது'' என்பது அவனுக்கு ''வேலை இல்லை'' என்றுதான் பொருள்! அப்படியென்றால் அவன் வாழ்க்கை ஆதாரம் . . . ஊதியம் ? ராகுலசாங்கிருத்தியன் கூறியதுபோல . . . நிலக்கரியின் அதீத உற்பத்தியால், சுரங்கம் மூடப்பட்டு . . . நிலக்கரித் தொழிலாளிக்கு வேலையில்லாமல் . . . அவன் வீட்டில் அடுப்பெரிக்கக் கரி வாங்கப் பணம் இல்லை என்ற நிலைதான்!
தொழிலாளிகளைப்பற்றிக் கவலை இல்லாமல் . . . லாபம் ஒன்றையே அடிப்படையாகக்கொள்கிற முதலாளிக்கு . . . ஆட்குறைப்பு செய்தால் லாபம் என்று தோன்றலாம்! ஆட்குறைப்பு செய்யலாம்! ஆனால் முதலாளித்துவம் உற்பத்தி செய்த பொருள்களை யார் வாங்குவது? தொழிலாளிகளுக்கு வேலை இல்லையென்றால் . . . ஊதியம் இல்லையென்றால் . . . அவன் எப்படி பொருள்களை வாங்கமுடியும்? வாங்கும்சக்திதான் அவனிடம் இல்லாமல் போய்விடுமே!
ஆனால் இந்த நிலை முதலாளித்துவத்தில் தொடர்ந்து நீடிக்கமுடியாது. கணினிசார்ந்த இயந்திரங்களுக்கான முதலாளிகளின் முதலீடு அதிகமாக அதிகமாக . . . தொழிலாளிகளின் கூலிக்கான ''மூலதனம்'' குறையக் குறைய, ஒட்டுமொத்த லாபவிகிதம் குறைந்துவிடும்! ஒரு கட்டத்தில் உற்பத்திக் குறைக்கப்படும்! இது முதலாளித்துவத்திற்கு ஒரு பெரிய நெருக்கடியை உருவாக்கும். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட இதுபோன்ற நெருக்கடிகளை . . . அப்போதைய ஏகாதிபத்திய வளர்ச்சியானது தற்காலிகமாகக் காலனிநாடுகளில் தங்களது சுரண்டலை அடிப்படையாகக்கொண்டு சமாளித்தது. ஆனால் அந்த ''பாதுகாப்பு வால்வு'' இப்போதைய சூழலில் ஏகாதிபத்தியத்திற்குக் கிடையாது! இதைத்தான் காரல் மார்க்சும் எங்கல்சும் லெனினும் தெளிவாகக் கூறிச்சென்றுள்ளார்கள்!
ஆனாலும் தற்காலிகமாக . . . ஏகாதிபத்தியங்கள் இந்தச் செய்யறிவுத் திறனுக்குத் தேவைக்கு அதிகமான ''முக்கியத்துவம்'' அளித்துவருகிறார்கள்! எங்கு பார்த்தாலும் ''செய்யறிவுத்திறன்'' பற்றியே பேச்சு! மிக அதிகமான விளம்பரங்கள்! ஆனால் இதனால் ஏற்படும் உழைக்கும் வர்க்கங்களுக்கான ''பாதிப்பு'' பற்றிய பேச்சே இல்லை! இது ஒரு மிகவும் கவலை தருகிற ஒரு உண்மை!
''எதையும்'' செய்யறிவுத்திறன் செய்யும் என்ற ஒரு ''மாயை'' மிக வேகமாக . . . கோவிட் நோயைவிட மிக வேகமாகப் பரவிவருகிறது! இதுபற்றிய ஆழமான ஆய்வை முற்போக்காளர்கள் செய்யவேண்டும்! இந்தச் ''செய்யறிவுத் திறனை'' பயன்படுத்துவதை ஆதரிக்கிற நேரத்தில் . . . அதனை ''ஏகாதிபத்தியப் பன்னாட்டு நிறுவனங்கள்'' எவ்வாறு, எதற்காகப் பயன்படுத்து- கிறார்கள் என்பதுபற்றிச் சிந்திக்கவேண்டும்!
ஒரு முற்போக்குச் சிந்தனையாளன் அறிவியலுக்கு எதிரானவன் இல்லை! ஆனால் அதே நேரத்தில் ஏகாதிபத்தியப் பன்னாட்டு நிறுவனங்கள் அளவுக்குமீறி அதற்குக் கொடுக்கிற ''முக்கியத்துவத்தின்'' பின்னணியைத் தெளிவாக எடுத்துக்கூறவேண்டும்! அவனும் இந்த ''மாயையில்'' சிக்கிவிடக்கூடாது! கவனம் தேவை!
''செய்யறிவுத் திறன் '' என்ற செயற்கைமூளையை உருவாக்கியது மனிதமூளையே! ஒருபோதும் மனிதமூளைக்கு . . . அது உருவாக்கிய ''செயற்கைமூளை'' ஈடாகாது! எனவே மனிதனை . . . மனிதமூளையை . . . பின்தள்ளி, ''செய்யறிவுத்திறன் மூளையை'' முன்னிலைப்படுத்தும் போக்கை மிகக் கடுமையாக எதிர்க்கவேண்டும்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India