தமிழ்
என்றால் எந்தத் தவறும் செய்யலாம் தமிழ்நாட்டில்!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
விளம்பரப் பலகைகளில் ஆங்கிலம் என்றால், ஒரு தவறும் இல்லாமல் எழுதுகிறார்கள் ... குறிப்பாகப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில்! ஏதாவது
தவறு என்று என்றால் 'ஐயையோ' என்று 'பதறி' உடனே திருத்திவிடுகிறார்கள்! இல்லையென்றால் ''நம்மைப் படிக்காதவர்கள்'' என்று மற்றவர்கள்
சொல்லிவிடுவார்கள் என்ற ஒரு அச்சம்!
ஆனால்.... தமிழ் என்றால்! தவறுகள் செய்யலாம்!
யாராவது கேட்டால் ... ''எனக்குத் தமிழ் சரியாக வராது'' என்று 'பெருமையுடன்' சொல்லிக்கொள்ளலாம்!
இதுதான் தமிழகத்தின் இன்றைய நிலை!
சென்னை அடையாறில் உள்ள IIT ( Indian
Institute of Technology) வளாகத்தின் முகப்பில் கொட்டை
எழுத்துக்களில் எழுதியுள்ளார்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும்! தமிழில் '' இந்திய தொழில்நுட்ப நிறுவனம்'' என்று
எழுதப்பெற்றுள்ளது! வழக்கம்போல ... தமிழாசிரியர் ''பார்வையில்''
அதைப் பார்த்தேன். ''இந்தியத் தொழில்நுட்ப
நிறுவனமா'' அல்லது ''இந்திய
தொழில்நுட்ப நிறுவனமா?'' என்று! ''இந்திய''
என்பதற்குப் பிறகு ''த்'' ஒற்று வருமா வராதா என்ற ஒரு ஐயம் ! வரவேண்டும் என்றுதான் எனது ''தமிழறிவுக்குத்'' தோன்றியது! இருந்தாலும் எனக்கு
ஐயம் நீடித்தது.
பேராசிரியர் பொற்கோ அவர்களைத் தொடர்புகொண்டு, ''எது ஐயா சரி '' என்று கேட்டேன். அவர் உடனே ''அதில் என்ன ஐயம்? உறுதியாக வரவேண்டும்'' என்று கூறினார்.
ஆங்கிலத்தில் ஏதாவது தவறு செய்வார்களா .. அதுவும்
இதுபோன்ற உயர் கல்வி நிறுவனத்தார்கள்! ஆனால் தமிழ் என்றால் ? ''இந்த அளவிற்காகவாவது தமிழில் எழுதியுள்ளார்களே என்று
பாராட்டுவதைவிட்டுவிட்டு, ஒற்றுப்பிழைகளையெல்லாம் கணக்கில்
கொள்ளலாமா என்று கூட சிலர் நண்பர்கள் கேட்கலாம்!
ஒரு மிகப்பெரிய கல்வி நிறுவனத்தில் இவ்வாறு
தவறு செய்யலாமா?
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வாசு
ரங்கநாதன் (அமெரிக்கா)
சொல்லொனியல் (Lexical
Phonology) மற்றும் ஆளுமைக் கோட்பாடு (Government and
Binding) ஆகிய மொழியியற் கோட்பாடுகளிலும் ஒற்று மிகுதல் குறித்துச்
சில விளக்கங்கள் இருக்கின்றன. எந்தப் பெயரிலும் கடைசி எழுத்தை நீக்கிப் பெயரடை
உருவாக்கினால் விடுபட்ட எழுத்து ஒரு வெற்றிடத்தை உருவாக்குகிறது. அதனால் அங்கு
கட்டாயமாக ஒற்று மிகும். எடுத்துக்காட்டாக, மரம் >
மர > மரப் பெட்டி; பழக்
கடை போன்றவை. இந்தியத் தொழிற் நுட்ப நிறுவனம் என்பதும் இதில் அடங்கும். அதே போன்று
ஒரு பெயரடையை ஒரு பெயரிலிருந்து வேரில் ஒரு மாற்றத்தோடு ஏற்படுத்தினால் அங்கு
ஒற்று மிகும். அது > அந்த > அந்தப்
பையன். ஆனால் பல, சில, பெரிய, சிறிய போன்றவை அப்படி அல்ல. அவற்றைப் பெயரடையாகவே அகராதியில் காண்கிறோம்.
அதனால் அவற்றுக்கு முன் ஒற்று மிகாது. இன்னொரு இடம் க்கு, ஐ
வேற்றுமைக்கு முன்னாலும் ஆக, ஆய் வினையடை முன்னும் கட்டாயம்
ஒற்று மிகும். இதற்குக் காரணம் அத்தகைய பெயர்த் தொடர்களும் வினையடையும் வினைக்கு
நேரடிக் கட்டுப்பாட்டில் அமைகின்றன. நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் அடைகளுக்கு
முன் ஒற்று மிகும் சூழலில் இருந்தால் அங்கு மிகும். இதன் அடிப்படையில்தான்
பார்த்து, கேட்டு போன்ற வினையெச்சத்துக்கு முன் ஒற்று மிகும்
நிலையும். செய்து, வந்து போன்றவற்றில் மிகாது. ஏனெனில் ந்து,
து போன்றவை மெல்லொலிக் கூட்டுகள். ட்டு, த்து
போன்றவை வல்லொலிக் கூட்டுகள். அங்கு, இங்கு பொன்றவையும்
அப்படியே. இவை மெல்லொலிக் கூட்டு கொண்டவை.
ஒரு நண்பர் பாடநூல் சரியா, பாட நூல் சரியா? பயிற்சிப் புத்தகம் சரியா? பயிற்சிப்புத்தகம் சரியா என்று கேட்டார். மேற்படி விதியின் படி பாடம்
என்பதிலிருந்து பாட என்று வருகிறது. அந்த வெற்றிடத்தை முழுமை செய்ய பாடநூல் என்றே
எழுதவேண்டும். பாட நூல் என வெற்றிடத்தோடு எழுதுவது சரியல்ல. ஆனால் பயிற்சிப்
புத்தகம் என்பதில் அப்படி வெற்றிடம் ஏற்படுவதில்லை அதனால் இடைவெளி வேண்டும்.
(பழக்கடை, கடை வீதி...).
இப்படி தொல்காப்பிய விதிகள் மட்டுமன்றி
இக்கால இலக்கணங்களின் அடிப்படையிலும் தமிழுக்குச் சரியான விதிமுறைகளைக் கொடுத்து
ஒவ்வொரு தவறுக்கும் அடிப்படைக் காரணத்தைக் கொடுக்காவிடில் தமிழில் தொடர்ந்து
தவறுகளைக் காணத்தான் வேண்டியிருக்கும். என்னுடைய இக்காலத் தொல்காப்பிய மரபு நூலில்
இதை முயற்சித்திருக்கிறேன். அரசு மற்றும் பல்கலைக் கழகங்கள் தமிழின் சரியான நிலையை
உறுதிப்படுத்தித் தவறாகப் பயன்படுத்தினாலோ திரைப்படங்கள், பொது இடங்கள் போன்ற இடங்களில் அவதூறாகத் தமிழைப் பயன்படுத்தினாலோ அதற்கான
தண்டனையைக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும். இல்லையெனில் இத்தகைய தவறுகள்
நீடிக்கத்தான் செய்யும்.
ஆங்கிலத்தில் எந்த நிலையில் தவறு செய்தாலும்
அதற்கான தண்டனை அவர்களுக்கு நேராகவோ மறைமுகமாகவோ கிடைக்கிறது. பள்ளியில் மாணவர்கள்
ஆங்கிலத்தில் தவறு செய்தால் அவர்களுக்குச் சரியான மதிப்பெண் கிடைப்பதில்லை.
கட்டுரையில் சரியான ஆங்கிலம் இல்லையெனில் எந்த ஆய்வேடும்
ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இப்படி சரியான தமிழுக்கும் ஒரு முறைமையை
ஏற்படுத்தவேண்டிய கட்டாய நிலையில் நாம் இருக்கிறோம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக