தமிழ்மொழி அமைப்பின் வியக்கத்தக்க கணிதப் பண்புகள்! ( தமிழ் மாணவர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் கவனத்திற்குமட்டும்!)
---------------------------------------------------------------------------------------------------------
தமிழில் எழுத்துகள் அல்லது ஒலியன்கள் (Phonemes) சொல்லாக அமையும்போது, அசைகளாக (Syllables) அமைந்து, பின்னர்தான் சொல்லாக (Morphemes/ Words) அமைகிறது. அதாவது தனி எழுத்துகளுக்கும் சொல்லுக்கும் இடையில் அசை என்ற ஒரு அமைப்பு நிலவுகிறது. இது யாப்பு அசை (Prosodic syllable) இல்லை. மொழி அசை (Linguistic syllable) ஆகும். ஒரு அசையின் உயிர்நாடி (Peak) , அதில் இடம்பெறுகிற உயிர் ஒலியாகும். அதற்கு முன்னரும் ( Onset) பின்னரும் (Coda) மெய்கள் வரலாம். மெய்கள் இல்லாமல் உயிர்மட்டுமே அசையாக அமைந்து சொல்லாக அமையலாம். ஆனால் மெய்கள் தனித்து வரமுடியாது.
மெய்கள் உயிருக்கு முன்னும் பின்னும் வரும்போதும் அவற்றின் வருகைக்குக் கட்டுப்பாடு உண்டு. ஒரு அசையில் உயிருக்கு முன்னர் தொடக்கத்தில் ஒரு மெய்தான் வரலாம். ஆனால் ஆங்கிலத்தில் இரண்டு , மூன்று மெய்கள் வரலாம் ( plot, sprint ). தமிழில் அசையின் இறுதியில் பொதுவாக ஒரு மெய்தான் வரும். இரண்டு மெய்கள் வந்தால், அவற்றின் முதல் எழுத்து ய், ர், ழ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்கமுடியும் ( வாய்க்-கால், பார்க்-கிறேன், வாழ்த்-து) .
ஒரு அசையின் இறுதியில் ஒரு குறிப்பிட்ட மெய் வரும்போது, அதற்கு அடுத்த அசையின் தொடக்கமாக எந்த மெய் வரலாம் என்பதற்குத் தமிழில் தெளிவான கட்டுப்பாடு உண்டு. இதைத்தான் இலக்கண ஆசிரியர்கள் மெய்மயக்கம் ( உடன்நிலை மெய்மயக்கம், வேற்றுநிலை மெய்மயக்கம் - Phonotactics) ) என்று அழைக்கிறார்கள்.
அதுபோல, ஒரு தமிழ்ச்சொல்லில் முதல் அசையில் தொடக்கமாக மெய் வராமல் இருக்கலாம் ( இ-லை, ஆ -டு). ஆனால் பிற அசைகளில் கண்டிப்பாக மெய் வரவேண்டும். எடுத்துக்காட்டாக, 'இ - லை ' + 'ஆ' = இ-லை-ஆ) ' என்று வரக்கூடாது. 'இ -லை-யா' என்று மூன்றாவது அசையில் உடம்படுமெய் வரவேண்டும். தமிழ் அசையின் விதிக்கு உட்பட்டு ஒரு சொல் அமையவேண்டும் என்பதற்காகத்தான் உடம்படுமெய்களே வருகின்றன. தனிக்குறிலை அடுத்து ஒற்று இரட்டிப்பதும் இதற்காகத்தான். 'கல் - ஐ' என்பதற்குப் பதிலாக 'கல் -லை' என்றுதான் சொல் அமையவேண்டும். இதுபோன்று மற்றொரு விதி, தமிழில் சொல்லின் முதல் அசையில் உயிருக்கு அடுத்து 'ர்' வரக்கூடாது. எனவேதான் 'அர்த்-தம்' என்பதை நாம் 'அ -ருத் -தம்' என்று மாற்றி அமைக்கிறோம். அதனால்தான் 'ஒரு + ஆயிரம்' என்பது 'ஓராயிரம்' என்று மாறி அமைகிறது. இவைபோன்று தமிழ் அசை அமைப்பிற்குத் தெளிவான விதிகள் உண்டு.
அடுத்து, சந்தி அல்லது புணர்ச்சி விதிகள். ஒரு பெயரும் வல்லினத்தில் தொடங்கும் மற்றொரு பெயரும் இணையும்போது இடையில் நிச்சயமாக ஒரு வல்லின ஒற்று மிகும். 'வகுப்பு + பாடம் = வகுப்புப்பாடம்' ; 'எலி+ பொந்து = எலிப்பொந்து' ; இவற்றில் சொல் இறுதியில் உயிர்கள் வந்துள்ளன.
ஆனால் சொல் இறுதியில் மெய்கள் வந்தால் ? வல்லின ஒற்றுகள் சொல் இறுதியில் தமிழில் வராது. மெல்லின எழுத்துகளான ண், ன், ம் ஆகிய மூன்றும் இடையின எழுத்துகளான ய், ர், ல், ள், ழ் ஆகியவையும் வரலாம்( வ் என்பது வேறு) . இந்த எட்டு மெய்களும் நிலைமொழிகளின் இறுதியாக வந்து, வருமொழியில் வல்லினம் வந்தால், என்ன நடக்கிறது?
மரம் + பலகை = மரப்-பலகை ( 'ம்' மறைந்து 'ப்' மிகுகிறது)
வாய் + பந்தல் = வாய்ப்-பந்தல் ( 'ய்' மறையாமல், 'ப்' மிகுகிறது)
போர் + களம் = போர்க்-களம் ('ர்' மறையாமல், 'க்' மிகுகிறது)
தமிழ் + பாடம் = தமிழ்ப்-பாடம் ( 'ழ்' மறையாமல் , 'ப்' மிகுகிறது).
மேற்கண்ட எல்லா எடுத்துக்காட்டுகளிலும் தமிழ் அசை அமைப்பு விதிகள் மீறப்படவில்லை. 'ய்ப்' 'ர்க்' 'ழ்ப்' என்பவை அசையின் முடிவில் வரலாம்.
ஆனால் ண், ன், ல், ல் ஆகிய மெய்கள் சொல் இறுதியில் வந்தால் ? வல்லினம் மிகுமா? மிகாது.
மண் + குடம் = மண்க்குடம் *
பொன்+ குடம் = பொன்க்குடம்*
கல்+பானை = கல்ப்பானை*
முள் + பாதை = முள்ப்பாதை*
ம்அண் - க்க்உ-ட்அம் என்று அமையும்போது இரண்டாவது அசையின் தொடக்கமாக இரண்டு மெய்கள் வருகின்றன. அசையின் தொடக்கத்தில் தமிழில் இரண்டு மெய்கள் வராது. எனவே அது தவறு.
சரி, இரண்டாவது அசையின் தொடக்கத்தில் உள்ள 'க்க்' என்ற இரண்டு மெய்களில் ஒரு மெய்யை முந்தைய அசையின் இறுதியாக வைத்தால் என்ன? இதுவும் தமிழ் அசை விதிக்கு மாறானது. ஒரு அசையின் இறுதியில் இரண்டு மெய்கள் வந்தால், அவற்றின் முதல் மெய் ய், ர், ழ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுதான் வரவேண்டும். 'ண்' 'ன்''ல்' 'ள்' வரக்கூடாது.
அதுபோன்றே ப்ஒன்-க்க்உ-ட்அம் என்றும் க்அல்-ப்ப்ஆ-ன்ஐ என்றும் ம்உள்-ப்ப்ஆ-த்ஐ என்றும் மேற்குறிப்பிட்ட சொற்கள் அமையும்போது, தமிழ் அசையமைப்பு விதிகள் மீறப்படுகின்றன.
அசை அமைப்பு விதியையும் மீறக்கூடாது. புணர்ச்சி விதியையும் மீறக்கூடாது. அதாவது வருமொழியில் வல்லினம் வரும்போது, பெயர்த்தொகையில் நிலைமொழியின் இறுதி மெய் வல்லினத் தன்மை பெறவேண்டும். வல்லின ஒற்று வருவதற்குப்பதிலாக, நிலைமொழியின் இறுதி மெல்லின , இடையின மெய்கள் தாங்களே தங்களுக்கு இனமான வல்லினங்களாக மாறி அமைந்துவிடுகின்றன.
ண், ள் ----> ட் ; ன், ல் ----> ற்
மண் + குடம் = மட்குடம் ; ' பொன் + குடம் = பொற்குடம்;
கல் + பானை + கற்பானை ' முள் + பாதை = முட்பாதை ;
இதை இலக்கண ஆசிரியர்கள் 'திரிதல்' என்று அழைக்கிறார்கள். ஏன் இந்தத் திரிதல் எற்படுகிறது என்பதற்கே மேற்கூறிய விளக்கம்.
இங்குத் தமிழின் அசை அமைப்பு விதியும் காப்பாற்றப்படுகிறது. புணர்ச்சி விதியும் பின்பற்றப்படுகிறது.
தமிழ்மொழி அமைப்பின் கணிதப் பண்புக்கு இது ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. கணினிமொழியியல் நோக்கில் தொகைகளைப்பற்றிய அறிவைக் கணினிக்குக் கொடுக்க முயற்சித்தபோது, இந்தத் தெளிவு எனக்குக் கிடைத்தது. அதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். ஏற்கனவே நமக்குத் தெரிந்த மெய் திரிதல் என்பதற்கு மொழியியல் நோக்கில் - குறிப்பாக Optimality Theory என்ற மொழிக்கோட்பாட்டின் அடிப்படையில் இந்த விளக்கம் சரியாக இருக்கிறது.
நண்பர்கள் தங்கள் கருத்துகளைத் தந்தால் பயனுள்ளதாக இருக்கும்.