தமிழ் எழுத்துகளின் ( Graphemes) அடிப்படையைத் தெரிந்துகொள்வதற்குமுன், தமிழின்
ஒலியனியல் அடிப்படைகளைத் (
Phonology) தெரிந்துகொள்வது பயன்படும்.
பேச்சொலிகள் ( Phones) , ஒலியன்கள்(
Phonemes) , மாற்றொலிகள் (
Allophones) , கட்டில்லா ஒலிகள் ( Free variations) என்று சில துறைசார் கலைச்சொற்கள் மொழியியலில் உண்டு.
தமிழில் கப்பல், அக்கா, தங்கம், பகல் என்ற நான்கு சொற்களை எடுத்துக்கொள்வோம். கப்பல்,
அக்கா என்ற இரண்டு சொற்களிலும் வருகிற 'க' என்ற எழுத்து [k] என்ற பேச்சொலியைக் குறிக்கிறது. தங்கம் என்ற சொல்லில்
வருகிற க எழுத்து, [g] என்ற பேச்சொலியைக் குறிக்கிறது. பகல் என்ற சொல்லில்
வருகிற க எழுத்து [x] என்ற பேச்சொலியைக் குறிக்கிறது.
இந்த மூன்று பேச்சொலிகளையும் தமிழில் ஒரு தொகுதியாகக் கருதலாம். அதற்கு அடிப்படை,
மூன்றும் ஒலியியல் அடிப்படையில் ( Phonetics) - பிறப்பியல் அடிப்படையில்- ஒற்றுமை உடையவை
( Phonetic similarity) . மூன்றுமே கடையண்ண ஒலி ( Velar sounds) . மூன்றுமே தடையொலி
( Stop) . ஒரே ஒரு கூறில் வேறுபாடு உண்டு.
முதல் பேச்சொலி [k] ஒலிப்பிலா ஒலி (
Voiceless sound) . இரண்டாவது பேச்சொலி [g] , ஒலிப்புள்ள ஒலி ( Voiced sound) . மூன்றாவது
பேச்சொலி [x] உரசல்தன்மை கொண்டது.
இவ்வாறு இவை வேறுபடுவதற்குக் காரணம், அவை வருகின்ற மொழிச்சூழல். முதல் ஒலி சொல்
முதலிலும், சொல் நடுவில் இரட்டித்துவரும்போதும் வரும். இரண்டாவது ஒலியானது, சொல் நடுவில்
ஒலிப்புள்ள ஒலிக்குப் பின்னர் வரும். மூன்றாவது ஒலியானது, இரண்டு உயிர்களுக்கு இடையில்
வரும். இவ்வாறு ஒலி ஒற்றுமையுடைய இந்த மூன்று பேச்சொலிகளின் வருகையைத் தெளிவாகக் கூறமுடிகிற
காரணத்தினாலும், வருகின்ற மொழிச்சூழல் காரணமாகத்தான் அவை வேறுபடுகிற காரணத்தினாலும்
இந்த மூன்று பேச்சொலிகளும் ஒரே தொகுதியாக ஆராயப்படுகிறது. தொகுதிக்குப் பெயர் ஒலியன்.
ஒலியனின் மூன்று வேறுபடும் பேச்சொலிகளும் மாற்றொலிகள்.
க போன்று ச , ட , த, ப, ற ஒலியன்களுக்கும் மாற்றொலிகள் உண்டு.
ச - சட்டம் - பச்சை - தசை ( 3 மாற்றொலிகள்)
ட - பட்டம் - படம் ( 2 மாற்றொலிகள்)
த - தட்டு, பத்து - பந்து - காது (
3 மாற்றொலிகள்)
ப - படம் , அப்பா - கம்பம் - கபம்
( 3 மாற்றொலிகள் )
ற - அறம் - குற்றம் ( 2 மாற்றொலிகள்
)
ங, ஞ, ண, ந , ம, ன , ய , ர , ல , வ , ழ , ள ஆகிய 12 ஒலியன்களுக்கும் ஒன்றுக்கு
மேற்பட்ட மாற்றொலிகள் கிடையாது. ஆகவே தமிழில் மெய் ஒலியன்கள் 18 . அவற்றில் வல்லின
ஒலியன்களுக்கு மொத்தம் 16 மாற்றொலிகள் உள்ளன.
உயிர் ஒலியன்கள் 12 . இவற்றில் இ , உ ஆகிய இரண்டுக்கும் தலா இரண்டு மாற்றொலிகள்.
இ - ஒன்று இகரம் , மற்றொன்று குற்றியலிகரம். குற்றியலிகரம் புணர்ச்சியில்மட்டுமே வரும்.
உ - ஒன்று முற்றுகரம் , மற்றொன்று குற்றியலுகரம். குற்றியலுகரம் சொல்லின் இறுதியில்
வல்லின ஒலியன்களோடு இணைந்துதான் வரும். ஓரசைச் சொல்லில் குறிலை அடுத்துவரும் வல்லின
ஒலியனோடு முற்றியலுகரம் மட்டுமே வரும் ( ' மடு ' ) . ' மாடு ' என்ற சொல்லில் வரும்
உகரம் குற்றியலிகரம். ஏனென்றால் அது நெடிலை அடுத்து வரும் வல்லின ஒலியனோடு இணைந்து
வருகிறது.
ஃ - ஆய்தம் சொல் நடுவில் வல்லின ஒலியன்களோடு இணைந்து, அவற்றிற்கு ஒருவித உரசல்
தன்மையை அளிக்கும். தனித்து வராது ( ' அஃது ' , எஃகு, )
தமிழில் ஒலியன்களுக்கு ( Phonemes)
மட்டுமே வரிவடிவம் ( Graphemes) உண்டு.
ஆய்தம் மட்டும் விதிவிலக்கு. எடுத்துக்காட்டாக, க என்ற எழுத்து க என்ற ஒலியனைக் குறித்து
நிற்கிறது. க ஒலியனுக்கு மூன்று மாற்றொலிகள் உண்டு என்று பார்த்தோம். இவை மூன்றுக்குமே
ஒரே எழுத்து. சொல்லில் க எழுத்து வரும் இடத்தை அடிப்படையாகக்கொண்டு, நாம் க ஒலியனின்
எந்த மாற்றொலியைக் குறிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
எனவே தமிழில் 12 உயிர் ஒலியன்களுக்கும் 18 மெய் ஒலியன்களுக்கும் வரிவடிவம்
, அதாவது எழுத்து வடிவம் உள்ளது. ஆய்த எழுத்து மட்டும் விதிவிலக்கு.
இந்தியில் [k], [g], [x] ஆகிய மூன்றும்
தனித்தனி ஒலியன்கள். எனவே அங்கு அவற்றிற்குத் தனித்தனி வரிவடிவமும் - எழுத்தும் - உள்ளது.
எனவே இந்தியில் தனித்தனி எழுத்துகள் இருக்கும்போது, தமிழில் மட்டும் அவ்வாறு இல்லையே
என்று நாம் நினைக்கக்கூடாது. இந்த மூன்று ஒலிகளும் தமிழ், இந்தி இரண்டிலும் இருந்தாலும்,
தமிழில் அவை ஒரே ஒலியனின் மாற்றொலிகளாக அமைந்துள்ளன. இந்தியில் அவை தனித்தனி ஒலியன்களாக
அமைந்துள்ளன.
தமிழில் ஒலியன்களுக்கு மட்டுமே எழுத்து உண்டு. மாற்றொலிகளுக்கு இல்லை.
இவை போக, அளபடைகள், குறுக்கங்கள் போன்ற பேச்சொலிகளும் பண்டைத் தமிழ் இலக்கியங்களில்
வரும். இவற்றிற்கும் தனி எழுத்து வடிவம் கிடையாது.
அடுத்து, மெய் ஒலியனும் உயிர் ஒலியனும் இணைந்து அசையாக ( Syllables) வரும்போது, மெய் ஒலியனுக்கு உரிய வரி
வடிவத்தோடு, உயிர் ஒலியனுக்கு உரிய வரி வடிவம் வராமல், துணை வரிவடிவங்களை (
Allographs) வரும். க் என்ற மெய் ஒலியனோடு இ என்ற உயிர் ஒலியன் வரும்போது,
கஇ என்று வராமல் கி என்று வரும். ஒவ்வொரு உயிர் முதன்மை வரி வடிவத்திற்கும் (
graphemes) ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட துணை வரிவடிவங்கள் ( allographs) உண்டு.
அ - மெய் மீது உள்ள புள்ளி மறைவதே துணைவடிவம்
ஆ - மெய்யோடு ா துணைவடிவம் வரும்.
இ - மெய்யோடு ி துணைவடிவம் வரும்
( கி, டி,)
ஈ - மெய்யோடு ீ துணைவடிவம் வரும்.
( கீ, டீ )
உ - மெய்யோடு ு துணைவடிவம் வரும்.
( கு, து, பு, டு )
ஊ - மெய்யோடு ூ துணைவடிவம் வரும்
( கூ , சூ)
மேற்கூறிய ஐந்திலும் உயிரின் துணைவடிவங்கள் மெய் வரிவடிவத்திற்குப் பின்னர்
வரும். அசையின் உச்சரிப்பில் மெய் , அதையடுத்து உயிர். அதுபோலவே வரிவடிவங்களும் வருகிறது.
எ - மெய்யோடு ெ துணைவடிவம் வரும் (
கெ , செ, )
ஏ - மெய்யோடு ே துணைவடிவம் வரும்
( கே, சே)
ஐ - மெய்யோடு ை துணைவடிவம் வரும்.
( கை, சை)
மேற்கூறிய மூன்றிலும் அசையின் உச்சரிப்பு வரிசையில் மெய், உயிர் வரிவடிவங்கள்
அமையவில்லை. மெய் வரிவடிவத்திற்கும் முன்னர் உயிர் துணைவரிவடிவம் வருகிறது .
ஒ - மெய்யோடு ொ துணைவடிவம் வரும்.
( கொ, சொ)
ஓ - மெய்யோடு ோ துணைவடிவம் வரும்.
( கோ, சோ)
ஔ - மெய்யோடு ௌ துணைவடிவம் வரும்.
( கௌ, சௌ)
மேற்கூறிய மூன்றிலும் உயிரின் துணைவடிவமானது இரண்டாகப் பிரிந்து, முன்பகுதி
மெய் வரிவடிவத்திற்கும் முன்னரும், மற்றொரு பகுதி அதற்குப் பின்னரும் வருகிறது.
மேற்கூறியவற்றில் உ, ஊ ஆகிய இரண்டுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட துணைவடிவங்கள்
உள்ளன. ( கு, சு, டு, து, பு, று ....) ( கூ, சூ, டூ, தூ, பூ, றூ ...)
பழந்தமிழில் ஆ , ஐ ஆகியவற்றிற்கும் இதுபோன்று ஒன்றுக்கு மேற்பட்ட துணைவடிவங்கள்
இருந்தன. பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்தின் அடிப்படையில் தற்போது ஒரே வடிவமாக மாற்றப்பட்டுள்ளது
.
மெய்யும் உயிரும் இணைந்த தொகுதி அசை என்று அழைக்கப்படுகிறது. எனவே தமிழில் தனி
ஒலியன்களுக்கும் வரிவடிவம்( Phonemic scripts) - எழுத்து - உண்டு. மெய்யும் உயிரும்
இணைந்த உயிர் மெய் அல்லது அசைக்கும் எழுத்து உண்டு. இதை அசையெழுத்து( Syllabic
scripts) என்றழைப்பர்.
எனவே தமிழில் 30 ஒலியன்களுக்கும் எழுத்து. 18 x 12 = 216 அசைகளுக்கும் எழுத்து.
ஆய்தம் தனி எழுத்தைக் கொண்டுள்ளது. ஆகவே மொத்தம் தமிழில் 247 எழுத்துகள்.
தொல்காப்பியர் தனது எழுத்து அதிகாரத்தில் அகரம் முதல் னகரம் இறுதி மொத்தம் 30 எழுத்துகள் - அதாவது ஒலியன்கள்
- என்றே கூறுகிறார். குற்றியலுகரம், குற்றியலுகரம், ஆய்தம் ஆகிய மூன்றையும் அவற்றோடு
சேர்க்காமல் ' சார்ந்துவரல் மரபின் ' என்று கூறுகிறார். அளபடைகள், குறுக்கங்கள் ஆகியவற்றை
மேற்கூறிய இரண்டிலும் சேர்க்காமல் தனியே - அல் எழுத்துகளாக (அதாவது ஒலியன்கள் அல்லது
மாற்றொலியன்களாக இல்லாமல்) கருதுகிறார். தொல்காப்பியர்
காலத்திலேயே ஒலியன்களுக்கு மாற்றொலிகள் இருந்தாலும், அவற்றிற்குத் தனி வரிவடிவங்கள்
கிடையாது. ஒலியன்கள், அசைகள் ஆகியவற்றிற்கே எழுத்து வடிவம் உண்டு.
இதைச் சிலர் புரிந்துகொள்ளாமல், இந்தியில் நான்கு க எழுத்துகள் இருக்கின்றதே,
அதுபோல தமிழிலும் மூன்று க மாற்றொலிகளுக்கும் தனித்தனி எழுத்துகள் அமைத்தால் என்று
எண்ணுகிறார்கள். அது தவறு. தமிழ் எழுத்துகளுக்கு மிகச் சரியான அறிவியல் அடிப்படை உள்ளது.
எழுத்துகள் இல்லாத மொழிகளில் எழுத்துகளை உருவாக்க மொழியியலார்கள் முயற்சிக்கும்போது,
ஒலியன், அசை போன்ற ஆய்வை நிகழ்த்தி, அதன் அடிப்படையில் தான் எழுத்துகளை உருவாக்குகிறார்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.
பிறமொழித் தாக்கத்தால் பழந்தமிழில் சில மாற்றங்கள் உருவாக்கப்பட்டன. தமிழில் [ j ] என்ற
மாற்றொலியானது ச என்ற ஒலியனின் மாற்றொலியாகும். ஆனால் வடமொழியில் [ j } என்பது
தனி ஒலியன். எனவே அச்சொற்களைக் கடன் வாங்கும்போது, அந்த ஒலியனும் சேர்த்து கடன் வாங்கப்பட்டது.
ஆனால் அது தமிழ் ஒலியன் இல்லை. பிறமொழி ஒலியனே. அதைக் குறிக்க தனி வரிவடிவம் - கிரந்த
வடிவம் - பயன்படுத்தப்பட்டது ஸ எழுத்தும் அப்படியே. . சில கூட்டொலிகளும் வடமொழியின்
தாக்கத்தால் தமிழில் இடம் பெற்றன.
வரலாற்றில் பிறமொழித் தாக்கத்தால் தமிழில் நுழைந்த சொற்களில் தமிழில் இல்லாத
ஒலியன்கள் இடம் பெற்றபோது, அவற்றைக் குறிக்க கிரந்த எழுத்துகள் பயன்படுத்தப்பட்டன.
கிரந்த எழுத்துகள் வருகிற சொற்கள் எல்லாம் தமிழில் எழுதப்பட்டாலும் அவை தமிழ்ச்சொற்கள்
இல்லை. பிறமொழிச்சொற்களே. ஜாதி, ஜன்னல், ஷர்ப்பம், குஸ்தி, ரிக்ஷா, ஹோமம், ஸ்ரீராமன்
போன்ற சொற்கள் தமிழ்ச்சொற்கள் இல்லை.
இன்று இதுபோன்று வேறு பல பிறமொழிச் சொற்கள் தமிழில் நுழைந்துள்ளன. அதன் விளைவாகப்
பிறமொழிகளின் ஒலியன்கள் தமிழில் நுழைகின்றன. அவற்றைக் குறிக்க மேலும் பல கிரந்த எழுத்துகளைப்
பயன்படுத்தினால் என்ன என்று சிலர் கேட்கத் தொடங்குகிறார்கள். இது தவறான கருத்து. அது
ஒரு மொழியின் அமைப்பைச் சீரழிப்பது ஆகும்.
பிற மொழிச் சொற்களைத் தமிழ்மயப்படுத்தி, பயன்படுத்தலாம். இல்லையென்றால் அச்சொற்களை
அந்த மொழியின் எழுத்துகளிலேயே எழுதலாம். அந்த மொழியில் உச்சரிப்பதுபோல அப்படியே எழுதவேண்டும்
என்றால், பன்னாட்டு ஒலியியல் கழகத்தின் குறியீடுகளைப் பயன்படுத்தலாம்.
இவ்வாறு செய்யாமல், தமிழ் எழுத்துகளின் அறிவியல் அடிப்படையைப் புரிந்துகொள்ளாமல்,
தமிழ் எழுத்துகளோடு புதிய கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தினால் என்ன என்று கேட்பது
சரியல்ல. அறிவியல்பூர்வமானது அல்ல.
ஒருங்குறி உள்ளீட்டில், தமிழ் எழுத்துவெளியில் புதிய கிரந்த எழுத்துகளுக்கும்
இடம் அளிக்கவேண்டும் என்று கூறுவதும் சரியல்ல. இது ஒரு மொழியின் அறிவியல் அடிப்படையைச்
சிதைப்பது ஆகும். மொழி என்பது வெறும் கருத்துப்பரிமாற்றக்
கருவி மட்டுமல்ல. ஒரு இனத்தின் அடையாளம். ஒரு இனத்தின் அடையாளத்தை அழிக்க, யாருக்கும்
உரிமை கிடையாது.
மேலும் தமிழில் நாம் பயன்படுத்தும் அத்தனை பேச்சொலிகளுக்கும் ( Speech
sounds - phones) தமிழில் வரிவடிவம் (
graphemes - scripts) கிடையாது. ஒலியன்களுக்கு மட்டுமே வரிவடிவம் உண்டு. தமிழில்
உள்ள பேச்சொலிகளைத் துல்லியமாக்க் கணக்கிட்டால் ஏறத்தாழ 96 பேச்சொலிகள் அமைந்துள்ளன.
பேச்சு - எழுத்து மாற்று மென்பொருள் ( Automatic Speech Recognizer - ASR) , எழுத்து
- பேச்சுமாற்றி மென்பொருள் ( Text to Speech -TTS ) ஆகியவற்றை உருவாக்கும்போது இந்த
உண்மை தெளிவாகப் புலப்படும். அதற்குப் பயன்படும்
வரிவடிவங்கள் பன்னாட்டு ஒலியியல் கழகத்தின்
குறியீடுகளாகும்.
3 கருத்துகள்:
vanakkam iyya, I am willing to join M.A linguistic through tamil. kindly guide me, i.e what are the university offering this course in distance mode, which university is best.
Annamalai University is the only one who is conductiong Linguistics course throuh Distance Education.
Good and useful informations
கருத்துரையிடுக