தமிழ்நாட்டு அரசியல் . . . 'மூளைகள்' பலியாக்கப்படுகின்றன!
------------------------------------------------------------------------------------------------------------
அண்மையில் கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் எதிர்பாராதவிதமாக 41 உயிர்கள் பலியாகியுள்ளது உண்மையில் மிக மிக வேதனைக்குரிய ஒன்று. குழந்தைகள்முதல் பெரியவர்கள்வரை . . . பலி! இந்த உயிர்களை இழந்த குடும்பத்தினருக்குக் கோடி கோடியே கொட்டிக்கொடுத்தாலும் அவர்களது இழப்புக்கு ஈடாகாது! இந்நிகழ்ச்சியை ஒவ்வொரு அரசியல் கட்சியும் வரும் தேர்தலை மனதில் வைத்து, லாவணி பாடிவருகிறது! இதற்குமேல் ஒரு படி . . . தமிழ்நாடு அரசு, காவல்துறை, உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், விசாரணைக்குழு, சிபிஐ என்று அரசு சார்ந்த அமைப்புகளும் இந்தப் பலிகளைப்பற்றித் ''தங்களுக்கே உரிய வகையில்'' கருத்து தெரிவித்துவருகின்றன!
தமிழ்நாட்டில் (மற்ற மாநிலங்களும் இதற்கு விதிவிலக்குகள் இல்லைதான்!) அரசியல் என்றாலே 'தேர்தல் அரசியல்மட்டும்தான்'!
சாதி, மதம், திரைப்படம் . . . இந்த மூன்றின் ஆதிக்கங்களே அத்தனை அரசியல் கட்சிகளிலும் நீடிக்கின்றன. இதற்குமேல் . . . போலி இந்தி எதிர்ப்பு (ஆங்கில ஆதரவு!) , 'செம்மொழித்தமிழ்' 'இலவசங்கள்' போன்றவையும் அரசியல் கட்சிகளால் 'பயன்படுத்தப்பட்டுவருகின்றன'. 'செம்மொழித் தமிழ் ' என்று நான் கூறுவதற்குக் காரணம், இன்றைய தமிழின் வளர்ச்சிபற்றி இங்கு யாரும் கவலைப்படுவதில்லை!
எந்தவொரு அரசியல் கட்சியும் இந்தியப் பொருளாதாரம்பற்றியோ, ஏகாதிபத்தியப் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம்பற்றியோ பேசுவது இல்லை! இன்னும் ஒருபடி மேலே சென்று, அரசுகளே பன்னாட்டு நிறுவனங்களுக்குச் 'சிவப்புக் கம்பளம்' விரித்து வரவேற்று வருகின்றன! மறுபுறம் சுதேசிக் கப்பல் நிறுவனத்தை ஆங்கிலேயர்களுக்கு எதிராக உருவாக்கிப் பல்வேறு இன்னல்களுக்கு உட்பட்ட வ உ சி -இன் நினைவுநாளையும் தவறாமல் போட்டி போட்டுக்கொண்டு கொண்டாடிவிடுகின்றன.
தேர்தலை மனதில்கொண்டு, அத்தனை சாதிகளின் மறைந்த தலைவர்களின் சிலைகளுக்கும் அவர்களின் பிறந்தநாளையொட்டி, மறக்காமல் ஆளுயர மாலைகளைப் போட்டிபோட்டுக்கொண்டு அணிவித்துவருகின்றன!
நாட்டின் உண்மையான அரசியல் பொருளாதாரம், விலைவாசி உயர்வு, வேலையில்லாத்திண்டாட்டம், பணவீக்கம் போன்ற உண்மையான பிரச்சினைகள்பற்றி எந்தவொரு கட்சியும் பேசுவதே இல்லை. அதுபற்றிக் கவலைப்படுவதே இல்லை! தேர்தல் கூட்டணி எவ்வாறு அமைக்கலாம் என்பதுபற்றிமட்டுமே கவலைப்படுகின்றன. அது இக்கட்சிகளின் 'வாழ்க்கைப் பிரச்சினை'! இருந்துவிட்டுப் போகட்டும்! பணம் சம்பாதிப்பதும் (வட்டம் முதல் உயர்மட்டம்வரை!) குலத்தொழிலாக வாரிசுகளை உருவாக்குவதுமே இக்கட்சிகளின் நிர்வாகிகள் முதல் உயர்மட்டத் தலைவர்கள் வரை முதன்மையான வேலைகளாகக் கொண்டிருக்கின்றனர்! இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள்! இதில் எந்தவொரு கட்சியும் விதிவிலக்கு இல்லை! இவர்களது 'முக்கியப் பணியே' மக்களுக்கு உண்மையில் தேவையான 'அரசியல் பொருளாதாரக் கருத்துகள்' சென்றுவிடாமல் தடுப்பதே ஆகும்!
என்னைப் பொறுத்தவரையில் 41 உயிர்களை மட்டுமல்ல . . . தமிழ்நாட்டின் கோடிக்கணக்கான பாதிக்கப்பட்ட மக்களின் 'மூளைகளை' இந்த அரசியல்கட்சிகள் அனைத்தும் 'பலியாக்கிவருகின்றன'! இது தமிழ்ச் சமுதாயத்திற்கு மிகப் பெரிய ஆபத்து! மக்கள் தங்களது உண்மையான பிரச்சினைகளுக்கான தீர்வுகளைத் தெரிந்துகொள்ளாமல் இருப்பதற்கான அத்தனை வேலைகளையும் இந்த அரசியல் கட்சிகள் செய்கின்றன!
இந்த நிலையை எப்படி மாற்றுவது? உண்மையில் மிகப் பெரிய 'சமூகக் கொலை' இங்கு நடந்துவருகிறது! தற்போதைய தலைமுறையினர் மட்டுமல்ல, எதிர்காலத் தலைமுறையினர்களும் மிகக் கடுமையான பாதிப்புகளுக்கு உட்படுவார்கள்!
மக்களைச் சரியான வழியில் சிந்திக்கவைக்க அரசியல் கட்சிகள் இங்குத் தோன்றாதா? வளராதா? எப்படி இவ்வளவு பெரிய 'சமூகக்கொலையைத்' தடுத்துநிறுத்துவது? எனக்குச் சமூக இயக்கத்தில் நம்பிக்கை உண்டு! சமுதாயம் உறுதியாகத் தனது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வழிகளை உருவாக்கும்! இந்த நம்பிக்கை எனக்கு உண்டு! ஆனால் இது எப்படி, எப்போது நடைபெறும் என்பதுபற்றிக் கருத்து கூறமுடியவில்லை! 'காற்று அடித்துத் தூசி விலகும்' என்று எதிர்பார்ப்பது தவறு!
சமூக மாற்றத்தை உருவாக்க விழையும் அரசியல் உணர்வாளர்கள் முதலில் தமிழ்நாட்டில் சாதி, மதம், திரைப்படம் போன்றவை அரசியலில் தலையிடாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளைக் கொண்டுசெல்லவேண்டும். இது இன்றைய தலையாய அரசியல் பணி! இந்த மூன்றும் மிகப் பெரிய சமூக விரோதிகள்! மக்களைப் பிளவுபடுத்தவும், திசைதிருப்பவும் இந்த மூன்றும் தமிழகத்தில் கடுமையாக 'வேலை செய்கின்றன'!
இளைஞர்கள் இந்தச் 'சமூக விரோதிகளை' எதிர்த்துக் கடுமையாகப் போராடவேண்டும்! உண்மையான அரசியலை மக்களிடையே கொண்டுசெல்வதற்கு இவையே இன்று மிக முக்கியமான தடைக்கற்களாக நீடிக்கின்றன. சாதிய விரோதங்கள் திட்டமிட்டு வளர்க்கப்படுகின்றன! பிற்போக்கு மதக் கருத்துகள் திணிக்கப்படுகின்றன! திரைப்பட அரசியல் தலைதூக்கி நிற்கின்றன. இவை மூன்றையும் எதிர்த்த போராட்டங்கள் தமிழகத்தில் தீவிரமாக நடைபெறவேண்டும். மக்களின் ' மூளைகள்' 'சிந்தனைகள்' தொடர்ந்து மேற்கூறிய மூன்றுக்குப் பலியாகாமால் தடுக்கவேண்டும்!
மக்களின் 'மூளைகள்' சரியான திசையில் சிந்திக்கத் தொடங்கினால், உறுதியாக மாற்றம் ஏற்படும்! இது தானாக நடக்காது! இளைஞர்கள் உண்மையான, சரியான அரசியல் கருத்துகளைக் கற்று உணரவேண்டும்! அவற்றை மக்களிடையே கொண்டுசெல்லவேண்டும்!


11:13 PM
ந.தெய்வ சுந்தரம்