''தென்மொழி'' - தூயதமிழ்த் திங்களிதழில் (ஜூன் 2025) எனது கட்டுரை . . . ஆசிரியர் முனைவர் மா. பூங்குன்றன் அவர்களுக்கு எனது நன்றி!
-----------------------------------------------------------------------
தேசிய இனங்களின் பொது எதிரியே
தமிழ்த் தேசியத்தின் முதல் எதிரி!
--------------------------------------------------------------------------
இன்றைய இந்திய நாட்டில் பல்வேறு தேசிய இனங்கள் நீடிக்கின்றன. குமுக வரலாற்றில் நிலவுடைமைக் குமுதாயத்தின் இறுதிக் கட்டத்தில் முதலாளிய உந்து ஆற்றல் வளர்ச்சியையொட்டித் தோன்றி நீடிப்பதே தேசிய இனம் என்னும் ஒரு உருவாக்கம்!
இந்தியாவில் மேற்கூறியவாறு தோன்றிய தேசிய இனங்கள் பல இருக்கின்றன. நிலப்பகுதி, மொழி, பண்பாடு, பொருளாதார வாழ்வு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு குமுக உருவாக்கமே தேசிய இனம் என்பதாகும். இஃது உடலியல் அடிப்படையில் முதலாளியச் சிந்தனையாளர்களால் திணிக்கப்பட்ட 'இனம் (Race) ' இல்லை. குலங்கள், குலமரபுகள் ஆகியவற்றின் வளர்ச்சியில் உருவாகுகிற 'தேசிய இனம்' என்பதாகும்.
இந்திய நிலப் பகுதியில் இன்று பல்வேறு தேசிய இனங்கள் தோன்றி நீடித்து வருகின்றன. இதனால் பல மொழிகள் அருகருகே நீடிக்கின்றன. தென் பகுதியில் தமிழ்த்தேசிய இனம், தெலுங்குத் தேசிய இனம், கன்னடத் தேசிய இனம், மலையாளத் தேசிய இனம் என்று நான்கு பெரும் தேசிய இனங்கள் நீடிக்கின்றன. அதுபோன்று வட இந்தியாவில் நீடிக்கிற இந்தித் தேசிய இனத்தோடு, வடகிழக்குப் பகுதியில் நாகலாந்து, மணிப்பூர், மிசோராம் போன்ற பகுதிகளிலும் பல்வேறு தேசிய இனங்கள் நீடிக்கின்றன.
எனவே 'இந்தியா' என்னும் நாடு - நிலப் பகுதி - ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்களைக் கொண்ட ஒன்றாக நீடிக்கிறது. இருப்பினும் இந்தி பேசும் தேசிய இனத்தின் சுரண்டும் வகுப்புகளே ஆட்சியில் அமர்ந்துள்ளன. இந்தச் சுரண்டு வர்க்கங்கள் இந்தி, சமசுகிருதம், இந்து மதம் ஆகியவற்றை உயர்த்திப் பிடித்து, அரசு அதிகாரத்தையும் தாங்களே வைத்துக்கொண்டு, தங்கள் வகுப்பு நலன்களை - பொருளியல் நலன்களை - பாதுகாத்து வருகின்றன.
மேற்குறிப்பிட்ட வகுப்புகளும் அவற்றின் அரசியல் தலைமைப் பீடத்தில் இருக்கிற கட்சிகளும் ( காங்கிரசு, பாரதிய சனதா கட்சி) இந்தியாவில் உள்ள இந்திமொழி பேசாத தேசிய இனங்களைப் பலவகைகளில் அடக்கி ஆள்கின்றன. அந்தத் தேசிய இனங்களின் தன்தீர்வு (சுயநிர்ணய) உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கின்றன.
குறிப்பாக, ஒடுக்கப்படுகிற தேசிய இனங்களின் மொழிகளின்மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. பல தேசிய இனங்களையும் அவற்றின் பல மொழிகளையும் கொண்ட இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட தேசிய இனத்தின் மொழியான இந்திமொழியை இந்தியாவின் ஒரே ஆட்சிமொழியாக இந்திய அரசியல் சட்டத்தில் முதன்மைப்படுத்தியுள்ளது. மற்ற மொழிகளுக்கு அத்தகுதியை வழங்குவதற்கு மேற்கூறிய வகுப்புகள் அணியமாக இல்லை.
அரசுப் பணிகள், நடைமுறைகள் அனைத்திலும் இந்திமொழியே என்னும் மொழி ஆதிக்கத்தை நீடித்துவருகிறது. அதற்கு அடுத்து ஆங்கில மொழியைத் துணையாக வைத்துக்கொள்கிறது. ஏனைய எந்தவொரு தேசிய இனத்தின் மொழிக்கும் மேற்குறிப்பிட்ட உரிமைகளை அது வழங்கவில்லை.
இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்ட 1950 - இலிருந்து இந்தி பேசாத தேசிய இனங்களுக்காக ஆங்கிலத்தையும் பயன்படுத்திக்கொள்ளலாம்; ஆனால் அது 15 ஆண்டுகளுக்குமட்டுமே - 1965 ஆண்டுவரைதான் என்று அறிவிக்கப்பட்டது. 1965 -இல் இந்த இந்திமொழித் திணிப்பை எதிர்த்து, ஒடுக்கப்படுகிற, தாக்கமுறுகிற தேசிய இனங்கள் போராடின. குறிப்பாக, தமிழ்த் தேசிய இனம் களத்தில் உறுதியாக நின்று போராடியது. இதன் பயனாக, அன்றைய பிரதமர் நேரு அவர்கள் 'இந்தி பேசாத மக்கள் விரும்புகிறவரை, ஆங்கிலமும் தொடர்ந்து நீடிக்கும்' என்னும் 'உறுதிமொழியை' அளித்தார்.
1950-இலிருந்து இன்றுவரை - 75 ஆண்டுகளாக - இந்தி, ஆங்கிலம் தவிர எந்தவொரு தேசிய இனத்தின் மொழிக்கும் அரசியல் சட்டத்தில் இந்திமொழிக்கு இணையாக எந்தவொரு உரிமையும் அளிக்கப்படவில்லை. அதுபோன்று நடுவண் அரசின் 'பார்வைக்காக' காத்துக்கிடக்கிற மாநிலக் கட்சிகளும் 'இந்திமொழி எதிர்ப்பு' என்னும் போர்வையில் ஆங்கிலமொழியை அனைத்துச் செயல்பாடுகளிலும் நீடிக்க வைத்துக்கொண்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் ஒரு காலகட்டத்தில் பள்ளிகளில் பயிற்றுமொழியாக நீடித்த தமிழ்மொழிக்குப் பதிலாக, இன்று பெரும்பான்மையான பள்ளிகளில் ஆங்கிலமே பயிற்றுமொழியாக நீடிக்கிறது. தமிழ்வழிப் பள்ளிகள் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. அரசுப் பள்ளிகளிலும் தற்போது தமிழ்மட்டுமே பயிற்றுமொழி என்பதற்குப் பதிலாக ஆங்கிலமும் பயிற்றுமொழி என்னும் நடைமுறை பின்பற்றப்பட்டுவருகிறது. இதன் விளைவாக, பள்ளிகளில் தமிழ் மறைந்துவருகிறது!
உயர்கல்வியில் ஆங்கிலமே என்பது பொதுவான நடைமுறையாக ஆக்கப்பட்டுள்ளது. உயர்கல்வியில் பயிற்றுமொழியாக நீடிப்பதற்குத் தமிழ் இன்னும் 'தகுதி பெறவில்லை' என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் கூறி, ஆங்கிலமே பயிற்றுமொழியாக நீடித்து வருகிறது.
பொருள் உருவாக்கம், வணிகம் போன்ற பிற துறைகளில் ஆங்கிலமே இன்று நீடிக்கிறது. காய்கனிக் கடையிலிருந்து மின்னியல் கருவிகளை விற்கும் கடைகள் வரை அனைத்து மொழிவழிச் செயற்பாடுகளில் ஆங்கிலத்தின் ஆதிக்கமே நீடிக்கிறது.
ஆட்சி மொழி, அலுவலக மொழி என்றுமட்டுமல்லாமல், பண்பாட்டுத் துறையிலும் இந்திய ஆளும் வகுப்புகள் வடமொழியான சமசுகிருத மொழியையே உயர்த்திப்பிடிக்கின்றன. மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களின் மொழிகளுக்கும் மூலமொழி சமசுகிருதமே என்னும் கருத்தைத் திணித்துவருகிறது.
ஆக, இந்தி, ஆங்கிலம், சமசுகிருதம் என்ற மூன்று மொழிகளையும் பிற தேசிய இனங்களின்மீது இந்திய ஆளும்வகுப்புகள் திணித்துவருகின்றன. இந்த ஆதிக்கத்தை எதிர்த்து, பிற தேசிய இனங்கள் ஒன்றுபட்டு போராடுவது இன்றைய தேவையாக உள்ளது. ஆனால் இந்த வகையான ஒடுக்கப்படுகிற தேசிய இனங்கள் ஒன்றுபட்டுவிடக்கூடாது என்ற நோக்கில் இந்திய ஆளும் வகுப்புகள் செயல்பட்டுவருகின்றன. ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கிடையே நிலவும் சிறு சிறு பகைமையற்ற முரண்பாடுகளைப் பகையுள்ள முதன்மையான முரண்பாடுகளாக மாற்றுவதற்கு இந்திய ஆளும் வகுப்புகள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருகின்றன. தேசிய இனங்களுக்கிடையே நதிநீர்ப் பங்கீடு, அணைகள் கட்டுதல் போன்றவற்றில் ஆளும் வர்க்கங்களின் இந்த 'பிரித்தாளும் சூழ்ச்சியைப் ' பார்க்கலாம்.
அடுத்து, அண்டை மாகாணங்களாக நீடிக்கிற தமிழ்த் தேசிய இனம், கன்னடத் தேசிய இனம், தெலுங்குத் தேசிய இனம், மலையாளத் தேசிய இனங்களிடையே மொழி அடிப்படையில் நீடிக்கிற சிறு சிறு பிரச்சினைகளை ஊதிப் பெரிதாக்க இந்திய ஆளும் வர்க்கங்கள் முயல்கின்றன. இந்தத் தேசிய இனங்கள் தங்களுக்குள் ஒன்றுபட்டு, தேசிய இன சுயநிர்ணய உரிமைகளுக்கான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லக்கூடாது என்பதற்காகவே அவ்வாறு செய்கின்றன. 'மூலமொழி' பற்றிய சில ஆய்வுகளை முன்வைத்து, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளைப் பேசுகிறவர்களுக்கு இடையில் பகைமையை வளர்க்க இந்திய ஆளும் வகுப்புகள் முயல்கின்றன. 'மூலமொழி' பற்றிய கோட்பாடுகள் மொழி ஆய்வில் தெளிவுபடுத்த வேண்டியவை ஆகும். ஆனால் இந்த மொழிகளைப் பேசும் தேசிய இனங்களிடையே ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்காக இந்திய ஆளும் வர்க்கங்கள் 'மூலமொழிக் கொள்கை' 'தாய் - சேய் மொழிகள்' போன்ற கருத்துகளை முன்வைத்து, ஒன்றுபட்டு நிற்க வேண்டிய தேசிய இனங்களைப் பிளவுபடுத்த முயல்கின்றன.
தமிழ்த் தேசிய இனம் உட்பட முன்குறிப்பிட்ட பிற அனைத்து ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கும் பொது எதிரி இந்திமொழி, ஆங்கில மொழி ஆதிக்கத்தைத் திணிக்கிற ஆளும் வகுப்புகளே! எனவே, இவைதான் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் எதிரி. இப்பொது எதிரிக்கு எதிராக ஒடுக்கப்படுகிற தேசிய இனங்கள் ஒன்றுபட்டு போராடவேண்டும். இதுவே இன்றைய காலக்கட்டத்தின் முதன்மையான பணி!
அதுபோன்று தமிழ் நாட்டில் கல்வி, அலுவலகம், உருவாக்கத் தொழிற்சாலைகள் அனைத்திலும் தமிழே என்னும் நிலையை வராமல் தடுக்க முயலும் ஆங்கில ஆதரவு ஆளும் வர்க்கங்களுக்கும் எதிராகப் போராடுவதும் இன்றைய முகாமைப் பணியாகும்.
ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் மேற்கூறிய முதன்மையான பணிகளைச் செய்யவிடாமல் ஆளும் வகுப்புகள் பலவகை சூழ்ச்சிகளை மேற்கொள்கின்றன. இவற்றிற்கு எந்தவோர் ஒடுக்கப்பட்ட தேசிய இனமும் பலியாகிவிடக்கூடாது. இதில் அதிகக் கவனம் தேவை.
தமிழின் தொன்மை, தொடர்ச்சி, வளர்ச்சி ஆகியவை உலகுக்குத் தெரிந்ததே. இலக்கியம், இலக்கணம் ஆகியவற்றின் உருவாக்கத்தில் பழந்தமிழின் பங்குபற்றி அனைவருக்கும் தெரிந்ததே. அதன் பயனாகவே தமிழ் 'செம்மொழி' என்னும் தகுதியை உலக அளவில் பெற்றுள்ளது. அதுபோன்று, இன்றைய அறிவியல் உலகில் அனைத்து மொழிச் செயல்பாடுகளிலும் தமிழ் தன் இடத்தை உறுதிப்படுத்தவேண்டும். இன்றைய செயற்கை அறிவுத்திறனில் இடம்பெற்றுள்ள 'பெரிய மொழி மாதிரிகளில்' ஒரு முதன்மையான மொழியாக நீடிக்கவேண்டிய தமிழ்மொழி, அத்துறையில் நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு இடம்பெறவில்லை. இதற்குக் காரணம் என்ன?
பெரிய மொழி மாதிரிகளை உருவாக்குவதற்கு ஒவ்வொரு மொழியிலும் கோடியே கோடி மின்னணுத் தரவுகள் வேண்டும். ஆங்கிலம், பிரஞ்சு, சீனம் போன்ற மொழிகளுக்கு அந்த அளவு மின்னணுத் தரவுகள் கிடைத்துள்ளன. ஆனால் எதிர்பார்த்த அளவுக்குத் தமிழ் மின்னணுத் தரவுகள் கிடைக்கவில்லை. அதற்குக் காரணம், தமிழகத்திலேயே இன்று கணினியில் ஆங்கிலமே செல்வாக்கு செலுத்துகிறது. இதன் விளைவாகவே தமிழுக்குப் போதிய மின்னணுத் தரவுகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் உள்ள மொழியை 'போதிய மின்தரவு இல்லாத மொழி (Low Resource or Under Resource language) என்று அழைக்கின்றனர். கணினித்துறையில் தமிழ்மொழி முழுமையாகத் தனக்குரிய இடத்தைப் பெறவேண்டும். இன்று அவ்வாறு பெறாமல் இருப்பதற்குக் காரணம் 'தமிழ்மொழியின் சொற்களஞ்சியமும் இலக்கணமும் ' இல்லை! தமிழுக்குத் தகுதி இல்லை என்பது இல்லை! மாறாக, அன்றாட மொழிச்செயல்பாடுகளில் தமிழ்மொழியின் பயன்படுத்தம் மிகக் குறைவாக உள்ளது. பழந்தமிழில் இலக்கியம், இலக்கணத்தில் தனியிடம் பெற்றிருந்த தமிழ், இன்று கணினியுலகத்தில் தனக்குரிய இடத்தைப் பெறுவதற்குப் போராடவேண்டியுள்ளது.
இதுபோன்றவற்றில் கவனம் செலுத்தி, தமிழ்மொழியை அடுத்த உயர்கட்டத்திற்கு எடுத்துச்செல்லவேண்டும். தமிழ் நாட்டில் அன்றாட மொழிச் செயல்பாட்டிலிருந்து கல்வி, ஆராய்ச்சி, பொருள் உருவாக்கம், வணிகம், அரசு அலுவல்கள் போன்ற அனைத்துப் பிரிவுகள்வரை தமிழே - தமிழ்மட்டுமே என்ற நிலை நீடிக்கவேண்டும். இதுவே தமிழ் நாட்டுக்குள் தமிழ்மொழி தொடர்பான பணிகளில் முதன்மையான ஒன்றாகும். அடுத்து, நாட்டளவில் மேலிருந்து திணிக்கப்படுகிற இந்தி, சமசுகிருதம், ஆங்கிலம் ஆகியவற்றின் ஆதிக்கங்களுக்கு எதிராகப் போராடவேண்டும். இதற்குத் தேவை, ஒடுக்கப்படுகிற தேசிய இனங்களின் ஒற்றுமையும் ஒன்றுபட்ட போராட்டமுமே ஆகும்.
ஒடுக்கப்படுகிற தேசிய இனங்களின் முதன்மையான போராட்டம், தம்மை ஒடுக்குகிற ஆளும் வகுப்புகளுக்கு எதிராக இருக்கவேண்டும்; தங்களுக்குள் இருக்கிற சில முரண்பாடுகளைப் பகைமையற்ற முரண்பாடுகளாகப் பார்க்கவேண்டும்; இதுவே ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் மொழிகளுக்குரிய இடம் பெறுவதற்கான ஒரே வழி!
ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களும் அனைத்தும் தமிழ்த் தேசிய இனத்திற்கு நண்பர்களே!
தேசிய இனங்களின்மீதான இந்திய ஆளும் வகுப்புகளின் ஆதிக்கத்திற்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டமே இன்று தேவை!