திங்கள், 15 ஜூலை, 2024

குறிப்புவினைபற்றி மேலும் ஒரு ஐயம் . . .

 குறிப்புவினைபற்றி மேலும் ஒரு ஐயம் . . .

----------------------------------------------------------------------
உண்மை --> உண் + மை --> உள் + மை
மென்மை --> மென் + மை --> மெல் + மை
சிறுமை --> சிறு + மை
பெருமை --> பெரு + மை
வெண்மை --> வெண் + மை --> வெள் + மை
பன்மை --> பன் + மை --> பல் + மை
இளமை --> இள + மை
நன்மை --> நன் + மை --> நல் + மை
மேற்கூறியவற்றில் உள்ள அடிச்சொல்கள் எல்லாம் குறிப்பு வினைகள் என்று கூறலாமா?
'மை' விகுதி குறிப்பு வினையடியுடன் மட்டுமல்லாமல் தெரிநிலை வினைகளுடனும் இணைந்து பெயர்கள் ஆகின்றன.
பொறுமை --> பொறு + மை
ஆண்மை --> ஆண் + மை --> ஆள் + மை
பொய்மை --> பொய் + மை
'மை' விகுதி பெயர்ச்சொல்களோடும் இணைகிறது.
தலைமை --> தலை + மை
குடிமை --> குடி + மை.
இறைமை --> இறை + மை
தாய்மை --> தாய் + மை
வாய்மை --> வாய் + மை
மேற்கூறியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது . . .
கீழ்க்கண்டவற்றில் உள்ள அடிச்சொல்கள் - மேல், கீழ் என்பவை - குறிப்புவினைகளா என்பதில் எனக்கு ஐயம்! நண்பர்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். (மேற்கூறப்பட்ட எடுத்துக்காட்டிக்களில் தவறுகள் இருந்தாலும் சுட்டிக்காட்டவும்)
மேன்மை --> மேன் + மை --> மேல் + மை
கீழ்மை --> கீழ் + மை
அதாவது, 'மேல்' 'கீழ்' என்பவற்றின் இலக்கண வகைப்பாடுகள்பற்றித் தெளிவு (எனக்குத்) தேவைப்படுகிறது.

இதுபோன்ற பல ஐயங்களுக்கு நாம்தான் தொல்காப்பியம், நன்னூல் போன்ற தமிழ் இலக்கணநூல்கள், மொழியியல் ஆகியவற்றின் உதவியோடு விடை ''காணவேண்டும்''. அவற்றில் நமது சில ஐயங்களுக்கு நேரடியான விடைகள் இல்லாமல் இருக்கலாம்; இல்லாமலும் இருக்கின்றன. இதுதான் இலக்கண ஆய்வு வளர்ச்சி. நேரடியான விடைகள் அவற்றில் இருந்தால் நமக்குச் சிக்கலே இல்லை. ஆனால் அவ்வாறு இல்லை.
இதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, அன்று தேவையான மொழித்தரவுகள் இலக்கண ஆசிரியர்களுக்குக் கிடைக்காமல் இருந்திருக்கலாம் அல்லது அல்லது அவர்களது கண்களில் சிக்காமல் இருந்திருக்கலாம். இரண்டு, மொழி தொடர்ந்து வளர்ச்சியடைவதால் புதிய கூறுகள் தோன்றி நிலவலாம். மூன்றாவதாகவும் ஒரு காரணம் கூறலாம். நமது அறிவுக்கு இலக்கண ஆசிரியர்களின் நுட்பங்கள் தெரியாமல் இருக்கலாம். போராடித் தெரிந்துகொள்ளவேண்டும்.
ஒரு வளரும் மொழிக்கு இலக்கண ஆய்வு தொடர்ந்து வளர்ச்சியடைந்துகொண்டிருக்கவேண்டும். பிற துறை அறிவியல் போன்று மொழி தொடர்பான இலக்கண அறிவியலும் தொடர்ந்து வளரவேண்டும். வளர்க்கப்படவேண்டும். நண்பர்கள் இக்கருத்தில் வேறுபடலாம். ஆனால் இந்தக் கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். மொழி அறிவியல் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி கிடையாது.

கருத்தாடல் வெற்றிபெற . . . தேவைப்படும் நான்கு கூறுகள்

 கருத்தாடல் வெற்றிபெற . . . தேவைப்படும் நான்கு கூறுகள்

-------------------------------------------------------------------------------------------------
பேச்சுவழியோ எழுத்துவழியோ நாம் உரையாடல்களை நிகழ்த்துவதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று . . . ஒருவர் ஒன்றைப்பற்றிய தமது கருத்துக்களை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவது ஆகும். இந்த வெளிப்படுத்தலில் இரண்டு கூறுகள் உண்டு. ஒன்று மற்றவர்களுக்குச் சில செய்திகளை அளிப்பது . . . மற்றொன்று ஒன்றைப்பற்றிய தெளிவைப் பெறுவதற்காக ஒன்றுக்குமேற்பட்டவர்கள் கருத்தாடல்களை மேற்கொள்வது ஆகும்.
கருத்தாடலில் கருத்துத்தெளிவு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. கருத்துத் தெளிவு இல்லாமல் ஒருவர் கருத்தாடலில் ஈடுபட்டால் அவரால் தம் கருத்து சரியாக இருந்தாலும் தமது நோக்கத்தில் வெற்றிபெறமுடியாது.
மேலும் குறிப்பிட்ட கருத்தாடல் தனது முடிவுக்கு வரும்வரை நீடிக்கவேண்டும் என்பதைக் கருத்தாடலில் ஈடுபடுபவர்கள் மனதில் கொள்ளவேண்டும். அதற்கு அவர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள்பற்றி
சமூகமொழியியலாளர் கிரைஸ் (Grice) என்பவர் நான்கு கருத்துக்களை முன்வைக்கிறார். இவற்றைக் கருத்தாடலின் வெற்றிக்கான ''நல்லுறவுக் கோட்பாடுகள் (Principles of Co-operation)'' என்று அவர் அழைக்கிறார்.
(1) அளவு (Quantity) : ஒருவர் தமக்குமுன் நின்று உரையாடுபவருக்குக் குறிப்பிட்ட ஒன்றைப்பற்றி என்ன தெரியும், என்ன தெரியாது என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். முன் நிற்பவருக்கு மிகவும் தெரிந்த ஒன்றைக் கூறினாலும், முன் நிற்பவருக்குச் சலிப்பு ஏற்படும். அதேவேளையில் அவருக்குத் தெரியாததை அவருக்குத் தெரியும் என்று கருதி, சிலவற்றைக் கூறாமல் விடுவதும் தவறு ஆகும். அதாவது ஒரு கருத்தை விளக்குவதற்கு எவ்வளவு தேவையோ அவ்வளவுதான் பேசவேண்டும். கூடவோ குறைவாகவோ பேசினால் கருத்தாடல் எதிர்பார்த்த வெற்றியை அடையாது. எனவே இதில் ஒருவர் மிகக் கவனமாக இருக்கவேண்டும்.
(2) பண்பு (Quality) : அடுத்து, ஒருவர் தமது கருத்தாடலில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் தேவையான தரவுகளோடு முன்வைக்கப்படவேண்டும். இவர் கூறுவது உண்மைதான் என்று ஏற்றுக்கொள்ளும் வகையில் அமையவேண்டும்.
(3) தொடர்பு (Relevancy) : மூன்றாவது, பேசப்படும் கருத்துக்குத் தொடர்பு இல்லாதவற்றைப் பேசிக்கொண்டு இருக்கக்கூடாது. இதுவும் கருத்தாடலைத் தோல்விக்கே இட்டுச் செல்லும்.
(4) விளம்பும்முறை (Manner): நான்காவது, மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். ஒருவர் தமது உரையாடலில் மேற்கூறிய மூன்று கூறுகளையும் சரிவரப் பின்பற்றினாலும், கருத்தாடலில் தேவையான நெறிமுறைகள், பண்புகளோடு தமது கருத்துக்களை வெளிப்படுத்தவேண்டும். தமக்கு முன்நிற்பவருக்குப் பேசப்படுகின்ற கருத்தில் தெளிவு இருக்காது, தமக்குத் தெரிந்த அளவு அவருக்குத் தெரியாது என்று கருதிக்கொண்டு கருத்தாடலில் ஈடுபட்டால், உறுதியாகக் கருத்தாடல் தோல்வி அடையும்.
கருத்தாடல்பற்றிய மேற்குறிப்பிட்ட நான்கு கூறுகளையும் பின்பற்றினால் எந்தவொரு கருத்தாடலும் வெற்றிபெறும். குறிப்பாக, ஆய்வுலகத்தில் அடுத்த கட்டத்திற்குச் செல்லமுடியும்.
ஒன்றைப்பற்றிய விவாதங்களில் மிக முக்கியமானது . . . ஒருவர் தமது கருத்துக்களை முழுமையாகக் கூற மற்றவர் அவரை அனுமதிப்பதாகும். இடையிடையே குறுக்கீடு கூடாது. அடுத்து, அவர் பேசிமுடித்தவுடன் அவர் கூறிய கருத்துக்கள் இது இதுதான் என்பதை அவரிடம் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் அவர் 'நான் அப்படிக்கூறவில்லை, இப்படிக்கூறவில்லை'' என்று கூறுவதற்கு வாய்ப்பு உண்டு. அதைத் தவிர்க்கவேண்டும். அடுத்ததாகத்தான், மற்றவர் தமது கருத்துக்களை முன்வைக்கவேண்டும்.
ஆய்வு மாணவர்களுக்கு மிகவும் தேவையானவை மேற்கூறிய கருத்துக்கள் ஆகும்.

(1) 'உண்டு' (2) 'உண்டு' - சொல் பிரிப்பில் மயக்கம்.

 (1) 'உண்டு' (2) 'உண்டு' - சொல் பிரிப்பில் மயக்கம்.

------------------------------------------------------------------
1) உணவுவிடுதியில் பொங்கல் உண்டு, வீட்டுக்குத் திரும்பினேன்.
2) ஞாயிறுதோறும் உணவுவிடுதியில் காலையில் பொங்கல் உண்டு.
முதல் எடுத்துக்காட்டில் ' உண்டு' என்பதின் அடிச்சொல் அல்லது வேர்ச்சொல் 'உண்' ஆகும். இது 'உண் + ந்து' என்ற புதைவடிவத்தின் புறவடிவம். (எடுத்துக்காட்டு : உண் + ந்த் + ஆன் -> உண்டான்)
இரண்டாவது எடுத்துக்காட்டில் 'உண்டு' என்பது ' உள் + ந்து ' என்பதின் புறவடிவம். (எடுத்துக்காட்டு : ஆள் + ந்த் + ஆன் -> ஆண்டான்)
'ண்' 'ள்' இரண்டுக்குமே இனமான வல்லினம் 'ட்' ஆகும்.
தமிழ்ச்சொல்களைப் பிரிக்கும்போது நீடிக்கிற ஒழுங்கை விளக்குவதற்காக இந்தச் சொல்களை முன்வைக்கிறேன். அதாவது 'உண்டு' என்ற சொல்லுக்கு இரண்டு புதைவடிவங்கள் உள்ளன.
எனவே சொல்களைப் பிரிக்கும்போது அவற்றின் பொருண்மையை - பொருளை- புரிந்துகொண்டபின்னர்தான் சரியான பிரிப்பைப் பெறமுடியும். இதற்கு இங்கு 'உண்டு' வருகிற குறிப்பிட்ட தொடர் தேவைப்படுகிறது.
அதாவது சொல் பகுப்பிற்கே தொடரியல், பொருண்மையியல் தேவைப்படுகின்றன. இதுபற்றி நண்பர்கள் கருத்துக்கள் தேவை.

செய்யறிவுத் திறன் (Artificial Intelligence- AI) - பெரிய மொழி மாதிரி (Large Language Model - LM) - மொழியியலும் இலக்கணமும் (Linguistics and Grammar) . . .

 செய்யறிவுத் திறன் (Artificial Intelligence- AI) - பெரிய மொழி மாதிரி (Large Language Model - LM) - மொழியியலும் இலக்கணமும் (Linguistics and Grammar) . . .

-------------------------------------------------------------------------------------------------------
செய்யறிவுத் திறனைத் தமிழ்வழியே பயன்படுத்துவதற்கு முதல் அடிப்படைத் தேவை . . .
1) தமிழ்வழியே நாம் அனுப்புகிற தொடர்களைப் பெரிய மொழி மாதிரி புரிந்துகொள்ளவேண்டும் (Natural Language Understanding - NLU) . அவ்வாறு புரிந்துகொண்டால்தான் செய்யறிவுத்திறன் கொண்ட அறிவுச் சேமிப்புக் கொள்கலத்தில் (Knowledge Store) நாம் அனுப்பிய ஐயம், வினாவுக்குத் தகவல்களைப் பெறமுடியும்.
2) அடுத்து, அந்தச் சேமிப்புக் கலத்திலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களைத் தமிழ்வழியே நமக்குத் தரவேண்டும் (Natural Language Generation - NLG).
மேற்கூறிய இரண்டு திறன்களையும் உள்ளடக்கிய பெரிய மொழி மாதிரி உருவாக்கப்பட்டால்தான் நமது நோக்கம் நிறைவேறும்.
Open AI (ChatGPT) , Google (Gemini) , Facebook (Meta AI) போன்றவற்றை உருவாக்கியுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் ஆங்கிலம், சீனம், ஜெர்மன், ஜப்பானியம் போன்ற மொழிகளுக்கு மேற்கூறிய மொழித்திறனை உருவாக்கி வைத்துள்ளன. எனவே இந்த மொழிகளைப் பயன்படுத்துவர்கள் மேற்குறிப்பிட்ட செயற்கை அறிவுத்திறனின் பயன்பாடுகளைப் பெறமுடிகின்றது.
ஆனால் நாம் . . . தமிழ்மொழியைத் தாய்மொழியாகக்கொண்ட நாம் . . . அந்தப் பயன்பாட்டை முழுமையாகப் பெறமுடியவில்லை. அதற்குக் காரணம் . . . மேற்கூறிய பெரிய மொழி மாதிரிகள் தமிழ்மொழி அறிவை முழுமையாகப் பெறவில்லை. எனவே ஆங்கிலம் வழியேதான் நம்மால் அவற்றை இப்போது பெறமுடிகிறது. சில செயற்கை அறிவுத்திறன் மென்பொருள்கள் நாம் தமிழில் கேட்கும் ஐயங்களைப் புரிந்துகொள்கின்றன (NLU). ஆனால் அவற்றிற்கான விடைகள் அல்லது விளக்கங்களை ஆங்கிலம் வழியே அளிக்கின்றன (NLG).
மேற்கூறிய நிறுவனங்களின் பெரிய மொழி மாதிரிகளுக்கு முழுமையான அல்லது தேவையான பயிற்சிகளை அளிப்பதற்கான தமிழ் மின் தரவுகள் (Tamil E-data - Digital data) இன்று தமிழில் இல்லை. இந்த மொழி மாதிரிகள் எல்லாம் தங்களுக்கு ஒரு மொழியின் மின்தரவுகள் கோடியே கோடி . . . நூற்றுக்கணக்கான கோடித் தரவுகள் (Trillions of trillions) அளிக்கப்பட்டால் . . . அவை தாமாகவே அந்த மொழியின் மொழியியல், இலக்கண நுட்பங்களை அறிந்துகொள்ளும். அந்த மொழி நுட்பத்தின் பண்புகள் (Parameters) பல கோடி அளவில் இருக்கும். அதற்குக் கொடுக்கப்படுகிற நுட்பங்களின் அளவு கூடக் கூட அதன் மொழித்திறன் (Language Capacity) அதிகரிக்கும். இந்த வழிமுறையில் அது குறிப்பிட்ட மொழியின் கோடியே கோடி அமைப்பு நுட்பங்களைப் பெற்றுக்கொள்ளமுடியும். அதற்கான திறன் அதற்கு உருவாக்கி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழில் அந்த அளவு மின் தரவுகள் இல்லாததால், மேற்கூறிய மொழிமாதிரிகள் தமிழ் அறிவைத் தேவையான அளவு பெறமுடியவில்லை.
அப்படியென்றால் . . . அதற்கு மாற்றுவழி கிடையாதா? என்ற ஐயம் எழலாம். மாற்றுவழி இருக்கிறது. அவற்றிற்கு அளிக்கப்படுகிற மின்தரவுகள் குறைவாக இருந்தால், இருக்கின்ற மின்தரவுகளை மொழியியல், இலக்கண அறிவோடு அந்த பெரிய மொழி மாதிரிகளுக்கு அளிக்கலாம். அதாவது மின்தரவுகள் அளவு குறைவாக இருந்தால், மின்தரவோடு அளிக்கப்படுகிற மொழி அறிவு அதிகமாக இருக்கவேண்டும். அளவும், இலக்கண அறிவும் தலைகீழ் விகிதத்தில் (Inversely proportional) அமைகின்றன.
இதைத்தான் நுட்பப்-பயிற்சி (Fine-Tuning) என்று அழைக்கிறார்கள். ஆகவே மின்தரவு அளவில் குறைவாக இருக்கிற தமிழுக்கு . . . மொழியியல், இலக்கண நுட்பங்களை இருக்கிற மின் தரவுகளோடு இணைத்துக்கொடுத்து . . . மேற்கூறிய பெரிய மொழி மாதிரிகளுக்குத் தமிழ்மொழி அறிவை அளிக்கலாம். தமிழ் இன்று குறைவான மின் தரவு கொண்ட ஒரு மொழி (Low Resource language) என்பதை மறுக்க இயலாது.
பிறந்த குழந்தைகள் மூன்று வயதுக்குள் தங்களது தாய்மொழியை எளிமையாகக் கற்றுக்கொள்கின்றன. குழந்தைகளுக்கு மொழி கற்றுக் கொடுக்கப்- படுவதில்லை. மேலும் அதற்குக் கிடைக்கிற மொழித் தரவுகளும் குறைவே. இதைத்தான் மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி ''தூண்டதலின் வறுமை அல்லது வரட்சி (Poverty of Stimulus) '' என்று கூறுவார். ஆனால் குழந்தைக்கு பிறக்கும்போதே அதன் மூளையில் இயற்கையாகவே நீடிக்கிற ''பொதுமை இலக்கண அறிவானது (Universal Grammar - UG)'' குறைந்த தரவில் நிறைந்த மொழி அறிவைக் (Less data, more knowledge) கொடுக்கிறது.
ஆனால் கணினிக்கு ? . . . ஒன்று, கோடியே கோடி மொழித் தரவுகளை அளிக்கவேண்டும். அல்லது, மொழியியல், இலக்கண அறிவோடு கூடிய மின்தரவுகளை அளிக்கவேண்டும்.
தற்போது நமக்கு மேற்குறிப்பிட்ட இரண்டாவது வழியே கைகொடுக்கும். எனவே தமிழுக்கான செய்யறிவுத்திறன் ஆய்வை மேற்கொள்கிறவர்கள் மேற்கூறிய இரண்டாவது முறையில் முயல்வதே பயன் அளிக்கும். மொழியியல், இலக்கண அறிவு என்பது ஒரு தனித்துறை. தமிழ்மொழி பேச, எழுதத் தெரிந்ததாலே ஒருவருக்குத் தமிழ்மொழியின் அமைப்பு நுட்பங்கள் முறையாகத் தெரிந்திருக்கும் என்று கருதிவிடக்கூடாது. இந்தத் துறை தனித் துறை. இதில் முறையான பயிற்சி பெற்றவர்களே மேற்கூறிய பணியைச் செய்யமுடியும்.
இல்லையென்றால் . . . செய்யறிவுத்திறன் மென்பொருள்களையும் ஆங்கிலம் வழியேதான் தமிழர்கள் பயன்படுத்தமுடியும். தமிழின் தேவையும் பயன்பாடும் மேலும் மேலும் குறைந்துவிடும். இதைத்தான் பாரதி ''மெல்லத் தமிழினிச் சாகும்'' என்று கூறியுள்ளார்!
------------------------------------------------------------------------------------------------------
பேராசிரியர் கருணாகரன் அவர்கள் : தமிழ் வளர்ச்சித்துறை இதனை முனைப்போடு செயற்படுத்த முன்வரவேண்டும ...ஆக்கப்பணிகள் மேற்கொள்ள வேண்டும் ..இது நம்மைப் போன்றோரின் எளிய..முறைசார் வேண்டுகோள் ந. தெய்வ சுந்தரம் : பேராசிரியர் அவர்களே. தங்கள் ''கனவு'' நனவாக வேண்டுமென்றால் . . . (1) இன்றைய நிலையில் செய்யறிவுத்திறன் மென்பொருளுக்குத் தமிழ்மொழி அறிவை அளிப்பதற்குப் போதுமான மின் தரவுகள் இல்லாததால், மொழியறிவுடன் கூடிய தமிழ் மின் தரவின் தேவை உணரப்படவேண்டும். கணினித் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியே இப்பிரச்சினையைத் தீர்த்துவிடும் எனக் கருதுவது சரி இல்லை. (2) தொல்காப்பியம், நன்னூல் போன்ற சிறப்பான பழந்தமிழ் இலக்கண அறிவையும் உள்ளடக்கி, இன்றைய தமிழ்மொழியின் அமைப்பு அல்லது இலக்கணத்தை முழுமையாக ஆய்வுசெய்து ''இன்றைய தமிழ் இலக்கணம்'' முழுமையாக உருவாக்கப்படவேண்டும். இப்பணி மிகப்பெரிய ஒரு பணி என்பதில் ஐயம் இல்லை. (3) இந்த இரண்டாவது பணிக்கு உறுதியாக இன்றைய மொழியியல் அறிவு அல்லது ஆய்வுமுறை மிக மிகத் தேவை என்பது உணரப்படவேண்டும். மேற்கூறியவற்றைத் தமிழக அரசும் தமிழ்மொழி, மொழியியல் ஆய்வுலகமும் முழுமையாக உணர்ந்து செயல்படவேண்டும். இந்த முயற்சி ஒரு மிகப் பெரிய ஆய்வு முயற்சி. ஏராளமான தொழில்நுட்ப அறிஞர்களும், தமிழ்மொழி, மொழியியல் அறிஞர்களும் தேவை. மனித வளமும் நிதி வளமும் அதிகம் தேவை. தகுந்த முயற்சிகள் சரியான திசையில் மேற்கொள்ளப்பட்டால், உறுதியாக ஒரே வருடத்தில்கூட இந்த முயற்சி வெற்றிபெறும்.

தமிழ்மொழிப் பயன்படுத்தத்தின் விரிவாக்கமும் செய்யறிவுத்திறன் மென்பொருள்களில் தமிழுக்கான இடமும் . . .

 தமிழ்மொழிப் பயன்படுத்தத்தின் விரிவாக்கமும் செய்யறிவுத்திறன் மென்பொருள்களில் தமிழுக்கான இடமும் . . .

-------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழ்நாட்டில் தமிழ் மக்களிடையே தமிழின் பயன்படுத்தம் விரிவடைந்தால்தான் . . . செய்யறிவுத்திறன் (Artificial Intelligence- AI)மென்பொருளுக்கு அடிப்படையான (மிகப்பெரிய) மொழி மாதிரிகள் (Large Language models) - LLM) தமிழுக்கும் செயல்படும் என்பதே உண்மை.
மொழியின் பயன்படுத்தம் விரிவடையும்போதுதான் (பேச்சு, எழுத்து இரண்டிலும்) தமிழுக்குத் தேவையான தரவுகள் கிடைக்கும்.
ஆனால் . . . நடைமுறையில் தமிழர்களே தமிழைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து . . . ஆங்கிலத்தைப் பயன்படுத்துகிறார்கள். அரசுக் கோப்புக்கள் ஆகட்டும் . . . தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் ஆகட்டும் . . . பள்ளிக்கல்வி, கல்லூரிக்கல்வி, ஆய்வு ஆகட்டும் . . . நண்பர்களிடையே மடல்கள் பரிமாற்றம் ஆகட்டும் . . . திருமணம், பிறந்தநாள், பாராட்டு விழாக்களுக்கான அழைப்பிதழ்கள் ஆகட்டும் . . . சுவரொட்டிகள் ஆகட்டும் . . . ஏன் கையெழுத்து ஆகட்டும் . . . எதிலும் ஆங்கிலமொழியின் ஆதிக்கமே !
இவ்வாறு இருக்கும்போது . . . செய்யறிவுத்திறனின் பயன்பாட்டைத் தமிழ்வழியே பெறுவது எவ்வாறு இயலும்? (Digital dataset) மின்தரவுகள் தமிழுக்குக் கோடியே கோடி கிடைத்தால்தான் அது இயலும். ஆனால் அதைக்கூட கூகுளும் மைக்ரோசாஃப்டும் ஃபேஸ்புக் போன்றவைதான் கொடுக்கமுடியும் என்ற ஒரு நிலை இன்று தமிழுக்கு!
எனவே, இனித் தமிழைத்தான் தமிழ்நாட்டில் மொழிச் செயற்பாட்டுக்குப் பயன்படுத்தவேண்டும் என்ற ஒரு நிலையைத் தமிழர்கள் மேற்கொள்ளவேண்டும்.
தற்போது செய்யறிவுத்திறன் என்ற தொழில்நுட்ப வளர்ச்சியைத் தமிழ்மொழி பயன்படுத்த வேண்டுமென்றால் . . .
எங்கும் தமிழ் . . . எதிலும் தமிழ் என்ற ஒரு நிலை நீடிக்கவேண்டும். இல்லையென்றால் தமிழ்மொழியானது அபாயத்திற்கு உட்பட்ட ஒரு மொழியாகவே (Endangered language) மாறிவிடும். இந்த அபாயநிலையைப்பற்றி மகாகவி பாரதி மிக அழகாகக் கூறியுள்ளார் . . .
''புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.
சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லுந்திறமை தமிழ்மொழிக்கு இல்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்குமொழிகள் புவிமிசை ஓங்கும்!
இன்றைய நிலையை மகாகவி மிக அருமையாக நூறு ஆண்டுகளுக்குமுன்பே கூறிவிட்டார் என்பது வியப்புக்குரிய ஒன்றுதான்!

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India