''பெண்ணுரிமை'' குரல் இன்று ஓங்கி ஒலிப்பதற்குக் காரணம் . . . சமுதாயப் பொருளாதாரக் கட்டமைப்பின் வளர்ச்சி அடிப்படையா? தனிநபர்களின் அல்லது இயக்கங்களின் ''பேச்சுக்கள்'' அடிப்படையா? மற்றொரு பதிவில் நான் இட்ட சில கருத்துக்கள்!
--------------------------------------------------------------------------
நண்பர் திரு. வேல்முருகன் சுப்பிரமணியன் அவர்கள்:
------------------------------------------------------------------------
//கணித்துறையில் ஒரு மென்பொருளின் பயனாளர்களின் (based on required Scale and performance) எண்ணிக்கையைப்பொறுத்து அந்த மென்பொருளின் அமைப்பு மிகப்பெரிய அளவில் மாற்றியமைக்கப்படவேண்டும். அடிப்படையில் எண்ணிக்கையைப்பொறுத்து தீர்வின் அடிப்படை மாறும். - அந்தவழியில் அமைந்ததே என் ஐயம்!
இதுபோன்ற மாற்றம் ஒரு சமுதாயத்தினுள்ளும் நடக்கிறதா? காட்டாக,
1) போரினால் ஏற்கனவே ஒடுக்கப்பட்ட “மிகச்சிறிய எண்ணிக்கையில் ஆண்களைக்கொண்ட” ஒரு சமூகம் பெண்களை குழந்தைபிறக்கவைக்கும் ஓர் இயந்திரமாகப்பார்த்து அவர்களை வீட்டோடு உட்காரவைப்பது அச்சூழலில் அது ஓர் அறிவார்ந்த செயலாகும் என்று சொல்லமுடியுமா? அங்கு நாம் இன்று பேசும் பெண்ணுரிமைக்கு இடம் இருக்கமுடியுமா?//
ந. தெய்வ சுந்தரம்
----------------------------------------------------------------------
நன்றி நண்பரே. தாங்கள் எழுப்பியுள்ள ஐயங்கள் உறுதியாகத் தீர்க்கப்படவேண்டும்.
(1) எண்ணிக்கையும் மாற்றமும்: இதை நாம் அளவுமாற்றம் (Quantitative Change) , பண்புமாற்றம் (Qualitative change) என்று கொள்ளலாம். தாங்கள் கூறுவதுபோல அளவுமாற்றம் (எண்ணிக்கை மாற்றம்) ஒரு கட்டத்தில் பண்புமாற்றமாக ( பொருளின் அடிப்படைப் பண்புமாற்றம்) மாறும். இது எல்லாப்பொருள்களின் மாற்றங்களிலும் வளர்ச்சிகளிலும் நடைபெறுகிற ஒன்று.
இதை விளக்குவதற்குப் பொதுவாக ஒரு எடுத்துக்காட்டைக் கொடுப்பார்கள். தண்ணீரைச் சூடுபடுத்தச் சூடுபடுத்த அதன் வெப்பநிலையின் அளவு மாறுகிறது. இருப்பினும் ஒரு கட்டம்வரை தண்ணீர் தண்ணீர்தான். ஆனால் 100 டிகிரியை எட்டும்போது அது நீராவியாக மாறுகிறது. 101 ஆவது டிகிரியை நாம் பார்க்கமுடியாது. அதற்குமேல் தண்ணீரின் வெப்ப நிலை அளவில் மாறாது. அதே வேளையில் தண்ணீர்தான் நீராவியாக மாறியிருந்தாலும், தண்ணீரின் இயல்புவேறு, நீராவியின் இயல்பு வேறு. நீராவி ஆனபிறகு அதன் இயக்குசக்தி பன்மடங்கு ஆகும். மிகப்பெரிய பொறிகளையும் அது இயக்கும். ஆனால் தண்ணீருக்கு அந்தச் சக்தி கிடையாது. ஆகவே, தண்ணீரிலிருந்துதான் நீராவி தோன்றினாலும் தண்ணீரின் பண்பு வேறு; நீராவியின் பண்பு வேறு. இதுபோல்தான் தண்ணீரின் வெப்பநிலையைக் குறைக்கக் குறைக்க ஒரு கட்டத்தில் அது பனிக்கட்டி ஆகிவிடுகிறது. தண்ணீரின் பண்பு வேறு; பனிக்கட்டியின் பண்புவேறு. உடம்புக்கு ஒத்தணம் கொடுப்பதிலையே இதைத் தெரிந்துகொள்ளலாம். தண்ணீரைக்கொண்டு ஒத்தணம் கொடுக்கமாட்டார்கள். பனிக்கட்டியைக்கொண்டுதான் ஒத்தணம் கொடுப்பார்கள். இதன் அடிப்படை . . . எந்தவொரு பொருளிலும் மாற்றம் ஒரு கட்டம் வரை அளவுமாற்றமாகவே தொடரும். ஆனால் ஒரு கட்டத்தை அடைந்தவுடன் மாற்றமானது அளவு மாற்றமாகத் தொடராமல் பண்பு மாற்றமாக மாறிவிடும். இந்த வளர்ச்சி விதி உலகில் அனைத்துக்கும் பொருந்தும்.
(2) மனிதசமுதாய வரலாற்றில் . . . அதன் தொடக்கத்தில் . . . பெண்களே தீர்மானமான சக்தியாக நீடித்தார்கள். ஆண்கள் இல்லை. அதற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று, ஆண்களின் தொழில் வேட்டையாடுவது; பெண்களின் தொழில் காய் கனிகள் பொறுக்குவது. இதில் வேட்டைத் தொழிலில் தினந்தோறும் வேட்டைப் பொருள் கிடைக்கும் என்பது உறுதி இல்லை. ஆனால் காய் கனி பொறுக்கும் தொழில் தினந்தோறும் உறுதியாக உணவுப்பொருள் கிடைக்கும். மேலும் சிறு அளவில் காய் கனி விவசாயத்தையும் (Primitive agriculture) பெண்கள் செய்துவந்துள்ளார்கள். எனவே பெண்களின் தொழிலே நிரந்த வருமானத்திற்கான தொழிலாக தொடக்ககாலச் சமுதாயத்தில் நிலவியுள்ளது. மேலும் வேட்டைக்கு வேண்டிய ஆள் பலத்தை அளிப்பதற்கு அடிப்படையான குழந்தை பிறப்பு பெண்களைச் சார்ந்தே உள்ளது. குழந்தையைச் சுமந்து, பெற்று, வளர்த்து, அவர்களை வேட்டைக்கு ஆள்பலமாக அளித்தது பெண்களே. மேலும் ஒரு காரணம் கூறலாம். ஒரு குழந்தைக்கு இவள்தான் அம்மா என்று அந்தக் குழந்தையின் அம்மாவைச் சுட்டிக்காட்டமுடியும், ஆனால் குடும்பம் என்ற ஒரு அமைப்பு தோன்றாத ஒரு மனித சமுதாய வரலாற்றில் இவர்தான் ஒரு குழந்தையின் தந்தை என்று சுட்டிக்காட்டமுடியாது. எனவே இந்த வகையிலும் பெண்களுக்கே அப்போது மதிப்பு. எனவேதான் மனித குல வரலாற்றில் தொடக்கக் காலகட்டத்தில் நிலவியது பெண்வழிச் சமுதாயமே (Matriarchal society) . முதலில் தோன்றியது பெண்தெய்வ வழிபாடே. அத்தனைச் சடங்குகளும் குழந்தை பெறுதல் தொடர்பானதே (fertility rituals) . இந்தத் தொடக்ககாலச் சமுதாயம் அப்படியே நீடிக்கவில்லை.
(3) இரும்புபோன்ற உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, நிலைத்தைப் பண்படுத்தி, பெரிய அளவில் விவசாயம் செய்யும் வளர்ச்சியைச் சமுதாயம் அடைந்தது. அப்போதுதான் பெண்களின் பொருள் உற்பத்தியைவிட ஆண்களின் பொருள் உற்பத்தி முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. வேட்டைத் தொழிலும் வளர்ந்தது. தனியுடைமையும் தோன்ற ஆரம்பித்தது. இதன் விளைவு, ஒரு பெண் ஒரு ஆணுக்குமட்டுமே குழந்தைபெற்றுத்தரும் ''மனைவியாக'' ஆக்கப்பட்டாள். ''குடும்ப அமைப்பு'' தோன்றியது. பெண் ''வீட்டுக்குள்'' தள்ளப்பட்டாள். ஆண் வழிச் சமுதாயம், ஆண் ஆதிக்கச் சமுதாயம் தோன்றி நிலவத் தொடங்கியது. பலதார மணம் தோன்றியது. ஒரு பெண்ணுக்கு ஒரு கணவன்தான்; ஆனால் ஒரு ஆணுக்குப் பலதாரங்கள் இருக்கலாம் (Polygamy) . ஆங்காங்கே பல புருஷ மணமும் (Polyandry) இருந்தது என்பதற்கு மகாபாரத துரோபதை கதையே எடுத்துக்காட்டு.
இவ்வளவு விரிவாக இதை நான் எழுதியதற்குக் காரணம் . . . மனித சமுதாய வரலாற்றில் பெண் எப்போதுமே ''அடிமையாகவே'' இருந்ததுபோலவும் முதலாளித்துவ சமுதாயத்தில்தான் பெண்களுக்கும் '' உரிமைகள்'' அளிக்கப்பட்டுள்ளதுபோலவும் உருவாக்கப்பட்டுள்ள ஒரு மாயையை தகர்ப்பதற்கே ஆகும்.
பொருளாதார உற்பத்தியில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்குப் பங்கு ஏற்படும்போதுதான் பெண் விடுதலை, பெண் உரிமை என்பதெல்லாம் முழுமையடையும். பொருளாதார உற்பத்திக்கு உடல் உழைப்பைவிட இயந்திரங்கள் (கணி உட்பட) துணை என்பது வளர்ச்சியடையும்போது, ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் பொருள் உற்பத்தியில் ஈடுபடமுடியும். இன்றுகூட கிராமங்களிலும் நகரங்களிலும் சம்பாதிக்கிறார்கள் என்று சிலர் கூறலாம். ஆனால் பெண்களுக்கு அளிக்கப்படும் வேலைகள் என்ன என்பதைப் பார்த்தால் உண்மை தெரியும். விவசாயத்தில்கூட நாற்று நடுவது, களை பிடுங்குவது, அறுக்கப்பட்ட கதிர்களைச் சுமப்பதுபோன்ற வேலைகளிலும் கட்டிடங்கள் கட்டுவதில் செங்கல் சுமப்பது போன்ற வேலைகளிலும்தான் பெண்கள் இங்கு அதிகமாக ஈடுபட்டுள்ளார்கள். அதற்கான கூலிகூட ஆண்களுக்கு இணையானது கிடையாது. மற்றபடி, ஆசிரியப்பணி, கோப்பு எழுதுகிற பணியாளர்கள்பணி, வங்கிப்பணி என்ற உடலுழைப்பைச் சாராத வேலைகளில்தான் பெண்களுக்கு வாய்ப்பு உண்டு. அதன் பயனாக, இடைத்தட்டு , மேல்தட்டு வர்க்கங்களின் வீடுகளில் பெண்களுக்கு ஓரளவு ''உரிமை '' உள்ளது! ஆனால் இதற்கும் ''எல்லை'' உண்டு! ஆங்காங்கே விதிவிலக்காக, பெண்கள் வாகனங்கள் ஓட்டலாம். டிராக்டர்கள் ஓட்டலாம்! அவ்வளவுதான். மற்றபடி , பெண்களுக்கு இன்றும் வீடுகளில் . . . குடும்பங்களில் . . . சமையல், குடும்பத்தினருக்குப் பணிவிடை, கணவனுக்குச் சுகம் அளிப்பது, குழந்தை பெறுவது, குழந்தை வளர்ப்பது போன்ற வேலைகள்தான். எனவே இன்றும் பெண்கள் சமுதாய அடிப்படையில் பார்க்கும்போது ஆண்களுக்கு அடுத்த நிலைதான்! எதிர்காலத்தில் இது மாறும். அதுவேறு.
இன்றைக்குப் பெண்களுக்குச் சற்று ''மதிப்பு'' அளிக்கப்படுகிறது என்றால், அதற்குக் காரணம், சமுதாய வளர்ச்சியே . . . அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியே . . . அதுவும் முதலாளித்துவ உற்பத்திக்குத் தேவைப்படுகிற வளர்ச்சியே பெண்களின் நிலையில் சற்று வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. 'பெண்ணுரிமை'' பற்றிப் பேசமுடிகிறது. சில தனிநபர்கள், அல்லது ''தலைவர்கள்'' அல்லது சில இயக்கங்கள் இந்த வளர்ச்சிச் சூழ்நிலையில் 'பெண்ணுரிமைக்கு'' ஒரு எல்லைக்கு உட்பட்டு ''முக்கியத்துவம் அளித்துப்'' பேசமுடிகிறது. அதை வரவேற்கிறோம். ஆனால் இவர்களே ஒரு நூற்றாண்டுக்குமுன்னால் இதைப் பேசியிருந்திருக்கமுடியாது! அப்போதைய சமுதாயக் கட்டமைப்பு வேறு!
சில நூற்றாண்டுகளுக்குமுன்பு பாரதியார் போன்று ஒரு கவிஞன் தோன்றி, பெண்ணுரிமைபற்றிப் பாடியிருக்கமுடியாது! பெண்களை ஓரளவு ''வீட்டுச் சிறையிலிருந்து'' மீட்டிருக்கமுடியாது! ''ஆண் ஆதிக்கம்'' சற்றாவது இன்று தளர்ந்திருக்கிறதே, அது அன்று நடந்திருக்கமுடியாது! ஆனால் இன்றும் அடிப்படையில் பெண்கள் ''தங்கச் சிறையில்தான்'' வாழ்கிறார்கள்! பெண்களுக்கு முழுமையான விடுதலை என்பது . . . ஆண்களுக்கு இணையான சுதந்திரம் என்பது . . . இங்கு ஏற்பட இன்னும் ஓரிண்டு நூற்றாண்டு காத்திருக்கவேண்டுமோ என்றுதான் நினைக்கத்தான் தோன்றுகிறது!