செவ்வாய், 19 டிசம்பர், 2023

பேச்சுத் தொழில்நுட்பமும் மொழிபெயர்ப்பும் ( Speech Technology and Automatic Translation) . . . (1)

 பேச்சுத் தொழில்நுட்பமும் மொழிபெயர்ப்பும் ( Speech Technology and Automatic Translation) . . . (1)

தமிழ்மொழி, மொழியியல் , கணினிமொழியியல் ஆய்வுமாணவர்களுக்குப் பயன்படும் ( அல்லது பயன்படலாம்!) பதிவு
-------------------------------------------------------------------------------------------------------------
இன்று கணினி உலகின் புரட்சி மிகப் பெரிய அளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஒருவர் ஒரு குறிப்பிட்ட மொழியில் பேசுவதை மற்றொரு மொழியில் மொழிபெயர்த்துத் தரும் கணினித் தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்துவருகிறது. இந்தத் தொழில் நுட்பத்தைத் தமிழுக்குச் செயல்படுத்தப் பல கல்வி நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் முயன்றுவருகின்றன. விரைவில் இந்த ஆய்வு வெற்றியடைந்து தமிழ் உலகத்திற்குப் பயன் தரவேண்டும் என்பதில் யாருக்கும் இரண்டாவது கருத்தே இருக்கமுடியாது; இருக்கவும்கூடாது.
மேற்கண்ட ஆய்வில் ஈடுபடுகிறவர்கள் எதிர்நோக்குகிற ஒரு சிக்கலைப்பற்றியே இந்தப் பதிவு . . .
தமிழ் ஒரு இரட்டைவழக்கு மொழியாக ( Diglossic language) இருப்பதால் ஒரு சிக்கல் எழுகிறது. அதுபற்றியே இந்தப் பதிவுத் தொடர்.
தமிழ் எழுத்துரை அல்லது கட்டுரையை அப்படியே வாசிக்கும் தமிழ் மென்பொருள்களை உருவாக்குவதில் எனக்குத் தெரிந்து இரண்டு பேராசிரியர்கள் (தமிழர்கள்) குறிப்பிடத்தக்க அளவு வெற்றிபெற்றுள்ளார்கள். ஒன்று சிவநாடார் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் கணினியியல் பேராசிரியர் முனைவர் நாகராசன் அவர்கள்; மற்றொருவர் பெங்களூரு இந்திய அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஏ ஜி இராமகிருஷ்ணன் அவர்கள். இருவர்களும் தங்களுடைய சக ஆய்வாளர்கள், ஆய்வு மாணவர்களுடன் இப்பணியை மேற்கொண்டுள்ளனர். தற்போது சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகமும் ( Indian Institute of Technology - IIT) இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளது.
கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் இந்த ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுவருகின்றனர்.
ஒரு மொழியில் பேசும் மொழியின் (Spoken ) அமைப்பும் எழுத்துமொழியின் (Written) அமைப்பும் ஒன்றுபோல் இருந்தால் . . . பேச்சு அலைகளின் இயற்பியல் ஆய்வுகளின் ( Acoustic Phonetics) அடிப்படையில் பேச்சை எழுத்துவடிவில் மாற்றுவது சற்று எளிதான பணியாக அமையும். ஒரு சொல்லின் பேச்சு அலையின் இயற்பியல்கூறுகளை (Acoustic properties) அப்படியே அந்த மொழியின் வரிவடிவமாக (Graphemes) - எழுத்தாக ( Speech to Text) - கணினித்தொழில் நுட்பத்தைக்கொண்டு மாற்றிவிடலாம். அதுபோன்று எழுத்துரையையும் பேச்சுரையாக ( Text to Speech) அப்படியே மாற்றிவிடலாம். சிக்கலே கிடையாது.
ஆனால் இயற்கைமொழிகளின் அமைப்பு அப்படிக் கிடையாது. ஆங்கிலத்தை எடுத்துக்கொண்டாலும் சிக்கல் உண்டு. ஆங்கில எழுத்துரையை (Written) அப்படியே வாசிப்பாக (Reading) மாற்றிவிடமுடியாது. அதற்குக் காரணம் , ஆங்கிலத்தில் சொற்களில் அமைந்துள்ள எழுத்துக்களுக்கும் அவற்றின் வாசிப்புக்கும் ( Spelling and Pronunciation) நேரடித் தொடர்பு அப்படியே கிடையாது.
எடுத்துக்காட்டாக, cat, cut, come என்ற சொற்களில் உள்ள "c" -இன் உச்சரிப்பு "k" ; ஆனால் city, cipher, cigarette, cylinder ஆகியவற்றில் "c" என்பது "c / s" என்று உச்சரிக்கப்படுகிறது. இதற்கு மொழியியல் அடிப்படையில் தெளிவான விதிகள் இருக்கின்றன. அவற்றின் உதவியால் இப்பிரச்சினையைத் தீர்க்கலாம்.
ஆனால் இதையும் தாண்டி, மற்றொரு சிக்கல் ஆங்கிலத்தில் உள்ளது. சில சொற்களில் உள்ள எழுத்துக்கள் வாசிப்பில் வெளிப்படாது; அவை உச்சரிக்கப்படாது. எடுத்துக்காட்டாக, plumber என்ற சொல் வாசிக்கப்படும்போது, ''b" எழுத்து வெளியில் உச்சரிக்கப்படாது. Psychology போன்று சொற்கள் அப்படி உள்ளது. அதற்கு ஒரு காரணம், சில சொற்கள் அயல்மொழிகளிலிருந்து கடன் வாங்கப்பட்டவை (Loan words) . அவ்வாறு வாங்கும்போது, அந்த அயல்மொழிகளின் உச்சரிப்பும் சேர்ந்து கடன் வாங்கப்படுகிறது. அதனால் எழும் சிக்கல் இது.
மேலும் ஒரு சிக்கல் ஆங்கிலத்தில் உண்டு. ஒரே சொல் பெயராகவும் வினையாகவும் இருக்கும்போது, அதை வேறுபடுத்தச் சொற்களுக்குள்ளே உள்ள மொழியசைகளில் அழுத்தம் (stress) பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, consent என்ற சொல்லில் இரண்டு மொழியசைகள் உள்ளன - con, sent இரண்டு மொழி அசைகள் உள்ளன. முதல் அசையில் அழுத்தம்கொடுத்தால் பெயர்ச்சொல்; இரண்டாவது அசையில் அழுத்தம் கொடுத்தால் வினைச்சொல்.
மேற்கூறிய காரணங்களால்தான் ஆங்கிலத்தில் உச்சரிப்புக்கென்று தனியே அகராதிகள் (Pronunciation dictionaries- by Daniel Jones, Gimson போன்றோர் உருவாக்கியவை) இருக்கின்றன.
மேற்கூறிய கருத்துக்கள் எல்லாம் ஆங்கிலத்தின் ஒரு பண்பைக் காட்டுகின்றன. அதாவது, எழுதும் நிலை வேறு (Writing Level) ; வாசிக்கும் நிலை ( Reading Level) வேறு. அதாவது எழுதுவதை அப்படியே வாசிக்கமுடியாது. சில மொழி விதிகளைப் பின்பற்றித்தான் வாசிக்கவேண்டும்.
அதாவது, எழுதப்படும் சொற்களில் உள்ள எழுத்துக்களை வைத்துக்கொண்டு, அப்படியே வாசிக்கமுடியாது. எழுதுநிலை (Writing Level) வேறு; வாசிப்பு நிலை (Reading Level) வேறு. இதுபோக, ஆங்கிலத்தில் உள்ள வழக்குக்கள் (dialects) வேறுபாடுகள் வேறு.
ஆனால் தமிழில் இந்தச் சிக்கல் கிடையாது. எழுதுவதை அப்படியே வாசிக்கலாம். மாற்றொலி விதிகள் மட்டும் தெரிந்திருக்கவேண்டும். கடல், அக்கா ; தங்கம், பங்கு ; பகல், இகழ் என்பவற்றில் சொல்முதல், சொல் நடுவில் இரட்டிப்பு முதலியவற்றில் 'x" என்று உச்சரிக்கவேண்டும். சொல் நடுவில் மெல்லினத்திற்குப் பின்னர் "g" என்று உச்சரிக்கவேண்டும்; சொல்நடுவில் இரண்டு உயிர்களுக்கு இடையில் "x" என்று உச்சரிக்கவேண்டும். இது இயற்கையான வேறுபாடு. முந்தைய, பிந்தைய ஒலிகளின் அடிப்படையில் அமைகிற வேறுபாடுகள். அவ்வளவுதான். அதுவும் வல்லின ஒலிகளுக்குமட்டும்தான் இப்பிரச்சினை. மெல்லினம், இடையினங்களுக்குச் சிக்கல் இல்லை. ஒரு எழுத்துக்கு ஒரு உச்சரிப்புத்தான்! மாற்றொலிச் சிக்கல் கிடையாது.
எனவே தமிழில் எழுதுவதை அப்படியே உச்சரிக்கலாம். வாசிக்கலாம். அதாவது ஆங்கிலத்தில் இருப்பதுபோன்ற எழுத்து நிலை (Writing level ) வேறு, வாசிப்பு நிலை (Reading Level) வேறு என்ற வேறுபாடு கிடையாது.
ஆகவே, தமிழ் எழுத்துரையை அப்படியே வாசிக்கலாம். ஆங்கிலம் போன்று உச்சரிப்பு அகராதி தேவை இல்லை.
மேற்குறிப்பிட்ட ஆங்கிலத்திற்கான சிக்கலை மொழியியல் உதவிகொண்டு தீர்த்து, ஆங்கில எழுத்துரையைப் பேச்சுரையாக ( Text to Speech) மாற்றவும், பேச்சுரையை எழுத்துரையாகவும் ( Speech to Text) மாற்றவும் மென்பொருள்கள் (software) தயாரிக்கப்பட்டுள்ளன.
அடுத்த பதிவில் தமிழுக்கு உள்ள வேறு சிக்கல்களை எழுதுகிறேன்.

சனி, 9 டிசம்பர், 2023

யாருக்கு இழப்பு . . . ?

 

யாருக்கு இழப்பு . . . ?

---------------------------------------------------------------------------------------------------------------------

மிகப்பெரிய மாடிகளில் . . . மாளிகைகளில் வசிக்கிற மிகப் பெரிய பணக்காரர்களுக்கு மழை, வெள்ளத்தால் இழப்பு ஒன்றும் இல்லை!

அவர்களுக்குச் சமமாக . . .
இழப்பதற்கு ஒன்றுமில்லாத நடைபாதைவாசி மக்களுக்கும் ஒருநாள் தூக்கம்மட்டுமே இழப்பு!
இழப்புக்கு உட்பட்டவர்கள் ''சிறு உடைமையாளர்களான '' நடுத்தர, உயர் நடுத்தர மக்களே!

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னையில் உங்களுக்குத் தெரிந்த ஊர்கள் . . . அடிப்படைக் காரணங்கள்!

 வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னையில் உங்களுக்குத் தெரிந்த ஊர்கள் . . . அடிப்படைக் காரணங்கள்!

-----------------------------------------------------------------------------------------------------
முதற்பட்டியல் (நீண்ட கால வரலாறு உடையவை) : மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, வேப்பேரி, பாரிமுனை, அடையாறு, திருவான்மியூர், எழும்பூர், புதுப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, மாதவரம், எர்ணாவூர், புழல், ராயபுரம், புளியந்தோப்பு, பெரம்பூர், சூளை, பட்டாளம்
இரண்டாம் பட்டியல் (இடைக்கால வரலாறு உடையவை) : வேளச்சேரி, மடிப்பாக்கம், புழுதிவாக்கம், பெரும்பாக்கம், மாம்பாக்கம், ஒட்டியம்பாக்கம், கொளப்பாக்கம், பள்ளிக்கரணை, முகலிவாக்கம், துரைப்பாக்கம், செம்மஞ்சேரி, கோவிலம்பாக்கம், மணலி, மாதவரம், திருவேற்காடு, கொரட்டூர், முடிச்சூர், மண்ணிவாக்கம், கண்ணம்பாளையம், கொடுங்கையூர்
மூன்றாம் பட்டியல் (''நவீன நகர்கள்'') : சுண்ணாம்புக் குளத்தூர், அரசன்கழனி, பாலகிருஷ்ணாபுரம், சமத்துவ பெரியார்நகர், வரதராஜபுரம், பரத்வாஜ்நகர், கிருஷ்ணாநகர், மணிமங்கலம், லட்சுமிநகர், வட பெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், வடகரை.
மூன்றாம் பட்டியல் தொடர்ந்து விரிவடைந்து கொண்டிருப்பதால், சிலவற்றுடன் நிறுத்திக்கொள்கிறேன்.
மூன்று பட்டியல்களிலும் உள்ள பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவை. மூன்றாம் பட்டியல் விரிய விரிய . . . முதல் பட்டியலிலும் இரண்டாம் பட்டியலிலும் உள்ள பாதிக்கப்பட்ட ஊர்களின் (மூன்றாம் பட்டியல் ஊர்களோடு சேர்ந்து) எண்ணிக்கை அதிகரிக்கும்.
அதாவது நேர் விகிதத்தில் அதிகரிப்பு!
மூன்றாம் பட்டியலில் உள்ள பகுதிகள் 1970-க்குமுன் இருந்திருக்காது எனக் கருதுகிறேன்.
நான்காவது பட்டியல் ஒன்று உண்டு . . . அதுதான் ''கல்வித் தந்தைகளின்'' ஏழைகளுக்கான ''கல்வி நிலையங்கள்''! பெயர்களை இங்குக் குறிப்பிட விரும்பவில்லை. குறிப்பிட்டால் ''மான நஷ்ட வழக்குகள்'' போட்டுவிடுவார்கள்!
மூன்றாம், நான்காம் பட்டியல்களில் உள்ள பகுதிகள் அனைத்தும் ஏரிகளிலும், குளங்களிலும் , நீர் வரத்து, நீர்த் தேக்கம் பகுதிகளிலுந்தான் உருவாக்கப்- பட்டிருக்கின்றன! இதற்கு இனியாவது மாற்று ஏற்பாடுகள் செய்யமுடியுமா? விரிவாக்கத்தைத் தடுக்கமுடியுமா? அடுத்து, ஏற்கனவே அங்கு இருக்கிற மக்களுக்கு வேறு என்ன மாற்று ஏற்பாடு - வெள்ளத்தைச் சமாளிக்க - செய்துகொடுக்கமுடியும்? இதற்குத் தெளிவான திட்டங்கள் தேவை!
முதல் பட்டியல், இரண்டாம் பட்டியல் ஆகியவற்றிலும் பிரச்சினை இருக்கிறது. புதிய பல மாடிக் கட்டிடங்கள் . . . 10, மாடிகள், 15 மாடிகள் கட்டிடங்கள்! அவற்றிற்குத் தண்ணீர் . . . கழிவுநீர் வெளியேற்றம், மின்சாரம் ஆகிய தேவைகளை . . . ஏற்கனவே இருக்கிற அந்தப் பகுதிகளின் வீடுகள்தான் பகிர்ந்தளிக்கவேண்டும்! முக்கியமாக, கழிவுநீர் வெளியேற்றம்! இது கடந்த 50 ஆண்டுகளில் எந்தவகையிலும் முன்னேறவில்லை . . . நவீனப்படுத்தப்படவில்லை! அப்படியென்றால், இந்தப் பகுதிகளும் பாதிக்கப்படத்தானே செய்யும்!
ஆக, மொத்தத்தில் . . . தண்ணீர் வரத்துப் பகுதி, தேக்கப்பகுதிகளில் வீடுகள் விரிவாக்கம் . . . ஏரிகள், குளங்கள் மாயமாக மறைதல் . . . நீர் மேலாண்மை புறக்கணிப்பு . . . அடுக்குமாடிக்கட்டிடங்களின் அதிகரிப்பு! இவைதான் இன்றைய பாதிப்புக்களுக்குக் காரணங்கள்!
மேலும் . . . விரிவடையும் சென்னை மக்கள் தொகைக்கு .... வீட்டு வசதி எவ்வாறு அளிப்பது? அடையாறில் 2 கோடிக்குக் குறைந்து . . . இரண்டு படுக்கை அறைகள்கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பே கிடைக்காது! இடைத்தட்டு, அடித்தட்டு மக்கள் எவ்வாறு சொந்த வீடு பெறுவது? ஒரு கிரவுண்ட் மனை 5 கோடி! எப்படி இந்த மாற்றம் ஏற்பட்டது?
மேற்கூறியவற்றைப்பற்றிக் கவலைப்படாமல் . . . வெள்ளப்பாதிப்பு ஏற்படும்போதுமட்டும் படகுகளும், ரொட்டிகளும், குடிநீரும் கொடுத்துப் பயன் இல்லை!

சென்னை வெள்ளப்பாதிப்பிற்கு நிரந்தரத் தீர்வு !

 சென்னை வெள்ளப்பாதிப்பிற்கு நிரந்தரத் தீர்வு !

----------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை வெள்ளப்பாதிப்புக்கு இனி யாராலும் நிரந்தரத் தீர்வைத் தரமுடியாது.
"இறந்தவர் மீண்டும் வரமுடியாது; ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்கவும் முடியாது!''
வேண்டுமென்றால் . . . ஆங்காங்கே படகு நிலையம், மக்களைத் தங்கவைப்பதற்கான இல்லங்கள் (Community halls) போன்றவற்றை அமைக்கலாம். அனைவருக்கும் கட்டாய நீச்சல் பயிற்சி அளிக்கலாம். அனைவருக்கும் உயிர்காக்கும் ரப்பர் வளையம் அளிக்கலாம்.
அல்லது ஆங்காங்கே பெரிய சுரங்கங்கள் அமைத்து, அதன்வழியே மழைத்தண்ணீரை, சென்னைக்கு வெளியே தற்போது இருக்கிற வெற்று நிலங்களில் (இருந்தால்!!!) புதிய புதிய அணைக்கட்டுக்களைக் கட்டி, அவற்றில் தேக்கிவைக்கலாம். இதன்மூலம் தண்ணீர் பிரச்சினையையும் தீர்க்கலாம்.
இதற்கு வேண்டிய நிதியைத் தண்ணீர் போக்கு, தண்ணீர் பிடிப்புப் பகுதிகளில் பலமாடிக் கட்டிடங்களைக் கட்டியுள்ள ரியல் எஸ்டேட் அதிபர்களிடமும், ஆங்காங்கே பிரம்மாண்டமான கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் கட்டியுள்ள ''கல்வித் தந்தைகளிடம்'' வசூலிக்கலாம்.
சீனாவில் ஒரு வெள்ளப் பகுதியிலிருந்து தண்ணீரை . . . தண்ணீர் இல்லாத மற்றொரு பகுதிக்குக் கொண்டு சென்று தேக்கிவைக்க . . . பாலம் கட்டிச் செயல்படுத்தினார்கள் ! எனவே அதுபோன்று இங்கும் சிந்திக்கலாம்! சீனாவில் பாலம்! இங்குச் சுரங்கம்! நமது '' ஐ ஐ டி'' காரர்களிடம் கேட்டால், இதை நிறைவேற்றுவதற்கான திட்டங்களை அளிப்பார்கள்!
இன்னொரு திட்டமும் இருக்கிறது! தொங்கு தோட்டம்மாதிரி, தொங்கு வீடுகள்! அடித்தளம், முதல் தளம் இரண்டையும் தூண்களாக வைத்துக்கொண்டு, மேலே வீடுகளைக் கட்டலாம். தரை வீடுகளே இருக்கக்கூடாது!
இதை நான் கேலிக்காகவோ கிண்டலுக்காகவோ எழுதவில்லை. இது ஒன்றே தற்போதைய நிலையில் மக்களின் இன்னல்களைத் துடைக்க ஒரே வழி!

சிறப்புப் பட்டிமன்றம் . . . எரிந்த கட்சி ! எரியாத கட்சி லாவணி!

 சிறப்புப் பட்டிமன்றம் . . . எரிந்த கட்சி ! எரியாத கட்சி லாவணி!

----------------------------------------------------------------------------------------------------
சென்னை வெள்ளத்திற்கு என்ன காரணம்?
மழையின் அளவு அதிகமா? குறைவா?
கடல் மழைத்தண்ணீரை உள்வாங்கியதா? இல்லையா?
''எங்கள் ஆட்சியிலும்தான் கடல் இருந்தது!''
''பௌர்ணமியில்மட்டுந்தான் கடல் வெளிநீரை உள்வாங்காது . . . இப்போது பௌர்ணமி இல்லையே!''
போன்ற ''அறிவியல் உண்மைகளையெல்லாம்'' விவாதிக்கிறார்கள்!
தொலைக்காட்சிகளைப் பார்த்தாலே . . . இந்தப் பட்டிமன்றந்தான் நடந்துகொண்டிருக்கிறது!
மக்கள் என்ன அவ்வளவு பெரிய முட்டாள்களா?
அதே நேரத்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் அலைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது!
எனக்குத் தெரிந்து 50 ஆண்டுகளுக்குமுன்பு சென்னையின் புறப்பகுதியில் அடுக்குமாடிக் கட்டிடங்கள் கிடையாது. பன்னாட்டுக் கணினி நிறுவனங்கள் கிடையாது! புதிய புதிய ''நகர்கள்'' கிடையாது! கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் கிடையாது! சென்னையில் எல் ஐ சி கட்டிடம் ஒன்றுதான் அடுக்குமாடிக் கட்டிடம்! சென்னை என்பதற்கு அப்போதெல்லாம் அடையாளம் எல் ஐ சி தான்!
மேற்கூறிய எல்லாம் வளர்ச்சிதானே! அவை தேவை இல்லையா என்று யாரும் கேட்கலாம்! உறுதியாகத் தேவைதான்! யாரும் வளர்ச்சியை வேண்டாம் என்று கூறமாட்டார்கள்!
ஆனால் மழைபெய்து தண்ணீர் ஓடும் பகுதியை அல்லது தண்ணீரை உள்வாங்கிக்கொள்ளும் நிலப்பகுதிக்கு . . . எவ்வித மாற்றும் இல்லாமல் அடுக்குமாடிக் கட்டிடங்களாக மாற்றினால் . . . மழை நீர் எங்கு செல்லமுடியும்? முடிந்த அளவு ஆங்காங்கே உள்ள ஏரிகளுக்குச் செல்லலாம்.
ஏரி நிரம்பிவிட்டால் . . . உபரி நீர் எங்கு செல்லும்? குளங்களில் புக வேண்டிய அது குடியிருப்புப் பகுதிகளுக்குள்தான் புகும்! ஏரியின் கரையும் உடையும். புதிய ''நகர்கள்'' வெள்ளத்தில் மிதக்கவே செய்யும்!
மழைத் தண்ணீர் வரத்து அல்லது தண்ணீர் போக்கு - அதாவது ''தண்ணீருக்கான போக்குவரத்துச் சாலைகள்'' இப்போது கிடையாது!
இறுதியில் தண்ணீர் பிடிப்புப் பகுதியும் கிடையாது! அதாவது தண்ணீருக்கான ''குடியிருப்புப் பகுதியும் '' கிடையாது!
இருக்கிற சிறு சிறு குட்டைகள் எல்லாம் பலமாடிக் கட்டிடங்களாக மாறியிருக்கின்றன! கல்லூரிகளாகவும், பல்கலைக்கழகங்கள் ஆகவும் மாறியிருக்கின்றன.
மாற்றமும் வளர்ச்சியும் தேவைதான்! ஆனால் மேற்குறிய தேவைகளை எல்லாம் ஒரு கட்டிடத்திற்கு அனுமதி கொடுக்கும்போது கவனிக்கவேண்டாமா?
சென்னைக்குள்ளும் ஏராளமான பலமாடிக் கட்டிடங்கள்! அவற்றின் தண்ணீர் வசதி, மின்சார வசதி, கழிவுநீர் வசதி இவைபற்றியெல்லாம் கணக்கில் கொள்ளாமல் . . . ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுப்பதும் அதனால் அரசியல்வாதிகள் தங்கள் பைகளை நிரப்புவதில்மட்டுமே கவனம் கடந்த 50 ஆண்டுகளாகச் செலுத்தியிருக்கின்றனர் என்பதே உண்மை! இதில் இந்தக் கட்சி, அந்தக் கட்சி என்ற வேறுபாடே கிடையாது! கட்சிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு ''சமத்துவக் கொள்கை''!
திட்டமிட்ட நகர வளர்ச்சி என்பது இங்கே கிடையவே கிடையாது! மிக மிகப் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ''கொடுப்பதைக் கொடுத்து'', ''வாங்க வேண்டிய'' அனுமதிகளைப் பெற்றுக்கொள்கிறார்கள். அதுபோல்தான் ''கல்வித் தந்தைகளும்'' செய்கிறார்கள்! இனி என்ன செய்யமுடியும்? வணிக நிறுவனங்களின் பல மாடிக் கட்டிடங்களை இடித்துத் தள்ளமுடியுமா? பல்கலைக்கழகக் கட்டிடங்களை இடிக்கமுடியுமா? புதிது புதிதாகத் தோன்றியுள்ள ''நகர்களை'' அழிக்கமுடியுமா? இதுவெல்லாம் இனி நடக்காத காரியம்! அல்லது ''சர்வரோக நிவாரணியாகக்'' கருதப்படுகிற ''ஐ ஐ டிகள்'' இதற்கு மாற்றுவழிகளைக் கூறமுடியுமா?
ஆகவே ஒரே வழி . . . ஆண்டுக்கு ஒருதடவை மக்கள் இந்த இன்னல்களைத் தாங்கிக்கொள்ள வேண்டியது தான்! இந்த 50 ஆண்டுகால மாற்றங்களுக்குப் பொறுப்பான இரண்டு கட்சிகளும் ஒன்றை ஒன்று தாக்கிக்கொள்வதெல்லாம் வெறும் நாடகந்தான்! அவர்களுக்கு தெரியும் இந்த மழைப் பாதிப்பிற்கு . . . வெள்ளப் பாதிப்பிற்கு மாற்றாக இன்று ஒன்றும் செய்யமுடியாது என்று!
ஆகவே, மழைத் தண்ணீரின் ''போக்குவரத்துக்கும்'' ''குடியிருப்புக்கும்'' ஏதாவது மாற்றுவழி உண்டா என்பதுபற்றித் தொழில்நுட்ப அடிப்படையில் சிந்தித்துப் பார்ப்பதைவிட்டு விட்டு . . . ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டிருப்பது அவர்கள் தங்களது ''அரசியல் பகையைத்'' தீர்த்துக்கொள்ள உதவுமே தவிர . . . உண்மையான பிரச்சினைக்குச் சரியான வழிமுறைகளைக் கண்டறிந்து செயல்படுவதற்கு கொஞ்சங்கூட உதவாது!
மாநில அரசு தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக மேற்கொள்கிற நிவாரணப் பணிகளைக் குறைத்துப்பார்ப்பதோ அல்லது கிண்டல் அடிப்பதோ எனது நோக்கம் இல்லை! எந்தக் கட்சி ஆளும் கட்சியாக இருந்தாலும் இதைச் செய்துதான் ஆகவேண்டும். அதற்கு முழு ஆதரவும் தரவேண்டும். இதில் ஐயம் இல்லை!
சுனாமி போன்ற இயற்கைச் சீற்றம் பல தலைமுறைகளுக்கு ஒரு தடவைதான் வருகிறது ! ஆனால் இந்த வெள்ளப் பிரச்சினை அவ்வப்போது - சில ஆண்டுகளுக்கு ஒருமுறை - வந்துகொண்டுதானே இருக்கிறது. இதற்கு அடிப்படைக் காரணம் என்ன என்பதுபற்றியே எனது இந்தப் பதிவு! ''கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குவது '' என்பது இல்லாமல் ''கண்ணும் வேண்டும், சித்திரமும் வேண்டும்'' என்பதே எனது கருத்து!

ஒரு இனத்தின் பண்பாடு, மொழி ஆகியவற்றின் வளர்ச்சி விதிகள் . . .

 

ஒரு இனத்தின் பண்பாடு, மொழி ஆகியவற்றின் வளர்ச்சி விதிகள் . . . 

--------------------------------------------------------------------------------------------------- 

ஒரு இனத்தின் பண்பாடோ அல்லது அதன் மொழியோ வரலாற்றில் மாறும்; மாறவேண்டும். வளர்ச்சி அடையும்; வளர்ச்சி அடையவேண்டும், அதில் ஐயம் இல்லை. ஆனால் அந்த மாற்றங்கள் அவற்றினுடைய - பண்பாடு, மொழி ஆகியவற்றின் - உள்ளார்ந்த இயக்கவியல் அடிப்படையில்தான் மாறும். வெளியிலிருந்து எந்தவொரு மாற்றமும் கொண்டுவரப்பட்டால், அந்த மாற்றம் அந்த இனத்தின் பண்பாடு, மொழியின் உள்ளார்ந்த இயக்கவியலுக்கு - வளர்ச்சி விதிகளுக்கு- உட்பட்டு இருந்தால்தான் ஏற்றுக்கொள்ளும். இல்லையென்றால் அது தானாக மறுக்கப்பட்டுவிடும். கடலில் போடப்படுகிற அந்நியப் பொருள்கள் கடலால் ஏற்றுக்கொள்ளப்படாமல், கரையில் ஒதுக்கிவிடப்படுவதுபோல ஒதுக்கப்பட்டுவிடும். எந்தவொரு பொருளின் மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் அடிப்படை . . . அதன் உள்ளார்ந்த எதிர்மறைகளின் ஒற்றுமையும் போராட்டமுந்தான்! அதாவது உள்ளார்ந்த முரண்பாடுகளும் அவற்றின் தீர்வுகளும்தான்! வெளியிலிருந்து வரும் எதுவும் இந்த உள்ளார்ந்த மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உதவுமேதவிர, அதுவே அந்தப் பொருளின் மாற்றத்தைத் தீர்மானித்துவிடமுடியாது. இந்த வளர்ச்சி விதியானது இயற்கை, சமுதாயம், சிந்தனை மூன்றுக்குமே பொருந்தும். எனவே இந்த அடிப்படையில் ஒரு இனத்தின் மொழியின் மாற்றத்தையும் வளர்ச்சியையும் ஆராயவேண்டும்; பார்க்கவேண்டும். என்னுடைய ஆய்வுமுறையும் கண்ணோட்டமும் இதுதான்! தமிழ்மொழியின் வரலாற்று வளர்ச்சியையும் அதனுடைய இன்றைய தேவையையும் இந்த நோக்கில்தான் பார்க்கிறேன்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India