புதன், 29 நவம்பர், 2023

மாற்றொலிகள், ஒலியன்கள் என்ன வரையறை?

 மாற்றொலிகள், ஒலியன்கள் என்ன வரையறை?

இரண்டு பேச்சொலிகள் சொற்களில் ஒரே இடத்தில் வந்து, பொருண்மை (meaning difference) வேறுபாட்டைத் தந்தால் அவை இரண்டும் தனித்தனி ஒலியன்கள் (Phonemes) . இதை வேற்றுநிலை வழக்கு ( Contrastive distribution) என்று அழைப்பார்கள். படம், கடம் - இவற்றில் சொல்முதலில் ப -வும் வருகிறது; க-வும் வருகிறது. மற்ற ஒலிகள் எல்லாம் ஒன்றுபோல் இருந்தாலும், இந்த இரண்டு ஒலிகளின் வேறுபாடே பொருண்மை வேறுபாட்டுக்குக் காரணம். எனவே இரண்டும் தனித்தனி ஒலியன்கள். ஆங்கிலத்தில் cold, gold . இரண்டிலும் k, g என்ற ஒலி வேறுபாடே பொருண்மை வேறுபாட்டுக்கு அடிப்படை. எனவே அவை ஆங்கிலத்தில் தனித்தனி ஒலியன்கள்.

கடல், அக்கா - தங்கம், பங்கம் - காகம் , தாகம் இவற்றில் க - என்பதற்கு மூன்று பேச்சொலிகள் உள்ளன. ஆனால் இவை ஒன்று வருமிடத்தில் மற்றொன்று வராது. இதுபோன்ற வருகையை துணைநிலை வழக்கு (Complementary distribution) என்று அழைப்பார்கள். ஆனால் இந்த மூன்று பேச்சொலிகளுக்கும் இடையில் ஒலி ஒற்றுமை ( Phonetic Similarities) இருக்கிறது. எனவே இவை மூன்றும் ஒரே குடும்பத்தின் உறுப்பினர்களே (members of a single family) . இடத்திற்குத் தகுந்தாற்போல் தன்னை மாற்றியமைத்துக்கொள்கிறது. அதற்குக் காரணம், முந்தைய , பிந்தைய ஒலிச் சூழலே (Contextual environment) . எனவே இந்த மூன்றும் ஒரே ஒலியனின் மாற்றொலிகளே ( Allophones) .

---------------------------------------------------------------------------------------------------------------------------------

திரு. வேல்முருகன் சுப்பிரமணியன்

-------------------------------------------------

ஐயா, நன்றி.. ஆனாலும் இந்த வரையறையின் வலு சரியாக எனக்கு புலப்படவில்லை.

முந்தைய பதிவில்

ஒரே எழுத்து ஒன்றுக்குமேற்பட்ட ஒலியன்களுக்கு பயன்படுகிறது. காட்டாக, c என்பது k,s இன் ஒலியைப்பெறுகின்றது என்று காட்டுகிறீர்கள். - சரிதான்.

அதற்கும்

கு என்பது ku,gu (அதாவது க் என்பது k, g) ஒலிகளைக்கொடுக்கிறது என்பதற்கும் பெரிய வேறுபாடு இல்லைதானே!

அதற்கு அடுத்தபடியாக பொருண்மைவேறுபாட்டைப்பற்றிச்சொல்கிறீர்கள்.

தமிழிலும்

=> பாங்கு

=> பாக்கு பொருண்மைவேறுபாட்டைக்கொண்டவைதானே. இதும் car, city என்று நீங்கள் காட்டும் எடுத்துக்காட்டும் எங்கு எப்படி வேறுபடுகின்றன?


ந. தெய்வ சுந்தரம்

-------------------------

நண்பரே. தங்கள் குழப்பத்திற்குக் காரணம் . . . தமிழ் ஒலியன்களையும் ஆங்கில ஒலியன்களையும் ஒன்றுபோல் பார்ப்பதே காரணம்.

பேச்சொலிகளைப் பொருத்தமட்டில். . . ஆங்கிலத்தில் உள்ள [k] வும் ('"cat", "cut") , [g] வும் தமிழில் உள்ள [k], [g] ஆகியவையும் பேச்சொலிப் பிறப்பில் ஒன்றுதான். இரண்டின் பிறப்பொலியல் பண்பு அல்லது இயற்பியல் பண்பு ஒன்றுதான். ஆனால் ஆங்கிலத்தில் அவை பொருண்மை வேறுபாட்டுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. வேற்றுநிலை வழக்கில் (contrastive distribution) வருகிறது. எனவே அங்கே - ஆங்கிலத்தில் - அவை இரண்டும் தனித்தனி ஒலியன்கள். ஆனால் தமிழில் [k] வருமிடத்தில் [g] வராது. இதுதான் துணைநிலை வழக்கு (Complementary distribution) என்று குறிப்பிடப்படுகிறது.

நான் ஆங்கிலத்தைப் பேசும்போது . . . 26 எழுத்துக்களை வைத்துக்கொண்டு 44 ஒலியன்களை அங்கு வெளிப்படுத்துகிறார்கள் என்று கூறினேன். c என்ற எழுத்து ஆங்கிலத்தில் [k] என்ற ஒலியனுக்கும் (cat, cut) பயன்படுத்தப்படுகிறது; [s] என்ற ஒலியனுக்கும் பயன்படுத்தப்படுகிறது என்று ஆங்கிலம்பற்றிப் பேசும்போது குறிப்பிட்டேன். இதற்குதம் தமிழுக்கும் தொடர்பு கிடையாது.

அடுத்து, 'பாங்கு' 'பாக்கு' இரண்டுக்கும் பொருண்மை வேறுபாட்டுக்குக் காரணம் , / ங்/ /க்/ என்ற வேறுபட்ட ஒலியன்கள் வருவதே. இரண்டும் தனித்தனி ஒலியன்கள். அதுபோன்று, 'ங்' என்ற பேச்சொலிக்குப்பிறகு அல்லது ஒலியனுக்குப்பிறகு வருகிற 'கு' -வில் உள்ள /k/ ஒலியன்னானது [g] என்று உச்சரிக்கப்படுகிறது. /k/ ஒலியனின் ஒரு மாற்றொலியான [k] மாற்றொலியானது சொல்முதலிலும் சொல்நடுவில் இரட்டித்து வரும்போதும் வரும் (காக்கை, அக்கா) ; சொல் நடுவில் மூக்கொலிகளுக்குப் ( மெல்லினம்) பின்னால் வரும்போது தன்னை [g] என்ற மாற்றொலியாக (தங்கம், சங்கு) மாற்றிக்கொள்ளும்.

பேச்சொலிகளில் ஆங்கில [k] [g] வுக்கும் தமிழ் [k] [g] வேறுபாடு கிடையாது. ஆனால் அவை ஆங்கிலத்தில் தனித்தனி ஒலியனாகப் பயன்படுகின்றன. தமிழில் ஒரே ஒலியனின் மாற்றொலிகளாகப் பயன்படுகின்றன.

பேச்சொலிகளைப் பொறுத்தமட்டில் எந்தவொஉர பேச்சொலியுஉம் எஎல்லா மொழிகளிலும் ஒரேமாதிரியாகத்தான் உச்சரிக்கப்படும். அதாவது ஒரே ஒலிப் பிறப்பியல்தான். ஆனால் பொருண்மை வேறுபாட்டுக்கு அடிப்படையாக அமைகிறதா இல்லையா என்பதைப்பொறுத்துத்தான் அவை ஒரு குறிப்பிட்ட மொழியில் தனி ஒலியனா, அல்லது ஒரே ஒலியனின் மாற்றொலிகளாக என்று முடிவுசெய்யமுடியும்.

இதை ஒலியனியியல் (Phonology) பின்வருமாறு விளக்குவார்கள். கத்திரிக்காய், வாழைக்காய் நீங்கள் வாங்கினாலும் நான் வாங்கினாலும் அவற்றின் பண்புகள் ஒன்றுதான். ஆனால் தாங்கள் அதைக் கூட்டாகப் பயன்படுத்தலாம். நான் பொரியலாகப் பயன்படுத்தலாம். பயன்படுகிற முறையில் வேறுபாடு. பேச்சொலியியல் (Phonetics) என்று பார்க்கும்போது, ஆங்கில [k] [g] -வும் தமிழ் [k][g] வும் ஒன்றுதான். ஆனால் பொருண்மை வேறுபாட்டுக்கு அடிப்படையாக அமைவதில் ஆங்கிலத்திற்குத் தமிழுக்கும் வேறுபாடு உண்டு. அதாவது ஒலியனியலில் வேறுபடுகிறது (Phonemics) . அதனால்தான் உலகப் பேச்சொலி கழகம் ( international Phonetic Association) ஆய்வு உலகப் பொதுமையானது. Phonology -யில் Phonetics, Phonemics இரண்டும் அடங்கும்.

அடுத்து, ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டுக்கும் (spelling) உச்சரிப்புக்கும் (pronunciation) வேறுபாடு உண்டு. காரணம், அத்தனை ஆங்கில ஒலியன்களுக்கும் ஆங்கில எழுத்துக்கள் கிடையாது. எனவே சொற்களின் உச்சரிப்பைத் தனியே கற்றுக்கொள்ளவேண்டும். அதானல்தான் ஆங்கிலத்திற்குத் தனியே Pronunciation dictionary ( Daniel Jones ) உள்ளது . தமிழில் அதுமாதிரி தேவை இல்லை. எழுதுவதை அப்படியே வாசிக்கலாம், மாற்றொலி வேறுபாடுமட்டும் தெரியவேண்டும்.

--------------------------------------------------------------------------------------

தமிழ் இலக்கணக் கட்டமைப்பை உருவாக்கியவர் யார்? தொல்காப்பியர், நன்னூலார் போன்றோரா அல்லது ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமுதாய மக்களா? தமிழின் இயங்கியல் என்ன?

 தமிழ் இலக்கணக் கட்டமைப்பை உருவாக்கியவர் யார்?

தொல்காப்பியர், நன்னூலார் போன்றோரா அல்லது ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமுதாய மக்களா? தமிழின் இயங்கியல் என்ன? 

--------------------------------------------------------------------------------------------------------------------

தமிழ் மொழியின் இலக்கணக் கட்டமைப்பைத் ( Language Grammatical Structure) தேவையான தரவுகளோடு தொல்காப்பியர் கண்டறிந்து தனது இலக்கண நூலை அனைவரும் வியக்கும்வண்ணம்  படைத்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து அவ்வப்போது மேலும் தமிழ் இலக்கண ஆசிரியர்கள் . . .  தமிழ்மொழியில் ஏற்பட்ட மாற்றங்களை உள்ளடக்கி, பல இலக்கணநூல்களை உருவாக்கி அளித்துள்ளனர். 

குறிப்பாக, நன்னூல் எழுதிய பவணந்தியார்! 

அதுபோன்று, இன்றும் புதிய மாற்றங்களை உள்ளடக்கி, தமிழ் அறிஞர்கள் பலர் தமிழ் இலக்கண நூல்கள் படைத்துள்ளனர்; ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளனர்! 

இவையெல்லாம் மிகப் பெரிய பணிகள்! இதில் எந்தவொரு ஐயமும் கிடையாது! 

மேற்கூறியவர் எல்லோரும் . . .  தொல்காப்பியர் உட்பட  . . .  தமிழ்மொழியில் நிலவிய அல்லது நிலவுகிற கட்டமைப்பைக் கண்டறிந்து, முறையாக  வெளிப்படுத்தி உள்ளார்கள்!  

இங்கு நாம் தெளிவாக்கிக்கொள்ளவேண்டிய அறிவியல் உண்மை என்ன? 

புவிஈர்ப்பு விசையை அறிவியலாளர்கள் கண்டறிந்தனர் (Discovery)  ; ஆனால் அவர்கள் அந்த விசையை உருவாக்கவில்லை (Invention) . அனைத்து அறிவியல் கண்டுபிடிப்புக்களும் அப்படியே. 

உருவாக்கம் வேறு . . .  கண்டுபிடிப்பு வேறு! புவிஈர்ப்பு விசையை (Gravitation Force) உருவாக்கியது யார்? பிரபஞ்சத்தின் (Universe) தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் இயற்கையில் ஏற்பட்ட ஒன்றே அது என்பது இன்றைய அறிவியலாளர்கள் கருத்து. இதுபற்றிய விரிவான ஆய்வுக்கு இங்கு நான் செல்லவில்லை.

அதுபோல . . .  தமிழ்மொழியின்  இலக்கணக் கட்டமைப்பை (யாப்பு இலக்கணம் இல்லை!) உருவாக்கியது யார்? உண்மையில் எந்தத் தனிநபர்களும் கிடையாது! தமிழ்ச் சமுதாயத்தின்  . . .  தமிழ் மக்களின் பொருள் உற்பத்தியில் ( Social material Production)  . . சமூகச் செயல்பாடுகளில் ( Social activities) உருவாகியதே தமிழ் இலக்கணக் கட்டமைப்பு! 

அதுபோல . . .  தமிழ்மொழியின் மாற்றங்களை  . . .  வளர்ச்சிகளை . . .  உருவாக்கியவர்கள் தமிழ் இன மக்களே . . .  தங்களது சமூகச் செயல்பாடுகளின் ஊடே . . .  அதற்காக . . . தமிழ்மொழியின் கட்டமைப்பைத் தொடர்ந்து வளர்த்துவருபவர்கள் ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமே! எந்தவொரு தனிநபர்களும் இல்லை ! சொல் உருவாக்கத்தில் தனிநபர்கள் பங்கு இருக்கலாம். 

தமிழ்ச் சமூகத்தின் தேவைகளை ஒட்டி . . .  இலக்கண அமைப்பிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன! சொற்களஞ்சியமும் விரிவடைகிறது! இவை எல்லாமுமே  ஒட்டுமொத்தத் தமிழ்ச்சமுதாயத்தின் விளைபொருளே (Social  Product of Tamil society) ! எந்தவொரு தனிநபரின் படைப்பு . . .  உருவாக்கம் இல்லை! 

தனிநபர்களின் . . .  தமிழ் அறிஞர்களின் . . .  பணியானது, நிலவுகிற தமிழ்க் கட்டமைப்பை நுட்பமாக ஆய்ந்தறிந்து நமக்கு அளிப்பதே! 

தமிழ்மொழி  . . .  தனது வரலாற்றில் தொடர்ந்து மாறியும் வளர்ந்தும் வருகிறது! சென்ற நூற்றாண்டில் இருந்த தமிழ்மொழி அப்படியே  . . .  கொஞ்சம்கூட மாறாமல் . . . இருக்கமுடியாது. அப்படி இருந்தால் . . .  தமிழ்ச் சமுதாயத்திற்குத் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது என்றே பொருள்! ஆனால் உண்மையில் அப்படி கிடையாது! இயற்கையின் . . . பிரபஞ்சத்தின் வளர்ச்சியும் இப்படியே!  

ஆகவே, எந்தவொரு தனிநபரும் . . .  ''நான் இந்த இலக்கணப் பண்பை உருவாக்கியுள்ளேன்'' என்று கூறமுடியாது! அதுபோல, ''நான் தமிழின் இந்த இலக்கணப் பண்பை . . .  மாற்றத்தை ஏற்றுக்கொள்ளமாட்டேன்'' என்றும் கூறமுடியாது! 

தமிழ்மொழி ஒரு இயற்கைமொழி; எஸ்பராண்டோ போன்றோ அல்லது கணினி நிரல் மொழிகள்போன்றோ செயற்கைமொழி இல்லை! இந்த நூற்றாண்டில் . . .  இந்தக் குறிப்பிட்ட நபரால் . . .  உருவாக்கப்பட்ட மொழி என்று கூறமுடியாது! 

ஆகவே, தமிழ் ஆய்வாளர்களின் பணியானது . . .  தமிழ்மொழியின் இயங்கியல் வளர்ச்சி விதிகளை (Dialectical development of Tamil)  உள்வாங்கி . . .  அதன் தொடர்ந்த மாற்றத்தையும் வளர்ச்சியையும் (Changes and Development)  உள்வாங்கி . . .  தமிழ் இலக்கணக் கட்டமைப்பைப்பற்றிய தங்கள் ஆய்வுகளைத் தகுந்த தரவுகளோடு முன்வைப்பதே ஆகும்!

------------------------------------------------------------------------------------------------------------------------------------

உறுதியாக, ஆங்கிலத்திலும் எழுத்துமொழி, பேச்சுமொழிக்கிடையில் வேறுபாடு உண்டு. நிறைய ஆய்வுகள் வெளிவந்துள்ளன. ஆனால் தமிழ், கிரேக்கம், அரபியம் போன்ற மொழிகளில் எழுத்துவழக்குக்கும் பேச்சு வழக்குக்கும் இடையில் உள்ள அளவுக்கு வேறுபாடு கிடேயாது. எனவேதான் பின்னர் கூறிய மூன்றுமொழிகளும் இரட்டைவழக்கு மொழிகள் (diglossic languages) என்று அழைக்கப்படுகின்றன. ஹெரால்ட் ஷிப்மேனுக்கு இது தெளிவாகத் தெரியும். அமெரிக்க ஆங்கிலத்திற்கும் இங்கிலாந்து ஆங்கிலத்திற்குமே வேறுபாடுகள் உண்டு. இங்கிலாந்து ஆங்கிலமொழி வழக்குகளுக்கு dialect atlas -ஏ தயாரித்துள்ளார்கள்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

ஆங்கிலத்தில் பொருண்மை வேறுபாட்டுக்கு அடிப்படையான ஒலியன்கள் (Phonemes) 44. ஆனால் ஆங்கிலத்தில் இருக்கிற வரி வடிவங்கள் - எழுத்துக்கள் (Alphabets / scripts/ letters) - 26. ஒரே எழுத்து ஒன்றுக்குமேற்பட்ட ஒலியன்களுக்குப் பயன்படுகிறது. ஒரே ஒரு எடுத்துக்காட்டு - car, care, culture, current, cat, cut -இவற்றில் c என்பது k என்ற ஒலியனுக்குப் பயன்படுகிறது; ஆனால் city, cipher, civil, citizen , circle , citation என்பது s என்ற ஒலியனுக்குப் பயன்படுகிறது. ஏன் இவ்வாறு c எழுத்து வேறுபட்ட ஒலி வடிவங்களை எடுக்கிறது என்பதற்குத் தெளிவான விதி ஆங்கிலத்தில் உண்டு. அதாவது, ஒவ்வொரு ஒலியனுக்கும் தனித்தனி வரிவடிவம் கிடையாது. 44 ஒலியன்களுக்கு 26 வரிவடிவங்கள்தான்!

ஆனால் தமிழுக்கே உள்ள ஒரு சிறப்பு, 30 ஒலியன்களுக்கும் (12 உயிர் + 18 மெய்) முப்பது வரிவடிவங்கள்; தனித்தனி வடிவங்கள். அதுமட்டுமல்ல, ஆங்கிலத்தில் மொழியசைக்குத் (linguistic syllables) தனி வரிவடிவம் கிடையாது. இரண்டு அல்லது மூன்று வரிவடிவங்களைக்கொண்டுதான் அவை வெளிப்படும். ஆனால் தமிழில் 216 மொழியசைக்கும் ( உயிர்மெய் எழுத்துக்கள்) 216 வரிவடிவங்கள். ஆகவே , தமிழின் வரிவடிவங்கள் - எழுத்துக்கள் - மிகத் தெளிவாக, தமிழின் ஒலியன்கள், மொழியசைகள் ஆகியவற்றைத் தனித்தனியே வெளிப்படுத்தும் திறன் கொண்டவை.

44 ஒலியன்களை வெளிப்படுத்த ஆங்கிலத்தில் 26 எழுத்துக்களே இருந்தாலும், ஆங்கிலத்தில் எவ்விதச் சிக்கலும் இல்லை. அப்படியிருக்க, 30 ஒலியன்களுக்கும் 30 எழுத்துக்களும் 216 அசைகளுக்கும் 216 எழுத்துக்களும் இருப்பது உண்மையிலேயே மிகப் பெரிய சிறப்பாகும். இதனால் ஆங்கிலத்தைக் குறைவாகவும் தமிழை உயர்வாகவும் மொழியியல் அடிப்படையில் நான் கூறவரவில்லை.எந்தவொரு மொழியும் எந்தவொரு மொழியையும்விட உயர்ந்ததும் இல்லை, தாழ்ந்ததும் இல்லை!

எனவே , பேச்சொலிகள்(Phones) , ஒலியன்கள்(Phonemes) , மாற்றொலிகள் (Allophones), மொழியசை(linguistic syllable) மேற்கூற்று பேச்சொலிகள் (suprasegmental features) , மேற்கூற்று ஒலியன்கள் (Suprasegmental phoneme) போன்ற மொழி ஆய்வு அடிப்படைகளை மனதில்கொண்டு, தமிழ்மொழியை ஆய்வுசெய்யவேண்டும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழில் வல்லின எழுத்து ஆறுக்கும் ஒன்றுக்குமேற்பட்ட மாற்றொலிகள் உண்டு. (1) காக்கா, அக்கா - தங்கம், பங்கம் - காகம் அகல் ; (2) சட்டை , பசை - அச்சம் - மஞ்சள் ; (3) தாத்தா, அத்தை - பந்து, இந்து - பத், இதயம் ; (4) பட்டம், அட்டை - கண்டம், அண்டா - படம், தடம்; (5), தீர்ப்பு- கம்பு, அன்பு - கோபம், சார்பு; (6) காற்று, ஏற்று - ஒன்று, நன்று- மறம், கற்பு

ஆக, வல்லின ஒலியன்களுக்கு (Phonemes) மொத்தம் 18 வகை மாற்றொலிகள் (Allophones) . மெல்லினம், இடையினங்களுக்கு ஒரு மெய் ஒலியனுக்கு ஒரு மாற்றொலிதான். ஆக, மொத்தம் தமிழில் 18 + 6+ 6 = 30 மெய்ப் பேச்சொலிகள். ( 'தமிழ்மொழி அமைப்பியல்' - பேரா. ச. அகத்தியலிங்கம் , 2021, பக்கம் 44-46. ; A Grammar of contemporary Literary Tamil - Prof. Potko, page 4-6)

ஆடு, நாடு, ஆறு போன்றவற்றில் இறுதி உகரம் குற்றியலுகரம் (உதடு குவியா உகரம்) . படு, நடு ஆகியவற்றில் வருகிற முற்றியலுகரம் (உதடு குவிகிற உகரம்) ; மேலும் குற்றியலுகரம் பொருண்மைக்கு அடிப்படையான ஒலியனா அல்லது உகரத்தின் வெறும் மாற்றொலிதானா என்பது ஒரு விவாதம். மாற்றொலியாக இருந்தால் முற்றுகரத்திற்கும் குற்றுகரத்திற்கும் ஒரே புணர்ச்சி விதி இருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு இல்லை. தொல்காப்பியர் குற்றியலுகரத்திற்கு என்றே தனி புணர்ச்சி இயலை வைத்துள்ளார். எனவே இதைத் தனி ஒலியனாகக் கருதவேண்டுமென்பது ஒரு கருத்து. உயிர் ஒலியன்களுக்கும் மாற்றொலிகள் உண்டு. அதைத் தனியே பார்க்கலாம்.

ஆறு வல்லின மெய் ஒலியன்கள் இருந்தாலும், அவற்றிற்கு 18 மெய்ப் பேச்சொலிகள். அதாவது மாற்றொலிகள். ஆனால் எழுத்து 6 தான் - அதாவது ஒலியன்களுக்குமட்டுமே எழுத்துக்கள்.

தமிழ்ப் பேச்சுரையை (Speech ) எழுத்துரையாக (Text) மாற்றுவதற்கு மேலும் ஆழமான ஒலியியல் ஆய்வு (Phonetic Analysis) தேவைப்படுகிறது. ஏனென்றால் ஒரு சொல்லில் எழுத்துக்கள் ( ஒலியன்கள்) அமையும்போது, ஒரு மாற்றொலியின் தன்மையை , அதற்கு முந்தைய மாற்றொலியும், பிந்தைய மாற்றொலியும் பாதிக்கின்றன. அதை ஆங்கிலத்தில் co-articulation என்று அழைக்கிறார்கள். Context dependent phones என்றும் அழைப்பார்கள். அவ்வாறு பார்க்கும்போது, சுமார் 100 பேச்சொலிகள் இவ்வாறு உள்ளன. இதுபற்றி எனது மாணவர் திரு. பிரபாகரன் என்பவர் ஒரு முனைவர் பட்ட ஆய்வேட்டையே அளித்துள்ளார். இந்த அடிப்படையில் தமிழ்ப் பேச்சொலிகளை ஆய்வுசெய்யும்போதுதான் Text to Speech, Speech to Text தமிழ் மென்பொருள்கள் சிறப்பாக அமையும்.

மொழி என்பது ஒரு வெறும் கருவியா? அல்லது ஒரு இனத்தின் உயிர்நாடியா? கிரந்த எழுத்துக்களைத் தமிழ் நெடுங்கணக்கில் சேர்க்கலாமா? கூடாதா?

மொழி என்பது ஒரு வெறும் கருவியா? அல்லது ஒரு இனத்தின் உயிர்நாடியா? கிரந்த எழுத்துக்களைத் தமிழ் நெடுங்கணக்கில் சேர்க்கலாமா? கூடாதா என்பதுபற்றி முகநூலில் பேராசிரியர் நண்பர் மதிவாணன் பாலசுந்தரம், மருத்துவர் ஐயா இரவீந்திரன் வெங்கடாச்சலம் ஆகியோருடன் நான் பகிர்ந்துகொண்ட எனது கருத்துக்கள்

------------------------------------------------------------------------------------------------------------------

1) மொழி என்பது வெறும் கருத்துப்புலப்படுத்தக் கருவி இல்லை. ஒரு இனத்தின் அடையாளம். தேசிய இனங்கள் என்ற ஒரு வரலாற்று அரசியல் உருவாக்கம் நீடிக்கிறவரையில் . . . அவற்றின் மொழிகளுக்கும் அரசியல் முக்கியத்துவம் உண்டு. ஏகாதிபத்திய காலனித்துவம் நீடிக்கிறவரையில் . . . தேசிய இனங்களின்மீதான இன ஒடுக்குமுறை நீடிக்கிறவரையில் . . . மொழியானது இன அரசியல் பொருளாதாரத்தில் மிக முக்கியமான ஒன்று.

2) ஆங்கிலம் இன்று ''உலக மொழியாக'' ஆக்கப்பட்டிருப்பதற்குக் காரணம் . . . ஆங்கிலமொழியின் எழுத்துகள் எண்ணிக்கை, வரிவடிவம், சொல் எண்ணிக்கை, இலக்கண அமைப்பு போன்றவை காரணம் இல்லை. முழுக்க முழுக்க ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் 17,18,19,20 ஆம் நூற்றாண்டுகளில் உலகந்தழுவிய அரசியல் பொருளாதார ஏகாதிபத்திய விரிவாக்கமே! கருத்துப்புலப்படுத்தத்திற்கு ஆங்கிலமொழி சிறந்த கருவி என்ற காரணம் கிடையாது! இதுபற்றி Robert Phillipson " Linguistic Imperialism" & "Linguistic Imperialism Continued" என்ற இரண்டு நூல்களில் தெளிவாக விளக்கியுள்ளார்.

3) இயன்றவரை அயல்மொழிச்சொற்களைத் தவிர்த்து எழுதலாம். இயலாதவர்கள் பயன்படுத்தட்டும். ஆனால் அதற்காகக் கிரந்த எழுத்துக்களைத் தமிழ் எழுத்துக்கள் என்று கூறி, அவற்றைத் தமிழ் நெடுங்கணக்கில் சேர்க்கக்கூடாது. அவை அயல்மொழி எழுத்துக்களாகவே இருக்கட்டும்.

4) மருத்துவர் ஐயா இரவீந்திரன் வெங்கடாச்சலம்

--------------------------------------------------------

// ஏன் அவற்றை அயலொலி எழுத்துக்கள் எனப்பெயரிட்டு நெடுங்கணக்கில் சேர்த்து இலக்கணப்படுத்தக் கூடாது? கணினித் தமிழில் கிரந்தத்தை நீக்கி நிரல்கள் எழுத முடியுமா?//

ந. தெய்வ சுந்தரம்

-------------------------------------

நிரல்களின் மொழிகளுக்கும் மனிதனின் இயற்கைமொழிகளுக்கும் தொடர்பு கிடையாதே! அவை அனைத்துக்கும் கணினியின் குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கேற்ப . . . கணினியியல் துறையில் உருவாக்கப்பட்ட செயற்கைமொழிகள்தானே! அடுத்து, கணினியில் தமிழ்மொழி ஆய்வுக்குக் கிரந்தம் தேவை இல்லையே! தமிழல் உரைகளில் உள்ள கிரந்த எழுத்துக்களைத் தமிழ் எழுத்துகொண்டு மாற்று என்றால் கணினி மாற்றிக்கொடுத்துவிடும். அப்படி மாற்றினால் பொருண்மைச் சிக்கல் ஏற்படும் என்றால், அங்கே அவற்றைப் பயன்படுத்தலாம். அவ்வளவுதான்.

5) இன்றைய தமிழின் அடுத்த கட்டவளர்ச்சிக்காக எவ்வளவோ பணிகள் செய்ய வேண்டியிருக்கின்றன. எழுத்துக்கள் இன்றைய கட்டத்தில் ஒரு பிரச்சினையே இல்லை. என்னைப் பொறுத்தவரையில் இன்றைய தமிழில் உள்ள அனைத்து ஒலியன்களுக்கும் எழுத்து வடிவங்கள் உள்ளன. மொழியசைகளுக்கும் (உயிர்மெய்) வரிவடிவங்கள் உள்ளன. புதிய ஒலியன்கள் தமிழில் தோன்றவில்லை. அயல்மொழிகளின் கலப்பால் தமிழில் அயல்மொழிகளின் பேச்சொலிகள் இன்றைய தமிழில் கலந்துவருகின்றன. ஆனால் அவையெல்லாம் தமிழுக்கே உரிய ஒலியன்கள் இல்லை. எனவே புது எழுத்துக்களும் தேவை இல்லை. இருக்கிற எழுத்துவடிவங்களுக்கும் புதிய வரிவடிவங்கள் தேவை இல்லை. மேலும் இன்றைய கணினியியலின் வளர்ச்சியினால் எந்தவித வரிவடிவ மாற்றங்களும் தேவை இல்லை.

6) மருத்துவர் ஐயா, 300 ஆண்டுகளுக்குமேல் நீடித்த ஆங்கிலேய ஆட்சி, அதற்குமுன் நீடித்த முகலாயர் ஆட்சி இவையெல்லாம் தமிழர்களிடையே பேச்சில் அயல்மொழிச் சொற்களைத் திணித்துள்ளன. கீழே விழுந்து காயம்பட்ட ஒருவனுக்கு, அந்தக் காயத்தின்மீதான கல், மண், ரத்த உறைவு போன்றவற்றை முதலில் நீக்கிவிட்டு, மருத்துவம் அளிப்பதுபோன்று . . .பிறமொழி பேசுபவர்களின் அரசியல் ஆட்சி . . . தமிழைக் காயப்படுத்தியுள்ளது. ஆகவே அந்தக் காயத்தின்மீதான அழுக்குகளை அகற்றுவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளுவதற்குப்பதிலாக . . . காயத்தின்மீது அழுக்குகள் இருக்கின்றன, அவை இருந்துவிட்டுப் போகட்டுமே என்று நினைக்கமுடியாது அல்லவா? ''அழுக்குகளையும்'' காயம்பட்ட உடலின் பகுதிகளாகவே இருக்கட்டும் என்று விட்டுவிடமுடியுமா? வழக்கிழந்த ஹீப்ரோமொழியையே திட்டமிட்டு மீண்டும் வழக்குமொழியாக்கியுள்ள இன்றைய காலகட்டத்தில் . . . தமிழின்மீதான அயல்மொழிப் பாதிப்புக்களை அகற்றுவது ஒரு பெரிய சிக்கல் இல்லை! அவ்வாறு செய்யாமல், ''அழுக்குக்களுக்காக'' நமது உடலின் உறுப்பைச் சேதப்படுத்துவது தவறே! திட்டமிட்டு ஒரு மொழியை வளர்க்கமுடியும் என்பது இன்றைய மொழியியல் அறிவியல் கருத்து (Language Policy: Language Planning: Language Development) . அதற்கான வழிமுறைகள் எல்லாம் முன்வைக்கப்பட்டு, பல மொழிகளுக்குச் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இங்குத் தேவைப்படுவது . . . தமிழினத்தின் மொழியான தமிழ்மொழியைத் திட்டமிட்டு வளர்க்கவேண்டும் என்ற மொழி உணர்வே ஆகும்.

7) மருத்துவர் திரு. இரவீந்திரன் வெங்கடாச்சலம்

-----------------------------------------------------------

//ஆங்கிலம் உலக மொழியானதற்குக் காரணம் அது ஆதிக்க மொழியாக இருந்தது மட்டுமல்ல - அதன் நெகிழ்ந்துகொடுக்கும் தன்மையும் பிற மொழிச் சொற்களைத் தாராளமாக ஏற்றுக்கொண்டதும் ஆகும். ஆங்கிலத்தில் 70% விழுக்காடு அளவு பிற மொழிச் சொற்களே உள்ளன.//

ந. தெய்வ சுந்தரம்

--------------------------------

மருத்துவர் ஐயா. அது ஆங்கிலத்தின் திறமை இல்லை. அப்படி ஒரு திறமை என்பது என்பது எந்தவொரு மொழி அமைப்பிலும் கிடையாது. தங்களுடைய காலனியச் சுரண்டலுக்காக ஆங்கிலத்தை உலகமொழியாக ஆக்கவேண்டும் என்ற ஆங்கிலேயே ஏகாதிபத்தியங்களின் செயல்பாடே பிறமொழிச் சொற்களை ஏற்றுக்கொள்வதற்கான நிலையை அளித்தது என்பதே உண்மை. ஆங்கிலம் பேசாத காலனி நாடுகளில் உள்நாட்டு மக்களின் சேவைகளைப் பெறுவதற்கும், அவர்களோடு தொடர்புகொள்வதற்கும் ஆங்கிலேயர்கள் பிறநாட்டு மொழிகளின் சொற்களை ஆங்கிலத்திற்குள் சேர்த்துக்கொண்டார்கள். இதுதான் உண்மை.

-----------------------------------------------------------------------------------------------------------------------------தமிழில் பேச்சொலி வடிவங்களுக்கு வரிவடிவம் கிடையாது. பேச்சொலிகள் என்று பார்த்தால் 50-க்கும் மேற்பட்ட பேச்சொலிகள் உள்ளன. 'க' என்ற ஒலியனுக்கே மூன்று மாற்றொலிகள் உள்ளன. ஆனால் மூன்றுக்கும் தனித்தனி எழுத்துவடிவம் கிடையாது. மூன்றும் இடத்தைப் பொறுத்து மாறும் மாற்றொலிகள் என்பதால், ஒரு எழுத்துதான்! சொற்களில் வருமிடத்தைப்பொறுத்து, மூன்று மாற்றொலிகளாக உச்சரிக்கப்படுகிறது. பேச்சொலிகளுக்குத்தான் எழுத்துவடிவம் என்றால், தமிழில் மூன்று வடிவங்கள் தேவை. இதுபோன்று பிற வல்லினங்களுக்கும்!

எனவே தமிழுக்குத் தெளிவான ஒரு கட்டமைப்பின் அடிப்படையில்தான் எழுத்துக்கள் நிலவுகின்றன. எந்தவொரு மொழியிலும் அதில் பயன்படுகிற அனைத்துப் பேச்சொலிகளுக்கும் எழுத்துவடிவங்கள் கிடையாது. கிடையவேகிடையாது! வடமொழிகளில் 'க' -வுக்கு நான்கு வரிவடிவங்கள் இருக்கிறது என்றால் அதற்குக் காரணம், நான்குமே ஒலியன்கள். எனவே எழுத்துக்களுக்கு அடிப்படையான ஒலியன் ஆய்வைக் கணக்கில் கொள்ளாமல், மாற்றொலிகளுக்கெல்லாம் எழுத்து தேவை என்று கூறுவது தவறு என்பதே எனது கருத்து.

ஒரு மொழியின் அனைத்துப் பேச்சொலிகளுக்கும் - உலகில் மனித மொழிகளில் பயன்படுகிற அனைத்துப் பேச்சொலிகளுக்கும் - தனி வடிவம் கொடுத்து எழுதவேண்டிய தேவை இருந்தால், அதற்கு உலகப் பேச்சொலிக் கழகத்தின் (International Phonetic Association - IPA) பேச்சொலிக்குறியீடுகளைப் (Phonetic transcription) பயன்படுத்திக்கொள்ளலாம்.

எனவே ஒலியன் குறியீடுகளுக்கும் (Phonemic Transcription) பேச்சொலிக் குறியீடுகளுக்கும் (Phonetic Transcription) இடையில் உள்ள வேறுபாட்டின் அடிப்படையில்தான் ஒரு மொழியின் எழுத்து வடிவங்களைப் பற்றி விவாதிக்கவேண்டும். (தமிழில் மொழியசைக்கும் எழுத்துவடிவங்கள் உண்டு - அவைதான் உயிர்மெய் எழுத்துக்களின் வடிவங்கள்). இதற்குமேல் இதுபற்றிப் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்பதே எனது கருத்து.

இலக்கணம், மொழியியல் ஆகியவை தெளிவான ஆய்வுமுறைகளையும் ஆய்வுநெறிமுறைகளையும் கொண்டவை. நமது விருப்பப்படி இவற்றில் நாம் இயங்கமுடியாது! இயங்கக்கூடாது!

------------------------------------------------------------------------------------------------------------------------------

வியாழன், 16 நவம்பர், 2023

தமிழ்த் தொடரியலில் (Tamil Syntax) ஆர்வம் உள்ள நண்பர்களின் கவனத்திற்கு

 

தமிழ்த் தொடரியலில் (Tamil Syntax) ஆர்வம் உள்ள நண்பர்களின் கவனத்திற்கு .---------------------------------------------------------------------------------------------------------------------------

இன்று மருத்துவர் ஐயா ரவீந்திரன் வெங்கடாச்சலம் அவர்களின் பதிவையொட்டி நடைபெற்ற ஒரு உரையாடலில் . . . ''தங்கையான சூர்ப்பனகை'' என்று ''ஆன'' விகுதியை ஏன் சேர்க்கவேண்டும் என்று திரு. சௌமியா நடராசன் அவர்கள் கேட்டிருந்தார்கள். அதையொட்டிய உரையாடல் கீழே. தமிழ்த்தொடரியலில் ஆர்வமுள்ளவர்களுக்காக அந்த உரையாடலை இங்குப் பதிவிடுகிறேன்.

 மருத்துவர் ஐயா ரவீந்திரன் வெங்கடாச்சலம்

-------------------------------------------------------------------

//இராவணனின் தங்கையான சூர்ப்பனகை

சூரபத்மனின் தங்கையான அசமுகி//

 திரு. சௌமியா நடராசன்

----------------------------------------------------------------------

//சிறப்பு ஒப்பீடு.

ஓர் இலக்கண ஐயம். சூரபத்மனின் தங்கையான, ராவணனின் தங்கையான... இவற்றை சூரபத்மனின் தங்கை, ராவணனின் தங்கை என்று எழுதினால் போதுமல்லவா? இப்படி சொற்களின் ஈற்றில் தேவையின்றி 'ஆன' விகுதி சேர்த்து எழுதுவது சிலருக்குப் பழகிவிட்டது.//

 மருத்துவர் ஐயா ரவீந்திரன் வெங்கடாச்சலம்

--------------------------------------------------------------------------

//ஏன் அதில் என்ன தவறு? ஆன ஆனவள் என்பன தமிழின் சொல்லுருபுகள் தானே?//

//ஆன விகுதி இல்லை. அது வேற்றுமை உருபு. உறவுகளை இராவணனுக்குத் தங்கை, இராவணனது தங்கை, இராவணனின் தங்கையான என விரித்தும் எழுதலாம் இராவணன் தங்கை எனத் தொகையாக்கியும் எழுதலாம்.//

 ந. தெய்வ சுந்தரம்

---------------------------------------------------------------------

மருத்துவர் ஐயா, 'தங்கையான' என்பது '' தங்கையானவள்'' என்ற பயனிலைத்தொடர் எனக் கருதுகிறேன். 'இராவணனின் தங்கை சூர்ப்பனகை ஆவாள்'' என்ற தொடர் சுருங்கி, 'இராவணனின் தங்கையான சூர்ப்பனகை'' என்ற பெயர்த்தொடராக மாறி அமைகிறது. ''ஆனவள்' என்பது இணைப்புவினை (link or copula verb - equivalent to English "be" verb ) எனக் கொள்ளலாம்.

''இராவணனின் தங்கை சூர்ப்பனகை ஆவாள்; சூர்ப்பனகை இன்று வந்தாள்'' என்ற இரண்டு வாக்கியங்களும் ( sentences) இணையும்போது, முதல் வாக்கியம் வாக்கியநிலையிலிருந்து பெயர்த்தொடர் (Noun Phrase) நிலைக்குச் சுருங்கி, இரண்டாவது வாக்கியத்தின் எழுவாயாக (Subject Noun phrase) அமைகிறது என்று கூறலாம் அல்லவா?

''இராமன் நேற்று வந்தான்'' என்பதைச் சுருக்கி, ''நேற்று வந்த இராமன்'' என்று அமைப்பதைப்போல, ''இராவணனின் தங்கை சூர்ப்பனகை ஆவாள்'' என்பது '' இராவணனின் தங்கையான சூர்ப்பனகை'' என்று மாறுகிறது.

இதில் ''இராவணனின் தங்கை'' என்பதில் வேற்றுமை உறவு (Casal relation) உள்ளது. ஆனால் ''தங்கை'' ''சூர்ப்பனகை'' இரண்டுக்கும் இடையில் வேற்றுமை உறவு இல்லை (non-casal relation) எனக் கருதுகிறேன்.

''இராவணனின் தங்கை சூர்ப்பனகை நேற்று வந்தாள்'' என்ற தொடரின் உருவாக்கம் . . .

[ [ {இராவணனின் தங்கை} {தங்கை சூர்ப்பனகை} ] [{நேற்று வந்தாள்}] ] என்பதில் இரண்டு வாக்கியங்கள் இணைந்துள்ளன.

1) [இராவணனின் தங்கை சூர்ப்பனகை ஆவாள்]

2) [ இராவணனின் தங்கை நேற்று வந்தாள்]

இரண்டும் வாக்கியங்களும் இணையும்போது . . .

[ [ ''இராவணனின் தங்கை {இராவணனின் தங்கை சூர்ப்பனகை ஆவாள்} ] [நேற்று வந்தாள்.''] ]

[ [ {''இராவணனின் தங்கையான சூர்ப்பனகை}] [ { நேற்று வந்தாள் } ] ]

இவ்வாறு அமையும்போது, ''தங்கையான சூர்ப்பனகை'' என்பதில் ''ஆன'' என்பது வேற்றுமை உருபு இல்லை எனக் கருதுகிறேன்.

மாறாக, ''ஆகு' / ''' என்ற வினையின் பெயரெச்ச வடிவமெனக் (grammatical category) கருதலாம். இதனுடைய இலக்கணச் செயற்பாட்டை (grammatical function) ஆங்கிலத்தில் compliment /complementizer என்று கூறுவார்கள்.

கீழே மற்றொரு 'ஆன' -க்கான எடுத்துக்காட்டு. அது வேற்றுமை உறவைக் காட்டுவதுபோலத் தெரிகிறது. ஆனாலும் இதுவும் மேலே கூறப்பட்டுள்ள ''ஆன'' மாதிரிதான் தெரிகிறது. மேலும் ஆராயவேண்டும்.

''நான் அவனுக்காகப் பேசுகிறேன்'' - இதில் -க்கு என்ற நான்காம் வேற்றுமை உருபுக்கு (Case suffix) அடுத்து ''ஆக'' என்ற பின்னொட்டு (Post-position) வருகிறது. இது பின்னொட்டாக - ஒரு இலக்கண விகுதியாக இருந்தாலும் - 'ஆன' என்ற பெயரெச்ச வடிவத்தையும் எடுக்கிறது.

'நான் அவனுக்காக இந்தச் சட்டையை எடுத்தேன்'

'இந்தச் சட்டை நான் அவனுக்காக எடுத்தது'

'இந்தச் சட்டை அவனுக்கான ஒன்று ஆகும்.'

'இந்தச் சட்டை அவனுக்கு ஆனது'

மேற்கூறிய நான்கு தொடர்களிலும் ''அவனுக்காக'' ''அவனுக்கான'' என்ற இரண்டு தொடர்களும் "for" என்ற பொருளையே தருகிறது.

'அவனுக்கு ஆனது'' என்பது 'அவனுக்கான' என்று மாறுகிறது என்று கூறலாம். இந்த நோக்கில் பார்த்தால் இங்கும் 'ஆன' என்பது'' ஆனது'' (Copula verb) என்ற வினைமுற்றின் மற்றொரு வடிவமாகத்தான் தெரிகிறது.

இந்த 'ஆகு' என்பதற்கும் மற்றொரு 'ஆகு' என்ற முதன்மை வினைக்கும் சற்று வேறுபாடு தெரிகிறது. முதல் 'ஆகு' என்பது இணைப்பு வினை ("be" copula verb) . இரண்டாவது 'ஆகு' முதல்வினை - அகராதிப்பொருள் ("to become") தரும் வினை.

''"நேற்று பேரவை உறுப்பினராக இருந்த மணி இன்று அமைச்சர் ஆனான்.'' இதில் உள்ள ''ஆ(கு) '' முதன்மை வினை.'' (Today became as a minister)

 

மற்றொரு 'ஆன' -க்கான எடுத்துக்காட்டு. அது வேற்றுமை உறவைக் காட்டுவதுபோலத் தெரிகிறது. ஆனாலும் இதுவும் மேலே கூறப்பட்டுள்ள ''ஆன'' மாதிரிதான் தெரிகிறது. மேலும் ஆராயவேண்டும்.

''நான் அவனுக்காகப் பேசுகிறேன்'' - இதில் -க்கு என்ற நான்காம் வேற்றுமை உருபுக்கு அடுத்து ''ஆக'' என்ற பின்னொட்டு வருகிறது. இது பின்னொட்டாக - ஒரு இலக்கண விகுதியாக இருந்தாலும் - 'ஆன' என்ற பெயரெச்ச வடிவத்தையும் எடுக்கிறது.

'நான் அவனுக்காக இந்தச் சட்டையை எடுத்தேன்'

'இந்தச் சட்டை நான் அவனுக்காக எடுத்தது'

'இந்தச் சட்டை அவனுக்கான ஒன்று ஆகும்.'

'இந்தச் சட்டை அவனுக்கு ஆனது'

மேற்கூறிய நான்கு தொடர்களிலும் ''அவனுக்காக'' ''அவனுக்கான'' என்ற இரண்டு தொடர்களும் "for" என்ற பொருளையே தருகிறது.

'அவனுக்கு ஆனது'' என்பது 'அவனுக்கான' என்று மாறுகிறது என்று கூறலாம். இந்த நோக்கில் பார்த்தால் இங்கும் 'ஆன' என்பது'' ஆனது'' என்ற வினைமுற்றின் மற்றொரு வடிவமாகத்தான் தெரிகிறது.

இந்த 'ஆகு' என்பதற்கும் மற்றொரு 'ஆகு' என்ற முதன்மை வினைக்கும் சற்று வேறுபாடு தெரிகிறது. முதல் 'ஆகு' என்பது இணைப்பு வினை ("be" copula verb) . இரண்டாவது 'ஆகு' முதல்வினை - அகராதிப்பொருள் ("to become") தரும் வினை. "நேற்று பேரவை உறுப்பினராக இருந்த மணி இன்று அமைச்சர் ஆனான்.'' இதில் உள்ள ''ஆ(கு) '' முதன்மை வினை.

  திரு. சுந்தர் இலட்சுமணன்

அருமையான அலசல் ஐயா. வாய்ப்பு குறைவெனினும் கருதுதற்பொருட்டு கேட்கிறேன். கருப்பான சட்டை, உருண்டையான பந்து என்பதுபோல “இராவணனின் தங்கை”மையை ஒரு பண்பாகக் கொள்ள இடமுள்ளதா?

 ந. தெய்வ சுந்தரம்

சரிதான் நண்பரே. ''இராவணனின் தங்கையான சூர்ப்பனகை இன்று வந்தாள்'' என்பதில் (இராவணனின் தங்கையான) (சூர்ப்பனகை) என்பதில் 'இராவணனின் தங்கை'' என்பதின் செயற்பாடு பண்புதான்! ''ஆன'' ''என்ற'' 'என'' ''என்பது - இவையெல்லாம் ஒரு முழுத்தொடரைச் சுருக்கி, மற்றொரு தொடரில் உள்ள பெயர்த்தொடரில் உள்ள பெயருக்கு பண்பு அடையாகச் செயல்படச் செய்கிறது. Noun Complementation. இங்கு ஒன்றின் இலக்கணவகைப்பாடு (Grammatical Category) , இலக்கணச்செயல்பாடு (Grammatical Function) இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்கவேண்டும். ஒரு தனித்தொடரோ (Phrase), அல்லது ஒரு வாக்கியமோ(Clause/ Sentence) இரண்டுமே தங்கள் செயற்பாடுகளில் அடையாகப் பயன்படலாம்.

''ராமன் மாணவன் ஆவான்'' ''ராமன் நல்லவன்'' --> மாணவனான ராமன் (ராமன் நல்லவன்). Equi-NP deletion என்ற அடிப்படையில் ஒரு ''ராமன்'' நீக்கப்பட்டு, ''மாணவனான ராமன் நல்லவன்'' என்ற தொடர் கிடைக்கிறது.

இதுபோல, ஒரு முழுத்தொடரை மற்றொரு தொடரின் வினைமுற்றில் உள்ள வினைக்கு அடையாக மாற்றலாம். இது Verb Complementation. அங்கு ''என்று'' ''ஆக'' போன்றவை முதல் முழுவாக்கியத்தைச் சுருக்கி, மற்றொரு வாக்கியத்தின் வினைக்கு அடையாக மாற்றுகின்றன.

ராமன் நேற்று வந்தான். நான் கூறினேன்.

நான் ( ராமன் நேற்று வந்தான்) கூறினேன்.

நான் (ராமன் நேற்று வந்ததாக/ வந்தான் என்று) கூறினேன்.

---------------------------------------------------------------------------------------------------------------------

ஆகவே, தமிழ் இலக்கண ஆய்வில் எந்த அளவு சொல் இலக்கணம் முக்கியமோ, அந்த அளவுக்குத் தொடர் இலக்கணமும் முக்கியத்துவம் உடையது. இதுபோன்ற பல தொடரியல் ஆய்வுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் துறையில் பேரா. அகத்தியலிங்கம், பேரா. க. பாலசுப்பிரமணியன், பேரா. செ வை சண்முகம், பேரா. குமாரசாமி இராஜா , பேரா. பிரபாகர வாரியார் , பேரா. பி எஸ் சுப்பிரமணியம் போன்றோர் வழிகாட்டுதலில் நடைபெற்றுள்ளன. தமிழுக்குமட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற திராவிடமொழிக் குடும்ப மொழிகளுக்கும் நடைபெற்றுள்ளது. பேராசிரியர்கள் பொற்கோ, ஆர். கோதண்டராமன், செம்மொழி இராமசாமி, அ. கோபால், மறைந்த நண்பர் இராதாகிருஷ்ணன் உட்பட பலர் முனைவர் பட்ட ஆய்வுகளாக இவற்றை மேற்கொண்டுள்ளனர். இதையெல்லாம் நான் கூறுவதற்குக் காரணம் . . . தமிழகத்தில் மொழியியலாளர்கள் தமிழ் இலக்கணத்திற்கு பல ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர் என்பதைத் தெரியப்படுத்தவே.

குறிப்பாகச் சொல்லப்போனால், பழந்தமிழ் இலக்கணங்களில் சொல் இலக்கணத்திற்கே மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அது அன்றைய மொழி ஆய்வு வளர்ச்சி நிலை. ஆனால் நோம் சாம்ஸ்கியின் தொடரியல் கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டபிறகு, தமிழுக்குப் பல தொடரியல் ஆய்வுகளைத் தமிழகத்தின் மொழியியலாளர்கள் செய்துள்ளனர். சாம்ஸ்கி போன்றோரின் மொழியியல் கோட்பாடுகளே இவற்றிற்கு உதவின என்பதையும் வலியுறுத்த விரும்புகிறேன்.

 மருத்துவர் இரவீந்திரன் வெங்கடாச்சலம்

உருண்டையான பந்து =

(1). பந்து வேறு வடிவிலிருந்து உருண்டை வடிவமாக மாறியது. இதில் உள்ள ஆன வினைச்சொல்.

(2) இப்பந்தின் தன்மை உருண்டை. பிற பந்துகள் வேறு வடிவமாகலாம். இதில் உள்ள ஆன பண்பு உருபு. (உருண்டைப் பந்து எனத் தொகையாக்க ஆன விடப்படும்)

(3) பந்து உருண்டை வடிவினது. இதில் உள்ள ஆன முதல்வேற்றுமை உருபு.

ந. தெய்வ சுந்தரம்

1) (சென்ற வாரம் நீளமாக இருந்து, இன்று) உருண்டையான பந்து <-- சென்ற வாரம் பந்து நீளமாக இருந்தது; அந்தப் பந்து நேற்று உருண்டை ஆனது; இதில் '' ஆனது'' என்ற வினைமுற்றின் குறுகிய பெயரெச்ச வடிவத்தின் விகுதி ''-ஆன''!

2) நான் வாங்கிய உருண்டையான பந்து <-- நான் வாங்கிய பந்து உருண்டையாக இருந்தது; நீளமாக இல்லை. இதில் விகுதி ''-ஆன'' என்பது பெயரடை விகுதி.

3) உருண்டை வடிவமான பந்து <-- பந்து உருண்டை வடிவத்தில் இருக்கிறது. - பந்து உருண்டையாக இருக்கிறது- -> உருண்டையாக இருக்கிற பந்து --> உருண்டையான பந்து.

ஆகவே, புதை அமைப்பில் (Deep Structure) தொடர் எவ்வாறு அமைகிறதோ, அதைப்பொறுத்து புற அமைப்பில் (Surface Structure) தொடர்கள் மாறி அமையும். எந்தப் புதை அமைப்பிலிருந்து புற வடிவத்தை உருவாக்குகிறோமோ அதைப்பொறுத்துத்தான் புற அமைப்பில் நீடிக்கிற சொற்களின் இலக்கண வகைப்பாடு (Grammatical Category) அமையும். இதுபோன்ற பொருண்மை மயக்கத்தினால் (Semantic Ambiguity) ஏற்படுகிற தொடரமைப்பு மயக்கத்தை (Syntactic Ambiguity) அகற்றவே மாற்றிலக்கணம் (Transformational Generative Grammar) உதவுகிறது. இது தொடரமைப்பு மயக்கம். இதுபோன்று சொல்லமைப்பு மயக்கமும் (Word Structure Ambiguity) உண்டு. 'விஷமருந்து' - விஷம் அருந்து ; விஷம் மருந்து; இதுபோன்ற எந்தவகையான மயக்கமாக இருந்தாலும், அதைத் தீர்க்க உதவுவதே இலக்கண அடிப்படை அல்லது இலக்கண அறிவு அல்லது இலக்கணக் கோட்பாடு (Grammatical theory or Principles) .

-----------------------------------------------------------------------------------------------

மருத்துவர் இரவீந்திரன் வெங்கடாச்சலம்

நன்னூல் உரைக்காரர் தொகையாற்றல் 12 என எண்ணுவார். விஷமருந்து - விஷத்தை முறிக்கும் மருந்து; விஷமான மருந்து; விஷத்தினின்று எடுத்த மருந்து, விஷத்துக்குக் கொடுக்கும் மருந்து; விஷமும் மருந்தும்......(விஷம் அருந்து என்பது பிரிமொழி ஆற்றலைக் குறித்தது)

 

ந. தெய்வ சுந்தரம்

-----------------------------------------------------------------------

ஆமாம் ஐயா. நன்றி . அதைத்தான் நான் கூறுகிறேன் . . . பல பொருண்மை உள்ளன. புதை அமைப்பு - புற அமைப்பு பற்றிய மொழியியல் கோட்பாடு இதற்கான அடிப்படைகளை விளக்குகிறது. பழங்கால இலக்கணிகள், உரையாசிரியர்கள் இதை உணர்ந்தே உள்ளனர். ''புலிகொல்யானை'' இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

நம்மிடையே ஒரு பிரச்சினை. பழங்கால இலக்கண ஆசிரியர்கள் கூறியதை அடுத்த கட்ட இலக்கண வளர்ச்சிக்கு எடுத்துச்சென்றிருந்தால், சாம்ஸ்கியின் கோட்பாடு இங்கேயே தோன்றியிருக்கலாம். சாம்ஸ்கி கூறியபிறக்கு, இங்கு நாம் ''ஆமாம், எங்களிடமும் ஒரு எடுத்துக்காட்டு நிற்கிறது; எங்கள் இலக்கண ஆசிரியர்களும் இதுபற்றி கூறியிருக்கிறார்கள்'' என்று கூறுகிறோம்.

இதுபோன்று பல எடுத்துக்காட்டுக்களை நம்மால் கொடுக்கமுடியும். கருத்தாடல் ஆய்வு (Discourse Analysis) என்ற அண்மையில் முன்வைக்கப்பட்டுள்ள மொழியியல் கோட்பாட்டுக் கூறுகள்கூட தொல்காப்பியத்தில் இருக்கின்றன. ஆனால் நாம் அவற்றை எடுத்து, அடுத்த நிலை மொழிக் கோட்பாடுகளாக வளர்த்தெடுப்பது இல்லை. இலக்கண ஆசிரியர்கள் கூறியதோடு நிறுத்திக்கொள்கிறோம்.

 

தாங்கள் கூறுவதுபோல ''தங்கைமை'' என்று பண்புப்பெயராகக் கொள்ளலாம். இங்கு ''மை'' பண்புக்கான விகுதியாக இருப்பதால், தாங்கள் ''தங்கையான'' என்பதில் உள்ள ''ஆன'' என்பது ''மை'' விகுதிக்குப்பதில் வருவதாகக் கொள்ளலாம் எனக் கருதுகிறீர்களா?

ஆனால், ''மை'' என்ற பண்புப்பெயர் விகுதி பண்புப்பெயர்களுக்குப் பின்னால்மட்டுந்தானே வருகிறது. 'அழகு' - அழகான; 'வேகம்' - வேகமான; 'கலகலப்பு' -கலகலப்பான; 'அன்பு' - அன்பான; ஆனால் ''தங்கை'' என்பதைப் பண்புப்பெயராகக் கொள்ளமுடியாமா?

''ஆசிரியரான, மாணவரான, தலைவரான '' ஆகியவற்றைப் பண்புப்பெயர்களாகக் கொள்ளமுடியுமா? இவற்றின் உருவாக்க வரலாறு வேறுமாதிரி இருக்கிறது எனக் கருதுகிறேன்.

வேகம், அழகு போன்ற பண்புப்பெயர்கள் abstract nouns ; ஆசிரியர், மாணவர் என்பவை concrete nouns;

அடுத்து, இந்த ''மை'' பல்வேறு வினையடிகளுடன் இணைந்து பண்புப்பெயர்களை உருவாக்குகிறது. தங்கள் ஐயத்துடன் இதற்குத் தொடர்பு இல்லையென்றாலும், அவற்றையும் கீழே அளிக்கிறேன்.

''மை'' விகுதி வினைகளோடு இணைந்து பெயர்ச்சொற்களாக மாறுவதைப் பார்க்கிறோம். (வறுமை) வறு-மை, (பெருமை) பெரு-மை, (சிறுமை) சிறு-மை, (கொல்லாமை) கொல்-ஆ-மை; (பொல்லாமை) பொல்-ஆ-மை; (கருமை) கரு-மை; (இல்லாமை) இல்-ஆ-மை ; (சார்மை) சீர்-மை; (பொறுமை) பொறு-ஆ-மை; (வராமை)வர்-ஆ-மை ; (நன்மை( நல்(நன்)-மை; (இனிமை) இனி-மை; (அறியாமை) அறி-ஆ-மை; (ஒத்துழையாமை) ஒத்துழை-ஆ-மை; (நிலைமை) நிலை-ஆ-மை; (பொருந்தாமை) பொருந்து-ஆ-மை; (உணராமை) உணர்-ஆ-மை; (செய்யாமை) செய்-ஆ-மை; (கொல்லாமை) கொல்-ஆ-மை; (உள்ளமை) உள்(ள்) - ஆ- மை; (உண்மை) உள்-மை;

ஆகவே, ''தங்கையான'' என்பதைப் பண்புப்பெயராகக் கொள்ளவேண்டுமென்றால், (1) ஒன்று ''தங்கை'' என்பது பண்புப்பெயராக இருக்கவேண்டும். (2) அல்லது, வினையடியாக இருக்கவேண்டும் எனக் கருதுகிறேன். மேலும் ஆய்வு செய்யலாம்.

தங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்.

-----------------------------------------------------------------------------------------------------

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India