வியாழன், 7 செப்டம்பர், 2023

மூன்று மெய்களின் மயக்கமும் திரிதல் புணர்ச்சி விதியும் . . .

மூன்று மெய்களின் மயக்கமும் திரிதல் புணர்ச்சி விதியும் . . . 

--------------------------------------------------------------------------------------------------------------------

 'ஆள்' என்ற வினை 'ஆண்டேன்' என்று மாறுகிறது. ஆனால் 'கேள்' என்பது கேட்டேன் என்றுதான் மாறுகிறது. இரண்டிலும் நிலைமொழி இறுதியில் 'ள்' நிற்கிறது; முன்னால் நெடில் வருகிறது. ஆனால் வருமொழியில் இறந்தகால விகுதியாக ஒன்றில் -த்- நிற்கிறது ; மற்றொன்றில் -த்த்- நிற்கிறது. 'ஆள் + த் ' -> ஆண்-ட் ; கேள் + த்த் -> கேட் - ட் ;

முதல் எடுத்துக்காட்டில்( ஆள் + த்) வருமொழி 'த்' என்பது 'ட்' ஆக மாறுகின்றது; இரண்டாவது எடுத்துக்காட்டிலும் அப்படியே இரண்டாவது 'த்' (-த்த்-) 'ட்' என்று மாறுகின்றன. வேறுபாடு இதில் இல்லை.

ஆனால் இரண்டாவதில் உள்ள முதல் 'த்' -உம் நிலைமொழி இறுதியில் உள்ள 'ள்' -உம் இணைந்து 'ட்' என்று மாறுகிறது. இவ்வாறு மூன்று மெய் வருமிடங்களில் முதல் இரண்டு மெய்களும் (இடையினம் + வல்லினம்) இணைந்து ஒரே வல்லினமாக மாறுகின்றன.

ஆள் + த் + ஏன் -> ஆண்(ள்) + ட் (த்) + ஏன் -> ஆண்டேன்

கேள்+ த்த் + ஏன் -> கேட்(ள் +த் ) + ட் (த்) + ஏன் -> கேட்டேன்

தமிழ் இலக்கணத்தில் 'திரிதல்' என்று கூறுவது இரண்டு செயற்பாடுகளை உள்ளடக்கியுள்ளது. முதலில் ஒற்று தோன்றி , பின்னர் அது திரிகிறது. இது பெயர்த்தொகைகளிலும் நிலவுகிறது. பால் + குடம் -> பால் + க் + குடம் -> பாற்குடம். ஆனால் 'பால் + குடிக்கிறேன்' என்பது 'பாற் குடிக்கிறேன்' என்று மாறுமா என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டியுள்ளது.

இது ஒரு கருதுகோள்தான். மேலும் ஆய்வு செய்யலாம். இறந்தகால விகுதியாக 'த்' 'த்த்' 'ந்த்' 'இன்' ஆகிய நான்கும் இங்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. 'ட்' 'ற்' ஆகியவை சந்தி மாற்றங்களே! மூன்று மெய் மயக்கங்களில் ர், ழ், ய் முதல் மெய்யாக இருந்தால்மட்டும் மூன்று மெய்மயக்கங்கள் தமிழில் அனுமதிக்கப்படுகின்றன. ஏனைய மெல்லினங்கள், இடையினங்கள் மூன்று மெய் மயக்கங்களில் முதல் மெய்யாக இருக்க அனுமதி இல்லை. ) இதுபற்றித் தங்கள் கருத்து தேவை. மாறுபட்ட எடுத்துக்காட்டுக்கள் கிடைத்தாலும் கூறவும். இந்தக் கருதுகோளை அப்போதுதான் விதியாகக் கூறமுடியும்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

'பால்குடித்தேன்' - இதனை மறைந்த சீனி நைனா முகம்மது ( 'நல்ல தமிழ் இலக்கணம்' பக்கங்கள் 126, 132 -33) போன்றோர் உருபுமட்டும் தொக்க வேற்றுமைத்தொகை என்று கூறுகிறார்கள். பேரா. ச. அகத்தியலிங்கம் ('தமிழ்மொழி அமைப்பியல்' பக்கம்106, 109-110) போன்றோர் இதனைத் தொகை எனக் கூறுவது பொருந்தாது என்றும் வேண்டுமானால் தனியாக இதனை உருபுத்தொகை எனக் கூறலாம் என்றும் கூறுகிறார்கள். இலக்கணிகள் சிலர் 'நிலங்கடந்தான்' என்பதை வேற்றுமைத் தொகையாகக் கூறியதைச் சுட்டிக்காட்டும் பேராசிரியர் அகத்தியலிங்கம் அவர்கள் இதுபற்றிப் பின்வருமாறு கூறுகிறார் - '' இங்கு நிலங்கடந்தான் என்பது ஒரு சொல் நீர்மைத்தாய் இல்லை; இதனை நிலமா கடந்தான், நிலமே கடந்தான் போன்று இடைச்சொற்களுடன் இணைத்துக் கூறமுடியும். மேலும் 'கடந்தான் நிலம்' என வரிசை முறையை மாற்றவும் முடியும். இந்நிலையில் இது தொகை இலக்கணத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. எனவே இதனைத் தொகை எனக் கூறுவது பொருந்தாது. வேண்டுமானால் தனியாக இதனை உருபுத்தொகை எனக் கூறலாம். இதனால்தான் மரபு இலக்கணிகள் பணப்பெட்டி போன்றவற்றை முன்னர்க் கூறியபடி 'உருபும் பயனும் உடன்தொக்க தொகை' எனப் பிரிவுபடுத்திக் கூறியுள்ளனர்''.

மேலும் அவர் பின்வருமாறு கூறுகிறார் : தொகை என்பது (1) ஒரு சொல் நீர்மைத்தாய் நின்று புதிய புதிய சொல்லாக்கங்களுக்குத் துணைபுரிவது. தமிழில் காணப்படும் புதுச் சொல்லாக்கங்களில் பெரும்பான்மையானவை தொகைச் சொல்லாகவே இருக்கும். ஒரு பெயர்ச்சொல் போன்றே வரும் (2) பணப்பெட்டி போன்றவற்றில் இவ்விரு சொற்களுக்கிடையே வேறு ஒரு சொல்லையோ அல்லது உருபுகளையோ இட்டுக் கூறுவது முடியாத ஒன்று. (3) ஒரு வினை அடிச் சொல்லை முதல் சொல்லாகவும் ஒரு பெயரை அதை அடுத்துவரும் சொல்லாகவும் கொண்டு ஒரு சொல் நீர்மைத்தாய் நின்று ஒரு பொருளைச் சுட்டும் தொகை .

அறிஞர் சீனி நைனா முகம்மது அவர்களும் 'தொடர்கதை' என்பதைத்தான் வினைத்தொகை என்கிறார். 'தொடர்' - வினையடி; 'கதை' - பெயர்ச்சொல்.

எனவே, 'பால்குடித்தான்' என்பதை வினைத்தொகையாகக் கொள்ளமுடியாது எனக் கருதுகிறேன். பொதுவாக, அஃறிணைப் பெயர்ச்சொற்கள் 2- ஆம் வேற்றுமையை ஏற்கும்போது, வேற்றுமை விகுதி வெளித்தோன்றாமலும் இருக்கலாம். ஆனால் உயர்திணைச் சொற்களில் வெளிப்படும். '' ஆசிரியர்பார்த்தேன்' என்று வரமுடியாது ( சில விதிவிலக்குகள் இருக்கலாம்.)

'பால் + குடம் ' -> பாற்குடம் - பெயர்த்தொகை; தொகை என்ற அடிப்படையில் இங்கு ஒற்று மிகும் - 'பால் + க் + குடம்' - ல்க்க் என்று மூன்று மெய்கள் வருகின்றன. தமிழில் மூன்று மெய்ம் மயக்கங்களில் முதல் மெய்யாக ய், ர், ழ் ஆகியவை மட்டுமே வரும். வாய்க்கால், பார்த்தான், வாழ்க்கை. ஆனால் 'ல்க்க்' என்ற மூன்று மெய்ம்மயக்கம் கிடையாது. எனவே, 'ல்' என்ற இடையினம் தனக்கு அடுத்து நிற்கிற 'க்' என்ற வல்லினத்தோடு இணைந்து தனக்கு இணையான வல்லினமாகிய 'ற்' என்று ஆகிறது. இங்கு (1) பெயர்த்தொகையில் ஒற்று மிகும் என்ற விதியும் செயல்படுகிறது. (2) மூன்று மெய்ம்மயக்க விதியும் செயல்படுகிறது.

இதுபோன்று வினையடிகள் காலவிகுதி ஏற்கும்போது, 9-ஆவது வினைத்திரிபில் 'கேள் + க்கிறு + ஆன்' - > கேள்க்க்கிறு + ஆன் -> கேட்கிறு + ஆன் -> கேட்கிறான் என்று அமைகிறது. ஆனால் 2-ஆவது வினைத்திரிபில் ' ஆள் + கிறு + ஆன்' -> ஆள்கிறான் என்றே அமைகிறது. அதாவது 'ள்' என்பது 'ற்' என்று மாறவில்லை. ஆனால் இறந்தகாலத்தில் இந்த 'ள்' என்பது 'ண்' ஆக மாறும். ஆனால் 9-ஆவது வினைத்திரிபில் இந்த 'ள்' என்பது 'ட் ' என்றுதான் அமைகிறது; 'ண்' என்று மாறாது.

இது ஒரு கருதுகோள்தான் இன்றைய நிலையில்!

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


மூன்று மெய் மயக்கம் ஏற்பட்டு . . . அந்த மயக்கம் தமிழின் மூன்று மெய் மயக்க அமைப்புக்கு எதிராக இருந்தால்- அதாவது முதல் மெய் ய், ர், ழ் என்று அமையாமல் இருந்தால்- , திரிதல் என்று ஒன்று நிகழ்கிறது. இந்தத் திரிதல் தொகைகளிலும் நிகழ்கிறது. வினைகள் கால விகுதிகளை ஏற்கும்போதும் நிகழ்கிறது. இதுதான் தற்போது எங்களது கருதுகோள்.

இவ்வாறு கொண்டால் தமிழ் இலக்கணத்தின் மிகச் சிறந்த ஒழுங்கமைவு வெளிப்படுகிறது. இங்கு திரிதல் இரண்டு நிகழ்வுகளை உள்ளடக்கியுள்ளது.

( மரம் + பன்மை விகுதி 'கள்' என்பதில் 'ம்' என்பது 'ங்' மாறுவது ஒரு நிகழ்வுதான். இது நேரடித் திரிதல்! ஆனால் மரம் + பெயர்ச்சொல் 'கள்' என்று தொகையாக அமையும்போது மரம் + க் + கள் என்று தோன்றலும் திரிதலும் நிகழ்ந்து 'மரக்கள்' என்று அமைகிறது.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வேற்றுமை ஏற்கிற ( எழுவாய் வேற்றுமை முடிவு செய்யவேண்டும்!) எல்லாப் பெயர்ச்சொற்களும் வினையடை செயல்பாட்டைத்தான் மேற்கொள்கின்றன. எனவேதான் இலக்கண வகைப்பாடு ( grammatical category ) வேறு, இலக்கணச் செயல்பாடு (grammatical function ) வேறு என்று பிரித்துப்பார்க்கவேண்டியுள்ளது. 'அங்கு, இங்கு, எங்கு' என்பதில் வருகிற 'கு' -வை 4- ஆம் வேற்றுமை விகுதியாகக்கூட எடுத்துக்கொள்ளலாமா என்று சிந்திக்க வேண்டியுள்ளது. (அ -கு, இ-கு,எ-கு ) . இதுபற்றி யாராவது எழுதியிருக்கிறார்களா என்று பார்க்கவேண்டும். 'வீட்டுக்குப் போனேன்' - 'அங்குப் போனேன் ' ; ஆனால் 'வீட்டில் இருக்கிறேன் - அங்கு இருக்கிறேன்' என்று இட வேற்றுமையிலும் இது வருகிறது. இதுபற்றிய தங்கள் கருத்து தேவை ஐயா. 'நேற்று' என்பது கூட 'நேற்றைக்கு' என்றும் வருகிறது. 'எப்போது வந்தாய்' என்ற வினாவுக்கு 'நேற்று' 'இன்று' நாள் ' (நேற்றைக்கு, இன்றைக்கு, நாளைக்கு) என்று பதில் தரும்போது வினையடை செயல்பாடு தான். ஆனால் 'நேற்று ஞாயிறு' 'இன்று திங்கள்' 'நாளை செவ்வாய்' என்று கூறும்போது வேறு பொருள்கள் தருகிறது.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அஃறிணைப் பெயர்ச்சொல்லும் அதையடுத்து மற்றொரு பெயர்ச்சொல்லும் அமையும்போதுதான் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படையாகத் தோன்றலாம் ; வெளிப்படையாகத் தோன்றாமலும் இருக்கலாம். 'சிதம்பரம்பார்த்தேன்' - இங்குச் 'சிதம்பரம்' ஊர்ப்பெயர்;

ஆனால் உயர்திணை முதற்சொல்லாக இருந்தால் இந்த உருபு மறையாது. ஆனால் 'சிதம்பரம்' ஒருவரின் பெயராக இருந்தால் உருபு மறையாது எனக் கருதுகிறேன். 'சிதம்பரம்பார்' என்று கூற இயலாது எனக் கருதுகிறேன். 'சிதம்பரத்தைப் பார்த்தேன்' என்றுதான் கூறமுடியும். ஆகவே, தாங்கள் கூறியுள்ளதுபோல, புணர்ச்சி என்பதற்கு முதல் அடிப்படைகள் பொருண்மை, இலக்கணம் இரண்டும். ஒலி என்பது அதற்கு அடுத்ததுதான்!

இதற்கு மாற்றாக , மற்றொரு விதி . . . ''அரசு + கல்லூரி'' -> அரசுக் கல்லூரி . இங்கு 'அரசு' என்பது அஃறிணை! ஆனால் 'அரசு' என்பது உயர்திணையாக இருந்தால் ' அரசு கல்லூரி' தான்! 'அரசு என்ற நபரின் கல்லூரி'! சரியா?

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


'சனாதனம்'' பற்றித் தெளிவான விடை காணவேண்டும்!

 ''சனாதனம்'' பற்றித் தெளிவான விடை காணவேண்டும்!

-----------------------------------------------------------------------------------------------------------------------------

தற்போது நாடளவில் ''சனாதனம்'' பற்றிய கருத்துமோதல் தீவிரமடைந்துவருகிறது. இந்த நேரத்தில் இதற்கான சில விளக்கங்களை நாம் தேடவேண்டியுள்ளது.

இரண்டுவகை பிரச்சினைகள் . . மக்களுக்கு! ஒன்று பொருளாதாரப் பிரச்சினை, இரண்டு , தத்துவம், உரிமை, கோட்பாடு தொடர்பான பிரச்சினை. பொருளாதாரப் பிரச்சினைகளிலும் இன்றைய சமூக அமைப்புக்குள்ளேயே தீர்க்கப்படக்கூடிய பிரச்சினை; மற்றொன்று, சமூக அமைப்பை அடிப்படையிலேயே மாற்றினால்தான் தீரும் பிரச்சினை.

மக்கள் மேற்கூறிய இரண்டு பிரச்சினைகளுக்காவும் போராடவேண்டும்; குரல் எழுப்பவேண்டும். 

''சனாதனப்'' பிரச்சினை மேற்கூறியவற்றில் எதில் அடங்கும் என்பதைப் பார்க்கவேண்டும்.

'சனாதனம்' என்பதற்கு 'விளக்கங்கள்' ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கூறுகிறார்கள். இதிலும் தெளிவு வேண்டும். மொத்தத்தில் 'இந்து மதத்தைக்' குறிக்கிறதா? அல்லது பழைய சமுதாயத்தில் நிலவிய ''மூட நம்பிக்கை, பண்பாடு, உடன்கட்டை ஏறுதல், ஆண் ஆதிக்கம் ' போன்றவையா?

மேற்கூறியதில் இரண்டாவதைக் கணக்கில் கொண்டால், அவை மதங்களுக்கு அப்பாற்பட்டு, பழைய சமுதாயத்தில் பின்பற்றப்பட்டவையாக இருக்கின்றன. இஸ்லாமியம், கிறித்துவம் இரண்டும் ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்பாகத்தான் இந்தியாவில் நிலவத் தொடங்கின. அதற்குமுன் இந்து ( சைவம், வைணவம் ) , புத்தம், சமணம், சார்வாகம் போன்றவைதான் இங்கு நீடித்தன. அந்த மதங்களைச் சேர்ந்தவர்கள் அனைவரிடமும் ( மதம் தாண்டி) மேற்கூறிய பண்பாடுகள் பின்பற்றுப்பட்டதா? இல்லையா? 

மேலும் கிறித்தவர்கள், இசுலாமியர்கள் இடையேயும் அவர்களது மத அடிப்படையில் சில 'சடங்குகள்' நீடிக்கின்றன. அவற்றையும் கணக்கில் கொள்ளவேண்டுமா? இவை போன்ற ஐயங்களுக்குத் தெளிவான விடைகள் தேவை.

(1) பிராமணியம், பூஜை செய்யும் உரிமை, சமஸ்கிருதம் , தீண்டாமை - இவற்றை மட்டுந்தான் சனாதனம் குறிக்கிறதா? தமிழகம் தாண்டியும் இவைதானா? 

(2) தமிழகத்தில் இன்று பிராமணர் அல்லாத இந்து மக்கள் அனைவரும் பல்வேறு சடங்குகளை ( திருமணம், இறப்பு, மனை, வீடு கட்டுதல், பிறந்தநாள் மொட்டை, காது குத்தல் போன்றவை) பிராமணியப் புரோகிதர்களைக்கொண்டு , சமஸ்கிருத சுலோகம் கொண்டு செய்வதும் இதில் அடங்குமா? 

(3) பிராமணர்கள் பிற சாதியினரைத் தீண்டத் தகாதவர்களாக கருதுவது மட்டும் இதில் அடங்குமா? அல்லது பிரமாணர் அல்லாத இடைமட்டச் சாதியினர் , தலீத் மக்களைத் தீண்டத்தகாதவர்களாகக் கருதவது இதில் அடங்குமா? 

(4) கிராமப்புற ஓட்டல்களில் ''தனிக்கோப்பை'' நடைமுறை இதில் அடங்குமா? தலீத் மக்கள் இன்னும் பல கிராமங்களில் ''அக்கிரகாரத்தில்'' மட்டும் இல்லாமல் பிற இடைத்தட்டு சாதியினர் தெருவிலும் செருப்பு அணிந்து செல்லக்கூடாது என்று கூறப்படுகிறது. 

இதுபோன்று இன்னும் நிறைய பிற்போக்கு, மக்கள் விரோத நடைமுறைகள் உள்ளன. இவையெல்லாம் நிலவுடமைச் சமுதாயத்தின் பிற்போக்கு, ஒடுக்குமுறைப் பண்பாட்டில் அடங்குமா? அல்லது ''சனாதனத்தில்'' அடங்குமா?

எனவே, சமூக உணர்வாளர்கள் இந்த நேரத்திலாவது இவைபற்றிய தெளிவை மக்களுக்குத் தெரிவிக்கவேண்டியது முக்கியச் சமூகக் கடமையாகும். இந்தப் பிரச்சினையை வெறும் ''வாக்கு வங்கிப் பிரச்சனையாக'' பார்ப்பது தவறு என்று கருதுகிறேன்.

என்னுடைய ஆய்வு வினாக்கள் . . . ''சனாதனத்தில்'' அடங்கியதாகக் கூறப்படுபவற்றில் எது எது பழைய நிலவுடமைச் சமுதாயத்தின் பிற்போக்குப் பண்பாடு, நடைமுறைகள்? எது எது மதம் சார்ந்தவை? 

இந்தப் பிற்போக்குப் பண்பாடுகள், நடைமுறைகள் ஒட்டுமொத்தச் சமுதாய மாற்றத்தைப் பொறுத்தவையா? அல்லது மதங்களைப் பொறுத்தவையா? 

ஒட்டுமொத்தச் சமுதாய அமைப்பின் பண்பாடு, நடைமுறைகள் மதங்களில் ஊடே வெளிப்படும் என்பதிலும் எனக்கு ஐயம் இல்லை! இரண்டுக்கும் இடையில் கறாரான பாகப் பிரிவினை கிடையாதுதான்!

-----------------------------------------------------------------------------------------------------------------------

முதற்படி . . . வீடுகளில் ''சடங்குகளை'' ஒழிப்பது. குழந்தை பிறப்பு முதல், புதுமனை புகுவிழாவில் கணபதி ஹோமம், திருமணத்தில் புரோகிதர் நடத்தும் சடங்குகள், தாலி அணிவித்தல் ( பெண்ணுக்குமட்டுமே தாலி, ஆணுக்குக் கிடையாது!) , இறப்பு , திதி போன்ற வீட்டுக்குவீடு நடைபெறுகிற சடங்குகளைக் கைவிடவேண்டும்.

இதற்கும் முதற்படி . . . மேற்கூறிய சடங்குகளை உடனடியாகக் கைவிட முடியவில்லையென்றால், அவற்றைப் புரோகிதர்கள் , சமஸ்கிருத மந்திரம் இல்லாமல் நடத்தலாம். இதை வீட்டுக்குவீட்டு நடைமுறைப்படுத்தவேண்டுமென்று பகுத்தறிவுவாதிகள், பகுத்தறிவுக் கட்சிகள் , பகுத்தறிவு இயக்கங்கள் உடனடியாகத் தமிழகத்தில் முழக்கம் வைக்கவேண்டும்.

அடுத்து, பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட நம்பிக்கைகளையும் சடங்குகளையும் பின்பற்றுவதனால்தானே '' புரோகிதர்கள்'' தேவைப்படுகின்றனர்.அவற்றைக் கைவிடவேண்டுமென்று பகுத்தறிவுக் கட்சிகள் ( அரசாங்கத்தை இப்போது விட்டுவிடலாம்!) , பகுத்தறிவு இயக்கங்கள் முழக்கங்களை முன்வைக்கவேண்டும்.

இந்த இரண்டிலும் வெளிப்படையாக மேற்கூறிய இயக்கங்கள் தங்கள் நிலைபாடுகளைத் தெளிவாக வெளிப்படுத்தவேண்டும். ஒரு இயக்கமாகவே தொடரவேண்டும். இயக்கத் தலைவர்கள் அதற்கு முன்மாதிரியாக நடத்திக்காட்டவேண்டும். ஊருக்கு உபதேசம் என்று ஆகிவிடக்கூடாது.

-----------------------------------------------------------------------------------------------------------------------

என்னைப் பொறுத்தவரையில் . . . மதங்கள் என்று வந்துவிட்டாலே . . . அங்கே ''சடங்குகள்'' வந்துவிடும்! மதத்திற்கு மதம் தங்கள் சடங்குகளில் வேறுபடலாம். அவ்வளவுதான்! சில ''தத்துவக் கருத்துக்கள்'' நிறுவனமாக்கப்படுவதுதானே ''மதங்கள்''! மொட்டை அடிப்பது, மிளகு உப்பு வாங்கிப்போடுவது, தேர் இழுப்பது போன்ற சடங்குகள் எல்லாம் வெவ்வேறு வகைகளில் எல்லா ''மத நிறுவனங்களிலும்'' இங்கு நீடிக்கின்றன.

-----------------------------------------------------------------------------------------------------------------------

குடும்பத்தின் தோற்றம், குடும்பத்தில் ஆண் ஆதிக்கம், பெண்ணடிமை போன்றவற்றிற்கு அடிப்படை சமுதாயத்தின் பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களே. இதற்கும் தற்போது பேசப்படுகிற 'சனாதனம்' என்பதற்கும் நேரடித் தொடர்பு எதுவும் கிடையாது எனக் கருதுகிறேன். ஆனால் இவற்றைத் தக்கவைக்கப்பதற்கான பல ''கருத்தியல்களையும்'' ''சடங்குகளையும்'' உருவாக்கித் தக்கவைப்பதில் 'சனாதனத்திற்குப்' பங்கு உண்டு. ஆனால் இந்தச் ''சனாதனத்தை'' புறக்கணிப்பதால், இன்றைய குடும்ப அமைப்பின் ''ஜனநாயக விரோதப் பண்புகளை'' அழித்துவிடமுடியாது. ஒரு சோசலிசப் பொருளாதார அமைப்பில்தான் பெண்களுக்குச் சமுதாயத்தின் பொருளாதார உற்பத்தியில் ஆண்களுக்கு இணையாகச் சம பங்கு கிடைக்கும். அப்போதுதான் குடும்பத்தில் நீடிக்கிற ஆண் ஆதிக்கமும் பெண்ணடிமையும் ஒழியும். இன்று தமிழ்நாட்டில் ''சனாதனத்தைக்'' கண்டிக்கிற குடும்பங்களில் ஆண் ஆதிக்கம் இல்லையா? பெண்ணடிமை இல்லையா? பிற்போக்குச் சடங்குகள் இல்லையா? அல்லது இந்தக் குடும்பங்கள் ( பிராமணர் அல்லாத பிற உயர் சாதிகள், இடைத்தட்டுச் சாதிகளின் குடும்பங்கள்) தலித் மக்களின்மீது ''சாதி ஒடுக்குமுறைகளை'' பிரயோகிக்கவில்லையா?

சனாதனம் இன்றைய ''குடும்ப அமைப்புமுறையைத் '' தோற்றுவிக்கவில்லை. மாறாக, இந்தக் குடும்ப அமைப்புமுறை தோன்றியபிறகு, அதற்கேற்ப . . . அதைத் தக்கவைக்க . . . சமூகத்தின் மேல்தளத்தில் உருவாக்கப்பட்டதுதான் இந்தச் 'சனாதனம்' ! ''ஜனநாயக விரோதக் குடும்ப அமைப்புமுறை'' நீடிப்பதற்கான ''சடங்குகள், புரோகிதங்கள், புரோகிதர்கள்'' போன்றவற்றை உள்ளடக்கியதுதான் ''சனாதனம்''!

ஒருவேளை மக்களின் ஒன்றுபட்ட உண்மையான முயற்சியால் தற்போது கூறப்படுகிற 'சனாதனம்' ஒழிக்கப்படுவதால் இன்றைய ''குடும்ப அமைப்பின்'' ஜனநாயக விரோதப் பண்புகள் அழிந்தால் நல்லதுதானே! குடும்பம் அழியாது! அது அடுத்த கட்ட வளர்ச்சிக்குத்தான் செல்லும்! கவலை வேண்டாம் நண்பரே.

என்னுடைய கேள்வி . . . ''சனாதனம்'' பற்றிய போதிய விளக்கங்கள் தேவை! எது சனாதனம் என்று அழைக்கப்படுகிறது? வெறும் பார்ப்பனிய எதிர்ப்பா? அல்லது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட அனைத்து ''மூட நம்பிக்கைககளும் அவற்றையொட்டிய சடங்குகளுமா?''. அல்லது ''புரோகிதமும் புரோகிதர்களுமா?''.


சனி, 2 செப்டம்பர், 2023

தமிழ் இலக்கணத்தின் கணிதப் பண்பு

 

1) 

--------------------------------------------------------------------------------------------------------------------------

வினைகளின் வினைத்திரிபு வகைப்பாட்டுக்கும் (தமிழ் லெக்சிகன் - சென்னைப் பல்கலைக்கழகம் வெளியீடு) அவற்றிலிருந்து பிறக்கும் பெயர்களுக்கும் இடையில் தொடர்பு இருக்கிறது. இது ஒரு வியப்பான தமிழ் இலக்கண இயல்பு.

இதுபற்றிய தெளிவை எனக்கு அளித்தவர் என் நண்பர் கணிப்பொறியியலாளர் திரு. சரவணன் . இதுபற்றிய ஆய்வைத் தொடர்ந்துவருகிறோம். கணினிக்கேற்ற மொழி தமிழ்மொழி என்பதை எடுத்துக்காட்டி நிற்கும் வினைத்திரிபு வகைப்பாடு.

2-ஆவது, 3-ஆவது வகைகள் 'ச்சி' எடுக்கும் (ஆள் - ஆட்சி; முயல் - முயற்சி)

4- ஆவது வினை பொதுவாக 'வு' எடுக்கும் ( அறி - அறிவு; அசை - அசைவு; ஆய் - ஆய்வு ) ; சில வினைகள் -ச்சி -யும் எடுக்கும். 'மகிழ்ச்சி' 'மகிழ்வு' ; தேர் - தேர்வு, தேர்ச்சி.

5-ஆவது வகை 'அம்' எடுக்கும். ( ஆக்கு - ஆக்கம்; நீக்கு - நீக்கம்)

9-ஆவது வினைவகை 'ப்பு' எடுக்கும் (கேள் - கேள்ப்பு - கேட்பு )

10 -ஆவது வினை வகை 'ப்பு' எடுக்கும் (கல் - கல்ப்பு - கற்பு )

11 - ஆவது வகை 'ப்பு' எடுக்கும் (படி - படிப்பு; நடி - நடிப்பு; ) 'பார்' என்பது 'பார்வை' என்று 'வை' எடுத்தாலும், 'எதிர்பார்' என்பதில் 'எதிர்பார்ப்பு' என்று வருகிறது.

12- ஆவது வகை 'ப்பு' எடுக்கும். (திற - திறப்பு ; சிவ - சிவப்பு). ஆனால் ' திற என்பது 'திறவுகோல்' என்பதில் 'வு' எடுக்கிறது. 'துற - துறவு ' என்பதிலும் 'வு' வருகிறது.

"சமையல்'' - பெயரா ? தொழிற்பெயரா?

 

1)     "சமையல்'' - பெயரா ? தொழிற்பெயரா?

--------------------------------------------------------------------------

எழுத்தாளர் பேராசிரியர் பெருமாள்முருகன் அவர்கள் தனது கட்டுரை ஒன்றில் ''சமையலர்'' என்ற சொல்லைப் பயன்படுத்தியிருந்தார். அதையொட்டி 'சமையல்' என்பது தொழிற்பெயரா அல்லது முழுப்பெயரா என்ற ஒரு ஐயம் ஏற்பட்டது. அதுபற்றி மருத்துவர் ஐயா அவர்களும் கருத்து தெரிவித்திருந்தார்கள். எனது கருத்து பின்வருமாறு;

 

''சமையல்'' என்ற சொல்லின் மூலம் தொழிற்- பெயர்தான். இதில் ஐயமே இல்லை. ஆனால் தற்போது அது முழுப்பெயராக மாறிவிட்டது எனக் கருதலாம். அதனால்தான் ''நல்ல சமையலை'' என்று சொல்லுக்குமுன்னால் பெயரடையும் பின்னால் வேற்றுமை விகுதியையும் சேர்க்க முடிகிறது எனக் கருதுகிறேன்.

 

தொழிற்பெயராக அது இன்றும் நீடித்திருந்தால் அதற்குமுன் பெயரடை வரமுடியாது, மாறாக, வினையடைதான் வரமுடியும் எனக் கருதுகிறேன். -( ''அவர் வேகமாக வருதலை விரும்புகிறார்'' - இங்கு வருதல் என்பது தொழிற்பெயராக இருப்பதால் 'வேகமாக' என்ற வினையடையைத் தனக்குமுன்னால் ஏற்கிறது. ''வேகமாக வந்தவனை '' இதுவும் அப்படியே)

வினையாலணையும் பெயரும் தொழிற்பெயரும் தங்களுக்குப்பின்னால் வேற்றுமை விகுதிகளை ஏற்பதால் பெயர்த்தன்மை உடையதாக மாறுகிறது; அதேவேளையில் தங்களுக்குமுன்னால் வினையடைகளைமட்டுமே ஏற்பதால் இன்றும் அவை வினையின் பண்பையும் கொண்டிருக்கின்றன. எனவே தான் ( பெயர் என்று அழைக்காமல்) தொழிற்பெயர், வினையாலணையும்பெயர் என்று அழைக்கிறோம்.

 

இதையே சோதனையாக வைத்துக்கொள்ளலாம். 'பாடல்' 'ஆடல்' ஆகியவையும் 'பாடு' 'ஆடு' என்ற வினைச்சொற்களின் தொழிற்பெயர்கள்தான் ஒரு காலத்தில்! ஆனால் இன்று அவை முழுப்பெயராக மாறிவிட்டன. எனவே 'பாடல்கள்' என்று பன்மை விகுதியையும் இணைக்கமுடிகிறது.

 

 

 

 

 

மேலும் சில எடுத்துக்காட்டுக்கள் . . .

(தேர்தல் - தேர் + தல்; ஊதல் - ஊது + இல் ' , தாக்குதல் - தாக்கு+ தல்;, கடத்தல் - கடத்து + அல்; , மோதல் - மோது + அல்; , வற்றல் - வற்று +அல் , வற்புறுத்தல் - வற்புறுத்து + அல்) .

பெயர் : + பெயரடை + வேற்றுமை

தொழிற்பெயர் : + வினையடை + வேற்றுமை

வினையாலணையும் பெயர் : + வினையடை + வேற்றுமை

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India