திங்கள், 28 ஆகஸ்ட், 2023

அறிவியலாளர்கள் அனைவரும் பகுத்தறிவாதிகளா?

அறிவியலாளர்கள் அனைவரும் பகுத்தறிவாதிகளா?

-----------------------------------------------------------------------------------------------------------------------

அறிவியலாளர்கள் அனைவரும் பகுத்தறிவாதிகள் இல்லை. அவர்களது குறிப்பிட்ட முறைசார் துறையில் அவர்கள் வல்லுநர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களது ஒட்டுமொத்த உலகப் பார்வை அல்லது தத்துவக்கோட்பாடு அறிவியல் சாராத, நம்பிக்கை சார்ந்த ஒன்றாக இருக்கலாம்.

ஆனால் இப்படிப்பட்டவர்கள் ஒன்றில் தெளிவாக இருப்பார்கள். தங்களுடைய துறையின் ஆராய்ச்சியில் . . . அறிவியல் கண்டுபிடிப்புக்களில் அறிவியல் முறைகளைப் பின்பற்றுவதில் தெளிவாக இருப்பார்கள். ஆய்வுக்கூடத்திற்குள் நுழைவதற்குப்பின்னும் அதை விட்டு வெளிவந்தபின்னரும் தங்களது உலகப் பார்வைபடி செயல்படுவார்கள். அவர்களது சமுதாயப்பார்வையும்கூட அவர்களது வர்க்கம்சார்ந்த ஒன்றாகவே இருக்கும்.
அவர்கள் அவர்களுடைய குறிப்பிட்ட துறைகளில் வல்லுநர்களாக இருக்கலாம்! அதில் அவர்கள் கருத்துக்கள் தெரிவிக்கலாம்! ஆனால் மொழிதொடர்பான கருத்துக்களில் அவர் கருத்துக்கள் தெரிவிக்கவேண்டுமென்றால், மொழியியல் என்ற அறிவியல்துறைபற்றித் தெரிந்திருக்கவேண்டும்.
அடுத்து, தங்கள் அறிவியல் சாதனைகளைத் தங்களது நம்பிக்கையைபெற்ற கடவுள்களுக்கும் மடாதிபதிகளுக்கும் ''அர்ப்பணிப்பது !''.
பகுத்தறிவாதிகள் இந்த அறிவியலாளர்களின் அறிவியல் சாதனைகளைப் பாராட்டுவதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும். அதைத்தாண்டி அவர்களை ஒட்டுமொத்தமாக ஆஹா ஓஹோ என்று பாராட்டுவதுகூடாது.
மக்களது வரிப்பணத்தால்தான் அவர்கள் தங்களது அறிவியல்துறையில் கண்டுபிடிப்புக்களை மேற்கொள்கிறார்கள். ஆனால் அதில் வெற்றி கண்டவுடன் அந்த வெற்றியை அவர்கள் ஏற்றுக்கொண்ட கடவுள்களுக்கும் மட அதிபர்களுக்கும் ''காணிக்கையாக்குவார்கள்''. அதன்மூலம் மக்களிடம் நிலவும் அறிவியல் அற்ற பார்வையை மேலும் மேலும் ''வலுப்படுத்துகிறார்கள்''!
இதைப்பற்றி யாராவது பேசினால் உடனே ''இது தனிநபர் உரிமை'' என்று கூறுவார்கள். அவர்களது ''சொந்த வாழ்க்கை'' ''குடும்பத்தினர் நலம்'' ஆகியவற்றில் ஏதும் அவர்கள் ''எதிர்பார்த்த ஒன்று'' நிகழ்ந்தால், அதை அவர்கள் அவர்கள் ''ஏற்றுக்கொண்ட'' கடவுள்களுக்கும் மடாதிபதிகளுக்கும் ''அர்ப்பணிக்கலாம்!''. ஆனால் இதுபோன்ற நாட்டின் அறிவியல் வெற்றிகளுக்கு அவர்கள் செய்வது எந்தவகையிலும் சரியில்லைதான்!
இது அரசியலுக்கும் பொருந்தும். அமெரிக்காவில் ''வம்சாவளி இந்தியர்'' ஒருவர் அமெரிக்க அரசாங்கத்தின் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டால் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர்களை நாம்'' இந்திய வம்சாவளி'' என்ற அடிப்படையில் ''பாராட்டுவது'' நமது வழக்கமாக உள்ளது. இன்றைய இங்கிலாந்து முதன்மை அமைச்சரையும் (''பிரதம மந்திரி'') அவ்வாறே கொண்டாடுகிறோம். ஆனால் அவர்கள் எல்லோரும் உலக மக்களை ஒடுக்குகிற ஏகாதிபத்தியவாதிகளின் பிரதிநிதிகளே! ஒடுக்கப்பட்ட காலனிநாடுகளுக்காகவோ உழைக்கும் வர்க்கங்களின் நலன்களுக்காகவோ நிற்பவர்கள் இல்லை. மாறாக, அவர்களை ஒடுக்குகிற வர்க்கங்களின் பிரநிதிகளே!
இதில் ஒன்றைத் தெளிவாக நாம் பார்க்கலாம் . . . அவர்கள் நம்மை ஏமாற்றவில்லை! மாறாக, நாம்தான் ஏமாந்துநிற்கிறோம்!
---------------------------------------------------------------------
புறவயமான உண்மைகளே அறிவியலில் அடங்கும். அவ்வாறு இல்லாமல், நமது விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் முன்வைக்கப்படுகிற கருத்துக்கள் அறிவியல் ஆகாது. அது ஒருவரின் ''தனிப்பட்ட நம்பிக்கை''! ஆனால் இந்த ''தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கும்'' அவை தோன்றிய சமுதாயச் சூழலே அடிப்படையாக இருக்கும். ஏதோ ஒரு சமுதாயத் தேவையையொட்டி . . . . ''யாருடைய'' நலன்களேயோ ''நியாயப்படுத்துவதற்காகவோ'' அல்லது ''பாதுகாக்கவோ'' இதுபோன்ற ''அகவயக் கருத்துக்கள்'' ''உருவாக்கப்பட்டு'' நடமாட விடப்படுகின்றன. அவ்வளவுதான்! அவை ''அறிவியல்'' அல்லது ''தத்துவம்'' என்ற அடைமொழியோடு இணைத்துத் திணிக்கப்படுகின்றன.

திங்கள், 21 ஆகஸ்ட், 2023

தமிழ் இலக்கணவியல், மொழியியல் துறைகளின் முக்கியத்துவம்

 

தமிழ் இலக்கணவியல், மொழியியல் துறைகளின் முக்கியத்துவம் . . .

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழ் இலக்கணவியல் என்பது பழந்தமிழ் இலக்கணங்களைமட்டும் - குறிப்பாக, தொல்காப்பியம், நன்னூல் இலக்கணங்களைமட்டும் - உள்ளடக்கியது இல்லை. அவை தோன்றிய காலத்தில் நிலவிய தமிழ்மொழி தமிழ்ச்சமூகத்தின் தேவையையும் வளர்ச்சியையும் ஒட்டி, இன்று மாறியும் வளர்ந்தும் உள்ளது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை! குறிப்பாக, செய்யுள் வடிவங்களில்மட்டும் நீடித்துவந்த எழுத்துத்தமிழ், கடந்த சில நூற்றாண்டுகளில் தோன்றி நீடிக்கிற உரைநடைத் தமிழில்தான் இன்று பெரும்பான்மை நீடித்துவருகிறது. செய்யுள்களும் கூட இன்று உரைநடைக்கு நெருங்கிய கவிதை வடிவங்களை எடுத்துள்ளன. புதுக்கவிதைகள் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

 

எனவே , இன்றைய உரைநடைத்தமிழில் நீடிக்கிற எழுத்துத்தமிழின் அமைப்பை - இலக்கணப் பண்புகளை - பழந்தமிழ் இலக்கணங்கள் முழுமையாக விளக்கிவிடமுடியாது. அதற்குக் காரணம், புதிய இலக்கணக்கூறுகள் தோன்றியுள்ளதே ஆகும். எனவே, இன்றைய எழுத்துத் தமிழுக்கு ஒரு முழுமையான இலக்கணம் தேவைப்படுகிறது.

 

மேலும் செய்யறிவுத்திறன் மென்பொருள்களில் இயற்கைமொழிகளைக் கணினி புரிந்து- கொள்வதற்கான முயற்சிகள் வேகமாக நடைபெற்று- வருகின்றன. இந்த முயற்சிகளில் தமிழ்மொழியைப் புரிந்துகொள்ளும் மென்பொருள்களை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்த முயற்சியில் தமிழ்மொழி ஆய்வாளர்களின் முன்முயற்சி மிகவும் தேவைப்படுகிறது.

 

எனவே தமிழ் இலக்கணவியலை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச்செல்லவேண்டும். அதற்கு மிகவும் உதவியாக அமைவது இன்றைய மொழியியல். மனித இயற்கைமொழிகளின் பொதுத்தன்மையையும் குறிப்பிட்ட மொழிகளின் தனித்த பண்புகளையும் அறிந்துகொள்ளவும், அந்த அறிவை அடிப்படையாகக் கொண்டு, இயற்கைமொழிகளின் அமைப்பை வெளிப்படுத்தவும், பல்வேறு முறைசார் இலக்கண வடிவங்கள் மொழியியலில் முன்வைக்கப்பட்டுள்ளன.

 

எனவே, தமிழ்மொழி ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் பண்டைத்தமிழ் இலக்கணவியலை இன்றைய தமிழுக்கு ஏற்றவகையில் மேம்படுத்த - மரபு இலக்கணங்களையும் மொழியியலையும் அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும்.

 

இன்றைய தேவைகள் . . .

1) பண்டைய தமிழ் இலக்கணவியல்

2) இன்றைய மொழியியல்

3) இன்றைய எழுத்துத்தமிழ்த் தரவுத்தளம் ( Written Tamil Corpora)

மேற்குறிப்பிட்ட மூன்றுமே இன்றைய தமிழை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இட்டுச்செல்லவும், செய்யறிவுத்திறனுக்கான ( Artificial Intelligence - AI) தமிழ்மொழி ஆய்வை வளர்க்கவும் உதவி செய்யும். ( பேச்சுத்தமிழ் ஆய்வு - அதுபற்றித் தனியாக விவாதிக்கவேண்டும். எழுத்து-பேச்சு (Text to Speech- TTS) , பேச்சு-எழுத்து (Speech to Text ) மென்பொருள்களை உருவாக்குவதற்குமட்டுமல்லாமல், சமுதாயத் தேவைகள் நேரடியாகப் பேச்சுத்தமிழை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எவ்வாறு வளர்த்துவந்துள்ளன என்பதை அறியவும் பேச்சுத்தமிழ் ஆய்வு தேவை)

 

எனவே, மேற்கூறிய நோக்கில் தமிழ் மொழி ஆய்வு வளர்ந்தால்தான் . . . . தமிழ்மொழியை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு நம்மால் இட்டுச்செல்லமுடியும்.

 

முறையாக உருவாக்கப்பட்ட தமிழ்த்தரவுகள் தேவையான இலக்கணக் குறிப்புக்களுடன் இன்று இருந்தால், செய்யறிவுத்திறன் பொருளை மிகச் சிறப்பாகத் தமிழுக்கு நுட்பமாக (Fine-tuning of Pre-trained Large Language model) மாற்றி அமைக்கமுடியும். அது இன்று இல்லை என்பதே 100 விழுக்காடு உண்மை! பிழைகள் களையப்பட்ட , தரப்படுத்தப்பட்ட , இலக்கணக்கூறுகளை உள்ளடக்கிய தமிழ்த் தரவுகள் (Cleaned, normalized, linguistically annotated corpora) இன்று இல்லை! இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் ''தமிழ் வாழ்க'' என்ற வெறும் முழக்கத்தால் எவ்விதப் பயனும் இல்லை!

 

தமிழில் இலக்கணச் சொற்கள் தனித்து வரலாமா? கூடாது!

தமிழில் இலக்கணச் சொற்கள் தனித்து வரலாமா? கூடாது!

---------------------------------------------------------------------------------------------------------------------- 

தமிழில் (1) விகுதிகள் (suffixes) , (2) பின்னொட்டுக்கள் (post-positions) , (3) வினையொட்டுக்கள் (Verbal Particles) , (4) மிதவை ஒட்டுக்கள் (Clitics) , (5) சாரியை போன்ற நிரப்பிகள் ( Fillers) என்று ஐந்துவகையான இலக்கணச் சொற்கள் இருப்பது தங்களுக்கத் தெரிந்ததே. இவற்றில் பின்னொட்டுக்களும் வினையொட்டுக்களும் வரலாற்றில் தனித்து இயங்கிய அகராதிச் சொற்களே (Free morphemes) . பின்னர் அவை அகராதிப்பொருள்காட்டும் சொற்களாக மட்டுமல்லாமல். இலக்கணக்கூறுகளை வெளிப்படுத்தும் இலக்கணச் சொற்களாகவும் பயன்படத்தொடங்கின. ஆனால் அவ்வாறு புதிய பயன்பாட்டை அவை பெறும்போது,( தமிழில் இலக்கணச் சொற்கள் தனித்து நிற்காமல், தாங்கள் தங்களது இலக்கணப் பொருண்மையை ஏற்றுகிற அகராதிச் சொற்களோடு இணைந்துதான் வரும் என்பதால்) தங்களது இலக்கணப் பொருண்மையை ஏற்கிற அகராதிச்சொற்களோடு இணைந்துதான் வரவேண்டும் ( Bound morphemes) . ஆனால் அவை தனித்து இயங்கும் அகராதிச் சொற்களாகவும் தொடர்ந்து நிற்பதால், சிலர் இந்த இலக்கணச் சொற்களைப் பிரித்தே எழுதுகிறார்கள். இது தவறு. ஆங்கிலத்தில் இலக்கணச் சொற்கள் விகுதிகளாகவும் நீடிக்கின்றன ( பன்மை விகுதி - s, காலவிகுதிகள் -ed, -en ) ; தனிச் சொற்களாகவும் நீடிக்கின்றன ( do, does, did, can , could, will, would .... ) .இது ஆங்கில மொழி இலக்கண மரபு. ஆனால் தமிழ் இலக்கணமரபுப்படி, இலக்கணப்பொருள் தனித்து நிற்கும் சொற்கள் வடிவில் இருந்தாலும் தனித்து நிற்காது.

அடுத்து, தமிழைப்பொறுத்தவரையில் , அது இலக்கண விகுதிகளோ அல்லது இலக்கணச் சொற்களோ, முதன்மைச் சொற்களுக்குப்பின்னால்தான் வரும். அதனால் தாங்கள் கூறுகிறபடி, தமிழ் ஒரு விகுதி (suffix, ) மற்றும் பின்னொட்டு (postposition, Verbal Particles) மொழி. மொழியியலில் விகுதி என்பது முழுச்சொல் வடிவத்தில் இல்லாமல், கட்டுண்ட உருபன்களாக இருப்பவை; முன்குறிப்பிட்ட (1), (4) (5) மூன்றுமே விகுதிகளாக நீடிக்கின்றன; அதாவது தனிச்சொல் வடிவமாக வரும் திறன் கிடையாது. (2) (3) இரண்டும் தனிச்சொல் வடிவத்தில் இருப்பதால் - கட்டிலா உருபன்களாக இருப்பதால் பின்னொட்டு, வினையொட்டு என்று பொற்கோ போன்ற தமிழறிஞர்கள் பெயரிட்டு அழைக்கிறார்கள்.
ஒட்டு விகுதி என்பதற்கு ஆங்கிலத்தில் affix என்று கூறுகிறார்கள். இதில் சொல்லுக்குமுன்னால் வருவது prefix, பின்னால் வருவது suffix, சொல்லுக்கு இடையில் வருவது infix, ஒரே இலக்கணவிகுதி இரண்டாகப் பிளவுபட்டு, அவற்றில் ஒரு பகுதி சொல்லுக்குமுன்னும் மற்றொரு பகுதி சொல்லுக்குப்பின்னும் வருவது circumfix என்றும் அழைக்கிறார்கள். தமிழைப்பொறுத்தவரையில் suffix மட்டுமே இருக்கிறது. இதைப் பின்னொட்டு விகுதி என்றும் postpositions, verbal Particles என்பவற்றைப் பின்னொட்டுச் சொல் என்றும் அழைக்கலாம் என்று நான் கருதுகிறேன். இந்த இரண்டுவகைகளும் இலக்கணப் பொருண்மை தருகிற உருபன்களே. (உருபன் - Morpheme - என்பது அகராதிப் பொருண்மையையோ அல்லது இலக்கணப் பொருண்மையையோ கொடுக்கிற, மேலும் பிரிக்கமுடியாத, அவ்வாறு பிரித்தால் பொருள்தாராத ஒரு அலகு).

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

பிறமொழி எழுத்துக்களுக்குத் தமிழில் இடம் தரவேண்டுமா?

 பிறமொழி எழுத்துக்களுக்குத் தமிழில் இடம் தரவேண்டுமா?

----------------------------------------------------------------------------------------------------
மனிதனின் பேச்சுறுப்புக்களைக்கொண்டு ( தொண்டை, வாயறை, நாக்கு, அண்ணம், பல், உதடு, மூக்கு உட்பட) நூற்றுக்கணக்கான பேச்சொலிகளை ( Phones) உருவாக்கமுடியும். ஆனால் எந்த ஒரு குறிப்பிட்ட மொழியும் அந்த அத்தனைப் பேச்சொலிகளையும் உருவாக்கிப் பயன்படுத்துவது கிடையாது. எனவே ஒவ்வொரு குறிப்பிட்ட மொழியும் பொதுவாகக் கிட்டத்தட்ட 50 பேச்சொலிகளைப் பயன்படுத்தலாம்.
அடுத்து, அந்தப் பேச்சொலிகளையும் அந்தக் குறிப்பிட்ட மொழி பொருள் வேறுபாட்டுக்காகப் பயன்படுத்துவது கிடையாது. எடுத்துக்காட்டாக, ஒலிப்புள்ள (Voiced phones) 'க்' 'ட்' இரண்டும் இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் பொருள் வேறுபாட்டுக்கு அடிப்படையாக அமைகிறது. எனவே, அவை அந்த மொழிகளில் ஒலியன்களாக ( Phonemes) அமைகின்றன. இது அந்த மொழிகளின் மரபு. ஆனால் இந்த இரண்டும் தமிழில் பொருள் வேறுபாட்டுக்குப் பயன்படுத்தப்படவில்லை. இந்த இரண்டு பேச்சொலிகளும் தமிழில் உண்டு. ஆனால் பொருள் வேறுபாட்டுக்கான ஒலியனாகப் பயன்படுத்தப்படவில்லை. மாறாக, மாற்றொலிகளாகப் ( Allophones) பயன்படுத்தப்படுகிறது.
பொதுவாக, பொருள் வேறுபாட்டுக்கு அடிப்படையான ஒலியன்களுக்குத்தான் எழுத்துக்கள் ( graphemes) மொழிகளில் உண்டு. இதனால்தான் இந்தியில் இந்த இரண்டுக்கும் தனித்தனி எழுத்துக்கள் இருக்கின்றன. ஆனால் தமிழில் அதற்கான எழுத்து கிடையாது.
எனவே தமிழில் கடம், அக்கா, தங்கம், பகல் என்ற சொற்களில் [k] [g] [x] பேச்சொலிகள் (phones) பயின்றுவந்தாலும், அவை மூன்றுமே ஒரே எழுத்தால் குறிக்கப்படுகிறது. அவை வரும் இடத்தைப் பொறுத்து தமிழ்மக்கள் அவற்றை வேறுபட்ட பேச்சொலிகளாகப் (Allophones) பயன்படுத்துகின்றன,
எனவே, எழுதும்போது, ஒரு ஒலியனின் (Phoneme) பேச்சொலியை (Allophone) . . . அந்த எழுத்து அல்லது ஒலியன் வரும் சூழலை மனதில் கொண்டு மக்களால் பலுக்குகிறார்கள்.
இவ்வாறு இருக்கும்போது, இந்தியில் ஒலியனாக இருக்கிற /g/ -க்கு எழுத்து இருக்கும்போது, தமிழில் அவ்வாறு ஏன் எழுத்து இல்லை என்று கேட்பது அறிவியல் அடிப்படை - மொழியியல் அடிப்படை கிடையாது. ஆனால் அடுத்த வினா வரும் . . . பேசுவதை அப்படியே - பேச்சொலிகளாகவே எழுதவேண்டுமென்று ஒருவர் விரும்பினால் என்ன செய்வது? , அதற்குப் பன்னாட்டு பேச்சொலியியல் கழகம் (International Phonetic Association IPA scripts) ) உருவாக்கிவைத்துள்ள பேச்சொலிகளுக்கான வரிவடிவங்களைப் பயன்படுத்தலாம்; பயன்படுத்தவேண்டும்.
உலகில் மனிதனால் பயன்படுத்தப்படுகிற அல்லது ஒலிக்கக்கூடிய அத்தனைப் பேச்சொலிகளுக்கும் அதில் வரிவடிவம் (Phonetic scripts) உண்டு. அதைப் பயன்படுத்தலாம்.
எனவே ஒரு மொழியியல் உள்ள எழுத்துக்கள் எல்லாம் இன்னொரு மொழியில் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.
மேலும் ஆள், இடம், பொருள் போன்ற சொற்களுக்குத்தான் (Proper names) சிக்கல் உண்டு. மாறாக, தமிழில் 'பஸ்' 'புஷ்பம்' ' ஸங்கீதம்' 'ஜனனம்' என்று அயல்மொழிச்சொற்களை அப்படியே எழுதவேண்டும் , அதற்கு அந்த எழுத்துக்கள் தேவை என்று கருதக்கூடாது. இங்கு இவற்றிற்கெல்லாம் தமிழில் சொற்கள் உண்டு. பேருந்து, மலர், இசை என்றுதான் தமிழில் எழுதவேண்டும்.
Proper names - க்கு ஒருவர் விரும்பினால் அந்தப் பெயர்களில் இடம்பெற்றுள்ள - தமிழில் இல்லாத - எழுத்துக்களைப் பயன்படுத்திக்கொள்ளட்டும். ஆனால் அதற்காக, அந்த அயல்மொழி எழுத்துக்களைத் தமிழ் எழுத்துக்களாகக் கருதி, தமிழ் எழுத்துவரிசையில் சேர்க்கவேண்டும் என்று கூறுவதற்கு எந்தவித அறிவியல் அடிப்படையும் கிடையாது.

சனி, 19 ஆகஸ்ட், 2023

தமிழ் எழுத்துக்களோடு கிரந்த எழுத்துக்களையும் இணைத்துக்கொள்ளலாமா ?

 தமிழ் எழுத்துக்களோடு கிரந்த எழுத்துக்களையும் இணைத்துக்கொள்ளலாமா என்பது பற்றிய ஒரு கருத்தாடலில் நண்பர் திரு. செல்லப்பா அவர்களின் கருத்தும் அதையொட்டி எனது கருத்துக்களும் !

-------------------------------------------------------------------------------------------------------------

ந. தெய்வ சுந்தரம்

-------------------------------------

தமிழ் எழுத்துக்களின் அடிப்படைபற்றி முகநூலில் நான் பலதடவை எழுதியுள்ளேன். தெளிவான அறிவியல் அடிப்படை தமிழ் எழுத்துக்களுக்கு இருக்கிறது. பேச்சொலி, மாற்றொலி, ஒலியன், எழுத்து போன்ற மொழியியல் அடிப்படையிலான கருத்துக்களின் அடிப்படையில் தமிழ் எழுத்து அமைப்பை ஆராய்ந்தால் இது தெளிவாகும்.

https://nadeivasundaram.blogspot.com/.../blog-post_8612.html

நண்பர் திரு. செல்லப்பா யக்ஞசுவாமி

-----------------------------------------

ஐயா, தங்கள் வலைப்பதிவில் படித்தேன். சிறப்பாக உள்ளது. ஆனால் அதன் அடிநாதம், "தமிழில் எல்லாம் இருக்கிறது" என்ற பிடிவாதமே அன்றி வேறில்லை. தமிழில் என்ன இல்லை, ஏன் இல்லை என்ற சிந்தனையில் தாங்கள் இறங்கவில்லை என்பதைத்தான் நான் குறிப்பிட விரும்புகிறேன். Bhagat singh என்பதை ஒலிக்கேற்றவாறு எழுதுவதற்கு பிற திராவிட மொழிகளில் உள்ள எழுத்து அமைப்பு தமிழில் எப்போது வரும்? இதற்குத் தேவையான புதிய எழுத்துக்களை உருவாக்கும் அறிவியல் சிந்தனை

ஏன் இல்லை? இதனால்தானே நமது தமிழ் மீடியம் மாணவர்கள் பல நேர்காணல்களில் அறிவியல் சொற்கள், மற்றும் பிற மாநில, பிற நாட்டு பெயர்ச்சொற்களைச் சரியாக உச்சரிக்க முடியாமல் கேலிக்கு ஆளாகிறார்கள்? இது கணினி யுகம். ஒரு புதிய எழுத்தை உருவாக்குவதும் அதை ஒருங்கு குறிக்குள் அடக்குவதும் அல்லது இணைப்பதும் கண்ணிமைக்கும் நேரத்தில் செய்ய முடியும். இதை முன்னெடுக்க வேண்டிய பணியைச் செய்யாமல் 'நமக்குள்ளே பழங்கதைகள் ' பேசுவது நம் சந்ததியினருக்கு நாம் செய்யும் அநீதி அல்லவா?

ந. தெய்வ சுந்தரம்

------------------------------------------

நன்றி ஐயா. ஒரு மொழியில் இல்லாததை இருப்பதாகக் கருதிக்கொண்டு, மேற்கொண்டு வளர்ச்சியே தேவை இல்லை என்று நான் எப்போதும் கூறமாட்டேன். 

அதேவேளையில் ''இருக்கின்ற ஒன்று '' சரியாக இருந்தால், அதை ''வளர்ச்சி'' என்ற பெயரில் புறக்கணிப்பதையும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். 

சமுதாயத் தேவைகள் மாற மாற உறுதியாக அதன் மொழியும் மாறத்தான் செய்யும்; மாறவும் வேண்டும். தமிழ்மொழியும் இதற்கு விதிவிலக்கு இல்லை. அவ்வாறு மாறி வந்ததால்தான் தமிழ்மொழியின் தொடர்ச்சி நீடிக்கிறது.

பிறமொழிச் சொற்களை உச்சரிக்கவேண்டும் என்பதற்காகத் தமிழில் நிலவுகிற எழுத்துக்களைக் ''குறைக்கவேண்டும்'' அல்லது ''கூட்டவேண்டும்'' என்று கூறுவது சரி இல்லை! 

புவிஈர்ப்பு விசை இருப்பதால், விமானங்களையும் ஏவுகணைகளையும் விண்ணில் செலுத்தக் கடும் முயற்சி எடுக்கவேண்டியது உள்ளது என்று கூறி, புவீயீர்ப்பு விசை தேவை இல்லை என்று கூறமுடியமா? அல்லது இல்லாமல் ஆக்கமுடியுமா? அதேநேரத்தில் புவியீர்ப்பு விசையையும் மீறி, நம்மால் ஒரு பொருளை எவ்வாறு விண்ணில் செலுத்தலாம் என்றுதான் யோசிக்கவேண்டும் என்பது எனது கருத்து. (இந்த எடுத்துக்காட்டு இங்குப் பொருந்துமா என்பது எனக்குத் தெரியவில்லை! சுட்டிக்காட்டி, வேறு எடுத்துக்காட்டுக்கள் இருந்தால் நண்பர்கள் அவற்றைப் பதிவிடலாம்! )

அதுபோன்றதுதான் ஒரு மொழியின் இலக்கணம் . . . எழுத்துக்கள் உட்பட! தமிழ்மொழியின் இன்றைய அமைப்பு . . . இன்றைய தமிழ்ச் சமுதாயத் தேவைகளுக்குப் பயன்படாத வகையில் இருந்தால் . . . அல்லது போதுமானதாக இல்லாமல் இருந்தால் . . . அதை மாற்றலாம். 

ஆனால் பிற மொழிகளின் சொற்களைத் தமிழில் உச்சரிப்பதற்காக  அல்லது எழுதுவதற்காகத் தமிழ் எழுத்துக்களில் பிறமொழி எழுத்துக்களை இணைத்துக்கொள்ளலாம் என்பதையே நான் எதிர்க்கிறேன்.

ஒரு மொழி தனது சமுதாயத்தின் தேவைக்கேற்ப வரலாற்றில் மாறும்! மாறிக்கொண்டும் இருக்கிறது. அத்தோடு தேவைக்கேற்ப நாமும் திட்டமிட்டு மொழியை மாற்றலாம் . . . வளர்க்கலாம்! வளர்க்கவேண்டும்! ஆனால் மொழியின் போதாமை, அதற்கான மாற்றம் ஆகியவைபற்றித் தெளிவான ஆய்வுகளை மேற்கொண்டுதான் அந்த முயற்சியில் ஈடுபடவேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில் . . . பிற மொழிகளுக்காக, தமிழின் எழுத்துக்களைக் கூட்டவோ குறைக்கவோ இன்று தேவை இல்லை! கிரந்த எழுத்துக்களைத் தமிழில் இணைக்கக்கூடாது என்பதே எனது கருத்து.

---------------------------------------------------------------------------

ஆங்கிலத்தில் /k/ /g/ இரண்டும் தனித் தனி ஒலியன்கள் (Phonemes) . ஆனால் தமிழில் அவை ஒரு ஒலியனின் மாற்றொலிகளே ( Allophones) . எனவே cold, gold என்பவற்றை அப்படியே தமிழில் எழுதமுடியாது (எழுதத் தேவையும் இல்லை!) ''கோல்ட்'' என்றுதான் எழுதுவோம். ஆனால் மொழிச் சூழலின் அடிப்படையில் தமிழ் மக்கள் இரண்டையும் வேறுபடுத்தி உச்சரிக்கிறார்கள். அதேவேளையில் கடல், கப்பல் என்ற சொல்லில் வருகிற 'க' வை "g" என்று தமிழர்கள் உச்சரிக்கமாட்டார்கள். ஏனென்றால் தமிழ்ச் சொற்களில் இந்த g என்பது சொல் நடுவில் மெல்லினத்திற்கு அடுத்துமட்டுமே வரும் என்பது அவர்களுக்குத் தெரியும். எனவே, ஒரு சொல் தமிழா, ஆங்கிலமா என்ற அறிவே இங்கு முக்கியம்.

அப்படியில்லாமல் அந்த ஆங்கில உச்சரிப்பு மாறாமல் எழுதவேண்டுமென்றால் , g, d என்ற இரண்டு பேச்சொலிகள் அல்லது மாற்றொலிகளைத் தமிழில் அப்படியே எழுதவேண்டும். அது இயலாது. . தமிழில் ல், ள், ழ் என்றும் ந். ன், ண் என்றும் ர், ற் என்றும் இருக்கிற ஒலியன்களை ஆங்கில எழுத்தில் எவ்வாறு எழுதுகிறார்கள்? தனி எழுத்துக்களை உருவாக்கியிருக்கிறார்களா? இல்லையே! மாறாக , l , L , zh என்று ஆங்கிலத்தில் உள்ள எழுத்துக்களைப் பயன்படுத்தியே எழுதுகிறார்கள். புது எழுத்துக்களை உருவாக்கவில்லையே!

எனவே ஆங்கிலத்தையோ அல்லது பிறமொழிகளையோ கலந்து பேசும்போதோ அல்லது எழுதும்போதோ குறிப்பிட்ட சொற்கள் தமிழ்ச்சொற்களா அல்லது பிறமொழிச்சொற்களா என்பதை அறிந்து இருக்கவேண்டும். அதனடிப்படையில் தமிழ் மக்கள் உச்சரிக்கவேண்டும்.

ஆங்கிலத்தில் c என்ற எழுத்துக்கு இரண்டு உச்சரிப்புக்கள் உள்ளன. city என்பதில் 'ச்' என்றும் cat என்பதில் 'க்' என்றும் உச்சரிக்கிறார்கள். அதற்குக் காரணம் ஆங்கிலத்தில் i என்ற முன்னுயிருக்குமுன்னால் c வரும்போது முன் மெய்யாக மாறுகிறது; a என்ற பின்னுயிருக்கு முன்னால் வரும்போது c என்பது 'க்' என்று பின் மெய்யாக மாறுகிறது. இந்த அறிவை ஆங்கிலேயர்கள் மனதில் உள்ளார்ந்த விதிகளாக இருப்பதால், அவர்களுக்குப் பிரச்சனை இல்லை. மாறாக, அவர்கள் எல்லா இடத்திலும் c என்பதை ச் என்று மட்டுமோ அல்லது க் என்றுமட்டுமோ உச்சரிக்கவில்லையே. எனவே எழுத்துக்கள், உச்சரிப்புக்கள் என்பவை குறிப்பிட்ட மொழிசார்ந்த மரபு. பிற மொழிகளின் மரபை ஒருவர் தன் தாய்மொழியியலும் - தாய்மொழி மரபுக்கு எதிராக - பயன்படுத்தவேண்டும், அதற்காகப் புது எழுத்துக்களை உருவாக்கவேண்டும் என்று கூறுவது சரி இல்லை.

-------------------------------------------------------------------------

 ஒரு மொழிக்குள்ளேயே இதுபோன்ற சிக்கல் இருக்கிறதே. ஆங்கில மொழியில் city , cylinder - , cat, cot என்பவற்றில் c எழுத்து அனைத்திலும் ஒன்றுபோல் இருந்தபோதிலும் உச்சரிப்பு மாறுகிறது! ஆனால் அதற்கு ஒரு சூழல் விதி இருக்கிறது. அது ஆங்கிலேயர்களின் உள்ளார்ந்த மொழி அறிவாக இருப்பதால் சிக்கல் இல்லை. அவர்கள் உச்சரிப்பு வேறுபாட்டிற்காகத் தனித் தனி எழுத்துக்களை இவ்விடத்தில் பயன்படுத்தவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று.

--------------------------------------------------------------------------------

இந்தியில் ''தெய்வ சுந்தரம்'' என்ற பெயரை இந்தி எழுத்துக்கள்கொண்டு அப்படியே எழுதமுடியாது. ''தைவ சுந்தரம் '' என்றுதான் எழுதமுடியும். ஏன் இந்தியில் எகரத்திற்கான எழுத்தைச் சேர்க்கவில்லை என்று கேட்கமுடியுமா? கேட்டால் ''இது இந்தி மரபு'' என்றுதான் கூறுவார்கள்.

------------------------------------------------------------------------------

பேச்சொலி (Phones) , மாற்றொலி (Allophone) , ஒலியன் (Phoneme) , கட்டிலாப் பேச்சொலி (Free Variation) , வரிவடிவம் - எழுத்து (Grapheme), மொழியசை ( Linguistic Syllable) ஆகியவற்றைப்பற்றி ஒரு மொழி பேசுவோர் அனைவருக்கும் படித்துத்தான் தெரியவேண்டும் என்பது தேவை இல்லை. அது உள்ளார்ந்த அறிவு. ஆனால் இதுபற்றி ஆய்வு செய்பவர்களுக்கு உறுதியாக இதுபற்றிய தெளிவு தேவை. இலக்கணம், மொழியியல் ஆகியவற்றின் உதவியோடு இவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.

--------------------------------------------------------------------------


சனி, 12 ஆகஸ்ட், 2023

தமிழ்நாட்டில் சாதியம் ஏன், எவ்வாறு தக்க வைக்கப்படுகிறது?

 தமிழ்நாட்டில் சாதியம் ஏன், எவ்வாறு தக்க வைக்கப்படுகிறது?

-------------------------------------------------------------------------
தமிழ்நாட்டில் ''வாக்குவங்கி அரசியலில் '' பங்கேற்கும் அனைத்துக் கட்சிகளும் (விதிவிலக்கே கிடையாது) தேர்தலில் - பஞ்சாயத்துத் தேர்தல் முதல் பாராளுமன்றத் தொகுதி தேர்தல்வரை - குறிப்பிட்ட இடத்தில் எந்த சாதியினர் பெரும்பான்மை என்பதைப் பார்த்துத்தானே வேட்பாளர்களை நிறுத்துகின்றனர்.
வெற்றிபெற்ற கட்சிகள் அமைச்சரவை அமைக்கும்போதும் . . . ''சாதிய ஜனநாயகத்தைப் '' பின்பற்றுகிறோம் என்று கூறி, சாதிய அடிப்படையில்தானே அமைச்சர்களை அமர்த்துகிறார்கள்! ''அனைத்து சாதிகளுக்கும் உரிமை தருகிறோம், இடம் தருகிறோம்'' என்று கூறுவதே ''சாதிய அடிப்படையிலான பிரிவினை உணர்வைத் '' தக்கவைப்பதாகத்தானே அமையும்!
''இட ஒதுக்கீடு'' பிரச்சனைகளுக்குச் சாதிகளைக் கூறித்தானே ஆகவேண்டும் என்ற வினா இங்கு எழும்!
சாதிய அடிப்படையில் நீண்ட காலமாகப் பாதிக்கப்பட்டிருந்த சாதிகளைச் சேர்ந்த மக்களுக்கு எவ்வாறு கல்வியிலும், அரசுப் பணிகளிலும் ''இட ஒதுக்கீடு'' கொள்கையைச் செயல்படுத்தமுடியும் என்ற வினா எழுப்பப்படும் ! நியாயமான வினாதான் ! நான் மறுக்கவில்லை!
ஏனென்றால் இடைத்தட்டுச் சாதிகளைச் சேர்ந்த இடைத்தட்டு, அடித்தட்டு மக்களும் பட்டியலினத்தைச் சேர்ந்த இடைத்தட்டு, அடித்தட்டு மக்களும் வசதி வாய்ப்புகள் இல்லாமல், கல்வி பெறமுடியாமல், அரசுப் பணிகளைப் பெறமுடியாமல் . . . நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை மறுக்கமுடியாதுதான்!
மேல்தட்டுச் சாதிகளைச் ( பிராமணர், பிள்ளை, முதலியார், ரெட்டியார் போன்ற சாதியினர்) சேர்ந்த மேல்தட்டு வர்க்கத்தினருக்கு (இடைத்தட்டு, அடித்தட்டு மக்களைத் தவிர்த்து!) இதில் பிரச்சினை கிடையாது! சாதிய அடிப்படையிலும் பொருளாதார அடிப்படையிலும் இவர்களுக்குப் பிரச்சினை கிடையாது!
எனவே, அனைவருக்கும் கல்வி, வேலை கொடுக்கமுடியும் என்ற ஒரு சமுதாய அரசியல் பொருளாதார அமைப்பு நிறுவப்படுவதுதான் இதற்கு நிரந்தரத் தீர்வு! இன்றைய பொருளாதார அமைப்பு ''கட்டிக்காக்கப்படும்வரை'' - ''நீடிக்கும்வரை'' இது ஒரு சிக்கல்தான்!
இவ்விடத்தில் ஒரு கருத்தில் தெளிவாக இருக்கவேண்டும்! வேலையில்லாத் திண்டாட்டம் பெருமளவில் நீடிக்கிற இன்றைய சமுதாயத்தில் இந்த ''இட ஒதுக்கீடு'' சாதிய அடிப்படையில் பாதிக்கப்பட்டிருக்கிற அனைவருக்கும் வேலை கொடுத்துவிடுமா? வேலையில்லாதவர்களின் எண்ணிக்கையும் இந்த இட ஒதுக்கீட்டால் வேலை பெறும் ''இடைத்தட்டு, அடித்தட்டு சாதியினர்'' எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை தெரியும் இது ஒரு மாயை என்றே! வேலையில்லாத் திண்டாட்டம் இந்தியாவின் அரசியல் பொருளாதார அமைப்பினால் நீடிக்கின்ற ஒன்று! பட்டியலினத்தினருக்கு 100 விழுக்காடு இடம் ஒதுக்கினாலும் பயன் இருக்காது . . . ஏனென்றால் அடிப்படைக் கல்வியையே பெறமுடியாத ஒரு சூழலில் இருக்கிற பட்டியலின மக்களுக்கு ( பெரும்பாலும் அடித்தட்டு வர்க்க மக்கள்!) இந்த ''இட ஒதுக்கீடு'' எப்படி உதவும்?
ஆனால் அதற்காக ''இட ஒதுக்கீடு'' வேண்டாம் என்பது பொருள் இல்லை! இங்கு நான் வலியுறுத்துவது . . . இந்த ''இட ஒதுக்கீட்டுச் சிக்கல்களுக்காக'' தமிழ்நாட்டில் தற்போது சாதியம் தக்கவைக்கப்படவில்லை! இந்த ''அழுகிய'' சமுதாய அமைப்பைக் கட்டிக்காக்கவே , திட்டமிட்டு ஆளும் வர்க்கங்களால் ( இதில் ஆளும் கட்சிகள், எதிர்க்கட்சிகள் அனைத்தும் அடங்கும்!) சாதியம் தக்கவைக்கப்படுகிறது!
மக்களைப் பிளவுபடுத்தி - சமுதாய மாற்றத்திற்கான மக்களின் முன்முயற்சிகளைப் பலவீனப்- படுத்துவதற்காகவே சாதியம் தக்கவைக்கப்- பட்டுக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை! இதுதான் இன்று நாம் பார்த்துக்கொண்டிருக்கிற ''சாதிய வன்முறை நிகழ்ச்சிகள்'' அனைத்துக்கும் காரணம்! இளம் வயதிலேயே ''சாதிய உணர்வு '' - பட்டியலின மக்களை மதிக்காமல் மிதிக்கிற உணர்வு - ஊட்டப்படுகிறது!

சாதிய ஒடுக்குமுறையின் பின்னணி . . .

 சாதிய ஒடுக்குமுறையின் பின்னணி . . .

------------------------------------------------------------------------
சாதிய ஒடுக்குமுறையில் வர்க்கங்கள் ஒளிந்து கொண்டிருப்பது நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாது! ஆனால் அதுதான் உண்மை!
மேல்தட்டு, இடைத்தட்டு , அடித்தட்டுச் சாதிகளைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் - அடித்தட்டு வர்க்கங்கள் - தங்களது வர்க்க நிலை அடிப்படையில் ஒன்றிணைந்துவிடக்கூடாது என்பதில் மேல்தட்டு வர்க்கங்கள் தெளிவாக இருக்கின்றன!
எனவே சாதிப் பிரிவினையைத் தூக்கிப் பிடித்து . . . இந்த மேல்தட்டு வர்க்கங்கள் தங்கள் சாதிகளைச் சேர்ந்த இடைத்தட்டு, அடித்தட்டு வர்க்கங்களைச் ''சாதி'' அடிப்படையில் தங்களுடன் இணைத்துக்கொண்டு . . . அடித்தட்டு வர்க்கங்களை அடக்கி ஆளுகின்றன. ''வாக்குவங்கி'' ''வாக்குறுதி'' அரசியலுக்கும் இதில் முக்கியப் பங்கு உண்டு!
மேல்தட்டு, இடைத்தட்டு, அடித்தட்டு வர்க்கங்கள் என்பது வேறு!
மேல்தட்டு, இடைத்தட்டு, அடித்தட்டு சாதிகள் என்பது வேறு!
இதற்கான தீர்வுகளில் ஒன்று . . . இந்த மேல்தட்டு, இடைத்தட்டு சாதிகளில் பிறந்த ''அடித்தட்டு வர்க்கங்கள்'' , தங்களுடைய சாதிகளைச் சேர்ந்த ''மேல்தட்டு வர்க்கங்களுக்கு'' எதிராக . . . அடித்தட்டு வர்க்கத்தினருக்காக அவர்களே முன்வந்து போராடவேண்டும். அந்த வகைப் போராட்டங்களுக்கு அவர்களே தலைமை வகிக்கவேண்டும்!
இந்த அடித்தட்டுச் சாதிகளிலும் சற்று ''உயர்ந்த வர்க்கப்பிரிவினரும் '' இருப்பார்கள்! அவர்களும் இதுபோன்ற போராட்டத்தை விரும்பமாட்டார்கள்! எனவே அவர்கள் ''பங்குக்கும்'' தங்கள் சாதிகளைச் சேர்ந்த அடித்தட்டு வர்க்கங்களைச் சாதிய உணர்விலேயே தக்கவைக்க முயல்வார்கள்!
இந்தத் தடைகளையெல்லாம் மீறி . . . வர்க்க உணர்வின் அடிப்படையில் மக்கள் இணையும்போதுதான் . . . இந்தச் சாதியக் கொடுமைகள் ஓரளவுக்குக் கட்டுப்படும்! மற்றபடி ''பார்ப்பனிய எதிர்ப்புப் போராட்டங்களும் அவற்றின் அடிப்படையிலான பகுத்தறிவுப் புரட்சியும்'' இந்தச் சாதியக் கொடுமைகளை எள்ளளவும் கட்டுப்படுத்தாது! இதைக் கடந்த 100 ஆண்டுகாலத் தமிழக வரலாறு எடுத்துக்காட்டி நிற்கிறது!
நான் மேலே கூறியுள்ள வர்க்க ஒற்றுமை அடிப்படையிலான போராட்டங்களும் சாதியக் கொடுமைகளை முழுமையாகத் தீர்த்துவிடாது!
சாதிய நோய் . . .
ஒரு தனிநபருக்கு ஏற்படுகிற நோய் இல்லை!
மாறாக, ஒட்டுமொத்தமான சமூகத்தைத் தொற்றியுள்ள ஒரு கொடும் நோய்!
பல நூறு ஆண்டுகளாக . . ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிற ஒரு நோய்!
ஒட்டுமொத்தச் சமூகப் பொருளாதார, அரசியல் அமைப்பு மாற்றி அமைக்கப்படும்போதுதான் அது தீரும்!

திராவிடம்பற்றி ஆய்வு செய்யக்கூடாதா? மார்க்சிய அரவணைப்பில் இருக்கிறவர்களுக்கு, தமிழ்மொழிமீது வெறுப்பா?

 திராவிடம்பற்றி ஆய்வு செய்யக்கூடாதா?

மார்க்சிய அரவணைப்பில் இருக்கிறவர்களுக்கு, தமிழ்மொழிமீது வெறுப்பா?
--------------------------------------------------------------------
திராவிடம் என்பது ஒரு மொழிக் குடும்பத்தின் பெயர் / ஒரு இனம் / ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதி அல்லது நாடு / ஒரு விழுமியம் - ஆரியத்திற்கு எதிரான ஒரு விழுமியம் . . . . என்று பல விளக்கங்கள் தரப்படுகின்றன. உறுதியாக இதுபற்றி ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டியது மிகத் தேவையான ஒன்று. ஆர்வம் உள்ளவர்கள் . . . இதில் ஈடுபடலாம். ஈடுபடவேண்டும்.
என்னுடைய பதிவுகளில் திராவிடம் என்பது ஒரு இனம் இல்லை; மாறாக, ஒரு மொழிக்குடும்பத்திற்கு இடப்பட்ட ஒரு பெயர் என்றுமட்டுமே குறிப்பிட்டுள்ளேன். இதையும் தொடர்ந்த ஆய்வில்தான் முடிவு செய்யமுடியும்.
ஆனால் தமிழ்த் தேசிய இனம் என்பது உண்மையான ஒரு வரலாற்று விளைபொருள். ஏனையவைபற்றியும் முடிவுக்கு வரவேண்டும் ஆய்வுலகில்!
தமிழ்மொழி வளர்ச்சிக்கும் தமிழ்த் தேசிய இனத்தின் அடுத்த கட்ட நகர்வுக்கும் இந்த ஆய்வு மிக மிகத் தேவையான ஒன்று. ஏனென்றால் தவறான கருத்தியல் மக்களின் உண்மையான சமுதாயப் போராட்டத்திற்குத் தடையாக அமையும். எனவே சமூகப் போராளிகள் இதற்கு நேரம் ஒதுக்கித்தான் ஆகவேண்டும். அதில் எவ்விதத் தவறும் இல்லை! ஏனைய துறைசார்ந்த பணிகள் எல்லாம் - கணினித்தமிழ் ஆய்வு உட்பட - அதற்கு அடுத்ததுதான்!
மேலும் மார்க்சியத் தத்துவத்தை ஏற்றுக் கொண்டவர்கள் தமிழ்மொழிமீது வெறுப்பு கொண்டவர்கள் (!!!) என்ற ஒரு தவறான கருத்துப் பரவலையும் எதிர்கொண்டாகவேண்டும்.
எனக்குத் தெரிந்த மார்க்சியத்தின் அடிப்படையில் கூறுகிறேன் . . . ஒரு மார்க்சியவாதி தேசிய இனப் பிரச்சனையில் ஒடுக்கப்படுகிற எல்லாத் தேசிய இனங்களுக்காகவும் போராடுகிற வேளையில் . . . தான் சார்ந்த தேசிய இனத்தின் விடுதலைக்கும் வளர்ச்சிக்கும் அந்தத் தேசிய இனத்தின் மொழியின் ஜனநாயக உரிமைகள், வளர்ச்சிக்காகவும் மிக உறுதியாக நிற்பவர் ஆவார். எந்த ஒரு சூழலிலும் தன் தேசிய இனத்தின் நலன்களையோ அல்லது அதன் மொழியையோ விட்டுக்கொடுக்கமாட்டார்.

புதன், 9 ஆகஸ்ட், 2023

''மூல மொழியும் மூல இனமும்'' - ஒரு விளக்கம்!

 ''மூல மொழியும் மூல இனமும்'' - ஒரு விளக்கம்!

----------------------------------------------------------------------
தோழர் செழியன்
--------------------------------------------------------------------------
மொழிக்குடும்பம் என்ற கோட்பாடு - மூல மொழிக்கொள்கையை வலியுறுத்துகிறது.
அத்தகைய மூலமொழிக் கொள்கையை மார்க்சியம் மறுக்கிறதே தோழர்!
ந. தெய்வ சுந்தரம்
--------------------------------------------------------------------------
மொழிக் குடும்ப ஆய்வில் ( Language Family Research - Comparative Linguistics) நாம் எடுத்துக்கொள்ளவேண்டியது . . . மொழிகளுக்கு இடையேயுள்ள ஒற்றுமைப் பண்புகளைப்பற்றியது (similarities) மட்டுமேயாகும். அந்த ஆய்வில் குறிப்பிட்ட மொழிகளுக்கு இடையுள்ள நிலவும் வேறுபாடுகள் (differences) ஒரு குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டுத்தான் அமைகின்றன என்பதை விளக்கவே 'மூலச் சொல் மீட்டுருவாக்கம் (Proto-form Reconstruction) ' போன்ற ஆய்வுமுறைகள் என்று நாம் கொள்ளவேண்டும்.
இந்த ஆய்வுக்காக விதிகளின் அடிப்படையில் உருவாக்கப்படும் 'மூலச் சொல்' என்பது (Reconstructed Proto-forms or language) ) வரலாற்றில் நிலவியிருக்குமா என்பது ஐயமே. ஆனால் அதை உண்மை என்று ஏற்றுக்கொண்டு, அதனடிப்படையில் அந்த 'மூலச் சொற்களை ''- 'மூலமொழி' என்று கொண்டு, அந்த 'மூலமொழி' பேசியவர்கள் ''மூல இனத்தினர்'' ( இங்குத் திராவிடர் என்று அழைக்கப்படுவதுபோல) என்று கொள்வதை ஏற்றுக்கொள்ளவேண்டிய தேவை இல்லை! இங்கு ''அரசியல்'' உள்ளது! ''மூலச் சொல் மீட்டுருவாக்கம்'' என்ற ஆய்வுமுறை ''மூல மொழி மீட்டுருவாக்கம்'' என்று தவறாகக் கொள்ளப்பட்டுள்ளது.
இன்னும் சொல்லப்போனால், தற்போது மொழியியல் ஆய்வில் இந்த 'ஒப்பீட்டு இலக்கணமுறை'' தாண்டி, 'உலகப் பொதுமை இலக்கணம் (Universal Grammar) ' 'மொழி வகைபாட்டியியல் (Language Typology) ' என்ற ஆய்வுப்பிரிவுகள் , கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் நோக்கமெல்லாம், மனிதர்களின் இயற்கைமொழிகளுக்கிடையே (Natural languages) குறிப்பிட்ட வகையான ஒற்றுமை , வேற்றுமைகள் நிலவுகின்றன என்பதை விளக்குவதே ஆகும். இந்த ஒற்றுமை, வேற்றுமைகளுக்குக் காரணம், மனித மூளையின் பொது மொழித்திறனும் (genetically given - biologically determined language domain) சமுதாயங்களின் வளர்ச்சி அல்லது தேவைகளின் பொது விதிகளுமே ஆகும்.
ஆகவே, மொழியியல் ஆய்விலும் ''வர்க்க நலன்கள்'' பிரதிபலிக்கும்! ஆனால் மொழிகளின் அமைப்பில் 'வர்க்க நலன்கள்' கிடையாது! ஒரு குறிப்பிட்ட மொழி இந்த வர்க்கத்திற்கானது, மற்றொரு மொழி அந்த வர்க்கத்திற்கான மொழி என்று கூறுவதற்கு இடம் இல்லை!
எனவே மொழியியலிலும் 'மூலமொழி' பற்றிய ஒரு சில ''கருத்துக்களை'' ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது கிடையாது! அறிவியலுக்கு உட்பட்ட . . . அறிவியல் வளர்ச்சிக்குப் பயன்படுகிற . . . சமுதாய வளர்ச்சிக்குப் பயன்படுகிற கருத்துக்களைமட்டுமே நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்!

தமிழ்த் தேசிய இனம் . . .

 தமிழ்த் தேசிய இனம் . . .

--------------------------------------------------------------------
முகநூலில் மற்றொரு கருத்தாடல் இழையில் நான் முன்வைத்த கருத்துக்களை இங்கு இணைக்கிறேன்.
1) தமிழர் என்பது ஒரு இனம் … தேசிய இனம். ஆனால் திராவிடம் என்பது ஒரு மொழிக்குடும்பத்தின் பெயர். இரண்டையும் ஒன்றாக வைத்துக் குழப்பிக் கொள்ளக்கூடாது.
2) தேசிய இனம் …. Nationality ; ஒரு தேசிய இனத்தின் நாடு அல்லது தேசம் . . . Nation . பல தேசிய இனங்களின் நாடுகள் ஒன்றிணைக்கப்பட்டது ஒன்றியம் . . . Union of Nations
3) மொழிக்குடும்பம் என்பது மொழியியல் சார்ந்த ஒரு கோட்பாடு. உறுதியாகத் திராவிட மொழிக் குடும்ப மொழிகளுக்கு இடையில் நெருங்கிய தொடர்பு உண்டு.
4) தமிழ்த் தேசிய இனத்தின் மொழி தமிழ்
5) தேசிய இனங்கள் இங்குத் தேசிய தன்னுரிமைப் போராட்டங்களைத் தொடங்கக் கூடாது என்பதற்காக ஆங்கிலேய ஏகாதிபத்தியம் திட்டமிட்டுத் தமிழ்த் தேசிய இனம் என்ற கருத்தைப் பின்தள்ளியது.
6) தமிழ்த் தேசிய இனம், தெலுங்குத் தேசிய இனம், கன்னடத் தேசிய இனம், மலையாளத் தேசிய இனம், இந்திய ஒன்றியத்தில் உள்ள பிற தேசிய இனங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு . . . தேசிய இனங்களின் தன்னுரிமைக்கான - மொழி, பண்பாடு, பொருளாதார ஒடுக்குமுறை, அரசியல் ஒடுக்குமுறை போன்ற உரிமைகளுக்கான - போராட்டங்களில் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்.
அதற்குக் காரணம் . . . இந்த அனைத்துத் தேசிய இனங்களின் பிரச்சனைகளுக்கும் காரணமானவர்கள் இந்திய ஆளும் வர்க்கத்தினரே. அதாவது பொது எதிரியே. எனவே இவை அனைத்தும் ஒன்றுபட்டுப் போராடும்போதுதான் வெற்றி பெறமுடியும். இதில் எந்தவித மாற்றுக்கருத்தும் எனக்கு இல்லை.
அதேவேளையில் தமிழ்த் தேசிய இனம் உட்பட அனைத்துத் தேசிய இனங்களும் தங்கள் தங்கள் தேசிய இனத்தின் தனித்தன்மையைத் தக்கவைக்கவும் போராடவும் செய்யவேண்டும்.
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தத் தேசிய இனங்களிடையே சில சில முரண்பாடுகளும் மோதலும் நீடிக்கத்தான் செய்யும். குறிப்பாக, நதிநீர்ப் பங்கீடு , மேகதாது அணைக்கட்டு கட்டுவது போன்று பல சிக்கல்களும் நீடிக்கின்றன. இதை முன்னிலைப்படுத்தி, தேசிய இனங்களுக்கிடையே முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தி, அவற்றிற்கிடையே ஒற்றுமையைச் சீர்குலைக்க ஆளும் வர்க்கங்கள் முயலும், முயன்றுகொண்டிருக்கிறது என்பதில் ஐயம் இல்லை.
தேசிய இனங்களுக்கிடையேயான முரண்பாடு ஒரு பகைமையற்ற முரண்பாடாக இருக்கவேண்டும். எனவே பகைமையற்ற வழிமுறைகளே மேற்கொள்ளப்பட
வேண்டும். ஆனால் இவை அனைத்துக்கும் ஆளும் வர்க்கங்களுக்கும் இடையிலான முரண்பாடு ஒரு பகைமை முரண்பாடே ஆகும்.

வியாழன், 3 ஆகஸ்ட், 2023

சாதி பற்றிய எனது கருத்துக்கள் சில

சாதி பற்றிய எனது கருத்துக்கள் சில

------------------------------------------------------------

 நண்பர் மணி மணிவண்ணன்:

----------------------------------------------------------------

//பெரியார் மண்ணில் கூடச் சாதிவெறி தலைவிரித்தாடுகிறதல்லவா?//

ந. தெய்வ சுந்தரம்

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழ்நாட்டில் பல ஆண்டுகளுக்குமுன்பு நடைபெற்றதாகக் கூறப்படும் ''பகுத்தறிவுப் புரட்சி'' என்பது பிராமண சாதிக்கு எதிரான பிற மேல்தட்டுச் சாதிகள், இடைத்தட்டுச் சாதிகளில் உள்ள மேல்வர்க்கத்தினரின் ''பண்பாட்டு உரிமைகளுக்கான'' போராட்டங்களே ஆகும்.

இந்தப் பிராமணர் அல்லாத மேல்தட்டுச் சாதியினரும் இடைத்தட்டுச் சாதியினரும் தங்கள் ''சாதியத்தை'' விட்டுக்கொடுக்கவில்லை அல்லது கைவிட்டு விடவில்லை. பிராமண மேல்தட்டினருக்கு உள்ள அத்தனை 'பண்பாட்டு உரிமைகளும்' தங்களுக்கும் வேண்டும்; தங்கள்மீது பிராமண சாதியினரின் 'பண்பாட்டு ஆதிக்கம்' இருக்கக்கூடாது என்பதுதான் இவற்றின் 'கோரிக்கைகள்'!

மேலும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட , 'தீண்டத்தகாத' சாதிகள் என்ற அழைக்கப்படும் மக்களின்மீதான அச்சாதிகளின் சாதிய ஒடுக்குமுறை எள்ளவும் குறையவில்லை - இன்றளவும்! குறையாதது மட்டுமல்ல . . . மேலும் மேலும் கூர்மையடைந்துகொண்டுதான் இருக்கிறது.

'ஆணவக் கொலைகள்' எல்லாம் பிராமணச் சாதியினருக்கும் பிற சாதியினருக்கும் இடையில் இல்லை! பிராமணர் அல்லாத மேல்தட்டு, இடைத்தட்டு சாதியினருக்கும் ''தாழ்த்தப்பட்ட'' சாதியினருக்கும் இடையிலான 'கொலைகளாகவே' நீடிக்கின்றன. ஒரு பிரமாணர் குடும்பத்திற்கும் 'தாழ்த்தப்பட்ட சாதிக் குடும்பத்திற்கும்' இடையிலான 'கொலைகளாக' அவை இல்லை!

அப்படியென்றால் . . . இன்று 'சாதியத்தைத்' தக்கவைத்துக்கொண்டிருப்பவர்கள் யார்? ஏன் அவர்கள் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள்? எனவே, மேற்குறிப்பிட்ட 'பிராமணர் - பிற மேல்சாதி, இடைத்தட்டு சாதியினரின்'' போராட்டங்கள் எப்படி தமிழகத்தில் சாதியத்தை ஒழித்திருக்கமுடியும் என்று எதிர்பார்க்கமுடியும்?

மேலும் 'சாதியத்திற்கு' எதிராக என்னதான் மேல்தளத்தில் போராடினாலும் . . . ஒரு முழுமையான அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியும் அதற்கான சமுதாய அமைப்பும் தோன்றி வளராமல் 'சாதியம்' ஒழிக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்ப்பது சரி இல்லை! கிராமப்புறங்களில் நீடிக்கிற அரை நிலவுடைமை உற்பத்தி உறவுகள் - பொருளாதார உறவுகள் - முழுமையாகத் தகர்க்கப்படாமல், இந்த 'சாதியம்' ஒழியாது!

 

எனக்கு இரண்டு புள்ளி விவரங்கள் தேவைப்படுகின்றன. ஒன்று, கிராமப் புற விவசாய நில்ஙகள், தோப்புகள் ஆகியவற்றின் உடைமையாளர்களில் “தாழ்த்தப்பட்ட சாதியினர் “ விகிதம் , பிற மேல்தட்டு, இடைத்தட்டு சாதியினர் விகிதம் எவ்வளவு? விவசாயத் தொழிலாளிகளில் இது போன்ற விகிதம் தேவை. நகர்ப்புறத் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள், தொழிலாளிகள் என்பதிலும் இந்த விகிதக் கணக்கு கிடைத்தால் நல்லது.

அதுபோல, தற்போது தமிழகத்தில் தலைதூக்கி நிற்கிற . . . பாராளுமன்றத் திறப்புவிழாவிலே மிகவும் 'கௌரவிக்கப்பட்ட' . . . ஆதினங்களில் 'பார்ப்பனர்' கிடையாது என நினைக்கிறேன். அனைவரும் பார்ப்பனர் அல்லாத 'உயர்' 'இடைமட்ட' சாதிகளைச் சேர்ந்தவர்கள்தான்! இவர்களே இன்று கிராமப்புறங்களில் தனிப்பெரும் 'நிலவுடைமையாளர்களாக' 'கோடிஸ்வரர்களாக' நீடிக்கின்றனர். இவர்களைப்போன்ற மடாதிபதிகள் 'தாழ்த்தப்பட்ட சாதிகளில்' நீடிக்கிறார்களா? விவரம் தெரியவில்லை. தெரிந்தால் கூறுங்கள்!

தமிழகத்தின் 'வாக்கு வங்கி' அரசியல் கட்சிகளிலும் மேல் தட்டுகளில் நீடிக்கிற 'தலைவர்கள்' எந்தச் சாதியினர் என்றும் ஆராயவேண்டும்!

பொதுவாக ஒன்று கூறமுடியுமா என்று சிந்தித்துப்பார்க்கலாம். 70-களுக்குமுன்னால் கிராமப்புறங்களில் பெரும் நிலவுடைமையாளர்களாக நீடித்த பிராமண சாதியின் பெரும்பணக்காரர்கள் . . . தங்கள் சொத்துக்களை நகர்ப்புறத் தொழிற்சாலைகளுக்கு மாற்றிவிட்டிருப்பார்கள்போல் தெரிகிறது. அவர்களில் இடைத்தட்டுப் பிரிவினர் கல்வித்துறையில் தங்களைத் தக்கவைத்துக்கொண்டு, மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர்கள், ஐ ஏ எஸ் அதிகாரிகளாக மாறுவதில் ஆர்வம் செலுத்துகிறார்கள். ஏராளமானோர் அயல்நாடுகளிலும் குடியேறிவிட்டார்கள்! ஒரு 'அமைதியான' 'திரைமறைவில்' நடைபெற்ற மாற்றங்களாக இவற்றைப் பார்க்கலாம். ''காலத்திற்கேற்றாப்போலத்'' தங்களை மாற்றிக்கொண்டார்கள்! இதனால் பொருளாதார இழப்பு, பாதிப்பு அவர்களுக்கு இல்லை!

மொத்தத்தில் கிராமப்புறங்களில் பிரமாணர் அல்லாத மேல்சாதியினர், இடைத்தட்டுச் சாதியினர் பொருளாதார ஆதிக்கம்தான் இன்று மேலோங்கி இருக்கலாம். ஆனால் இதுபற்றிய தெளிவான ஆய்வுகள் இல்லாமல், பொத்தம்பொதுவாகக் கூறமுடியாது. இது ஒரு அநுமானம்தான்! இந்த அநுமானம் சரியாக இருந்தால், இன்று கிராமப்புறங்களில் சாதிய ஒடுக்குமுறை நீடிப்பதற்குப் பிராமணர் அல்லாத மேல்சாதியினரும் இடைத்தட்டுச் சாதியினரும்தான் அடிப்படை என்று கருதலாம். இதன் ஒரு வெளிப்பாடே 'ஆணவக்கொலை'! 'கோயில் நுழைவு - திருவிழா ' கலவரங்கள் போன்றவை!

மற்றொரு செய்தி. பார்ப்பனர் அல்லாத மேல்தட்டு 'உயர் சாதியினர்' பார்ப்பனியத்தை எதிர்ப்பதைவிட, தங்களைப் 'பார்ப்பனியர்களாக' மாற்றிக்கொள்வதில்தான் 'ஆர்வமாக' உள்ளார்கள். இங்கு நாம் 'பார்ப்பனியம்' என்றால் என்ன? அது எவ்வாறு பொருளாதாரத் தளம், அரசியல் தளம், பண்பாட்டுத்தளம் ஆகியவற்றில் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது? என்பதை சற்று ஆராயவேண்டும்.

நான் தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புவது ... பார்ப்பனியத்தின் பொருளாதார அடிப்படை, அரசியல் அடிப்படை, பண்பாட்டு அடிப்படை ஆகியவையாகும். பார்ப்பனியம் என்பது வெறும் ' 'வேதங்கள், புராணங்கள், சடங்குகள், இறைவழிபாட்டில் ஆதிக்கம், தீண்டாமைக்கொள்கை,'' ஆகியவற்றோடுமட்டும் தொடர்பு உடையதா? அப்படியென்றால் அது சமுதாய அமைப்பின் மேல் கட்டமைப்புப் பிரச்சனைதான்! நான் அப்படிப் பார்க்கவில்லை ! பார்ப்பனியத்தின் 'பொருளாதாரக் கொள்கை' என்ன? 'அரசியல் கொள்கை ' என்ன? ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்துவருகிற பார்ப்பனியமானது, சமுதாய மாற்றத்தில் தனது பொருளாதாரக்கொள்கை, அரசியல் கொள்கை, பண்பாட்டுக் கொள்கையில் மேற்கொண்டுள்ள மாற்றங்கள் என்ன? இதுபோன்ற வினாக்களுக்கு நாம் தெளிவான விடைகளைக் காணவேண்டும்! அப்போதுதான் ஆர் எஸ் எஸ் - இயக்கத்தின் அரசியல் பொருளாதாரத்தைப் புரிந்துகொள்ளமுடியும்.

 

இன ஒடுக்குமுறை, மத ஒடுக்குமுறை, சாதி ஒடுக்குமுறை - இவையெல்லாமுமே உடைமைவர்க்கங்களின் வேறுபட்ட பாசிச ஒடுக்குமுறைகள்தான்! ஒடுக்குமுறை என்று சொல்லும்போதே . . . . ஒடுக்குவதற்கான தேவை, கருவி, வலிமை யாருக்கு இருக்கிறதோ . . . அந்த சக்திகள்தான் அவற்றைப் பயன்படுத்தும்! பயன்படுத்தமுடியும்! என்பது தெளிவாகிறது! இவை அனைத்துக்கும் பின்னணி . . . பொருளாதார ஆதிக்கத்தையும் அரசியல் ஆதிக்கத்தையும் தக்க வைத்துக்கொள்ளப் போராடும் ஆளும் வர்க்கங்களின் பாசிச அடக்குமுறை வழிமுறைகளே ஆகும். வெவ்வேறு காலக்கட்டங்களில் தேவைக்கேற்ப . . . நெருக்கடிக்கேற்ப . . . வெவ்வேறு வழிமுறைகளை அவை செயல்படுத்தும்! இனத்தின் அடிப்படையில் மக்கள் இணைந்தால் அப்போது மத அடிப்படையும் சாதி அடிப்படையும் மக்களைப் பிரித்தாளப் பயன்படுத்தப்படும்! மத அடிப்படையில் மக்கள் இருந்தால், சாதி அடிப்படையானது மக்களைப் பிரித்தாளப் பயன்படுத்தப்படும்!

தமிழக வரலாறுபற்றிப் போதிய அறிவும் தெளிவும் எனக்குக் கிடையாது என்று தெரிவித்துக்கொள்கிறேன். அதுமட்டுமல்ல . . . சில முடிவுகளுக்கு வருமுன்னர், மிக ஆழமான ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும் என்பது எனது கருத்து. ஆனாலும் ... சில ஊகங்கள் !

கிபி 5,6 ஆம் நூற்றாண்டுகளுக்குப்பின்னர்தான் தமிழகத்தில் நிலவுடமைச் சமுதாயம் தோன்றி வலுவடைந்திருக்குமெனக் கருதுகிறேன். அதையொட்டிய பல்லவர் ஆட்சி இறுதி, சோழர் ஆட்சியின் தொடக்கத்தில்தான் விவசாய வளர்ச்சிக்குத் தேவையான பாசனவசதி வளர்ச்சியடைந்ததாகத் தெரிகிறது. அப்போது ஊர்களில் பிற தொழில்கள் - குறிப்பாக வணிகம் - மூலமாக வசதிபெற்றவர்கள் (உயர்சாதியினர்) தங்கள் தங்கள் பகுதிகளில் வசதியற்றவர்களைக்கொண்டு . . . தங்கள் ஊர் மண்ணை விவசாயத்திற்கு ஏற்ற நிலங்களாக மாற்றியிருக்கவேண்டும். அதன்மூலமாக அவர்கள் அந்த நிலங்களின் சொந்தக்காரர்களாக ஆகியிருக்கவேண்டும். ஆனால் அதேவேளையில் ஆட்சியதிகாரத்தில் இருந்த மன்னர்களுக்குத் தேவையான ''செல்வத்தை'' அரசுக்கான தங்கள் பங்காக அளித்து, தங்களது உடைமைகளையும் உரிமைகளையும் தக்கவைத்திருக்கவேண்டும். அவர்கள்தான் அரசுக்குப் படைக்குத் தேவையான 'ஆள் சக்தியையும்' அளித்திருக்கவேண்டும்.

அதேவேளையில் அரசர்களும் தங்களது 'இறை பக்தியை' வெளிப்படுத்தும்வகையில் பிரமதேயம்போன்ற நிலங்களை பிராமணர்களுக்கு அளித்திருக்கவேண்டும். அரசர்கள் மேலும் தங்களுக்குப் 'பலவகையில் உதவுபவர்களுக்கு - படைத்தளபதிகள், அமைச்சர்கள் ' போன்றவர்களுக்கு நிலங்களை அளித்திருக்கவேண்டும். இவ்வாறு பிற உயர்சாதியினருடன் பிராமணர்களும் 'நிலப்பிரபுக்களாக'' நீடித்திருக்கவேண்டும். மேலும் அரசர்கள் ஆதரவு, 'கடவுளுக்கும் மக்களுக்கும் இடைப்பட்ட தூதுவர்களாக, பூசாரிகளாக' இருப்பதற்கான அங்கீகாரம் போன்றவை இவர்களுக்கு ஊர்களில் 'பண்பாட்டு ஆதிக்கத்தை' அளித்திருக்கவேண்டும். மேலும் அரசர்கள் கோயில்களுக்கும் மடங்களுக்கும் ஏராளமான நிலங்களை அளித்து, அவற்றைப் 'பராமரிக்கும் உரிமையையும்' பிராமணர் அல்லாத பிற உயர்சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் அளித்திருக்கவேண்டும். இவ்வாறு பலவகைகளில் பிராமணர்களும் பிற உயர்சாதியினரும் சமூகத்தில் 'ஆளும் வர்க்கங்களாக ' நீடித்திருக்கின்றனர். இந்த நிலங்களில் உடலுழைப்பை அளித்தவர்கள் 'தாழ்த்தப்பட்ட சாதியினர்களாக' ஆக்கப்பட்டிருக்கவேண்டும். எனவே, ஊர்களில் பிராமணர்கள் மட்டுமல்ல, பிற உயர்சாதியினர்களும் நிலவுடைமையாளர்களாக இருந்தனர் என்பதே உண்மை! எனினும் தங்களுடைய 'பண்பாட்டு ஆதிக்கத்தால்' பிராமண நிலப்பிரபுக்கள் , பிற உயர்சாதிகளைச் சேர்ந்த நிலப்பிரபுக்களுக்கும் இடையில் மோதல்கள் நிலவியிருக்கவேண்டும். அதேவேளையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் 'ஒன்றுபட்டு 'நின்றிருக்கவேண்டும். 'ஒற்றுமையும் போராட்டமும் ' என்ற செயல்பாடுகளுக்கு இடையேதான் பிராமண நிலப்பிரபுக்கள் - பிற உயர்சாதியின நிலப்பிரபுக்கள் நீடித்திருக்கவேண்டும். காலனியாதிக்க முதலாளித்துவம் இங்குக் காலூன்றியபிறகு, அதனுடன் முதலில் சமரசம் செய்துகொண்டு, தங்கள் வாழ்நிலையை வேறு திசையில் செலுத்த முனைந்தனர்.

ஆனால் 'சாதிப் பிரிவினை' எப்போது, எப்படி தோன்றியது? உயர், இடை, கீழ் சாதியினர்கள் என்ற வேறுபாடு எப்படி , எப்போது தோன்றி நிலவத் தொடங்கியது? இது ஒரு மிகப்பெரும் ஆய்வு!

இவையெல்லாம் இப்போது எனது ஊகமே. தயவுசெய்து 'கதை' எழுதத் தொடங்கிவிட்டேன் என்று நினைக்கவேண்டும். சில ஊகங்களே ஆராய்ச்சிக்கு அடிப்படையாக அமையும். அப்படி எடுத்துக்கொள்ளுங்கள்!

-----------------------------------------------------------------------------------------------------

திருமணமும் குடும்ப உறவுகளுமே இன்று சாதிப் பிரிவினையின் ஆணிவேர்களாக இருக்கின்றன. இந்த ஆணிவேர்கள் அகற்றப்படாமல் சாதிகள் ஒழியாது! ஒரு சாதிக்குள் வர்க்க வேறுபாடுகள் உண்டு. அதுவும் திருமணங்களில் முக்கியப் பங்கு வகிக்கின்றன! திருமணத்தில் மதங்கள்கூட வேறுபட்டிருக்கலாம். ஆனால் சாதி வேறுபட்டு இருக்கக்கூடாது. திருநெல்வேலி மாவட்டத்தில் இதை அதிகமாகவே நான் பார்த்திருக்கிறேன். மாப்பிள்ளை இந்துவாக இருப்பார்; பெண் கிறித்தவராக இருப்பார். ஆனால் இருவரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். எனவே சாதியும் வர்க்கமுமே இன்றைய திருமணங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனால் மிகப் பெரிய முதலாளித்துவக் குடும்பங்களில் வர்க்கம் மட்டுமே முதன்மை! மதமும் சாதியும் அதற்கு அடுத்ததுதான்! சாதி . . . மதம் . . . வர்க்கம் - மூன்றுக்குமிடையே உள்ள உறவுகளைத் தீர்மானிப்பது அடிப்படையில் பொருளாதார உறவுகளே! 'திணிக்கப்பட்ட' கருத்தியலுக்கும் இதில் பங்கு உண்டு என்பதை நான் மறுக்கவில்லை!

சாதிகள் ஒழிந்துதான் ஆகவேண்டும். சாதிப்பிரிவினைகள் ஒரு வரலாற்றுப் பொருளே. குறிப்பிட்ட சமுதாயச் சூழலில் தோன்றிய சாதியம், இன்னொரு வரலாற்றுச் சூழலில் மறைந்துதான் தீரும். இது நமது விருப்பு வெறுப்புக்கு உட்பட்டது இல்லை. சமுதாயத்தின் இயங்கியல் இது. சாதியம் மனிதத்திற்கு எதிரானது. இதில் ஐயமே கிடையாது. எந்த ஒரு வகையிலும் சாதியத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது.

மதம், சாதி, வர்க்கம் - இவை அனைத்துமே வரலாற்று விளைபொருள்கள்தான். மனிதச் சமுதாய வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் தோன்றியவைதான் இவை. எனவே சமுதாயத்தின் வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இவை மூன்றுமே மறைந்துவிடும். இதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை!

 

மனித குல வளர்ச்சி முன்னேதான் செல்லும். மேலும் அது சுருள்வில்லாகத்தான் (spring) இருக்கும். அதாவது மீண்டும் மீண்டும் வட்டம் (circle) என்பதுபோலத் தோன்றினாலும் அது உயர்மட்டத்திலான வட்டமாக- சுருள்வில்லாகத்தான் அமையும். எனவே மனிதகுலம் தனது வளர்ச்சியில் பல நிலைகள் தோன்றலாம். ஆனால் ஒன்றுக்கு அடுத்தது அதைவிட உயர்ந்த ஒன்றாக அல்லது வளர்ந்த ஒன்றாகத்தான் இருக்கும். இன்று நம் முன் இருக்கிற 'சாதி' போன்ற சமுதாயத்தைப் பிளவுபடுத்தி ஒடுக்கும் ஒரு பிரிவாக இருக்காது. கம்யூன் (commune) போன்று அமையலாம்.

 

 


 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India