எதிர்காலத்தில் மொழிபெயர்ப்புப் பணியில் மனித உழைப்பு தேவைப்படாதா? செய்யறிவுத் திறன் (AI) மென்பொருளே போதுமா?
---------------------------------------------------------------------------------------------------------------------------
செய்யறிவுத்திறன் மென்பொருள்களின் வளர்ச்சி . . . எதிர்காலத்தில் மனித மொழிபெயர்ப்புக்குத் தேவை இல்லாமல் ஆக்கிவிடும் என்ற ஒரு கருத்து சிலரிடம் நிலவுகிறது. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை.
மனிதர்களுக்குப் மொழிபெயர்ப்புப்பணியில் பல உதவிகளைச் செய்யறிவுத் திறன் மென்பொருள் உதவி செய்யலாம். பிற உற்பத்தித் துறைகள்போன்று . . . மனிதர்களும் கணினியும் இணைந்து மொழிபெயர்ப்புப் பணியை மிக வேகமாகவும் தரமாகவும் செய்யலாம்.
ஆனால் உறுதியாக மனிதர்களின் பணியே மொழிபெயர்ப்பின் இறுதி முழுமைக்கு அடிப்படையாக அமையும்.
இதை நான் கூறவில்லை; ChatGPT கூறுகிறது.
''While AI language models can assist and enhance translation workflows, it is unlikely that they will completely replace human translators in the foreseeable future. Human translators bring a range of skills, including linguistic expertise, cultural understanding, and critical thinking, which play a crucial role in producing high-quality translations. The collaboration between humans and AI technology is often seen as a more practical and effective approach, combining the strengths of both for optimal results.''
மேலும் இயற்கைமொழிகளும் மனிதத் திறமையும்பற்றிப் பல ஐயங்களை ChatGPT -இடமே கேட்டேன். அது தனது திறமையும் அதேநேரத்தில் மனிதர்களின் உயர்ந்த மொழித்திறன்பற்றியும் தெளிவான பதில்களை அளித்தது.
இதையெல்லாம் நான் கூறுவதற்குக் காரணம் . . . செய்யறிவுத்திறன் வளர்ச்சியினால் இனி இலக்கணம், மொழியியல், கணினிமொழியியல் ஆய்வுகளுக்குத் தேவைகள் இருக்காது எனச் சிலர் கருதுகிறார்கள்.
என் நண்பர் ஒருவர் இன்று தனது முகநூல் பதிவு ஒன்றில் . . . தான் பணிசெய்துகொண்டிருந்த ஒரு கல்வி நிறுவனத்தில் . . . கணினிமொழியியல் துறையில் . . . தற்போது செய்யறிவுத்திறன் தொடர்பான ஆய்வு, வளர்ச்சிகளின் காரணமாக . . . மொழியியல் வல்லுநர்களின் பணிகள் தேவை இல்லாமல் ஆகியுள்ளது என்று கூறியிருந்தார். அது ஒரு தவறான கருத்து என்பதைத் தெளிவுபடுத்தவே பல ஐயங்களை நான் ChatGPT - இடமே கேட்டு, அதனுடைய பதில்களையெல்லாம் தொகுத்துவைத்துள்ளேன். தேவைப்படும்போது அவ்வப்போது அதுபற்றிப் பதிவிடுவேன்.
நண்பர்களும் அதனிடம் தங்கள் ஐயங்களை எழுப்பி, பதில்களைப் பெறலாம்.
செய்யறிவுத்திறன் வளர்ச்சியை நான் மனித மூளைக்குப் போட்டியான ஒன்று என்று பார்க்கவில்லை. எப்படி நமக்குப் பல பணிகளில் - அப்பணிகளை விரைவாகவும் நன்றாகவும் நமது பளுவைக் குறைக்கவும் - பலவகைப்பட்ட கருவிகளை உருவாக்கியிருக்கிறோமோ, அதுபோல்தான் கணினியின் இன்றைய வளர்ச்சி. மனிதனின் படைப்புத்தான் அது.
லாப நோக்கத்தைமட்டுமே நோக்கமாகக் கொள்கிற முதலாளித்துவ சக்திகள்தான் கணினியின் இந்த வளர்ச்சியை உழைப்பாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்த முயல்வார்கள். அது வெற்றி பெறாது என்பது வேறு.
எனவே கணினியின் - கணினி அறிவியலின் இந்த செய்யறிவுத் திறனின் - வளர்ச்சியை மனிதகுல வளர்ச்சிக்கு எவ்வாறெல்லாம் நல்லமுறையில் பயன்படுத்தலாம் என்றுதான் நாம் சிந்திக்கவேண்டும்.
அதற்கு ஒரு இயலாமை இருந்தால் அது நமது அறிவியலின் ஒரு பிரச்சினை என்றுதான் பார்க்கவேண்டும். கணினி அறிவியலின் தோல்வியாக, பின்னடைவாகப் பார்க்கக்கூடாது. அதுபோல, மனிதனைக் கணினியின் சில திறமைகளோடு ஒப்பிட்டுப் பார்த்து, மனிதன் தோல்வியடைகிறான் என்றும் பார்க்கக்கூடாது. குழந்தையானது தாய்க்கு எதிரி இல்லை. அதுபோல மனிதனின் படைப்புத்தான் கணினி அறிவியல் . எனவே அது மனிதனுக்கு எதிரி இல்லை!
எனவே, மனிதனையும் அவனுடைய கணினித்துறை அறிவியல் வளர்ச்சியையும் எதிர் எதிராக நிறுத்திப் பார்ப்பது தவறே!