சனி, 22 ஏப்ரல், 2023

 தமிழ்ச்சொல்லாக்கத்தில் கணித அடிப்படை விதிகள்( தமிழ்மொழி ஆய்வாளர்களின் கவனத்திற்கு - நேரம் கிடைக்கும்போது படித்துக் கருத்து கூறவும்)

-------------------------------------------------------------------------
ஒரு பொருள் அல்லது இயக்கத்தை அறிவியல் அடிப்படையில் ஆராயும்போது . . . அறிவியலாளர்கள் அவற்றின் உள்ளார்ந்த விதிகளைப் புறவயமாகக் கண்டறிகிறார்கள். விதிகள் புறவயமான விதிகளாக இருந்தால்தான் - அதாவது தனிநபர் விருப்பு வெறுப்பை அடிப்படையாகக்கொள்ளாமல் இருந்தால்தான் - அந்த விதிகள் அறிவியல் விதிகளாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அதாவது கணித அடிப்படையில் அவை இருத்தல்வேண்டும்.
இங்குக் குறிப்பாக நினைவில் கொள்ளவேண்டியது . . . விதிகள் உருவாக்கப்படுவதில்லை; மாறாக, கண்டறியப்படுகின்றன.
மொழியியல் ஆய்விலும் முன்வைக்கப்படுகிற விதிகள் ('இலக்கண விதிகள்') புறவயமான விதிகளாக இருத்தல்வேண்டும். அவை 'உருவாக்கப்படுவதில்லை''; மாறாக, புறவயமாக நிலவுகின்றன. அப்போதுதான் அவற்றை ''விதிகள்'' என்று அழைப்பது சரியானதாக இருக்கும்.
தமிழ்மொழி அமைப்பானது இதுபோன்ற புறவயமான விதிகளைக் கொண்டுள்ளன. குறிப்பாக, வினைச்சொற்களிலிருந்து பெயர்ச்சொற்கள் உருவாகும்போது . . . தெளிவான விதிகள் செயல்படுகின்றன. கணினித்தமிழ் ஆய்வில் எனது நண்பரும் மென்பொருள் பொறியியலாளருமான திரு. சு. சரவணன் அவர்களுடன் இணைந்து ஈடுபடும்போது, அவர் மிகத் தெளிவாகச் சில விதிகளை முன்வைத்தார். அவற்றை நண்பர்கள்முன் வைப்பதில் மகிழ்வடைகிறேன்.
(1) தமிழ் வினைச்சொற்களை அவற்றின் கால இடைநிலைகளின் அடிப்படையில் 12 வகைகளாகத் (வினைத்திரிபுகள் - Tense Conjugation ) தமிழ் லெக்சிகன் பட்டியல் இட்டுள்ளது. இந்த அடிப்படையில் தமிழ் வினைச்சொற்கள் பெயர்ச்சொற்களாக மாறியமைவதைப்பற்றி ஆராயும்போது தெளிவான விதிகள் தமிழில் அமைந்துள்ளன என்பதைக் காணமுடிகிறது.
(2) தமிழ் வினைச்சொற்கள் தொழிற்பெயர்களாக மாறும்போது, -தல், -த்தல் என்ற தொழிற்பெயர் விகுதிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. 1-ஆவது வினைத்திரிபிலிருந்து 8-ஆவது வினைத்திரிபுவரை உள்ள வினைச்சொற்கள் - தல் என்ற விகுதியைக் கொள்கின்றன. 9 -ஆவதிலிருந்து 12-ஆவதுவரை உள்ள வினைத்திரிபுகள் -த்தல் என்ற விகுதியைக் கொள்கின்றன. ( அட்டவணை-1ஐப் பார்க்கவும்). இதில் விதிவிலக்கே இல்லை என்பதுபோல் எங்களுக்குத் தென்படுகிறது. நண்பர்களுக்கு ஏதாவது விதிவிலக்குகள் தெரியவந்தால், தயவுசெய்து இங்கே பதிவிடவும்.
(3) தமிழ்வினைச்சொற்களிலிருந்து பெயர்ச்சொற்களைத் தருவிக்கும்போது, குறிப்பிட்ட வினைச்சொல்லின் வினைத்திரிபு வகைப்பாடே அடிப்படையாக அமைகிறது. (அட்டவணை 2)
2, 3,4 ஆகிய வினைத்திரிபு வகைகளில் அடங்குகிற வினைச்சொற்கள் -ச்சி விகுதியை எடுக்கின்றன.
4, 12 ஆகிய வினைத்திரிபுகள் - வு எடுக்கின்றன.
5 ஆவது வினைத்திரிபு -அம், -இ எடுக்கிறது.
9, 10, 11, 12 ஆகிய வினைத்திரிபுகள் - ப்பு என்பதை எடுக்கின்றன.
-ப்பு இணையும்போது
9,10, 12 ஆகிய வினைத்திரிபுகள் -வி என்பதை எடுக்கின்றன.
11, 12 ஆகிய வினைத்திரிபுகள் -ப்பி என்பதை எடுக்கின்றன.
3, 4 ஆகிய வினைத்திரிபுகள் -பு என்பதை எடுக்கின்றன. 2-க்கும் இது பொருந்தும்.
(4) 10 ஆவது வினைத்திரிபில் அடங்குகிற 'கல்' என்ற வினைச்சொல் 'கற்பு' என்று அமையும்போது, முதலில் கல் + ப்பு என்று அமைகிறது; பின்னர் 'ல்ப்' என்பது 'ற்' என்று திரிகிறது; இதற்கு அடிப்படை 'ல்ப்ப்' என்ற மூன்று மெய்களின் தொடர்ச்சியே ஆகும். இந்தத் தொடர்ச்சியில் 'ல்ப்' என்பது 'ற்' என்று திரிகிறது. இறுதியாக நமக்குக் 'கற்பு' என்ற பெயர்ச்சொல் கிடைக்கிறது.
(5) 3 ஆவது வினைத்திரிபில் அடங்குகிற 'இயல்' என்ற வினைச்சொல் 'இயல்பு' என்று அமையும்போது, 'பு' என்ற விகுதியைமட்டுமே எடுக்கிறது.அதாவது இங்கு மூன்று மெய்களின் தொடர்ச்சி இல்லை. எனவே இதிலுள்ள 'ல்ப்' ஆனது 'ற்' என்று திரியவில்லை. எனவே இறுதிச் சொல்லாக 'இயல்பு ' என்பது அமைகிறது; 'இயற்பு' என்று அமைவதில்லை. இதற்கு அடிப்படை இந்த வினைச்சொல்லின் வினைத்திரிபு வகையே அடிப்படை.
(6) 'ஆள்' 'ஆட்சி' என்று மாறுவதற்குக் காரணம் . . . 'ஆள் + ச்சி''; இங்கு 'ள்ச்ச்' என்ற மூன்று மெய்கள் தொடர்ச்சி வருகிறது. எனவே 'ள்ச்' என்பது 'ட்' என்று திரிகிறது.
''மகிழ்' என்ற வினைச்சொல் 'மகிழ்ச்சி' என்று அமையும்போது, மெய்த்திரிபு நடைபெறவில்லை. தமிழில் மூன்று மெய்கள் தொடர்ச்சியானது . . . முதல் மெய்யானது 'ய்' 'ர்' 'ழ்' என்று அமைந்தால், மாற்றம் இல்லாமல் வரலாம்.
(7) புணர்ச்சியில் மூன்று மெய்த்தொடர்ச்சியில் (சொல்லாக்கம், வினைத்திரிபு இரண்டிலும்) மேலும் சில மெய்த்திரிபுகள்:
ல்க்க் -> ற்க் (கற்கிறேன், கற்க )
ல்ச்ச் -> ற்ச் (முயற்சி)
ல்ப்ப் -> ற்ப் (கற்பேன்)
ல்த்த் -> ற்ற் ( கற்றேன்)
ல்ந்த் -> ன்ற் (முயன்றேன்)
ள்க்க் -> ட்க் (கேட்கிறேன், கேட்க)
ள்ச்ச் -> ட்ச் (ஆட்சி)
ள்ப்ப் -> ட்ப் (கேட்பேன்)
ள்த்த் -> ட்ட் (கேட்டேன்)
ள்ந்த் -> ண்ட் (ஆண்டேன்)



பேச்சுத்தமிழ் இலக்கணம் ஆராயப்படவேண்டாமா?

 பேச்சுத்தமிழின் இலக்கணம் ஆராயப்பட்டு, எழுதப்படத் தேவை இல்லையா?

------------------------------------------------------------------------------------------------------------
பேச்சுத்தமிழின் இயல்பை - இயங்கியலை - ஆராய்ந்து தெரிந்துகொள்வதில் என்ன தவறு? தாங்கள் (நண்பர் வேல்முருகன் சுப்பிரமணியன்) கூறுகிற ''அடிபிடி'' எப்போது நடக்கும்? ஒருவர் தன்னுடைய வட்டார வழக்கையே பொதுவான பேச்சுத்தமிழ் என்று கொள்ளும்போதுதான் இதுபோன்ற 'அடிபிடி' நடக்கும்.
எழுத்துத்தமிழில் இந்த அடிபிடி இல்லையா? 'வாழ்த்துக்கள் ' சரியா அல்லது 'வாழ்த்துகள்' சரியா என்பதுபோன்ற 'அடிபிடிகள்' இங்கு இல்லையா? 'ஆசிரியர் அவர்கள் வந்தார்' - சரியா அல்லது 'ஆசிரியர் அவர்கள் வந்தார்கள்' சரியா என்ற 'அடிபிடி' இல்லையா?
தமிழர்கள் எழுத்துத்தமிழைக் 'கற்றுக்கொள்வதால்' எழுத்துத்தமிழ் இலக்கணநூல்கள் தேவைப்படுகிறது! ஆனால் பேச்சுத்தமிழைக் குழந்தைகள் 'இயற்கையாகப் ' பெற்றுக்கொள்வதால், பேச்சுத்தமிழைக் கற்றுக்கொடுக்க வேண்டிய தேவை இல்லை! எனவே தமிழர்கள் 'பேச்சுத்தமிழைப்' பெற்றுக்கொள்ள , பேச்சுத்தமிழ் இலக்கண நூல்கள் தேவை இல்லை.
ஆனால் பேச்சுத்தமிழின் இயல்பைப் புரிந்து கொள்வதற்கும் அதற்கும் எழுத்துத்தமிழுக்கும் இடையில் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளைப் புரிந்துகொள்ளவும், பேச்சுத்தமிழ் இலக்கணத்தை ஆராய்ந்து எழுதவேண்டாமா?
மேலும் தமிழரல்லாதவர்கள் தங்களது தேவைகளுக்காகப் பேச்சுத்தமிழை 'முறைசார் கற்றல் அல்லது கற்பித்தல்' மூலமாகக் கற்றுக்கொள்வதற்குப் பேச்சுத்தமிழ் இலக்கணம் எடுத்து எழுதப்படவேண்டாமா? எனவேதான் பேச்சுத்தமிழின் அமைப்பை, இலக்கணத்தை, ஆராய்ந்து எழுதப்படவேண்டும்.
இலக்கணத்தை நாம் உருவாக்கவில்லை. கண்டுபிடிக்கப்படுகிறது. பேச்சுத்தமிழின் இலக்கணத்தை நாம் உருவாக்கவில்லை! இலக்கண நூல்களைத்தான் உருவாக்கிறோம்! அவ்வளவுதான்! இதில் 'அடிபிடி' சிக்கல்களுக்கு எங்கே இடம்?

வட்டார வழக்கும் பேச்சு வழக்கும்!

 (1) வட்டார வழக்குகளின் மறைவும் பொதுப்பேச்சுத்தமிழின் வளர்ச்சியும்

--------------------------------------------------------------------------------------------------------------------------
வட்டார வழக்குகளுக்கே உரிய சில கூறுகள், பேசுபவரின் வேகம். மன உணர்வு ஆகியவற்றைப்பொறுத்து ஒருவரின் பேச்சில் சில பேச்சொலிகள் மறையலாம். ஆனால் இதைப் பொதுமைப்படுத்தக்கூடாது.
என்னைப்பொறுத்தவரையில் இன்றைய தலைமுறையிலேயே வட்டார வழக்குக்கூறுகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவருகின்றன. எதிர்காலத் தலைமுறைகளில் உறுதியாக இந்த வட்டார வழக்கு, சாதி வழக்கு போன்றவை மறைந்துவிடுமெனக் கருதுகிறேன். சமுதாய வளர்ச்சியில் இது தானாக நடைபெறும். மேலிருந்து திணிப்பது இல்லை இது. அதுபோன்று இதை யாராலும் தடைசெய்யவும் முடியாது.
கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், பொருள் உற்பத்தி ஆலைகளில் பல்வேறு வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள், பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து பணியாற்றும் சூழல் வளர வளர, இந்த வட்டார வழக்குக்கூறுகள் மறையத்தான் செய்யும். இது மொழியின் இயங்கியல். அது எழுத்துவழக்கோ அல்லது பேச்சுவழக்கோ எதுவாகயிருந்தாலும் தேவையையொட்டி மாறவும், வளரவும் செய்யும்.
(2) பேச்சுத்தமிழுக்கு இலக்கணம் இல்லையா?
--------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு மொழியின் இலக்கணம் என்பது அந்தக் குறிப்பிட்ட மொழியைப் பேசுகிறவர்கள் தங்களுக்குள் உருவாக்கிக் கொண்ட ஒரு ஒழுங்கமைவே.
எல்லா வழக்குக்கும் - பேச்சு வழக்கு உட்பட - ஒழுங்கமைவு அதாவது இலக்கணம் உண்டு. அவ்வாறு இல்லாமல் இருந்தால் அந்தமொழியை அல்லது வழக்கைப் பயன்படுத்த முடியாது.
நரிக்குறவர் பேசுகிற வாக்ரிபோலி மொழிக்கும் இலக்கணம் உண்டு. எழுத்து வழக்கு இல்லாத , இலக்கண நூல்கள் இல்லாத பழங்குடியினர் மொழிக்கும் இலக்கணம் உண்டு. ஆனால் அந்த இலக்கணத்தை ஆராய்ந்து இலக்கண நூல் எழுதுவது வேறு. தேவையையொட்டி இலக்கணநூல்கள் எழலாம்.
தமிழ்நாட்டில் பேச்சுத்தமிழை தங்களுடைய தாய்மொழியாகப் பெற்றுக்கொள்கிற தமிழ்க் குழந்தைகளுக்குப் பேச்சுத் தமிழைக் கற்றுக்கொள்ள இலக்கணநூல் தேவை இல்லை. ஆனால் வகுப்பறையில் முறைசார் கல்விமூலம் கற்றுக்கொள்கிற எழுத்துத்தமிழுக்கு இலக்கணநூல்கள் தேவை.
அதுபோன்று பேச்சுத்தமிழைத் தங்களது இரண்டாவது மொழியாக அல்லது மூன்றாவது மொழியாக முறைசார் கல்வி அல்லது பயிற்சிமூலம் கற்றுக் கொள்பவர்களுக்குப் பேச்சுத்தமிழ் இலக்கணநூல்கள் தேவை.
தமிழ்ச் சமுதாயத்தில் (தமிழர்களாக இருந்தால்) பேச்சுத்தமிழைப் பயன்படுத்தாதவர்கள் இருக்கமுடியாது. அன்றாடக் கருத்துப்புலப்படுத்தச் செயல்பாடுகளுக்குப் பேச்சுத்தமிழே பயன்படுகிறது. பிற முறைசார் மொழிச்செயல்பாடுகளுக்கு எழுத்துத்தமிழ் தேவை. முறைசார்கல்வியில் எழுத்துத்தமிழே செயல்பாட்டு வழக்கு. எனவே தமிழ்ச்சமுதாயத்தில் எல்லாவகையான மொழிச்செய்லபாடுகளையும் தமிழ்வழியே ஒருவர் மேற்கொள்ளவேண்டுமானால் இரண்டு தமிழ் வழக்குகளுமே தேவை.
இதுவே இரட்டைவழக்கு ( Diglossia) என்று அழைக்கப்படுகிறது. இது இரு வழக்கு (Bilingualism) இல்லை. இருவழக்குகள் என்றால் எந்த வழக்கைப் பயன்படுத்துவது என்பது தனியார் விருப்பம். ஆனால் இரட்டைவழக்குமொழியில் இந்தச் செயல்பாட்டுக்கு எழுத்துத்தமிழ், இந்தச் செயல்பாட்டுக்குப் பேச்சுத்தமிழ் என்பதைத் தனிநபர் தீர்மானிக்கமுடியாது. தமிழ்ச் சமுதாயமே தீர்மானிக்கிறது.
எனவே பேச்சுத்தமிழ், எழுத்துத்தமிழ் இரண்டுமே தமிழர்களின் தாய்மொழிதான். ஒன்று மதிப்புடையது, மற்றொன்று மதிப்பில்லாதது என்று கருதுவது சரியில்லை. பேச்சுத்தமிழ் என்பது பிறந்த தமிழ்க்குழந்தை இயல்பாகப் பெற்றுக்கொள்வது; எழுத்துத்தமிழ் என்பது முறைசார் கல்வி அல்லது பயிற்சி மூலம் பெற்றுக்கொள்வது. பேச்சுத்தமிழ் இல்லாத தமிழர் இருக்கமுடியாது. ஆனால் எழுத்துத்தமிழைக் கற்றுக்கொள்ளாத தமிழர்கள் இருக்கலாம். இதனால் பேச்சுத்தமிழ் உயர்ந்தது என்று கூறுவது தவறு.
மேலும் இரண்டு தமிழுக்கும் அடிப்படை இலக்கணம் ஒன்றே. சொல் அல்லது விகுதிகளின் பேச்சொலி வடிவங்களே வேறுபட்டு அமைகின்றன. அந்த மாறுபாடுகளுக்கும் தெளிவான விதிகள் உண்டு. எனவேதான் எழுத்துத்தமிழை முறைசார்க் கல்விமூலம் கற்றுக்கொள்ளாத ஒரு தமிழரால் இதழ்களில் அல்லது மேடைகளில் பயன்படுத்தப்படுகிற எழுத்துத்தமிழைப் புரிந்துகொள்ளமுடிகிறது. அவரால் எழுத்துத்தமிழைப் பயன்படுத்தமுடியாமல் இருக்கலாம். ஆனால் புரிந்துகொள்ளமுடியும்.
எனவே , 'தமிழ்மொழி' என்று கூறும்போது எழுத்துத்தமிழ், பேச்சுத்தமிழ் இரண்டுமே அடங்கும். ஒன்றைவிட்டுவிட்டு, மற்றொன்றைமட்டும் தமிழ் என்று கூறுவது சரியில்லை. இரட்டைக்குழந்தைகளில் ஒரு குழந்தையைப் பாராட்டி, மற்றொரு குழந்தையைத் தாழ்வாகப் பார்ப்பது சரியில்லை.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India