''தாழ்த்தப்பட்ட சாதியினர்மீதான தீண்டாமை என்ற சமூக ஒடுக்குமுறைக்குப் பார்ப்பனியம்மட்டுமல்ல. . . பிற இடைத்தட்டுச் சாதியினர்களும் காரணம் ! (2)
------------------------------------------------------------------------------------------------------------------------
எனக்குச் சில ஐயங்கள்!
(1) இந்துமதம் சார்ந்த பல்வேறு குடும்ப நிகழ்ச்சிகளில் - திருமணம், இறப்பு போன்ற சடங்குகளில் - பிராமணர் அல்லாத பிள்ளை, ரெட்டி, செட்டி, நாயுடு போன்ற பல இடைத்தட்டுச் சாதிகளைச் சேர்ந்தவர்களின் சடங்குகளில் - பிராமண ஐயர்கள் பங்கேற்று வடமொழி மந்திரங்களை ஓதுகிறார்கள். (இவற்றில் சில இடைத்தட்டுச் சாதிகளில் அந்தந்த சாதிக்குள்ளேயே ''குருக்கள்'' இருப்பார்கள்!)
ஆனால் ''தாழ்த்தப்பட்ட (என்னைப் பொறுத்தவரையில் இந்தப் பெயருக்குப்பதிலாக ''ஒடுக்கப்பட்ட'' என்ற சொல்லே பொருத்தமாக இருக்கும்!) '' சாதிகள் என்று கருதப்படுகிற சாதியினரின் குடும்ப நிகழ்ச்சிகளில் பிராமண ஐயர்கள் ''பங்கேற்று'' ''மந்திரம்'' ஓதுகிறார்களா?
(2) தமிழ்நாட்டில் ''கௌரவக்கொலை/ ஆணவக்கொலை '' என்று கூறப்படுகிற ''காதல் திருமணக்'' கொலைகளில் மணமகனோ அல்லது மணமகளோ யாரோ ஒருவர் இந்தத் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் எனக் கருதுகிறேன். இது உண்மையா?
(3) இடைத்தட்டுச் சாதியினர்களுக்குள் ''காதல் திருமணங்கள்'' நடைபெறும்போது ''கௌரவக்கொலைகள்/ ஆணவக்கொலைகள்'' நடைபெறுகின்றனவா? இவை பெரும்பாலும் பெற்றோர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஒரு பிள்ளை, ஒரு பிராமணரைத் திருமணம் செய்துகொள்ளும்போதோ, ஒரு நாயுடு ஒரு ரெட்டியாரைத் திருமணம் செய்துகொள்ளும்போதோ - இதுபோன்ற பிராமணர் - இடைத்தட்டுச் சாதிகளுக்கு இடையிலான , அல்லது இடைத்தட்டுச் சாதிகளுக்கு இடையிலான திருமணங்கள் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுவதுபோலத் தோன்றுகிறது. (முதலில் எதிர்ப்பு இருந்தாலும்கூட!) . இக்கருத்து சரியா?
(4) இடைத்தட்டுச் சாதிகளுக்கிடையே கலப்புத் திருமணம் நடைபெறும்போது, சாதியைவிட வர்க்கம்தான் ஆதிக்கம் செலுத்துகிறது என்று கருதலாமா? ஆனால் தாழ்த்தப்பட்ட சாதியைப் பொறுத்தவரையில், வர்க்கத்தைவிட சாதியம்தான் ஆதிக்கம் செலுத்துகிறது என்று கூறலாமா?
மேற்கூறிய எனது கருதுகோள்கள் எல்லாம் சரி என்றால் . . . உண்மை என்றால் . . . கடந்த ஒரு நூற்றாண்டுகாலமாக நடைபெற்ற ''பிராமணிய எதிர்ப்புப் போராட்டங்கள்'' எல்லாம் பிராமணர்களை எதிர்த்த இடைத்தட்டுச் சாதியினரின் போராட்டங்களே என்று கூறலாமா? அதுவும் இடைத்தட்டுச் சாதிகளைச் சேர்ந்த உயர் வர்க்கத்தினரின் போராட்டங்களே என்ற முடிவுக்கு வரலாமா? அதாவது ''சாதி எதிர்ப்புப் போராட்டம்'' இல்லை . . . மாறாக, ''பிராமணர் எதிர்ப்புப் போராட்டமே'' என்று கூறலாமா? ஆகவே, ''ஆரியர் - திராவிடர்'' போராட்டம் என்பது ''பிரமாணர் - இடைத்தட்டுச்சாதியினர்'' போராட்டம் என்று கூறலாமா? ''ஆதி திராவிடர்களுக்கு'' இதில் பங்கு கிடையாதா? நீதிக்கட்சியினர் பிராமணர்களுக்கு எதிராகப் போராட வேண்டுமென்று கூறியபோது, எம் சி இராஜா போன்றவர்கள் ஏன் அதில் இணைந்து போராடாமல், தனியாகவே இயக்கங்களை மேற்கொண்டார்கள்?
(5) ஆகவே, தமிழ்நாட்டில் ''தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட'' சாதியினரைப்பொறுத்தவரையில், வரலாற்றில் தொடர்ந்து பிராமணர்கள், இடைத்தட்டுச் சாதியினர் ஆகிய இரண்டு பிரிவினர்களாலும் பண்பாட்டுரீதியில் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வருகிறார்கள் என்று கூறலாமா?
மேற்கூறியவை எல்லாம் எனது ஐயங்கள்! நண்பர்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்!
தமிழ்நாட்டில் அய்யர், அய்யங்கார் என்ற பிராமணர்களுக்கு சங்கராச்சாரியார்கள், ஜீயர்கள் என்று மடத் தலைவர்கள் இருக்கிறார்கள். அதுபோன்று பிள்ளை, செட்டியார், முதலியார் என்று எல்லா இடைத்தட்டுச் சாதியினர்களுக்கும் மடாதிபதிகள் இருக்கிறார்கள். இவர்களுக்குக் கோடி கோடியாகச் சொத்துக்கள் இருக்கின்றன. அதனால் பலநேரங்களில் இவர்களுடைய ''கோட்டைகளில்'' குத்துவெட்டு நடைபெறுகிறது. ஆனால் இதுபோன்று தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு ''மடாதிபதிகள்'' உண்டா? அவர்களுக்கு இதுபோன்று கோடியே கோடி சொத்துக்கள் உண்டா? விவரம் தெரிந்தவர்கள் தயவுசெய்து கூறவும்.